நாடக மேடை நினைவுகள்/இருபதாவது அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

20ஆவது அத்தியாயம்

னி 1911ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன். இவ்வருஷம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளுள், எங்கள் சபை கொழும்பு நகரம் சென்று நாடகங்களாடியது ஒன்றாகும்; இது ஒரு பெருங் கதையாகையால் சற்று விவரமாய் எழுத வேண்டியிருக்கிறது.

இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை எனதாருயிர் நண்பராகிய ரங்கவடிவேலுவும் நானும், திவான் பஹதூர் மாசிலாமணிப் பிள்ளையுடனும், இன்னும் சில சிநேகிதர்களுடனும் இலங்கைத் தீவிற்குப் போயிருந்தோம். அது வேறு கதையாம். எனது நாடக மேடை நினைவுகளைப்பற்றிய - அதில் நேரிட்ட சந்தர்ப்பத்தை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். அப் பிரயாணத்தில் கொழும்பு நகரத்தை நாங்கள் சுற்றிப்பார்த்து வந்தபொழுது, எங்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு போய் ஊரிலுள்ள முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் காட்டிக்கொண்டு வந்த ஒரு நண்பர், ஓரிடத்தில், ‘இங்கே பப்ளிக் ஹால் (Public Hall) இருக்கிறது. இதைப் பார்க்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். அவர் கொழும்பு நகரத்தாரின் வழக்கப்படி, ஹால் என்கிற பதத்தை, சற்று தவறாக உச்சரிக்க நாங்கள் எல்லாம் நகைத்து, அதை அவசியம் பார்க்க வேண்டுமென்று கூறினோம். உள்ளே நுழைந்தவுடன் அது ஒரு நாடக சாலையாக அமைக்கப் பட்டது என்பதைக் கண்டோம். பிறகு ரங்கவடிவேலுவும் நானும் உள்ளே சென்று எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்று தீர்மானித்து, எங்கள் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அக் கட்டிடம் முழுவதும் பார்த்தோம். அந் நாடக சாலை சிறிதாயிருந்தபோதிலும் (சுமார் 500 பேருக்கு மேற்கொள்ளாது) அது மிகவும் அழகாய்க் கட்டப்பட்டிருந்தது. உள்ளே எல்லாம் பலவித வர்ணங்களுடைய மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன; நாடக மேடையானது மிகவும் உயரமாக அமைக்கப்பட்டு, அங்கிருந்து பேசினால் ஹால் முழுவதும் எளிதில் கேட்கும்படியான தன்மை வாய்ந்ததாயிருந்தது. நம்முடைய பட்டணத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் எவ்வளவு கத்தினாலும் பாதி ஹாலுக்குமேல் கேட்கவில்லையே, இங்கு எவ்வளவு சௌகர்யமாயிருக்கிறதென எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அன்றியும் நாடகமாடும் மேடை (Stage)சென்னையிலுள்ளதைவிட, இரு மடங்கு விசாலமானதாயிருந்தது. அன்றியும் அதற்குப் பின்னால் நேபத்யம் (வேஷம் தரிக்கும் இடம்) நாடக மேடையைவிட விசாலாமானதாய், நிலைக்கண்ணாடிகள் முதலியன வைக்கப்பட்டு மிகவும் அழகாயிருந்தது. இதை யெல்லாம் பார்த்து, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, ‘இங்கே நாம் நாடகங்கள் ஆடினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று கூற, அதற்கு, ‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!’ என்று வேடிக்கையாகப் பதில் உரைத்து, அவ்விடத்தை விட்டகலுமுன், அங்கிருந்த ஹால்மேல் விசாரணைத் தலைவரை, வேடிக்கையாக, ‘இங்கே யாராவது தமிழ் நாடகங்கள் அல்லது இந்திய நாடகங்கள் போடுகிறார்களா?’ என்று கேட்க, ‘அவ்வதிகாரி, ‘அதிகமாயில்லை. எப்பொழுதாவது ஒரு சமயம் போடுவதுண்டு!’ என்று பதில் உரைத்தார். அதன் மீது, ‘அவர்களுக்கு என்ன வரும்படி சாதாரணமாக வரும்?’ என்று வினவ, அவர் ‘சாதாரணமாக அறுபது எழுபதுவரைக்கும் வரும்’ என்றார். அறுபது எழுபது ரூபாய் ஒரு நாடகத்திற்கு வரும்படி வந்தால், நாம் இங்கு நாடகம் ஆடினாற் போல்தான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, ‘வெள்ளைக்காரக் கம்பெனிகள் ஆடினால் அவர்களுக்கு என்ன வரும்படி வரும்?’ என்று கேட்க அதற்கவர், ‘அவர்களுக்கு நூற்றிருபது, நூற்றைம்பது வரும்!’ என்றார்; வெள்ளைக்காரர்களுக்கு நூற்றைம்பது ரூபாய் வந்தால் எப்படிச் செலவு கட்டி வரும், இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறதென நினைத்துக்கொண்டு வெளியில் வந்தபின், எங்களை அழைத்துக்கொண்டு போனவரைப் பார்த்து இது என்ன சமாச்சாரம் என்று கேட்க, அவர் “இது உங்களுக்குத் தெரியாதா? இங்கெல்லாம் பத்து ரூபாய் நோட்டுகள்தான் சாதாரணமாக வழங்குகிறது. ஆகவே, 60 என்றால் அறுநூறு ரூபாய் என்று அர்த்தம்; எழுபது என்றால் எழுநூறு ரூபாய் என்று அர்த்தம்; நூறு என்றால் நூறு பத்து ரூபாய் நோட்டுகளாகக் கணக்குச் செய்து கொள்ள வேண்டும்!” என்றார். ஆனால் சரிதான் என்று அதனுடன் அதை விட்டோம். அச்சமயம் நானாவது எனது நண்பராவது, எங்கள் சபை இவ்விடம் வந்து நாடகங்கள் ஆடக் கூடும் என்று கனவிலும் நினைத்தவர்களல்ல. அச்சமயம் தூத்துக்குடியிலிருந்து, கப்பல் மூலமாகக் கொழும்பு வந்து சேர, ஓர் இரவெல்லாம் நாங்கள் பட்ட கஷ்டத்தை நினைத்துக்கொண்டு, இது எங்கள் சபைக்குச் சாத்தியமான காரியமல்லவென்று கைவிட்டோம். இதற்கப்புறம் இரண்டு வருஷங்கள் வரையிலும் இதைப்பற்றி ஒருபோதும் நினைத்தவர்களல்ல.

