கொல்லிமலைக் குள்ளன்/கொல்லிமலைக் குள்ளன்

விக்கிமூலம் இலிருந்து
கொல்லிமலைக் குள்ளன்

"அந்தப் பஞ்சாப்காரர் எத்தனை வேகமாக நீந்தினார் பார்த்தாயா ? நீச்சல் போட்டிக்குச் சரியான ஆள்" என்றான் தங்கமணி.

"பனை மரத்திலே பாதி இருந்தால் நீகூட அப்படி நீந்தலாம்" என்றான் சுந்தரம்.

"போடா, உனக்கு எப்பொழுதும் கேலிதான். அந்த சிங் ரொம்ப உயரந்தான். இத்தனை உயரமான ஆளை நம்ம பக்கத்தில் கண்டு பிடிப்பது கடினம், நீச்சல் குளத்திலே மேல் தட்டிலிருந்து அவர் குதிக்கும்போது பார்க்க வேடிக்கையாக இருந்தது."

"மரீனா நீச்சல் குளத்தையே ஒரு கலக்குக் கலக்கி விட்டார்" என்று மேலும் என்னவோ சொல்லச் சுந்தரம் வாயெடுத்தான். அதற்குள்ளே கண்ணகி தொடங்கிவிட்டாள். "எனக்குத்தான் யாருமே நீந்தக் கற்றுக் கொடுப்பதில்லை போன கோடை விடுமுறையிலிருந்து கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது."

"அம்மாவிடம் முதலிலே நீ அனுமதி வாங்கு; பிறகு நான் கற்றுக் கொடுக்கிறேன்" என்றான் தங்கமணி.

"கண்ணகி, உனக்குத்தான் தண்ணீரைக் கண்டாலே சளிப் பிடிக்குமே! அத்தை நிச்சயம் அனுமதி கொடுக்கமாட்டார்கள். முதலில் நீ நீந்தப் பழகிக்கொள்; அப்புறம் தண்ணீரில் இறங்கலாம்" என்று நகைத்தான் சுந்தரம்.

"இந்த விடுமுறையிலே எங்காவது ஆற்றுப்பக்கம் போனால் நன்றாக இருக்கும். ஆற்று மணலிலே விளையாடுவதும், ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவதும் ஒரு குதூகலமாக இருக்கும்" என்று தங்கமணி தனது விருப்பத்தை தெரிவித்தான்.

மற்ற இருவரும் உற்சாகமாக அதை ஆமோதித்தார்கள் "எனக்குக்கூட ஒவ்வொரு விடுமுறையிலும் சென்னைக்கே வந்து அலுத்துப்போய்விட்டது. மதுரையை விட்டால் சென்னை; சென்னையை விட்டால் மதுரை. எங்காவது ஆற்றுப் பக்கத்திலே ஒரு கிராமத்திற்குப் போய்க் கொஞ்ச நாள் தங்கி வந்தால் நன்றாக இருக்கும். உன்னுடைய ஜின்காவிற்கும் மரங்களில் ஏறி விளையாடுவதற்கு ஒரு நல்ல சமயம் கிடைக்கும்.

"ஆமாம், அண்ணா! அதுதான் எனக்கும் ஆசையா இருக்கிறது. ஆனால், அப்பா என்ன சொல்லுவாரோ?" என்றாள் கண்ணகி.

"கண்ணகி, கிராமத்துப் புளியந்தோப்பிலே இரட்டைவால் பேயிருக்கும். தெரியுமா ?" --இப்படிச் சுந்தரம் பேயை பற்றிப் பேசத் தொடங்கினான்.

"பேயா! ஐயோ, நான் வரமாட்டேன்."

"இல்லை கண்ணகி, இவன் தான் இரட்டைவால் பேய் வேறே பேயெல்லாம் கிடையாது. அதெல்லாம் கட்டுக்கதை பயப்படாதே" என்று தங்கமணி தன் தங்கைக்குத் தைரியம் கூறினான்.

"மாமா வந்தவுடன் கேட்டுப் பார்க்கலாம்." சுந்தரம் இப்பொழுது தனது கேலியை மறந்துவிட்டான்.

"அப்பாவுக்கு எப்பவும் வேலை தான். வேலையை விட்டால் நாவல் படிப்பு" என்றான் தங்கமணி.

"அதிலும் துப்பறியும் கதை என்றால் மாமாவுக்குச் சோறுகூட வேண்டாம்." சுந்தரம் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது. "அதோ, அப்பா வருகிறார்" என்று கண்ணகி மகிழ்ச்சியோடு கூவினாள்.

