பக்கம்:சோழர் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சோழர் வரலாறு



இடைப்பட்ட காலம்

சங்கத்து இறுதியாகிய (சுமார்) கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆதித்த சோழன் பல்லவரை வென்ற சோழப் பேரரசு ஏற்படுத்திய 9-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதிவரை ஏறத்தாழ 500 ஆண்டுகள் சோழரைப் பற்றியும் சோழ நாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளப் பேருதவி செய்வன சிலவே ஆகும். அவை (1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப் பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர் பட்டயங்கள், (4) சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள் முதலியன ஆகும். இவற்றுடன் தலைசிறந்தன தேவாரத் திருமுறைகள் ஆகும். இவற்றை உள்ளடக்கிப் பல கல்வெட்டுகளையும் (இக்காலத்தில் நமக்குக் கிட்டாத) பிற சான்றுகளையும் கொண்டு எழுதப் பெற்ற சேக்கிழார் - பெரிய புராணம் என்னும் ஒப்புயர்வற்ற நூலும் சிறந்ததாகும். ஆழ்வார்கள் பாடியருளிய நாலாயிரப் பிரபந்தமும் திவ்யசூரி சரிதம் முதலியனவும் ஓரளவு உறுதுணை புரியும்.

பிற்பட்ட சோழ - கல்வெட்டுகள்

விஜயாலய சோழன் முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இருந்த சோழர் வரலாறு அறிய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பெருந்துணை புரிகின்றன. இவற்றுள் சிறந்தவை இராசராசன் காலமுதல் தோன்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே ஆகும். இவை அரசர் போர்ச் செயல்களையும் பிறவற்றையும் முன்னர்க் கூறி அவரது ஆட்சி ஆண்டைப் பிற்கூறிக் கல்வெட்டு அல்லது செப்பேடு தோன்றியதன் நோக்கத்தை இறுதியிற்கூறி முடிக்கும் முறையில் அமைந்துள்ளன. இவற்றால், குறிப்பிட்ட அரசனது நாட்டு விரிவு, போர்ச் செயல்கள், குடும்ப நிலை, அரசியற் செய்திகள், அறச்செயல்கள், சமயத் தொடர்பான செயல்கள், அரசியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/12&oldid=1233577" இலிருந்து மீள்விக்கப்பட்டது