பிறகு இவ்வருஷம் (அதாவது 1911) ஏப்ரல் மாதத்திலோ என்னவோ, ஒரு நாள் எங்கள் சபை நிர்வாக சபைக் கூட்டத்தில், எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், தன் வழக்கப்படி, “என்ன சம்பந்தம்! நம்முடைய சபை ஏதாவது புதியதாய்ச் செய்யவேண்டும். வெறுமையாகப் போட்ட நாடகங்களையே போட்டுக் கொண்டிருப் பதில் என்ன பிரயோஜனம்?” என்று சொன்னார். அதன் மீது அவருக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று விரும்பினவனாக, வேடிக்கையாக, ‘இந்த வருஷம் நமது சபை சிங்களத்துக்குப் போய் நாடகமாட வேண்டும்!” என்று சிரித் துக்கொண்டே பிரேரேபித்தேன். உடனே ரங்கவடிவேலு தான் ஆமோதிப்பதாகச் சொல்ல, அங்கிருந்தவர்களெல்லாம், ஸ்ரீநிவாச ஐயங்கர் உட்பட, மிகவும் நல்லது என்று குதூஹலத்துடன் ஒப்புக் கொண்டனர்! நான் இதைப்பற்றிப் பிரேரேபித்தபோது வேடிக்கைக்காகச் சொன்னேனேயொழிய, கொஞ்சமாவது இது சாத்தியமான காரியம் என்று நினைத்துச் சொன்னவனே அன்று. அதன்பேரில், நான் வேடிக்கைக்காகச் சொன்னேன், இது அசாத்தியமான காரியம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், அனை வரும், “அதெல்லாம் உதவாது, நீதானே சொன்னாய். ஆகவே அதை எப்படியாவது நீதான் நிறைவேற்ற வேண்டும்!” என்று கூறி, அவ்வாறே, நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானித்து விட்டார்கள்! சரி, யோசிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அன்றிரவு வீட்டிற்குப் போனவுடன், இதென்ன வேடிக்கையாகக் கூறப்போய், விபரீதமாக முடிந்ததே என்று யோசித்தவனாய் என்னாலியன்ற அளவு பிரயத்தனப்படுகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டபடியால், நாம் பிரயத்தனப்பட்டுப் பார்ப்போம் என்று தீர்மானித்து, கொழும்பில் முன்முறை நாங்கள் போயிருந்த போது தங்கியிருந்த வீட்டுக்காரராகிய மிஸ்டர் துரைசாமி என்பவருக்கு இதைப்பற்றி ஒரு நிருபம் எழுதினேன். எழுதியபோது என் தாத்பர்யம் என்னவென்றால், உங்கள் சபை இங்கு வருவது சௌகர்யமாயிராது, சபைக்கு நஷ்ட முண்டாகும் என்று பதில் எழுதிவிடுவார். அதைக் கமிட்டி யாருக்குக் காண்பித்து, என்னாலியன்ற அளவு முயன்று பார்த்தேன், என்மீது பழியில்லை என்று கூறிவிடலாம் என்பதே. எனது கொழும்பு நண்பர் என்ன செய்தார் என்றால், நான் நினைத்ததற்கு மாறாக, “உங்கள் சபை சந்தோஷமாக இங்கு வரலாம்; உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் வராது!” என்று உடனே பதில் அனுப்பினார்! அதற்குமேல் நான் என்ன செய்வது? ‘இதென்னடா கஷ்டமாக முடிந்ததே!’ என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, ‘கொழும்பிலிருந்து பதில் வந்ததா?’ என்று விசாரித்துக் கொண்டிருந்த ரங்கவடிவேலு, அதைப் படித்துப் பார்த்துவிட்டு “எப்படியாவது நம்முடைய சபை அங்கே போக வேண்டும்” என்று வற்புறுத்தினார். அவர் இப்பிரயாணத்தின் மீது மிகவும் மனம் வைத்திருக்கிறார் என்று அறிந்து அதன் பலவிதமான கஷ்டங்களை எண்ணிய வனாய், அவைகளை யெல்லாம் அவருக்கு நான் எடுத் துரைக்க, அவர் அவற்றை யெல்லாம் கேளாதவராய், “இதையெல்லாம் என்னிடம் சொல்லுவானேன்? உங்களுக்கு மனம் இல்லை என்று சொல்லிவிடுங்கள். நீங்கள் மனம் வைத்தால் இது எப்படியும் முடியும் என்று எனக்குத் தெரியும்!” என்று பதில் உரைத்தார். இதன் பேரில் நான் வாயெடுக்க வகையில்லாதவனானேன். என்னை ஏதாவது ஒரு காரியம் செய்யும்படி உந்த வேண்டுமென்றால், எனதுயிர் நண்பர், இந்த மார்க்கத்தை நன்றாகக் கற்றிருந்தார். அன்றியும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு ஹனுமாருடைய குணத்தில் ஒரு சிறு குணம் எனக்குண்டெனத் தெரிவித்திருக்கின்றேன்! ‘சரி, இனிப் பேச்சில்லை ! அப்படியே ஆகட்டும்!’ என்று கூறிச் சபை எப்படியாவது கொழும்பிற்குப் போய்த்தான் தீர வேண்டுமென்று தீர்மானித்து, ‘நீ ஒன்றும் பயப்படவேண்டாம்!’ என்று எனதுயிர் நண்பரிடம் கூறி எல்லாம் வல்ல இறைவன் மீது பாரத்தைச் சுமத்தி, ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன்.

மேற்சொன்னபடி ஆரம்பித்த நாள் முதல் கொழும்புக்குப் போய் நாங்கள் முதல் நாடகம் கொடுத்த ராத்திரி வரையில் ஒரு நாளாவது என் வழக்கப்படி நித்திரை செய்யவில்லை என்று கூறுவேனாயின் அது பொய்யாகாது. நான் அந்த ஒரு மாதம் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. ஆயினும் அவ்வளவு கஷ்டப்பட்டோமேயென்று நான் துக்கப்படவில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்ட காரியத்தை ஸ்வாமியின் கிருபையால் பூர்த்தி செய்தோமேயென்று சந்தோஷப் படுகிறேன். எனக்கு நேரிட்ட கஷ்டங்களில் சிலவற்றை இங்கெடுத்து எழுதுகிறேன்.

முதலில், பிள்ளையார் குட்டாக, எனது தெலுங்கு நண்பர்களில் ஒருவர், தமிழில் மாத்திரம் நாடகம் நடத்தப் போகிறார்கள் தெலுங்கிலில்லை என்கிற காரணத்தினாலோ, அல்லது வேறு எக்காரணத்தினாலோ சில தெலுங்கு ஆக்டர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ‘சபை கொழும்பிற்குப் போகக்கூடாது!’ என்று ஆட்சேபித்து, அதற்காகச் சபைப் பொதுக்கூட்டத்தில் இதைத் தீர்மானிக்க வேண்டுமென்று ஒரு மஹஜர் (Mahajzar) தயார் செய்ய ஆரம்பித்தார். அவர்களுடனெல்லாம், மெல்லப் பேசி அவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, கடைசியாக இதற்கெல்லாம் தலைவனாக இருந்த அவரையே நேரிற் கண்டு அவரது ஆட்சேபணைகளுக்கெல்லாம் சமாதானம் சொன்னேன். கடைசியாக அவர் வேறு நியாயம் எடுத்துக் கூற வகையறியாமல், “நீ சத்தியமூர்த்தியையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு போகிறதாகக் கேள்விப்பட்டேன். அவன் இப்பொழுதுதான் ஆக்டு செய்யக் கற்றுக்கொள்ளுகிறான். அவனை அழைத்துக்கொண்டு போவதில்லை என்று வாக்குக் கொடுப்பாயின், எங்கள் ஆட்சேபணையை மீட்டுக் கொள்ளுகிறோம்!” என்று கூறினார். அதன்மீது எனக்குக் கோபம் வந்து, ‘நான் சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு தான் போவேன். நான் ஒருமுறை கூறிய மொழியினின்றும் தவறேன். வருவது வரட்டும், உம்மாலானதை, நீர் பாரும்!’ என்று பதில் கூறிவிட்டு விலகி வந்தேன். அதன்பேரில், ஏது, நம்முடைய ஜபம் சாயாது போலிருக்கிறது! என்று, அந்த ஆட்சேபணையை விட்டார். இந்நண்பர் இன்னும் உயிருடன் இருக்கிறபடியால் இவர் பெயரை இங்கு நான் எழுத எனக்கிஷ்டமில்லை .