வடிவேல் ஆழ்ந்து எதையோ சிந்தித்துக்கொண்டு வீட்டிற்குள்ளே நுழைந்தார். திண்ணையிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மூவரையும் அவர் கவனிக்கவே இல்லை. அவர் முகத்தில் சிரிப்பே காணப்படாததைக் கண்டு, கண்ணகிக்கும் மற்ற இரண்டு சிறுவர்களுக்கும் அவரிடம் தங்கள் விருப்பத்தை உடனே தெரிவிக்கத் துணிச்சல் ஏற்படவில்லை.

வடிவேல் வழக்கம் போல இவர்கள் மூவரையும் உற்சாகமாகக் கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழையவில்லை. ஏதோ ஆழ்ந்த எண்ணத்தில் மூழ்கியவராக அவர் காணப்பட்டார். அதனால் இவர்கள் மூவரும் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே நுழையாமல் திண்ணையிலேயே தங்கி விட்டார்கள்.

அந்தச் சமயத்தில் சுந்தரத்திற்குத் திடீரென்று ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தது. “டேய் தங்கமணி, அந்த பஞ்சாப் காரர் நம்மிடம் சொன்னதை மறந்துவிட்டாயா? நம்மையெல்லாம் இன்றைக்குப் பொம்மைக்கூத்திற்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொன்னாரே!" என்று சுந்தரம் நினைவு கூட்டினான்.

"போடா, அவர் எங்கே வரப்போகிறார்? முதலில் அவர் வந்து அப்பாவிடம் அனுமதி வாங்க வேண்டுமல்லவா?” என்று தங்கமணி சந்தேகத்தோடு சொன்னான்.

"எனக்கென்னவோ அவர் வருவார் என்று தான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த வீட்டு முகவரியை எதற்குக் கேட்கிறார்?"

"அவர் பேசியதைப் பார்த்தால் நமது வீட்டு முகவரி முன்னமேயே தெரிந்தவர் போல எனக்குப் பட்டது."

"சரி, உன் துப்பறியும் வேலையை ஆரம்பித்துவிட்டாயா? இன்னும் என்ன கண்டு பிடித்திருக்கிறாய்?

"அந்த சிங் தமிழ் பேசியது வேடிக்கையாக இருந்தது.”

இவ்வாறு தங்கமணியும் சுந்தரமும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணகிக்கு மேலும் மௌனமாக இருக்க முடியவில்லை.

"சுந்தரம், யார் அந்த சிங்?" என்று அவள் கேட்டாள். "அவர் தான், அந்தப் பனைமரம்" என்றான் சுந்தரம்.

"அவர் ஒரு பஞ்சாப்காரர். பொம்மைக்கூத்து கோஷ்டி ஒன்றை இங்கே அழைத்து வந்திருக்கிறாராம். எழும்பூர் பொருட்காட்சி சாலை அரங்கத்திலே பொம்மைக்கூத்து நடக்கிறதாம். நமக்கெல்லாம் இலவசமாக அனுமதிச்சீட்டுக் கொடுப்பதாகச் சொன்னார்" என்று விளக்கினான் தங்கமணி.

"பொம்மைக்கூத்தா? எனக்கு ரொம்பப் பிடிக்கும் ; நானும் வரேன். அண்ணா " என்று கண்ணகி தன் ஆசையை வெளியிட்டாள்.

"அதோ, அவரே வந்துவிட்டார்" என்று கத்தினான் சுந்தரம்.

"அப்பா இருக்காங்கோ?" என்று கேட்டுக்கொண்டே அந்த நெட்டை மனிதர் வீட்டிற்குள்ளே நுழைந்தார். அவருடைய பெரிய தலைப்பாகையும், உடம்பெல்லாம் மறைக்கும் 'தொளதொள' ஜிப்பாவும் கால்சட்டையும் அவரை ஒரு பட்டாணியர் என்று நினைக்கும்படி செய்தது. ஆனால், நிறம் மட்டும் கொஞ்சம் கறுப்பு. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரையில் அவர் நன்றாக மறைத்திருந்தார். சுந்தரம், கண்ணகி, தங்கமணி ஆகிய மூவரும் பின்னால் மெதுவாகச் செல்லத் தொடங்கினர். "ஜின்கா, வாடா! நீச்சல் குளத்திற்குக் கூட்டிக்கொண்டு போகவில்லை என்ற கோபம் இன்னும் உனக்குத் தீரவில்லையா? குளத்தில்தான் உன்னை விடமாட்டார்களே! பொம்மைக்கூத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறேன், வா” என்று கூப்பிட்டான் தங்கமணி.

