நாடக மேடை நினைவுகள்/நான்காம் பாகம்

விக்கிமூலம் இலிருந்து

நாடக மேடை
நினைவுகள்


 

நான்காம் பாகம்



ந்த இரண்டு மூன்று நாடகங்களுக்குள், எங்கள் சபையின் பெயர் கொழும்புப் பட்டணம் எங்கும் பரவிப் போயிற்று. அதனால் எங்கள் சபையார், இரண்டு மூன்று பெயராகச் சேர்ந்து வெளியிற் போனால் அவர்களைத் திரும்பிப் பார்த்து, இவர்கள் இன்னாரெனப் பேசிக்கொள்ளாத தமிழர்கள் அவ்வூரில் கிடையாது என்று சொல்வது அதிகமாகாது. இதற்கோர் உதாரணத்தை இங்கெழுதுகிறேன். என் தமயனார் ஆறுமுக முதலியார், எங்கள் சபையின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தபோதிலும், எங்களிடம் வேலையாட்கள் பலர் இருந்தபோதிலும், தினம் கடைக்குப் போய் காய்கறி பதார்த்தம் வாங்கி வருவதை மாத்திரம் தன்னுடைய வேலையாக மேற்கொள்வார். சாப்பாட்டில் ஆக்டர்களுக்குச் சகல சௌகர்யமும் இருக்கவேண்டு மென்பது அவரது கருத்துப் போலும். அவர் இவ்வழக்கப்படி ஒரு நாள் காலை கடைக்குப்போய்த் திரும்பி வந்ததும் ரிக்ஷா வண்டிக்காரனுக்கு அவனுக்குச் சேர வேண்டிய கூலியைக் கொடுக்க, அவன் அதற்குமேல் அதிகமாக வேண்டும் என்று சண்டையிட்டான். இதைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் என் தமயனார் ஒன்றும் பிராது செய்யாமலிருக்கும்பொழுதே, அவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் சார்ஜனா செய்து, மறுநாள் அவனை மாஜிஸ்ரேட் முன்பாக, “சுகுண விலாச சபை மெம்பர் ஒருவருடன் சச்சரவிட்டதற்காக 5 ரூபாய் அபராதம்” போட்டு வைத்தான். இப்படியே மறுநாள் அந்நாட்டுப் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது. தென் இந்தியாவில் நமது போலீஸ்காரரிடம், நாமாகப் போய்ப் பிராது செய்து கொண்டாலும் அவர்கள் பன்முறை கவனியாததை நான் பார்த்திருக்கிறேன்.

கற்றறிந்தவர்களை அன்றி, பாமர ஜனங்களுடைய மனத்தையும் எங்கள் சபை அங்குக் கவர்ந்ததென்பதற்கு மற்றோர் உதாரணம் கூறுகிறேன். ஒரு நாள் என் தமயனார் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்ட சில ஆக்டர்களுக்கு அதை வாங்கிக்கொடுத்து, அதை விற்றவனுக்கு அவனுக்குச் சேர வேண்டிய ரூபாய் இரண்டை அவன் கையிற் கொடுக்க, அதற்கு அன்றைத்தினம் எங்கள் நாடகத்திற்கு வருவதற்காக இரண்டு ரூபாய் டிக்கட்டொன்றைக் கொடுங்கள் என்று அவன் வாங்கிக்கொண்டு போனான். ஐஸ்கிரீம் தெருவில் விற்பவன் இரண்டு ரூபாய் டிக்கட் வாங்கிக்கொண்டு நாடகம் பார்க்க இவ்வூரில் வந்தான்; சென்னையில் மாதம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கும் சில பெரிய மனிதர்களிடம் போய் நான் ஏதாவது தர்ம விஷயமாக நாடகம் போடும்போது இரண்டு ரூபாய் டிக்கட்டு ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டால், அதற்குக் குறைந்த டிக்கட் இல்லையா என்று கேட்டிருக்கின்றனர்! இலங்கையில் ஒரு நாள் என்னைப் பார்க்க வேண்டுமென்று வந்த சாயபு ஒருவர், எங்கள் சபையைப் புகழ்ந்து விட்டு, அடியில் வருமாறு எனக்குத் தெரிவித்தார்: “நேற்றிரவு நாடகத்திற்கு நான் மூன்று ரூபாய் டிக்கட்டு நமக்குப் போதுமென்று நினைத்து மூன்று ரூபாய் டிக்கட்டொன்றை வாங்கிக்கொண்டு நாடக ஹாலுக்குள் பிரவேசித்து உட்காரப்போக, நான் உட்காரவேண்டிய நாற்காலியின் பக்கத்தில் என் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு வேலையாள் 3 ரூபாய் டிக்கட் வாங்கி உட்கார்ந்திருந்தான். இதைக் கண்டதும், பேசாது திரும்பிப்போய், இன்னும் இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுத்து, ஐந்து ரூபாய் வகுப்பில் மாற்றிக்கொண்டேன்” என்றார். சென்னையை விடக் கொழும்பில் பணமானது அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது என்பதற்குத் தடையில்லை .