பிறகு அங்கு போய் வருவதற்கு ஆக்டர்களைச் சேர்க்கவேண்டிதாயிற்று. எங்கள் நிர்வாக சபையார் அவ்விடம் 5 நாடகங்களாவது கொடுத்தால்தான் செலவு கட்டிப்போகும் என்று தீர்மானித்தார்கள். அப்படித் தீர்மானிக்கப்பட்ட நாடகங்கள் : ‘லீலாவதி சுலோசனை, மனோஹரன், காலவ ரிஷி, அமலாதித்யன், சாரங்கதரன்’; காலவ ரிஷி தவிர, மற்ற நான்கும் பெரிய நாடகங்களே. அவ்விடத்திற்குப் போனால் நம்முடைய முக்கியமான நாடகங்களை ஆடிக் காண்பிக்க வேண்டுமென்பது எங்கள் கருத்து. இந்த ஐந்து நாடகங்களுக்கும் வேண்டிய ஆக்டர்களை ஒவ்வொருவராகச் சேர்க்க வேண்டியதாயிற்று; வக்கீல்களாகிய சிலருக்குத்தான் கோடைகால விடுமுறை இருந்தது. மற்றவர்கள் உத்தியோகத்திலிருந்தவர்களுக்கென்ன செய்வது? ஒவ்வொருவராக அவர்களை வர வழைத்து அவர்களை யெல்லாம் வரும்படி சொல்ல வேண்டியதாயிற்று; அதிலும், தற்காலம் எங்கள் சபை வெளியூருக்குப் போவதென்றால் ‘சபையாரே ஆக்டர்களுடைய செலவையெல்லாம் ஏற்றுக்கொள்வது போல் அப்பொழுது இல்லை. ஆக்டர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் செலவைத் தாங்களே ஏற்க வேண்டியதாயிருந்தது. இலங்கைக்கு வர விரும்பும் ஒவ்வொருவரும் ரூபாய் 50 கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்தோம். இவ்வாறு ஒவ்வொரு ஆக்டரையும் 50 ரூபாய் கொடுத்து எங்களுடன் வரும்படி செய்ய வேண்டியதாயிற்று. எனக்கு ஞாபகமிருக்கிறவரையில் ஒரு ஆக்டரைத்தான் சபையின் செலவில் அழைத்துக்கொண்டு போனோம்; மற்றவர்கள் எல்லாம் தங்கள் பணத்தைக் கொடுத்தே வந்தார்கள். பணம் கொடுப்பதன்றிப் பல ஆக்டர்கள், தங்கள் ஆபீசிலிருந்து விடுமுறை பெற்று வர வேண்டியதாயிற்று. இதற்கு முன் இரண்டு மூன்று முறை எங்கள் சபை வெளியூருக்குப் போனபோது ஐந்தாறு நாள்தான் பிடித்தது; இம்முறை குறைந்த பட்சம் இரண்டு வாரம் விடுமுறை பெற வேண்டியதாயிற்று. ஒவ்வொரு முக்கியமான ஆக்டருக்கும் யார் மூலமாகப் போனால் லீவு கிடைக்கும் என்று யோசனை செய்து, அவர்களைப் பிடித்து அவர்களுக்கு விடுமுறை வாங்கிக் கொடுத்தேன். சாதாரணமாக ஆபீசுகளில் லீவு கொடுப்பதே கடினம்; அதிலும் கொழும்புக்குப் போய் நாடகமாடுவதற்கு லீவு வேண்டுமென்று கேட்பது எளிதா என்று இதை வாசிக்கும் நண்பர்களே யோசித்துப் பார்க்கலாம். எங்கள் சபையில் முக்கியமான ஆக்டர்களில் ஒருவராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் யாது காரணத்தினாலோ வர முடியாமற் போயிற்று. ஆகவே, பத்மாவதி வேஷத்திற்காக முக்கியமாக எஸ். பத்மநாபராவை அழைத்துக் கொண்டு போக வேண்டியது அவசியமாயிற்று. அவர் “நாடகமாடு வதற்காக வெளியூருக்குப் போவதற்காக லீவு கேட்ப தென்றால், என்னால் முடியாது. என் ஆபீசரிடம் நீங்கள் சொல்லி எனக்கு லீவு வாங்கிக் கொடுத்தால் வருகிறேன்” என்று சொல்லி விட்டார். அதன்பேரில் அவரது ஆபீசரிடம் போய், ‘பத்மநாபராவ் இல்லாவிட்டால் எங்கள் சபை கொழும்புக்குப் போவதே நின்று விடும்!’ என்று சொல்லி, நயமாகப் பேசி, இரண்டு வாரம் அவருக்கு லீவு வாங்கிக் கொடுத்தேன். சில ஆக்டர்களுடைய தகப்பன்மார்கள் அவ்வளவு தூரம் போவதென்றால் ஆட்சேபணை செய்வதாக அறிந்து, அவர்களிடமெல்லாம் போய், “இதில் ஒன்றும் அபாயமில்லை, நாங்கள் எல்லாம் போகவில்லையா?” என்று நியாயங்கள் எடுத்துக் கூறி, அவர்களை யெல்லாம் சம்மதிக்கும்படிச் செய்ய வேண்டியதாயிற்று.

இதிலெல்லாம் பெரிய கஷ்டம் என்ன வென்றால், பிராம்மணர்களாயிருந்த சில ஆக்டர்கள் “தூத்துக்குடியி லிருந்து கொழும்புக்கு ஒரு ராத்திரியெல்லாம் சமுத்திரத்தின் மீது போக வேண்டியதாயிருக்கிறது. அதற்கு எங்கள். பந்துக்கள் ஒப்பமாட்டார்கள்; பிறகு எங்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து விடுவார்கள், நாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சங்கடத்திற்கு என்ன செய்வது?” என்று ஆட்சேபித்தார்கள். அவர்களுக்கெல்லாம், ‘சமுத்திரத்தின் மீதிருக்கும்போது நீங்கள் ஒன்றும், தாகத்திற்குக்கூடப் புசிக்க வேண்டியதில்லை. ஒரு ராத்திரியில் போய்ச் சேர்ந்து விடுவோம்!’ என்று சொல்லி, அவர்களுடைய தகப்பன்மார் முதலிய பெரியோர்களைப் பார்த்து அவர்களை யெல்லாம் இசையும்படிச் செய்ய வேண்டியதாயிற்று. இவைகளை யெல்லாம் ஒருவாறு செய்து முடித்த பிறகு, எங்களுடன் சமையலுக்காகப் பிராம்மண சமையல்காரர்களை அழைத்தால் ஒருவரும் வரமுடியாதென்று சொல்லி விட்டார்கள்! “பிராம்மணர்கள் சமுத்திரத்தைத் தாண்டலாகாது; அதிலும் நாங்கள் சமையல் வேலை செய்பவர்கள், எங்களை ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுவார்கள்; பிறகு எங்கள் ஜீவனமே போய் விடும்!” என்று வாஸ்தமாகச் சொன்னார்கள். இப்பொழுது சிலோன், ரங்கூன், சீமைக்குப் பிராம்மணர்கள் போய் வருவது சகஜமாய் விட்டபோதிலும், அக் காலம் மிகவும் அரிதாயிருந்ததென்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்தவரை, பிராம்மணர்கள் சிலோனுக்குப் போய் வந்தது மிகவும் அரிதாம். எங்கள் சபை ஒரு முறை போய் வந்த பிறகு, அநேகம் சபைகள் போயிருக்கின்றன. நாங்கள் போய் வந்த சௌகர்யத்தைக் கண்டு மற்றவர்களும் போய் வருவது பிறகு சாதாரணமாய் விட்டது. ஆயினும் இவ்விஷயங்களிலெல்லாம், முதலில் கால் வைப்பவன் பாடுதான் கஷ்டம். அந்த வைஷ்ணவ பிராம்மணச் சமையற்காரர்களை வரவழைத்து, அவர்களுடன் பல நியாயங்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் இசையவில்லை . கடைசியாக, “வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் முதலியோர் எங்களுடன் வரப் போகிறார்கள்; அவர்களுக்கு என்ன கஷ்டம் வருகிறதோ, அதுதானே உங்களுக்கும் வரப் போகிறது? அவர்களுக் காகிறது உங்களுக்காகிறது; நீங்கள் பயப்பட வேண்டாம். அப்படி ஏதாவது வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்!” என்று சொன்னதன் பேரில், அவர்கள் ஒருவாறு இசைந்தார்கள்.

பிறகு எங்கள் படுதாக்கள், உடுப்புகள் முதலியவற்றையெல்லாம், ரெயில் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் கொண்டு போக ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. நாங்கள் எடுத்துக் கொண்டு போன சாமான்கள், ஒரு வாகன் நிறைய இருந்ததென்றால், அவைகளை யெல்லாம் கட்டி ரெயில் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் கொண்டு போய்க் கொண்டு வர எவ்வளவு கஷ்டமாயிருக்க வேண்டுமென்று இதைப் படிக்கும் நண்பர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். அன்றியும் சபையின் அங்கத்தினர் ரெயில் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் குறைந்த சார்ஜில் (அரை சார்ஜில்) போய்வர மேல் அதிகாரிகளுக்கு எழுதி உத்தரவு பெற வேண்டியிருந்தது; இதிலெல்லாம் எனது நண்பர் பி.எஸ். தாமோதர முதலியார் மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு உதவினார். இவ்விஷயத்தில் இந்தப் பிரயாணத்திலும், பிறகு சபை போன அநேகம் பிரயாணங்களிலும் இவர் சபைக்காக எடுத்துக் கொண்ட சிரமமானது என்றும் மறக்கற்பாலதன்று. தற்காலம் உலக இன்பத்தைத் துறந்து சன்னியாசியாக வசித்து வரும் இவருக்கு என்றும் எங்கள் சபை நன்றியறிதலுடையதாயிருக்க வேண்டும். இவ்வேற்பாடுகள் எல்லாம் செய்த பொழுது இரவென்றும் பகலென்றும் பாராமலும் நித்திரையென்றும் பசியென்றும் பாராமலும் இவர் உழைத்தது ஈசனுக்குத்தான் நன்றாய்த் தெரியும்; எனக்குக் கொஞ்சம் தெரியும். இது ஒரு கஷ்டமா என்று கூறுவார்கள் சிலர்; இம்மாதிரியாக, ஒரு நாடக சபையை ஓர் ஊருக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டிய ஏற்பாடுகள் செய்து பார்த்தால் அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியும்.