அதுவரையிலும் அசையாமல் மௌனமாகத் திண்ணை மூலையில் படுத்திருந்த குரங்கு ஒன்று, தனது கோபத்தை மறந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, தங்கமணியின் தோளில் ஏறிக்கொண்டது.

"கண்ணகி, 'ஜாடிமேலே குரங்கு' என்ற விடுகதை கேட்டிருக்கிறாயா? ஆனால், இங்கே குரங்குமேலே குரங்கு" என்று சுந்தரம் கேலி செய்துகொண்டே நடந்தான்.

தங்கமணிக்கும் கண்ணகிக்கும் தந்தையான வடிவேல் ஒரு தத்துவப் பேராசிரியர். சென்னையில் ஒரு கல்லூரியிலே பணி செய்தார். தங்கமணி பத்தாம் படிவத்திலும், கண்ணகி ஆறாம் படிவத்திலும் படித்தனர். சுந்தரம் வடிவேலுவின் தங்கை மகன் ; ஒன்பதாம் படிவத்தில் மதுரையில் படித்தான்.

அந்த பஞ்சாப்காரர் வடிவேலுடன் ஆங்கிலத்தில் பேசினார். தமது பெயர் வீர்சிங் என்றும், பொம்மைக்கூத்து கோஷ்டியோடு பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வந்திருப்பதாகவும், சிறுவர்களை மரீனா நீச்சல் குளத்தில் தற்செயலாகச் சந்தித்ததாகவும், அவர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டு அளித்துப் பொம்மைக்கூத்திற்கு அழைத்துச் செல்ல வடிவேலிடம் அனுமதி கேட்பதற்காக வந்திருப்பதாகவும் வினயமாகத் தெரிவித்துக்கொண்டார். வடிவேல் அவருக்கு ஏதோ சுருக்கமாகப் பதில் சொல்லி அனுப்பிவிட்டார். வீர்சிங் ஏமாற்றத்தோடு வெளியே நடந்தார்.

அவர் சென்றதும் வடிவேல் தங்கமணியைப் பார்த்து, “மணி, நீ எதற்காக அவரை இங்கு வரும்படி செய்தாய்?" என்று சற்று கடுமையாகவே கேட்டார்.

தங்கமணி பதில் சொல்வதற்கு முன்பாகவே சுந்தரம், "மாமா, நாங்கள் அவரை வரச்சொல்லவில்லை. அவரேதான் எங்களை அழைத்துப் போவதாகச் சொன்னார்" என்று உண்மையை விளக்கினான்.

"அவருக்கு எப்படி நமது வீடு இருக்குமிடம் தெரிந்தது?"

இந்தக் கேள்விக்குச் சிறுவர்களால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கொஞ்ச நேரம் பேசாமல் நின்றார்கள்.

"பொம்மைக்கூத்தைப் பார்க்க ஆசையாக இருந்தால் நான் அழைத்துச் செல்லுகிறேன். இலவசமாக வேறொருவரிடம் எதையும் எதிர்பார்ப்பது நல்லதல்ல" என்று வடிவேல் அறிவுரை கூறினார். சிறுவர்கள் இருவரும் மௌனமாக வெவ்வேறு அறைக்குள் சென்றுவிட்டார்கள். தங்கமணியின் தோளிலிருந்து இறங்கி மேஜையின் மேல் உட்கார்ந்திருந்த ஜின்கா அவனை உற்றுப் பார்த்தது. அவன் அதைக் கூப்பிடாமலேயே சென்றுவிட்டான். ஜின்கா கொஞ்சம் நேரம் யோசனை செய்துவிட்டு, வடிவேலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தங்கமணி இருந்த அறைக்குள் நுழைந்தது. கண்ணகி மெதுவாகச் சமையல் அறைக்குள் நழுவிவிட்டாள்.

தங்கமணி ஒரு மூலையில் சோர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தான். ஜின்கா அவன் கன்னத்தைத் தடவிக் கொடுத்து விட்டு, அவன் மடியில் பேசாமல் படுத்துக்கொண்டது.