எங்களது நான்காவது நாடகமாகிய அமலாதித்யனை வெள்ளிக் கிழமையில் வைத்துக்கொண்டோம். இதற்குக் காரணம், அந்த நாடகத்திற்கு விஜயம் செய்வதாக ஒப்புக்கொண்ட சிலோன் கவர்னருடைய சௌகர்யமே. எங்கள் சிலோன் நண்பராகிய சர். கனகசபை, கவர்னரிடம் எங்கள் சபையைப்பற்றிப் புகழ்ந்து பேசி, எப்படியாவது ஒரு நாடகத்திற்கு அவர் விஜயம் செய்ய வேண்டுமென்று கேட்டதன்பேரில், கவர்னர், வெள்ளிக்கிழமைதான் தான் வருவதற்குச் சௌகர்யப்படும் என்று கூற அன்றைத் தினம், பாஷை தெரியாவிட்டாலும், கதையின் போக்கை எளிதில் அறியக்கூடும் என்று, ஷேக்ஸ்பியர் மகா நாடகக்கவி எழுதிய ஹாம்லெட் என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய அமலாதித்யன் என்பதை வைத்துக்கொண்டோம். கவர்னர் எங்கள் சபை நாடகத்தைப் பார்க்க வருகிறார் என்று வெளியானவுடன், நாடகத் தினத்திற்கு இரண்டு தினம் முன்னதாகவே, நாடகசாலையிலுள்ள நாற்காலிகளெல்லாம் ரிசர்வ் ஆய்விட்டன.

இந்த அமலாதித்யன் நாடகம் நடந்த தினம் நான் சர்.பி.ராமநாதன் அவர்கள் வீட்டில் இருந்தேன். என்னுயிர் நண்பர் ரங்கவடிவேலுவை அங்கு அழைத்துக்கொண்டு போன பிறகு பன்முறை சர்.பி.ராமநாதனுடைய மூத்த குமாரர் என்னையும் அங்கு வந்திருக்கும்படி கேட்டார். நான் எனது மற்ற நண்பர்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளப்போகிறார்களேயென்று மறுத்து வந்தேன். அமலாதித்ய நாடக தினத்திற்கு முந்திய நாள் அவர் மறுபடியும் எனது நண்பர்கள் முன்னிலையில் அவர் கேட்க, அவர்களும், ‘எங்களுக்கு ஆட்சேபணையில்லை. நீ போய் வா’ என்று உத்தரவு கொடுத்தார்கள். அதன்மீது அங்குச் சென்றேன். அங்கு நான் போனது முதல், ஏறக்குறைய நான் இலங்கையை விட்டுத் திரும்பும் வரையில் சர்.பி. ராமநாதனுடைய இரண்டு குமாரர்களும் எனக்குச் செய்த உபசரணையை நான் இப்பொழுது, நினைத்துக் கொண்டாலும், அதற்கெல்லாம் நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று வியக்கத்தக்கவனாயிருக்கிறேன். “அகனமர்ந்து செய்யாளுறையு முகனமர்ந்து நல் விருந்தோம்புவானில்” என்று பொய்யாப் புலமைத் திருவள்ளுவர் கூறிய வார்த்தைகள் இவ் வம்சத்தாரிடை மெய்யாகுமாக. காலை துயிலெழுந்தது முதல், இரவில் நித்திரைக்குப் போகுமளவும், எங்கள் சௌகர்யங்களை யெல்லாம், நாங்கள் வாய் திறந்து கூறா முன் செய்து வந்தனர். சுருக்கிச் சொல்லுமிடத்து, எங்கள் வீட்டு மருமகப்பிள்ளைக்கும் நான் இவ்வளவு மரியாதை செய்தறியேன். ஒரு சிறு உதாரணத்தையாவது இங்கெடுத்து எழுதா விட்டால், என் மனம் திருப்தியடையாது. நாடக தினங்களில் நாடகமானவுடன், நாங்கள் வேஷம் களையும் வரையும் காத்திருந்து, பிறகு எங்களைத் தங்கள் வண்டியில் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவார்கள்; இதற்குச் சாதாரணமாக இரண்டு மூன்று மணியாகிவிடும்; ராத்திரியில் (அல்லது நான் காலையில் என்று கூறவேண்டுமா?) வீட்டில் எங்களுக்காக வெந்நீர் சித்தமாயிருக்கும். நாங்கள் ஸ்நானம் செய்த பிறகு, எங்களுக்காகப் பிரத்யேகமாகச் சித்தம் செய்யப்பட்டிருக்கும் உணவை (என் நண்பனுக்கு வேறு, எனக்கு வேறு உணவாக) எங்களுடன் உட்கார்ந்து புசித்துவிட்டுப் பிறகு எங்களுடன் உட்கார்ந்து பேசி விட்டு, எங்கள் படுக்கை அறைக்கு அழைத்துக்கொண்டு போய்ப் படுக்கையில் குழந்தைகளைப் படுக்க வைப்பது போல் படுக்க வைத்து, கொசுவலையை மூடிவிட்டு, விடிவிளக்கைச் சரிப்படுத்திவிட்டு, நாளைக்காலை உங்களுக்கு என்ன வேண்டுமென்று விசாரித்து, “குட்நைட், நன்றாய்த் தூங்குங்கள்” என்று சொல்லிவிட்டுப் போவார்கள்! நம்முடைய வீட்டிற்கு வரும் விருந்தினரை இவ்வாறு உபசரிக்க வேண்டுமென்பதை இவர்களிடமிருந்தும், கொழும்பில் ராக்வுட் வம்சத்தாரிடமும்தான் நான் சிறிது கற்றுக்கொண்டேன் என்பது திண்ணம்.