இவைகளையெல்லாம் ஏற்பாடு செய்த பிறகு, முன்னதாகக் கொழும்புக்குப் போய், அங்கு நாங்கள் தங்கியிருப் பதற்கு வேண்டிய வசதி முதலியவற்றைப் பேசி வைப்பதற்கும், நாடக விளம்பரங்கள் முதலியவற்றைப் பிரசுரம் செய்வதற்கும் யாரையாவது உடனே அனுப்ப வேண்டுமென்று, எனது கொழும்பு நண்பர் எழுதினார். அதன்பேரில் எனதுயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவையும், யாழ்ப் பாணத்தில் பிறந்தவராகிய ஜெ.பி. ஷண்முகம் பிள்ளையையும், முன்னதாக அனுப்பி வைத்தேன். இவர்களிருவரும் முன்னதாகப் போய்ச் சேர்ந்து எங்களுக்கு இருப்பிடம் முதலியன வெல்லாம் ஏற்பாடு செய்து வைத்தனர். எனதுயிர் நண்பர் தினம் எனக்கு அங்கிருந்து காகிதம் எழுதிக்கொண்டிருந்தார். அக்காகிதங்களில் நமது நாடகங்களுக்கு வசூலாவது நமது செலவுக்குக் கட்டிவருமோ என்னமோ எனக்கு சந்தேகமாயிருக்கிறதெனப் பன்முறை தெரிவித்தனர். சென்னையிலிருந்த எனது நண்பர்களும், இப்பெரிய பிரயாணத்தை எடுத்துக்கொண்டோமே, சபைக்கு இதனால் பெரும் நஷ்டம் வந்தால் என்ன செய்கிறதென மிகவும் பயந்தனர். வாஸ்தவத்தில் எனக்கும் பயமாகத்தானிருந்தது. இப்படியிருக்கும் தருவாயில், நாங்கள் புறப்படுவதற்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன், ஒரு நாள் எனக்கு ஒரு தந்தி வந்தது. ‘ஐந்து நாடகங்களுக்கு 2500 ரூபாய்க்கு ஒருவர் கண்டிராக்ட் எடுத்துக் கொள்வதாகச் சொல்லுகிறார். அதை ஒப்புக் கொள்ளவா?’ என்று; நான் மிகவும் சந்தோஷப்பட்டவனாகி, எமது நிர்வாக சபை அங்கத்தினர்க்கு அதைக் காண்பித்துக் கேட்க, எல்லோரும் மிகவும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டனர். நாங்கள் வரவு செலவுக் கணக்குப் பார்த்ததில், நாடகம் ஒன்றிற்கு 500 ரூபாய் வந்தால், நஷ்டமின்றிச் சரியாகப் போகும் என்று கணக்கிட்டிருந்தோம். ஆகவே மேற்கண்டபடி ஒருவர் கண்டிராக்ட் எடுத்துக்கொண்டால் நமக்கு நஷ்டமேயிராது என்று குதூஹலத்துடன் சம்மதித் தோம். அதன்படியே இங்கிருந்து தந்தி கொடுத்து அந்த ஏற்பாட்டை ஒப்புக் கொண்டோம். நஷ்டம் வருமே என்கிற பயம் இதனால் அடியுடன் தீர்ந்தபோதிலும், மற்ற ஏற்பாடுகளெல்லாம் இரவு பகலாகச் செய்ய வேண்டியிருந்தது. அச்சமயம் எனது பால்ய நண்பர் வி.வி.. ஸ்ரீனிவாச ஐயங்கார் கோடைக்கானலுக்குத் தேக சௌக்கியத்திற்காகப் போயிருந்தார். அவருக்கு “நீ உடனே திரும்பிப் பட்டணம் வந்து சேராவிட்டால், எனக்குப் பைத்தியம் பிடித்துப்போம்!” என்று தந்தி கொடுத்து அவரை நான் வரவழைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.

பிறகு எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொண்டு ஒரு புதன் கிழமை இங்கிருந்து புறப்பட்டோம். யாரோ, வியாழக்கிமை வார சூலை, ஆகவே வியாழக்கிழமை புறப்படக்கூடாதென்று சொன்னார்கள். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லா விட்டாலும், யாராவது இது நல்லதல்ல வென்று ஏதாவது சொன்னால் அவர்கள் மனம் கோணாதபடி அவர்களிஷ்டப்படியே நடப்பது என் வழக்கம். சென்னையிலிருந்து தூத்துக்குடி போய்ச் சேர 24 மணி நேரம் பிடித்தது. ரெயில் பிரயாணத்தில் ஒரு கஷ்டமுமில்லை; ஆங்காங்கு சிநேகிதர்களுக்கு முன்னதாக எழுதி, உணவு முதலியவற்றை யெல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். தூத்துக்குடியிலிருந்து கப்பல் யாத்திரையில்தான் மிகவும் கஷ்டப்பட்டோம். என்னுடன் வந்த சுமார் 40 பெயர்களில் ஒருவராவது இதற்கு முன் சமுத்திரத்தின் மீது பிரயாணம் செய்ததில்லை. போதாக்குறைக்குத் தூத்துக்குடி ஆர்பரிலிருந்து, எங்களை ஏற்றிக் கொண்டு போக வேண்டிய கப்பலானது ஒரு மைலுக்கு அப்பால் தங்கியிருந்தது; அதைப் போய்ச் சேர ஸ்டீம்லான்ச்சில் போகவேண்டியிருந்தது; இதில் நாங்கள் இத்தனை பெயரும் எங்கள் சாமான்களுடன் ஏறிப் புறப்பட்டவுடன், அலைகள் மோத ஆரம்பிக்க, இந்த லான்ச்சானது மேலும் கீழுமாக ஆடத் தலைப்பட்டது. பயங்காளிகளாகயிருந்த சில அங்கத்தினரும், எங்களுடன் வந்த சில வேலைக்காரர்களும் அழத் தொடங்கினார்கள்! அவர்களுக்கெல்லாம் தைரியம் சொன்ன போதிலும் எனக்கும் பயமாகத்தானிருந்தது. அப்பொழுது நடந்த ஒரு சிறு சமாச்சாரத்தை இங்கெழுதுகிறேன். நான் கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டிருக்க, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு நண்பர், நான் கண் விழித்தவுடன், ‘ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்க, “இத்தனை பேரும் என்னை நம்பி இப் பிராயணத்திற்கு உடன்பட்டிருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் இப் பிரயாணத்தை முடித்துக்கொண்டு, பத்திரமாய் அவரவர்கள் வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கும்படியாக, ஸ்வாமியைக் குறித்துப் பிரார்த்திக்கிறேன்” என்று உண்மையை உரைத்தேன்.

ஸ்டீம் லான்ச்சிலிருந்து கப்பலைப் போய்ச் சேர்ந்த வுடன், இந்தக் கஷ்டம் ஒழிந்தது என்று எல்லோரும் சந் தோஷித்தார்கள். ஆயினும் இனி வரப்போகிறதை அறிந்தவனாய், எல்லோரையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரித்து விட்டு, என் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டேன். இதைக் கண்டு என்னைப் பயங்காளி என்று ஏளனம் செய்துவிட்டு, எல்லோரும் கப்பலின் மேல் பாரிசத்திலிருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். முதலில் ஒரு கஷ்டமுமில்லாவிட்டாலும், கப்பல் வேகமாய்ப் போக ஆரம்பித்தவுடன் கப்பல் மேலும் கீழுமாய் அலைக்கப்பட, ஏறக்குறைய ஒருவர் தவறாமல் வாந்தியெடுத்து கீழே அவரவர்களுடைய படுக்கைக்கு வந்தனர். எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் நான் ஒருவன்தான் வாந்தி எடுக்காதவன். இந்த வாந்திக்கு சீ சிக்னெஸ் என்று பெயர். இது சாதாரணமாக முதல் முறை கடல் யாத்திரை செய்பவர்களுக்கெல்லாம் காணுவதுண்டு. இதற்கு அநேகம் பெயர் அநேகம் சிகிச்சை சொல்லுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில், கடல் பிரயாணம் சகஜமாகிற வரையில், உணவை மிதமாக்கி, கப்பல் மிகவும் அதிகமாய் அசையும்பொழுது பேசாது படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பதுதான் தக்க சிகிச்சை. ஆயினும் இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இந்த வாந்திக்காகப் பயப்பட வேண்டியதில்லை. இப்படி வாந்தி யெடுத்து விட்டால், உடலிலிருக்கும் பித்த ஜலமெல்லாம் போய், உடம்பிற்கு ஆரோக்கியத்தையே தருகிறது. நான் மூன்று முறை தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குப் போயிருக்கிறேன். அம் முறைகளிலெல்லாம், அக் கப்பல் தலைவர்களைக் கேட்டதில், அவர்கள் எல்லோரும், ஆசியா கண்டத்தில் கப்பல் யாத்திரை செய்யும் பொழுது, சமுத்திரத்தை இவ்விடத்திற் கடப்பது மிகவும் கடினமானது; முக்கியமாக அரேபியன் சமுத்திரமும், வங்காளக் கடலும் கலக்கும் இடத்தில், கப்பலானது மிகவும் கலகப்படுகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு இம்முறை, கப்பலின் பங்கில் (படுக்கையறையில்) என்னுடன் படுத்திருந்தவர் ஒரு கோமுட்டிச் செட்டியார்; கோமுட்டிகளெல்லாம் பயங்காளிகள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆயினும் “முதலியார் ஜம்பம்!” என்று முதலியார்களைப் பற்றிச் சொல்வதுபோல், பயங்காளி கோமுட்டி என்று ஒரு வழக்கச் சொல் உண்டு. அந்தப் பழமொழிக்கு ஒத்த குணமுடையவர் என்னுடனிருந்த செட்டியார் (அவர் பெயரை இங்கு நான் வெளியிட இஷ்டமில்லை). அவர் கண்களில் நீர் ததும்ப, நீதான் எப்படியாவது என்னைக் காப்பாற்றி, என் பெண்சாதிப் பிள்ளைகளிடம் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கவேண்டும்!” என்று அழ ஆரம்பித்தார். அவருக்குச் சமாதானம் சொல்வது என் பாடு போதுமென்றாயிற்று. பிறகு “இரவு எவ்வளவு நீடித்திருந்தாலும் பொழுது விடிய வேண்டிய காலம் வந்துதான் தீர வேண்டும்!” என்னும் முதுமொழிக்கிசைய, அதிகாலையில் கொழும்புத் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். கப்பல் ஆட்டம் நீங்கி, நிம்மதியடைந்தோம். கொழும்புத் துறைமுகத்தின் நிபந்தனைகளின் பிரகாரம், எங்கள் சாமான்களையெல்லாம் பரிசோதித்து, எங்களையும் வைத்தியர்கள் பரிசோதித்த பிறகுதான் நாங்கள் கப்பலைவிட்டு இழியவேண்டியதாயிற்று. இதற்குள்ளாக, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், கொழும்பில் பெரிய கனவானாயிருந்த - நான் முன்னே கூறியபடி எங்களைக் கொழும்பிற்கு வரும்படி அழைத்த சர். ராமநாதன் என்பவரின் மூத்த குமாரரான, ராஜேந்திரா என்பவரும் வந்து சேர்ந்தார்கள். அவரது உதவியினால் எங்கள் சாமான் பரீட்சையும், வைத்தியப் பரீட்சையும் சீக்கிரத்தில் முடிந்தது.