நாய்க்குட்டி, முயற்குட்டி இப்படி ஏதாவது ஒன்றைத் தங்கமணி சிறுவயது முதற்கொண்டு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் தாயார் வள்ளிநாயகிக்கு இது சில சமயங்களில் தொந்தரவாக இருக்கும். இருந்தாலும் அவன் ஏதாவதொன்றைச் செல்லமாக வளர்ப்பதை விடவில்லை. ஒரு சமயம் அடையாற்றிலே பெரிய வெள்ளம் வந்தது. அதைப் பார்ப்பதற்காகத் தங்கமணி சென்றிருந்தான். அந்த வெள்ளத்திலே ஒரு குரங்குக்குட்டி அகப்பட்டுத் தத்தளித்து மிதந்து வந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாகத் தங்கமணி நிற்கும் இடத்திலே அது கரையோரமாக வரவே, அவன் இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி, அதைக் காப்பாற்றி, வீட்டிற்கு எடுத்து வந்தான். அதுமுதல் தங்கமணி அந்தக் குரங்கு ஒன்றையே மிக அன்போடு வளர்க்கலானான். அது அவனுக்கு முன்னால் 'ஜிங் ஜிங்' என்று குதித்து விளையாடும். அதனால் அதற்கு ‘ஜின்கா' என்று அவன் பெயர் வைத்தான். அவன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அதன்படி நடக்கவும் அதைப் பழக்கி வைத்தான். ஜின்கா அவனிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தது. அவன்தானே அதன் உயிரைக் காப்பாற்றினான்? பள்ளிக்கூட நேரம் தவிர, அது மற்ற நேரங்களில் அவனோடேயே இருக்கும். இரவில் தூங்கும் போதும் அவனுடைய படுக்கையிலேயே படுத்திருக்கும்.

வடிவேல் தங்கமணியை ஏதோ கடிந்து சொல்லிவிட்டதாக அதற்குப் புலப்பட்டது, அதனால் அது இப்பொழுது தங்கமணிக்கு உற்சாகம் உண்டாக்க முயன்றது. இந்தச் சமயத்திலே தங்கமணியின் தங்கை கண்ணகி உள்ளே வந்து, "அண்ணா, அம்மா சாப்பிடக் கூப்பிடுகிறார்கள்" என்று தெரிவித்தாள். அவளுக்கும் பொம்மைக்கூத்திற்குப் போக முடியவில்லையே என்று ஏக்கந்தான். தங்கமணி எழுந்து தங்கையைப் பின்தொடர்ந்து சென்றான். ஜின்கா அவன் தோளின்மேல் ஏறிக்கொள்ள முயலாமல் மெதுவாகப் பக்கத்தில் நடந்து சென்றது.

சாப்பிடும்போது சிறுவர்கள் வழக்கத்திற்கு மாறாக மௌனம் சாதித்தார்கள். சுந்தரம் எப்பொழுதுமே நகைச்சுவையோடு பேசும் இயல்பு உடையவன். மேலும், அவனுக்கு மாமன் வீட்டிலே செல்லம் அதிகம். அவன் பெற்றோர்கள் மதுரையில் வாழ்ந்தனர். அங்கிருந்து கோடை விடுமுறைக்காகச் சென்னை வந்திருந்தான். அவன்கூட அன்றிரவு ஒன்றும் பேசாமல் உணவருந்திக்கொண்டிருந்தான். ஜின்கா தனது இயற்கையான சிறு குறும்புகளை விட்டுவிட்டுத் தட்டத்தில் அதற்கென்று தனியாக வைத்திருந்த பழத்தையும் வேர்க்கடலையுைம் தன் வாயில் போட்டுக் கன்னத்தில் அடக்கிக் கொண்டிருந்தது. கண்ணகியின் முகத்தில் புன்சிரிப்பைக்கூடக் காணமுடியவில்லை.

இவர்களுடைய சோர்வையும் ஏமாற்றத்தையும் வடிவேல் உணர்ந்துகொண்டார். "நாளைக்குப் பொம்மைக்கூத்திற்கு நான்கு டிக்கெட் வாங்கி, வருகிறேன். அம்மாவும் நீங்களும் போகலாம்" என்று அவர் கூறினார். சிறுவர்கள் முகத்தில் சிரிப்புப் பொங்க ஆரம்பித்துவிட்டது. "நீங்களும் வாங்கப்பா" என்று கண்ணகி கொஞ்சினாள்.

"நான் வர முடியாது, கண்ணகி. எனக்கு நிறைய வேலை இருக்கிறது" என்றார் வடிவேல்.