இவர்கள் வீட்டில் நாங்கள் இவ்வாறு தங்கியிருந்த போது, அமலாதித்ய நாடகத்தின் முந்திய தினம் இரவு சாப்பிட்டுவிட்டு நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்த பொழுது, “நாளை நாடகத்திற்கு உங்களுக்கு ஏதாவது வேண்டியிருக்கிறதா?” என்று சர்.பி. ராமநாதன் இரண்டாவது குமாரராகிய மாஹேசர் என்பவர் கேட்டார். அதன்மீது எனக்கொன்றும் வேண்டியதில்லை என்று நான் தெரிவித்தேன். ரங்கவடிவேலு, “எல்லாம் சரியாயிருக்கிறது. நாடகத்தில் நாலாவது அங்கத்தில் அபலையைத் தூக்கிக் கொண்டு போவதற்காக, பட்டணத்தில் செய்தபடி ஒரு பல்லக்கை இங்கே ஒரு கண்டிராக்டரைச் செய்யச் சொன்னேன். அது அசாத்தியம் என்று சொல்கிறான்,"என்று தெரிவித்தார். பட்டணத்தில் என்ன செய்தீர்களென்று கேட்டதன்பேரில், இன்னபடி செய்தோம் என்று அதை விளங்கச் சொன்னேன். ஏதோ தெரிந்து கொள்வதற்காகக் கேட்கின்றார் என்று நினைத்தேனே யொழிய, இவர் அவ்வாறு ஒரு பல்லக்கைச் செய்தனுப்பப் போகிறார் என்று கனவிலும் நினைத்தவனல்ல. இதைப்பற்றி மறுநாள் நடந்ததை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார் களாக. நாடக தினம், காலையில் என் வழக்கப்படி, நாடக சாலைக்குப் போய் ‘கேசு’விடம் திரைகளையெல்லாம் இப்படி இப்படிக் கட்ட வேண்டுமென்று சொல்லிவிட்டு, திரும்பி வந்து, சாப்பிட்டுவிட்டு, ‘அமலாதித்யன்’ நாடகத்தில் வழக்கப்படி என் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இவ் வழக்கத்தைப்பற்றி, நாடக மேடையில் புகழ் பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு உபயோககரமான ஒரு சமாச்சாரத்தை இங்கெழுத விரும்புகிறேன். இந்நாடகம் நான் எழுதியது முதல் பன்முறை ஒத்திகை செய்திருக்கிறேன். பன்முறை இந்நாடகத்தை ஆடியுமிருக்கிறேன். ஏறக்குறைய புஸ்தக முழுவதையும் குருட்டுப் பாடமாகவும் ஒப்புவிப்பேன்; இருந்தும், நாடக தினம் என் பாகத்தை மறுபடியும் நான் ஆதியோடந்தமாகப் படித்துத்தான் தீருவேன். இந்த ஒரு நாடகத்திற்கு மாத்திரமல்ல, நான் எழுதிய எல்லா நாடகங்களிலும் அப்படியே. மனோஹரன் நாடகம் ஏறக்குறைய 50 முறை நான் ஆடியிருக்கிறேன். இருந்தும் அதை ஆடுவ தென்றால் நாடக தினம் என் பாகத்தை, ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு நான் படித்துத்தான் ஆகவேண்டும். நான் ஆடவேண்டிய பாகம் எத்துணை சிறிதாயினும் சரி, நான்கு வரியாயினும் சரி, நான் தனியாகப் போய் அதை ஒரு முறை படித்தாக வேண்டும். சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நான் நாடகமாடும் பொழுதெல்லாம், அன்றைத் தினத்திய பாகத்தை, விக்டோரியா ஹால் மேல்மாடியில், டவர் இருக்கிறதே, அங்கு போய் தனியாக உட்கார்ந்து படித்து விட்டுத்தான் வருவேன். அச் சமயங்களிலெல்லாம், யாராவது என்னைப் பார்க்கவேண்டுமென்று கீழே விசாரிப்பார் களானால், “உபாத்தியாயர் பாடம் படிக்கப் போயிருக்கிறார்! அவரை இப்பொழுது ஒருவரும் தொந்தரவு செய்யக் கூடாது” என்று எனது நண்பர்கள் ஏளனமாகச் சொல்வார்கள். நான் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்துஸ்தானி