பிறகு கப்பலிலிருந்து போட்டுகளில் (படகுகள்) இழிந்து, பியர் போய்ச் சேர்ந்தோம். அங்குப் போய்ச் சேர்ந்தவுடன் நாங்கள் கப்பல் யாத்திரையில் பட்ட கஷ்டத்திற் கெல்லாம் பரிஹாரம் கிடைத்தது. யாழ்ப்பாணத்து வாசியாகிய, இலங்கைத்தீவில் மிகவும் மதிப்பைப் பெற்ற சர். கனக சபையவர்களை முன்னிட்டு, கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான பெரிய மனிதர்கள் நகைமுகத்துடன் எங்களை நல்வரவழைத்தனர். சர். கனகசபை, இந்தியாவிலிருந்து, தமிழராகிய நமது சகோதரர்கள் இலங்கைக்கு வருகிறார்கள்; முதன் முறை ஆதலால், அவர்களை நாம் துறைமுகம் சென்று நல்வரழைக்க வேண்டுமென்று, கொழும்பிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் எழுதி, அவர்களை வரும்படி செய்தனராம். இச்சீமான் இப்பொழுது காலமாய் விட்டார். அப்படியிருந்தும், அன்று அவர் எங்கள் சபையோருக்குச் செய்த மரியாதையானது அவரை இன்னும் நான் மறவாதிருக்கும்படிச் செய்கிறது.

இவ்வாறு நாங்கள் எல்லாம் நல்வரவழைக்கப்படவே, ஸ்வாமியின் கருணையினால் ஆரம்பம் திருப்திகரமாயிருக்கிறது, முடிவுவரை இப்படியே இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, எனது நண்பர்களுடன், எங்களுக்கு ஏற்படுத்திய விடுதிக்குப் போய்ச் சேர்ந்தேன். போய்ச் சேர்ந்து எனது காலைக் கடனை முடித்துக்கொண்டு, தாகத்திற்குச் சாப்பிட்டவுடன், எனக்குக் கொழும்பில் நூதனமாய்க் கிடைத்த நண்பர்களில் ஒருவராகிய சதாசிவம் என்பவர், என்னை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய், “நீங்கள் உங்களுடைய ஐந்து நாடகங்களையும் 2500 ரூபாய்க்குக் கண்டிராக்டாக விட்டிருப்பதாகக் கேள்விப் படுகிறேன்; இதோ ஒருவர் அந்த ஐந்து நாடகங்களுக்கும் 3000 ரூபாய் தருவதாக, செக்குடன் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார். என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதன் பேரில் காற்று நமக்கு அனுகூலமாய்த்தான் அடிக்கிறது என்று சந்தோஷப்பட்டவனாயினும், ஒரு முறை வாக்குக் கொடுத்தபின் அதனை மாற்றுவது நியாயமல்ல, முடியாதென்று அவருக்குப் பதில் உரைத்து, செக்குடன் வந்தவரை அனுப்பிவிடச் செய்தேன்.

பிறகு அன்று காலை

முதல், சபை கொழும்புவை விட்டுத் திரும்பிய வரையில், எங்களைப் பார்க்க அந் நகர வாசிகளில் அநேகர் ஒருவர் மாறி ஒருவராய் வந்து கொண்டிருந்தனர் என்று சொல்வேனாயின் அது பொய்யாகாது. சாப்பிடுகிற வேளை உறங்குகிற வேளை தவிர யாராவது வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அன்று மத்தியானம், முன்னாள் இரவு தூங்காததற்காக, நானும் தூங்கி எனது ஆக்டர்களையும் தூங்கச் சொல்லிவிட்டு, பிறகு சாயங்காலத்திற்கு மேல், அங்குள்ள சிவன் கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வந்தோம். இந்த வழக்கம் இப்பொழுதும் எங்களுக்குண்டு. யாதாமொரு ஊருக்குப் போனால், அன்று சாயங்காலம் நாடகமில்லா விட்டால் எல்லா ஆக்டர்களுமாக அங்குள்ள முக்கியமான கோயிலுக்கு, சிவன் கோயிலோ, விஷ்ணு கோயிலோ போய் தரிசித்துவிட்டு வருவோம். நான் அன்று கோயிலுக்குப் போனபோது சிவபெருமானுக்குச் செய்து கொண்ட பிரார்த்தனை என்னவென்றால், எப்படியாவது சிங்களவாசிகள் மனத்தை எங்கள் சபையார் திருப்தி செய்யும்படி செய்ய வேண்டுமென்பதே. இவ்வாறு நான் பிரார்த்தனை செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இவ்விடத்தில் எங்களுக்குப் புதிதாய் ஏற்பட்ட சிநேகிதர்களுள் பலர், காலையில் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, உங்கள் சபையைப் பற்றி நாங்கள் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று புகழ ஆரம்பித்தார்கள். அவர்களுள் ஒருவர் கூறிய வார்த்தைகளை மாத்திரம் இங்கு எழுதுகிறேன்; சதாசிவம் என்பவர், “சில வருஷங்களுக்குமுன், நாராயண சாமிப் பிள்ளை, (இவர் சுப்பராயாச்சாரி கம்பெனி உடைந்து போன பிறகு, பிரத்யேகமாக ஒரு கம்பெனி ஏற்படுத்திப் பல நாடகங்களை நடத்திக் கீர்த்தியும் பணமும் சம்பாதித்தவர். இவர் இலங்கைத் தீவில் பல நாடகங்கள் நடத்தி ஏராளமான பொருள் சம்பாதித்தவர்) உங்கள் சபையைப் பற்றிச் ‘சுகுண விலாச சபையார் ஏறிய நாடக மேடையின்பேரில் நாங்கள் ஏற ஏலாது!’ என்று புகழ்ந்திருக்கிறார்!” என்றார். இது போன்ற பல வார்த்தைகளைக் கேட்டபொழுது, ‘என்னடா இது’ இவர்கள் எல்லாம் நம்மைப்பற்றி மிகவும் அதிகமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே! அவர்கள் எண்ணுவதற்குக் குறையாதபடி அவர்கள் மனத்தைத் திருப்தி செய்விக்க வேண்டுமே! என்னும் பீதி என்னைப் பற்றிக்கொண்டது.