பாஷைகளில் சில பாத்திரங்களை ஆடியிருக்கிறேன் என்பது என் நண்பர்கள் அறிந்த விஷயமே. அவைகளில் பெரும்பாலும் என் பாகம் மிகவும் சிறு பாகங்களாகவேயிருக்கும்; எவ்வளவு சிறிய பாகமாயிருந்தாலும் மேற்சொன்னபடி அதை ஒரு முறை ஏதோ காரணத்தினாலும் மறதியினாலும் அவ்வாறு செய்யாமற்போய் நான் நாடகமேடையில் தட்டுத் தடுமாறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது; இது திருநெல்வேலியில் நடந்ததென நினைக்கிறேன்; அப்பொழுது நாடக மேடையின் பேரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, என்ன நமது பாகம் தடுமாறுகிறது என்று யோசித்துப் பார்க்க, இன்று நாம் இதை வழக்கம்போல் படிக்கவில்லையல்லவா என்று ஞாபகம் வந்தது! இதை நான் இவ்வளவு விவரித்து எழுதியதற்குக் காரணம், இதனால் பெரும் அனுகூலமுண்டென்றும், இப்படிச் செய்யாவிட்டால் கஷ்டப்பட வேண்டு மென்பதையும் நாடக மேடையில் பெயர்பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் பொருட்டே. தற்காலம் எங்கள் சபை உட்படச் சில சபைகளில் சில ஆக்டர்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் தங்கள் பாடங்களை நன்றாய்ப் படிக்காமல் மேடையேறி விடுகிறார்கள்; சரியாகப் படிக்காததை மறைப்பதற்காக, ஒவ்வொரு சைட்படுதா பக்கத்திலும் ஒவ்வொரு ப்ராம்டர் (நாடகப் புஸ்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மேடையின் மீதிருக்கும் நடிகன் ஏதாவது மறந்து போனால், அதை எடுத்து அவனுக்குச் சொல்ல வேண்டியவன்) ஏற்பாடு செய்து கொள்ளுகிறார்கள். இதென்ன இரண்டு பிராம்டர்கள்? என்று விசாரிக்குமளவில் இந்தப் பக்கம் நின்று பேசும்பொழுது இந்த பிராம்டர் அந்தப் பக்கம் நின்று பேசும் பொழுது அந்த பிராம்டர்! என்று பதில் உரைத்திருக்கிறார்கள். தங்கள் பாடங்களைச் சரியாகப் படியாததனால் அடிக்கடி பிராம்டர்களிருக்கும் பக்கம் இந்த ஆக்டர்கள் திரும்ப வேண்டி வருகிறது. இவர்கள் தாங்கள் மேடையின்மீது நடிக்க வேண்டிய காரியத்தைக் கவனியாது, பிராம்டரையே கவனிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் செய்யும் சூது, சபையோர்க்குத் தெரியாது என்று எண்ணுகிறார்கள் போலும்; அவர்களுள் யாராவது நாடக மேடையின் அனுபவம் கொஞ்சமேனும் உடையவர்களாயினும் இதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். இதற்கும் மேலாகச் சில ஆக்டர்கள், “நான் பேச வேண்டிய வார்த்தைகள் வரும் போதெல்லாம், நீ அப்படியே படித்துக் கொண்டு வா, நான் சொல்லிக்கொண்டு வருகிறேன்” என்று பிராம்டர்களுக்குச் சொல்வதை நான் காதாரக் கேட்டிருக்கிறேன்; இது பெரிய தவறாகும். ஒருவன் எப்படிப்பட்ட ஆக்டராயிருந்தபோதிலும், இவ்வாறு செய்வானாயின் அவனது ஆக்டு சோபிக்காது என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. இவையெல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் சில ஆக்டர்கள், தாங்கள் பாடவேண்டிய பாட்டிற்குக்கூட பிரத்யேகமாக ஒரு பிராம்டரை ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுகிறார்கள்!

இவ்வாறு தங்கள் பாகத்தைச் சரியாகப் படியாது, பிராம்டர்களை நம்பி மேடைமீது ஏறும் ஆக்டர்களுக்கேற்படும் விபத்துகளில் இரண்டொன்றை இங்கெடுத்தெழுதுகிறேன். ஒருமுறை இப்படிப் பாடம் படிக்காத ஒரு ஆக்டர் த்யுமத்சேனனாக மேடையின்மீது நடித்துக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு அந்தகனாகக் கண்களை மூடிக் கொண்டிருக்க வேண்டி வந்தது; பிராம்டர் ஒரு பக்கத்திலிருந்து படித்துக் கொண்டு வர, இவர் பாகத்தை யெல்லாம் பள்ளிக்கூடத்தில் பிள்ளை பாடம் ஒப்புவிப்பதுபோல் ஒப்பித்துக் கொண்டு வந்தார்; ஒரு சந்தர்ப்பத்தில் த்யுமத்சேனனை நோக்கி மற்றொரு நாடகப் பாத்திரம் சொல்ல வேண்டிய பாகத்தை, “த்யுமத்சேனா” என்று ஆரம்பித்து அப்பாத்திரத்திற்குப் பிராம்டர் பிராம்ட் செய்ய, தன் பாகத்தைச் சரியாகப் படியாததனால், அதுவும் தன் பாகம் என்று நினைத்துக் கொண்டு, த்யுமத்சேனனாகிய ஆக்டர், “த்யுமத்சேனா” என்று தன்னையே அழைத்துக் கொண்டு, பேச ஆரம்பித்தார்! பிராம்டாராயிருந்த எனது நண்பருக்குக் கோபம் பிறந்து, “அடே மடையா! (அவர் இதைவிடப் பலமாக வைதார். அவ்வார்த்தையை இங்கெழுதுவதற்கு எனக்கு இஷ்மில்லை) நீதானடா த்யுமத்சேனன்!” என்று உரக்கக் கோபித்துக் கொண்டார். இதையெல்லாம் பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருந்த சபையோர்கள் கொல் என நகைத்தனர்! இன்னொரு முறை ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவி எழுதிய ஜூலியஸ் சீசர் என்னும் நாடகம் நடிக்கப்பட்ட பொழுது, ஆன்டொனி என்னும் முக்கியமான பாத்திரம் பூண்டவர், தன் பாடத்தைச் சரியாகப் படிக்காமல், பிராம்டர் உதவியால் பேசிக்கொண்டு வந்தபொழுது, ஒரு காட்சியில் அவர் செய்ய வேண்டிய பெரிய உபன்னியாசத்தின் இடையில் அதைக் கேட்ட சில ஜனங்கள் சொல்ல வேண்டிய வார்த்தைகளைப் பிராம்டர் அவர்களுக்கு எடுத்துக் கொடுக்க, அதை அறியாதவராய், தன் உபன்யாசத்தில், அதைக் கேட்ட மாந்தர்கள் சொல்லவேண்டிய வார்த்தைகளையும் சேர்த்து உபன்யாசம் செய்துவிட்டார்! இதை விட்டகலுமுன் இன்னொரு கடைசி உதாரணத்தை எடுத்து எழுதிவிடுகிறேன். எங்கள் சபை வெளியூர் ஒன்றிற்குப் போய் நடித்துக் கொண்டிருந்தபொழுது, மேற்சொன்ன பிரிவைச் சார்ந்த ஒரு ஆக்டர் (அவர் பெயரை இங்கெடுத்தெழுத என் மனம் வரவில்லை) தான் பாட வேண்டிய பாட்டுகளைச் சரியாகப் படிக்காதவராய் அதற்காகப் பிரத்யேகமாக ஒரு பிராம்டரை ஏற்பாடு செய்து வைத்தார். அவர் எடுத்துக் கொடுத்த படியே, ஒரு பாட்டுதான் இருக்கிறது"என்று பதில் உரைத்தார். எனது நண்பர் தான் பாடிக்கொண்டு வந்தபாட்டுடன், “இன்னும் ஒரு பாட்டுதான் இருக்கிறது"என்று, அதையும் ஒரு அடியாகச் சேர்த்துப் பாடிவிட்டார்! இவர், ஜனங்கள் பாட்டின் போக்கில் இதைக் கவனித்திருக்க மாட்டார்கள் என்று எண்ணிய போதிலும், மறுநாள் சிலர் “என்ன உங்களுடைய ஆக்டர் இப்படி ஆபாசம் செய்தார்?” என்று கேட்டது எனக்கு நன்றாய் ஞாபகம் இருக்கிறது. ஆகவே, நாடக மேடை ஏற விருப்பங்கொண்டிருக்கும் எனது இளைய நண்பர்களையெல்லாம் இதனால் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், முதலில் உங்கள் பாகங்களை நன்றாய்ப் படியுங்கள்; அப்படி எவ்வளவு நன்றாய்ப் படித்திருந்த போதிலும், நாடக தினம் மறுபடியும் ஒருமுறையாவது உங்கள் பாகத்தை மனனம் செய்யுங்கள், என்பதேயாம்.