மறு நாள் காலை நாடகசாலைக்கு, படுதாக்களெல்லாம் சரியாகக் கட்டியிருக்கின்றதா என்று, என் வழக்கம் போல் பார்க்கப் போனபோது, சைட் படுதாக்களும் மேல் ஜாலர்களும் கட்டச் சௌகர்யமில்லாதிருக்கிறதென்று, எங்கள் ஆள் சொன்னான். அதன் பேரில் என்ன செய்வது என்று கலங்கியவனாய், எனக்குத் தோன்றிய இரண்டொரு யுக்திகளைச் சொல்லிவிட்டு, அந்த ஆளிடம் உன்னாலானதைப் பார் என்று சொல்லிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தேன். சாதாரணமாகவே, வேறு ஊருக்குப் போய் முதல் முதல் ஏதாவது நாடகமாடுவதென்றால், எனக்கு, எப்படி முடியுமோ என்கிற பயமுண்டு. இதனுடன் மேற்சொன்ன காரணங்களும் ஒன்றாய்க் கூடவே, என் பாடு கஷ்டமாகி விட்டது. இம்மனக் குழப்பத்தில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு யார் வந்து என்னுடன் பேச வந்தாலும்"சிடு சிடு” என்று பேச ஆரம்பித்தேன்; இம்மாதிரியாக எனக்கிருக்கும் சமயங்களிலெல்லாம், எனதுயிர் நண்பர், “இப்பொழுது வாத்தியாரிடம் ஒருவரும் கிட்டப் போகாதீர்கள். அவருக்குப் பிசாசு பிடித்திருக்கிறது” என்று வேடிக்கையாய்ச் சொல்லுவார். கொஞ்ச நேரம் பொறுத்து, இதற்கெல்லாம் நாம் கவலைப்படுவானேன்? ஸ்வாமியிருக் கிறார் என்று அவர்மீது பாரத்தைச் சுமத்திவிட்டு, எழுந்திருந்து போய் எனது நண்பர்களுடன் கலந்து பேச ஆரம்பித்தேன். அவர்களெல்லாம், “பிசாசு விட்டுப் போய்விட்டதா? இனிப் பேசலாம்” என்று ஏளனம் செய்தார்கள். இப்படி நடப்பது எங்கள் சபை வெளியூருக்குப் போகும் போதெல்லாம் எனக்குச் சாதாரணமாகி விட்டது. இது தவறல்லவா என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. தவறென அறிந்தும் அதைத் தவிர்க்க அசக்தனாயிருக்கிறேன் என்றுதான் நான் பதில் உரைக்கக்கூடும்.

பிறகு, ராத்திரி நாடகமானபடியால், ஆக்டர்களெல்லாம் 5 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு, வேஷம் தரிக்க அருகிலிருந்த நாடக சாலைக்கு நடந்து போனோம். பிறகு நாங்கள் எல்லாம் வேஷம் தரித்துக் கொண்டிருக்கும்பொழுது, அந்த நாடகசாலையின் பழக்கப்படி, நாடக ஆரம்பத்திற்கு ஒரு மணிக்குமுன், நாடக சாலையின் வெளிக் கதவுகளைத் திறக்க, ஒரே கும்பலாய் ஜனங்கள் நுழைய ஆரம்பித்தார்கள். இதை நான் பார்த்தறிந்தவனல்ல, கேட்டறிந்தேன். ஏதாவது நாடகத்தில் நான் ஆடுவதானால், நான் மேடையின்மீது வருகிற வரையில், ஜனங்கள் வந்திருக்கின்றார்களா? எத்தனை பெயர் வந்திருக்கின்றனர்? இவைகளை யெல்லாம் கவனிக்கக்கூடாது என்கிற ஒரு கோட்பாடுடையவன் நான்; இதைப்பற்றி என் நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்கெல்லாம் ரிசர்வ் பண்ணியிருந்த நாற்காலிகள் தவிர மற்ற இடமெல்லாம் நிரம்பிவிட்டது என்று இதே வேலை யாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கமுடைய சில நண்பர்கள் எனக்குத் தெரிவித்தனர். உடனே வெளியில் டிக்கட்டாபீசிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த, எங்கள் சபை பொக்கிஷதாராகிய வ. ரங்கசாமி ஐயங்கார் உள்ளே நான் வேடம் தரித்துக்கொண்டிருக்கும் இடம் வந்து, “சம்பந்தம்! சம்பந்தம்! பாவி! ஏமாந்து போனாயே? நாடகம் ஒன்றிற்கு ஐந்நூறு ரூபாய்க்கு கன்டிராக்டு விட்டு விட்டாயே! இன்றைக்கு மாத்திரம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விட்டானே!” என்று என்னை வைய ஆரம்பித்தார்! இதில் வேடிக்கை யென்னவென்றால், இந்த மெம்பர்தான், சென்னப் பட்டணத்தி லிருந்த பொழுது நாடகம் ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய்க்கு கண்டிராக்ட் கேட்கிறார்கள் ஒப்புக்கொள்ளலாமா என்று ரங்கவடிவேலு தந்தி கொடுத்த பொழுது, “கட்டாயமாய் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சபைக்குப் பெரும் நஷ்டம் வரும்” என்று வற்புறுத்தினவர்! அன்றைத் தினம் ஆயிரத்து நானூற்றுச் சில்லரை ரூபாய்க்குமேல்வசூல் ஆயிற்று என்று கண்டிராக்டரே என்னிடம் ஒப்புக்கொண்டார். எனக்கிருந்த சந்தோஷமெல்லாம் சபைக்கு நஷ்டமில்லாமற் போனது மன்றி, கன்டிராக்டரும், இந்தச் சபை நாடகத்தைக் கன்டிராக்ட் எடுத்தோம்; நமக்கு இவ்வளவு நஷ்டமுண்டாயிற்று என்று துக்கிக்காதபடி அவரும் சந்தோஷப்படும்படி நேர்ந்ததே என்பதேயாம். இப்படி ஏராளமான ஜனங்கள் வருவார்களென்று இலங்கைத் தீவுவாசிகளான எங்களது புதிய நண்பர்களே, தாங்கள் நினைக்கவில்லை என்று ஒப்புக்கொண்டனர். இவ்விஷயத்தில் ஒரு சிறு கதை. அந்த நாடக சாலையை மொத்தத்தில் சில வருஷங்களுக்கு வாடகைக்கு வாங்கிக் கொண்டு நடத்தி வந்தவர் வார்விக் மேஜர் என்பவர்; பிறகு இவர் “சர்” பட்டம் பெற்றார். இவரிடம் போய் எனது உயிர் நண்பர் நாடகசாலையை 5 நாடகங்களுக்கு வாடகைக்குக் கேட்ட பொழுது “நான் சாதாரணமாகத் தினத்திற்கு நூறு ரூபாய்க்குக் குறைந்து விடுவதில்லை. ஆயினும் நீங்கள் வெளி ஊறார். உங்களுக்கு அதிகப் பணம் வசூலாகாது. ஆகவே தினம் ஒன்றிற்கு எழுபந்தைந்து ரூபாய்க்கு விடுகிறேன்” என்று சொல்லி, அப்பணத்தை முன்னதாகவே தங்களுக்குக் கட்டி விட வேண்டுமென்று நிர்ப்பந்தித்தாராம்; பிறகு இவர்களிட மிருந்து வசூலாவது கடினம் என்று எண்ணினார் போலும்! இவருக்குத் தமிழ் பாஷை தெரியாதிருந்த போதிலும், நாடகத்தின் கடைசி வரைக்கும் இருந்து மிகவும் நன்றாய் இருக்கிறதெனப் புகழ்ந்ததாகக் கேள்விப்பட்டேன். இவர் என்னைப்பற்றிச் சொன்ன சிறு சமாச்சாரத்தை இங்கு எழுது கிறேன். இவ்விடம் நாங்கள் முதல் நாடகமாக ஆடினது “லீலாவதி சுலோசனா.” இதில் நான் மூன்றாவது காட்சியில் தான் முதல் முதல் வருகிறேன். அதிலும் அக்காட்சியில் நான் செய்ய வேண்டியதெல்லாம் அரங்கத்தின் ஒருபுறமிருந்து மற்றொரு புறம் நடந்து போகவேண்டியவனே. அப்படி நடந்து சென்றதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வார்விக் மேஜர் தன் பக்கத்திலிருந்த சதாசிவம் என்பவரைப் பார்த்து, “இது யார் இந்தச் சிறுவர்? நல்ல ஆக்டர்போல் தோன்றுகிறாரே” என்று கேட்டாராம். அதற்கு எனது நண்பர், “அவர்தான் சம்பந்தம்! உங்களுக்குத் தெரியாதா?” என்று பதில் உரைத்தனராம். இதை அந்த சதாசிவம் என்பவரே என்னிடம் மறுநாள் தெரிவித்தார். “அந்தச் சிறுவருக்கு, வயது 38 ஆகிறது என்றும் கூறியிருக்கக் கூடாதா?” என்று சொல்லி நான் சிரித்தேன்.