இவ்வாறு பன்முறை ஒரு பாகத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பதனால் இன்னொரு முக்கியமான சுகிர்தமுண்டு. நாம் நடிக்க வேண்டிய பாகத்தைப் பன்முறை திருப்பித்திருப்பிப் படிக்குங்கால், இன்னின்ன புதிய மாதிரிகளில் நடிக்கலாமென்று புதிய யோசனைகள் நமக்கு உதிக்கலாம். முக்கியமாக ஷேக்ஸ்பியர் முதலிய மஹா நாடகக் கவிகள் எழுதிய நாடகங்களைப் பன்முறை படிப்பதனால் இந்த அனுகூலத்தைப் பெற்றிருக்கிறேன். இதற்கு நியாய சாஸ்திர சாதகத்திலிருந்து ஓர் உதாரணத்தைக் கொடுக்கிறேன். நியாய சாஸ்திரத்தில் மிகுந்த புத்திமான் என்று பெயர் பெற்ற காலஞ்சென்ற வி. பாஷ்யம் ஐயங்கார் என்பவர், ஒரு நியாய புஸ்தகத்தில் ரீஸ்ஜூடிகேடா என்னும் ஒரு சட்டத்தை எத்தனையோ ஆயிரம் முறை படித்திருந்தபோதிலும், புதிதாக ஒரு வழக்கில் அதைப்பற்றிப் பேசவேண்டி வந்தால், மறுபடியும் அதைப் படிக்கச் சொல்லிக் கேட்பாராம். இதுவரையில் தோன்றாத புதிய யோசனை அதனின்றும் தோன்றுகிறதா என்று அறிவதற்காக! நாடக சபையிலும் நாடகப் பாத்திரங்களின் பாகங்களை இவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது அதிக அனுகூலத்தைத் தரும் என்பது என் கொள்கை.

மேற்சொன்னபடி அமலாதித்யன் பாகத்தை நான் படித்துக் கொண்டிருந்த பொழுது, எங்கள் சபையின் மற்ற அங்கத்தினர் தங்கியிருந்த இடமிருந்து, ஒரு கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. அதைப் பிரித்துப் பார்க்கும் பொழுது அன்றைத்தினம் நாடகத்தில் என்னுடன் ஹரிஹரனாக நடிக்க வேண்டிய சத்தியமூர்த்தி ஐயருக்கு அதிக ஜுரமாயிருக்கிறது, அவர் இன்று ஆடமுடியாதென்று, எழுதியிருந்தது. நாடக ஆரம்பத்திற்கு ஆறு ஏழு மணிக்கு முன்னர் இச்செய்தி வந்து சேர்ந்தால் நான் என்ன செய்யக்கூடும்? அதுவும் ஹரிஹரன் பாகம் மிகச் சிறு பாகமல்ல; உடனே விரைவில் என் பாகத்தை முடித்துவிட்டு அந்த வீட்டிற்குப் போய் ராமகிருஷ்ண ஐயருக்கு அப்பாகத்தை ஒருமுறை படித்துக்காட்டி, எப்படியாவது அதைக் குருட்டுப்பாடம் செய்துவிடு என்று சொல்லிவிட்டு, நாடக சாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். எனது நண்பர் ராமகிருஷ்ண ஐயரும் அச் சிறிது நேரத்தில் பாடத்தை நன்றாய்ப் படித்து அன்றிரவு நன்றாக நடித்தார். என்னுடன் பழகிய எனது ஆக்டர்களிடமெல்லாம் இந்த நற்குணமிருந்தது; அதாவது, ஏதாவது ஆபத்தில் கை கொடுத்து உதவும்படியான குணம். இக்காலத்திய என் இளைய ஆக்டர்களும் இக் குணத்தை வழிபட்டு நடப் பார்களாக.