மேற்சொன்னபடி ஏராளமான ஜனங்கள் வந்திருக்கிறார்களே என்கிற சந்தோஷம் ஒரு புறம் இருக்க, இதில் மாத்திரம் என்ன பிரயோஜனம். இவர்களெல்லாம் திருப்திகரமாயிருக்கிறதெனச் சந்தோஷப் பட்டாலொழிய என்ன பிரயோஜனம் என்று எண்ணினவனாய், முதற் காட்சி ஆரம்பிக்கும் பொழுது, முதல் சைட் படுதா பின்னால் நின்றுகொண்டு சபையோரைப் பார்க்கா விட்டாலும், அவர்கள் நாடகத்தை எப்படி அங்கீகரிக்கிறார்கள் என்று மிகவும் கவனித்து வந்தேன். முதல் காட்சியின் ஆரம்பத்தில், மேடை மீது பத்மநாபராவ், ஸ்ரீனிவாசராகவாச்சாரி, ரங்கவடிவேலு, வடிவேலு, ராமகிருஷ்ணையர் ஆகிய இந்த ஐவரும் ஸ்திரீ வேஷத்தில் தோன்றுகின்றனர். அக்காலத்தில் இவ்வைந்து பெயரும் நல்ல யௌவனத்தில் இருந்தவர்கள். ஸ்திரீ வேஷத்திற்கு மிகவும் பொருத்தமுடையவர்கள்; முக்கியமாக வெங்கடாசல ஐயர் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு இவர்களுக்கெல்லாம் மிகவும் அழகாக வேஷம் போட்டிருந்தார். விநாயகர் ஸ்துதி, சரஸ்வதி துதி முடிந்து, டிராப் படுதா மேலே போனவுடன் இவ் வுருவங்களைக் கண்டதும், வந்திருந்த சபையோர் சந்தோஷப்பட்டனர் என்பதை, அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலுடன் பேசிக்கொண்ட சப்தத்தினால் கண்டறிந்தேன். அன்றியும் இன்னின்ன நாடகத்தில் இன்னின்ன சந்தர்ப்பத்தில் சபையோர்கள் சந்தோஷப்படவேண்டும் என்று எனக்கு ஒரு நியதியுண்டு. அவ்வண்ணமே, அம் முதற் காட்சியில் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் சபையோர் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தது, எனக்கு சந்தோஷமுண்டாக்கியது. எனக்கு ஏதோ மிகுதியாயிருந்த கொஞ்சம் சந்தேகமும், முதற் காட்சியின் முடிவில், டிராப் படுதா இறங்கின பொழுது, வந்திருந்தவர்கள் அனைவரும் செய்த கரகோஷத்தினால், முற்றிலும் நிவர்த்தியாயது. மறுநாள் சர். ராமநாதனுடைய மூத்த குமாரர் ராஜேந்திராவுடன் நான் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் “நாடகத்தின் முதற் காட்சி முடிந்தவுடன், உங்கள் சபை இவ்வூரார் மனத்தைத் திருப்தி செய்வதைப் பற்றி எங்களுக்குச் சிறிதும் சந்தேகமில்லாமற் போயிற்று!” என்று எனக்குத் தெரிவித்தார்.

அன்றிரவு நடந்த நாடகத்தில் சங்கீதத்தில் லீலாவதியாக நடித்த ஸ்ரீனிவாசராகவாச்சாரியும், கமலாகரனாக நடித்த பாலசுந்தர முதலியாரும் நல்ல பெயர் பெற்றார்கள். ஸ்ரீனிவாசகராகவாச்சாரி அப்பொழுதுதான் கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவராக ஆரம்பித்தார். ஆயினும் அவர் ஸ்திரீ வேஷத்தில் நடித்தது கொழும்புவாசிகளால் மெச்சப்பட்டது. ஆயினும் நாடகம் பார்க்க வந்தவர்களின் மனத்தையெல்லாம் கவர்ந்தவர் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடி வேலுவே. கொழும்பு ஜலம் அவர் உடம்பிற்கு ஒப்புக் கொள்ளாததனாலேயோ அல்லது அச்சமயம் இலங்கைத் தீவில் மழைக்காலமாதலால் அம் மழையில் நனைந்ததனாலேயோ எக்காரணத்தினாலேயோ அவருக்குத் தொண்டை நன்றாய்க் கட்டிக்கொண்டது. நம்முடைய பூர்வீகக் கவிராயர்கள் வேடிக்கையாகக் கூறுவது போல், அவருக்குக் கம்மல் காதிலுமிருந்தது, தொண்டையிலுமிருந்தது. இதனால் அவர் ஒரு பாட்டும் பாட முடியாமற் போயிற்று. எவ் வளவோ இதற்குச் சிகிச்சை செய்து பார்த்தும் பாட முடியாமற் போயிற்று. இருந்தும் அவர் சுலோசனையாக நடித்தது எல்லோரையும் மிகவும் சந்தோஷிக்கச் செய்தது என்பதற்குத் தடையில்லை. அவர் “ரோஜாப்பூ காட்சி” என்று சொல்லப்படும் இந்நாடகத்தின் மத்தியில் வரும் ஒரு காட்சியில் நடித்தபொழுது, வந்திருந்தவர்கள் கரகோஷம் செய்தது இன்னும் என் செவியில் தொனிக்கிறது போலிருக்கிறது. இந்த ஓர் இடத்தில் மாத்திரமன்று; அவர் வந்த காட்சிகளில் முக்கியமான சந்தர்ப்பங்களிலெல்லாம் இடைவிடாது கரகோஷம் செய்தனர் என்று கூறுவது கொஞ்சமேனும் மிகையாகாது. ஒரு முறை சபையோரின் மனத்தைக் கவர்ந்துவிட்டால், அவர்களுக்கு இதுதான் சந்தோஷத்தைத் தரும், இது தராது என்பது கிடையாது போலும். இதற்கப்புறம் இங்கு இவர் நடித்த நான்கைந்து நாடகங்களில் புதுச் சேலைகளைத் தரித்துக் கொண்டு மேடையின் மீது தோன்றும் போதெல்லாம் கரகோஷம் செய்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. நான் ஏதோ எனது ஆருயிர் நண்பனை அதிகமாகப் புகழ்கின்றேன் என்று இதை வாசிக்கும் நண்பர்கள் நினைக்கலாகாது. அவர் கொழும்புவாசிகளின் மனத்தைக் கவர்ந்ததற்கு ஓர் உதாரணத்தை மாத்திரம் இச் சந்தர்ப்பத்தில் எடுத்து எழுதுகிறேன். அன்றைத் தினம் நாடகம் பார்க்க வந்தவர்களுள், இலங்கைத் தீவில் மிகவும் கியாதி பெற்றிருந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர். பன்முறை விவாகம் புரியும்படி நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்த தன் தாயாரிடம் போய், “நான் சுலோசனாவைத்தான் கலியாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன்!” என்று சொன்னாராம். இதை அவரது தங்கையாகிய ஒரு மாதாரசியே என்னிடம் பிறகு சொல்லக் கேட்டேன்.

ஹாஸ்ய பாகத்தில் எம். துரைசாமி ஐயங்கார் நன்றாக நடித்ததாகச் சொன்னார்கள். அவர் இந்நாடகத்தில் ‘அவசரப்படேல்’ காட்சியென்று வழங்கும் ஒரு காட்சியில் சாதாரணமாக மிகவும் நன்றாய் நடித்து எல்லோரையும் சிரிக்கச் செய்வார். இவர் இங்கு இக்காட்சியை நடித்த பிறகு சில தினங்கள் வரையில், இவரைக் கொழும்பு நேசர்கள் பார்த்தால் ‘அவசரப்படேல்’ என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

நானும் நன்றாக நடித்ததாக என்னிடம் சொன்னார்கள். அன்றிரவு நாடகம் முடிந்தவுடன் எங்களுடைய புதிய நண்பர்களெல்லாம், ஒருவர் பாக்கியில்லாமல், உள்ளே வந்து எங்களையெல்லாம் புகழ்ந்து சந்தோஷிக்கச் செய் தனர். இந்நாடகமானது, சர். ராமநாதனின் தாயாதியாகிய சர்.பி. அருணாசலம் என்பவரின் முன்னிலையில் நடந்தது. அவரும் அவருடன் விஜயம் செய்த ஒரு வெள்ளைக்காரச் சீமானும், சீமாட்டியும் நாடகம் நடித்ததைப்பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகக் கேள்விப்பட்டேன்.

அன்றிரவு நான் வேஷத்தைத் களைந்துவிட்டு, எங்களிருப்பிடம் போய் ஈஸ்வரனைத் துதித்துவிட்டு அதுவரையில் ஒரு மாசம் புரியாத சுக நித்திரை புரிந்தேன்.

மறுநாள் நாங்கள் கண் விழித்தது முதல், நாள் முழுவதும், எங்களை நாடக மேடையில் பார்த்த நண்பர்கள் ஓயாது எங்கள் இருப்பிடம் வந்தனர். இது நாங்கள் இலங்கையைவிட்டுத் திரும்பும் வரையில் நிகழ்ந்ததெனவே கூற வேண்டும். தினம் காலையிலும், மாலையிலும் எங்கள் ஆக்டர்களையெல்லாம், கொழும்பில் பார்க்க வேண்டிய இடங்களுக் கெல்லாம், மோட்டார் வண்டிகளில் அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள்; தினம் யார் வீட்டிலாவது விருந்துக்குச் சிலரை அழைத்துக்கொண்டு போவார்கள். அதிகமாக கூறுவதேன்? எங்களைத் தங்கள் விருந்தாளிகளாகப் பாவித்து, எங்கள் சௌகரியங்களை யெல்லாம், ஒன்றையும் மறவாமலும் விடாமலும், பார்த்து வந்தனர். எங்களுள் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்று இஷ்டப்படுவதாகச் சொல்லவேண்டியதுதான், அரை மணிக்குள் அது எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்துவிடும். “விருந்தோம்பல்” என்பதைப்பற்றி நான் படித்திருக்கிறேன். அது இத்தகையது என்பதை இவர்களிடமிருந்து நான் பிரத்யட்சமாகக் கற்றேன். கொழும்பு நேசர்கள் எங்களுக்குச் செய்த உதவிகளில் இரண்டொன்றை இங்கு எடுத்தெழுதுகிறேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து எனதுயிர் நண்பர் நாங்கள் இருந்த வீட்டில், நாற்பது பெயர் ஒன்றாய் இருப்பதென்றால், கொஞ்சம் அசௌகர்யமாயிருக்கிறதென்று ஏதோ பேச்சில் தெரிவித்தார். உடனே, அவரையும், இன்னும் மூன்று நான்கு பெயரையும் சர்.பி. ராமநாதன் வீட்டிற்கு, அவர் மூத்த குமாரனான மிஸ்டர் ராஜேந்திரா என்பவர் அழைத்துக்கொண்டு போய்விட்டார். என்னையும் வரும்படி அழைக்க, நானும் போய்விட்டால் இங்கிருப்பவர்களெல்லாம் ஏதாவது சொல்வார்கள், என்னை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் சாப்பாட்டு சமாச்சாரங்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வெங்கடாசல ஐயர், பட்டணத்திலிருந்து கொண்டுச் வந்த நெய் தீர்ந்து விட்டது.

கடைத்தெருவில் கிடைக்கும் நெய் நன்றாயில்லை யென்று அவர் தெரிவித்தார்; ஒரு மணி நேரத்திற்கெல்லாம், நாங்கள் கொழும்பில் இன்னும் இருக்கவேண்டிய நாட்களுக்கெல்லாம் வேண்டிய புத்துருக்கு நெய் வந்து சேர்ந்துவிட்டது! இதில் வேடிக்கை என்னவென்றால், அதை யார் அனுப்பியது என்பதை இதுவரையில் அறியேன்! அனுப்பித்தவர்களுக்கு நான் வந்தனம் செய்ய வேண்டுமே அதற்காவது சொல்லுங்கள் என்றாலும், ஒருவரும் சொல்ல மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இதைப்பற்றி ஆங்கிலத்தில் சில வருஷங்களுக்குமுன் எங்கள் சபை நடத்தி வந்த இந்தியன் ஸ்டேஜ் என்னும் பத்திரிகையில், நான் எழுதிய ஒரு வாக்கியத்தை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “இம்முறையும் இன்னும் எங்கள் சபை சிங்களத்திற்குப் போயிருந்த இரண்டு முறையும் எனக்கும் எனது சபை அங்கத்தினருக்கும் சிங்களவாசிகள் செய்த உதவிகளையெல்லாம் எடுத்துரைக்க அசக்தனாயிருக்கிறேன்; அன்றியும் அவைகளுக்காக, எனது இலங்கை நண்பர்களுக்குப் பிரதி செய்ய முடியாதவனாயிருக்கிறேன்; நான் மறுபடியும் அங்கு சென்று அவர்களையெல்லாம் காண முடியுமோ என்னவோ சந்தேகம். ஆகவே அவர்களெல்லாம் என்னிடமும், எனது சபை அங்கத்தினரிடமிருந்து பாராட்டிய அன்பிற்காகவும், நன்றிக்காகவும் எனது வந்தனத்தை - என் மனமார்ந்த வந்தனத்தை - இதன் மூலமாகச் செலுத்துகின்றேன்; இங்கெழுதி யுள்ளதை அங்குள்ள நண்பர்களுள் சிலராவது கண்ணுற்று, என் வந்தனத்தை அங்கீகரிப்பார்களாக; அவர்கள் செய்த பேருதவிக்கெல்லாம், நான் செய்யக்கூடிய கைம்மாறு வேறொன்றும் அறிகிலேன்.”

நாங்கள் இங்கு ஆடிய இரண்டாவது நாடகம் “மனோஹர.” இந்த நாடகத்தில் பத்மாவதியாக நடித்த பத்மநாபராவ் எல்லோராலும் மிகவும் சிலாகிக்கப்பட்டார். ரங்கவடிவேலு விஜயாளாக நடித்ததைப்பற்றிக் கேட்க வேண்டியதில்லை. ஒரு முறை அவர்மீது அன்பு கொண்ட பிறகு, ஜனங்கள் நாடக மேடையின்மீது அவர் ஏதாவது தவறு இழைத்தாலும் அதுவும் அற்புதமான நடிப்பு என்று எண்ணும்படியான மனோஸ்திதிக்கு வந்துவிட்டனர். இந்நாடகத்திற்கு வாராத சில நண்பர்கள் மறுநாள் எங்களிடம் வந்து, “இந்நாடகம் மிகவும் நன்றாகயிருந்ததாகக் கேள்விப்பட்டோம். இப்படிப்பட்ட சிறந்த நாடகத்தை ஏன் சனிக்கிழமையில் போடக்கூடாது? வாரத்தில் இடையிலுள்ள தினங்களில் போடும் நாடகங்கள் அவ்வளவு நன்றாயிராது என்று நாங்கள் வரவில்லை; அன்றியும் இரண்டு ராத்திரிகள் ஒருங்கே விழிப்பதென்றால் கஷ்டமாயிருந்தது; இந்நாடகத்தை மறுபடியும் எப்படியாவது போடுங்கள், நாங்கள் பார்க்கவேண்டும்” என்று வற்புறுத்தினர். இந்த மனோஹரன் நாடகம் நான் ஆடுவதில் எனக்குள்ள கஷ்டத்தை இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். ஆகையால் அவர்களுக்கெல்லாம், இம்முறை முடியாது, ஈஸ்வரன் கிருபையால் இன்னொரு முறை இலங்கைக்கு நாங்கள் வந்தால் போடுகிறோம் என்று பதில் சொன்னேன்.

பிறகு மூன்றாவது நாடகமாக காலவ சரித்திரம் நடத்தினோம். அதில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு முதற்காட்சியில் நர்த்தனம் செய்தது, முன்பிருந்ததைவிட நாடகாபிமானிகள் அவர்மீது அதிகப் பிரேமை கொள்ளச் செய்தது. இந் நாடகத்தில் வடிவேலு நாயக்கர், சந்தியாவளியாக நடித்தது பலரால் புகழப்பட்டது. ராமகிருஷ்ண அய்யர் இன்றும் வேடிக்கையாய்க் கூறினபடி, “காலவ நாடகம், வடிவேலு தினம்; மனோஹர நாடகம், பத்மநாபராவ் தினம்; சாரங்கதரா, ரங்கவடிவேலு தினம்; அமலாதித்யன், வாத்தியார் தினம்” என்று வேடிக்கையாக எங்களிடம் சொல்வது வழக்கம். இதற்கு அர்த்தம், இன்னின்ன ஆக்டர் இன்னின்ன நாடகங்களில் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்ட இடமுண்டு என்பதேயாம். வடிவேலு நாயக்கர், இந்நாடகத்திலும் இதற்கு முந்திய இரண்டு நாடகங்களிலும் ஸ்திரீ வேஷம் தரித்ததைக் கண்டவர்கள், இவர் இவ்வளவு கறுப்பாயிருக்கிறாரே, இவர் நாடக மேடைமீது இவ்வளவு சிவப்பாகவும் அழகாகவும் எப்படித் தோன்றுகிறார் என வினவ, இது அவருக்கு வேஷம் தரிப்பதன் சூட்சுமத்திலிருந்துதான் என்று நான் பதில் சொன்னேன். அதன் பேரில், அவ்விடத்திய சில ஆப்த நண்பர்கள், எங்களுக்கெல்லாம் வேஷம் தரிப்பதை அருகிலிருந்து பார்க்க வேண்டுமென்று உத்தரவு பெற்று, சாயங்காலம் நாங்கள் வேஷம் போட்டுக் கொள்ளும்பொழுது, முதலிலிருந்து கடைசி வரைக்குமிருந்து பார்த்தார்கள்.

முன்றாம் பாகம் முற்றிற்று