அன்றிரவு குறித்த மணிப்பிரகாரம் கவர்னர் அவர்கள் வரவே, நாங்களும் நாடகத்தை ஆரம்பித்தோம். நான் வரும் முதற் காட்சியில், என் தனி மொழிக்கு முன்பாக, நான் சில வார்த்தைகள்தான் பேசவேண்டியிருந்தது. என் தனி மொழியை ஆரம்பிப்பதற்காக என் முகத்தை ஜனங்கள் உட்கார்ந்திருக்குமிடமாகத் திருப்பியபொழுது, ஹாலில் இனி ஒருவருக்கும் இடமில்லாதபடி ஜனங்கள் நிறைந்திருந்ததைக் கண்டேன். பிறகு நான் விசாரித்ததில் உட்கார இடமில்லாமல் நிற்பதற்காகச் சில நாட்டுக்கோட்டைச் செட்டியார் 5 ரூபாய் விகிதம் கொடுத்ததாகக் கேள்விப்பட்டேன். அன்றைத் தினம் மொத்த வரும்படி ஆயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு ரூபாய் என்று பிறகு அறிந்தேன். இப் பணமானது கண்டிராக்டரைச் சேர்ந்ததாயினும், ‘நம்முடைய சபையின் நாடகத்தைப் பார்க்க இத்தனை திரளான சீமான்களும் சீமாட்டிகளும் வந்திருக்கிறார்களே யென்று எனக்குக் குதூஹலமுண்டாயிற்று. சாதாரணமாக என் தனி மொழிகளையெல்லாம் கொஞ்சம் மெல்லிய குரலுடன்தான் ஆரம்பிப்பது வழக்கம். அப்படி நான் அன்று ஆரம்பித்த பொழுது, ஹாலெங்கும் நிசப்தமாகி விட்டது. வர வர என் குரலை உயர்த்திக் கொண்டு போய் என் முதல் தனி மொழியை நான் முடித்தபொழுது, வந்திருந்தவர்களெல்லாம் கரகோஷம் செய்தனர். பிறகு நான் அறிந்தபடி கவர்னர் அவர்கள்தான் இதை முதலில் ஆரம்பித்தனராம். அன்றிரவு அமலாதித்யன் நடிக்க வேண்டிய முக்கியப் பாகங்களிலெல்லாம், ஒன்றும் விடாது கரகோஷம் செய்து வந்தனர். அம்மாதிரியான கரகோஷத்தை இதற்கு முன்னிலும் நான் பெற்றவனன்று; பிறகும் பெற்றவனன்று. இதையெல்லாம் எனக்குச் செய்த மரியாதையாகப் பாவியாது எங்கள் சபைக்குச் செய்ததாகக் கொண்டு உளம் பூரித்தேன். இந்நாடகத்தில் ஒரு முக்கியமான காட்சி, அமலாதித்யனும் அபலையும் சந்திக்கும் காட்சி; இதில்தான், “இருப்பதோ இறப்பதோ” என்று ஆரம்பிக்கும் ஒரு பெரிய தனி மொழியுண்டு. அத் தனிமொழியை ஆக்டு செய்வது மிகவும் கடினம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. அக் காட்சியில் எனதுயிர் நண்பர் சி.ரங்கவடிவேலுவும் நானும் நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இக் காட்சியில் நான் நடித்ததைவிட என் நண்பர் நடித்ததைச் சபையோர் புகழ்ந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. ஆயினும் என்வரையில், இக்காட்சியைவிட, அமலாதித்யன் தன் தாயாருடன் பேசும் பிறகு வரும் காட்சியே, நடிப்பது மிகவும் கஷ்டமென என் அபிப்பிராயம். இக்காட்சியில், தனது அன்னைக்குத் தோற்றாது, அமலாதித்யன் கண்களுக்கு மாத்திரம் அவனது தந்தையின் அருவம் தோன்றும்பொழுது, அதை வெருண்ட கண்களுடன் பார்த்து, அது அரங்கத்தைக் கடந்து செல்லும்போது, மலர்ந்த என் கண்களால் அதை நான் பின்தொடர்ந்து போவது போல் நடிப்பது எப்பொழுதும் சாதாரணமாக ஜனங்களைத் திருப்திசெய்வது வழக்கம். இன்றைத் தினம் அக்காட்சியில் நடித்தபொழுது மிகுந்த கல்விமான்களும் பெரியோர்களும் நிறைந்த சபையாயிருக்கிறது. இவர்களில் சிலர் சீமையில் பெரிய ஆங்கில ஆக்டர்கள் இந்த ஹாம்லெட் பாத்திரத்தை ஆடுவதைப் பார்த்திருப்பார்கள்; அவர்களுக்கெல்லாம், நம்முடைய முழு சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும் என்று விருப்பங்கொண்டவனாய், அந்தப் பாகம் வரும்பொழுது, நடிக்கும் என் முழுத் திறமையையும் கொண்டு நடித்தேன். அருவமானது அமலாதித்யன் கண்களுக்குத் தோன்றிய க்ஷண முதல், அது மறையும்வரையில், நான் நடித்ததையெல்லாம் நிசப்தமாய்க் கண்கொட்டாது கவனித்து வந்தார்கள் என்று, எனது நண்பர்கள் பிறகு சொல்லக் கேட்டேன். நான் அவர்களைப் பாராவிட்டாலும், என் மனத்தினுள், சபையிலுள்ளவர்களெல்லாம் நாம் நடிப்பதை ஏகாக்ர சிந்தையர்களாய்க் கவனிக்கிறார்களென்று அறியும் தன்மை எனக்குண்டென நம்புகிறேன். அவர்கள் கரகோஷம் செய்வதைவிட, இவ்வாறு அவர்களது மனத்தை யெல்லாம், வசீகரணம் செய்வதே ஒரு ஆக்டருக்குப் பெருமையென்பது என் அபிப்பிராயம். இக்காட்சியில் நான் நடிக்கும்பொழுது என்னுடன் நடிக்கும் ஆக்டர்களெல்லாம், சைட் படுதாவண்டை நின்று பார்ப்பது வழக்கம். அன்றைத் தினம் இக்காட்சி நடிக்கப்பட்டபொழுது, ஹாலின் மத்தியிலிருந்த ஒரு மனிதன், கூச்சலிட்டான்; பிறகு, அவர் குடித்திருந்ததாயும், நான் நடித்ததைப் பார்த்து ஏதோ பயந்ததாகவும் சொல்லக் கேட்டேன்; அம் மனிதன் இவ்வாறு கூச்சலிட்டவுடன், ஹாலில் என்னைக் கவனித்துக் கொண்டிருந்த அனைவரும் அவனிருக்குமிடம் திரும்பி, “உஸ்!”என்று அவனை அதட்டினார்கள். தாங்கள் வியந்து கொண்டிருந்ததைத் தடை செய்ததற்காக அவனை இவ்வாறு அதட்டியதே நான் ஆக்டு செய்ததற்கு அவர்கள் செய்த பெரிய மரியாதை என்று இன்றளவும் நான் நினைக்கிறேன். அக்காட்சியின் முடிவில் சபையோரெல்லாம் ஒரே கர கோஷம் செய்தனர். ஏறக்குறைய நாடக அந்தம்! வரையில் இருந்துவிட்டுப் போன கவர்னர் அவர்கள் நாடகம் மிகவும் நன்றாக இருந்ததாகப் புகழ்ந்தாராம்; அவர், ‘இன்று ஹாம்லெட்டாக நடித்தவர் எனக்கு சர். ஹென்றி இர்விங்கை நினைப்பூட்டுகிறார்’ என்று என்னைப் பற்றிக் கூறியது நான் என்றும் மறக்கற்பாலதன்று. சர் ஹென்றி இர்விங் என்னும் இங்கிலாந்து தேசத்திய மிகச்சிறந்த ஆக்டருடன் என் பெயரையும் ஒத்திட்டுச் சொன்னதே எனக்குப் பெரும் புகழாகக் கொள்ளுகிறேன். அன்றையத் தினம் நாடகத்தைப் பார்த்த டாக்டர் சின்னதம்பி என்பவர், சீமைக்குப் போய் சர் ஹென்றி இர்விங் ஹாம்லெட்டாக நடித்ததை நேரிற்கண்டவர்களுள் ஒருவர்; அவர் என்னிடம் வந்து, “என் வரைக்கும், அதைவிட நீ நடித்ததே மேலாகத் தோன்றுகிறது” என்று கூறினார். இதை நான் அவருக்கு என் மீதுள்ள பிரியத்தினாற் சொல்லப்பட்டதென்றே கொள்கிறேனே யொழிய, நான் ஏற்கத்தக்க புகழாகக் கொள்ளவில்லை.

அபலையின் ஸ்மசானக் காட்சி எல்லோராலும் புகழப்பட்டதென்று கேள்விப்பட்டேன். இதற்கு முக்கியமான காரணம், ஸ்மசானத்திற்குக் கொண்டுபோன பல்லக்கு மிகவும் ஒழுங்காய்ச் சிருங்காரிக்கப்பட்டதே. இந்தப் பல்லக்கு சிருங்காரிப்பதைப் பற்றி, சர். ராமநாதன் இரண்டாவது குமாரர் மாஹேசருக்கும், ரங்கவடிவேலுக்கும் எனக்கும் நடந்த சம்பாஷணையை முன்பே குறித்திருக்கிறேன். நாடகத் தினம் சாயங்காலம் ஆறு மணிக்கு, நாங்கள் எல்லாம் வேஷம் போட்டுக் கொள்வதற்கு ஆரம்பஞ்செய்து கொண்டிருந்தபொழுது, இந்தக் காட்சியில் உபயோகப்படுத்துவதற்காக, கண்டிராக்டர் செய்தனுப்பிய, பாடை வந்து சேர்ந்தது. இதைப் பார்த்ததும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு கோபமடைந்து, “நான் இப்படியா செய்தனுப்பச் சொன்னேன்? இதில் நான் படுக்கவே மாட்டேன்! இந்தக் காட்சியை வேண்டுமென்றால் விட்டுவிடுங்கள்!"என்று கோபித்து மொழிந்தார். அவரை நான் சமாதானம் செய்து கொண்டிருக்கும்பொழுது, சிறிது நேரத்திற்கெல்லாம், எனது நண்பர் விரும்பியபடி அழகிய ஒரு பல்லக்கை நான்கு பெயர் தூக்கிக் கொண்டு நுழைந்தார்கள். அதைக் கண்டதும் எனது நண்பர் கோபமெல்லாம் மாறி மிகவும் சந்தோஷப்பட்டுக் கண்டிராக்டர் கொண்டு வந்ததை எடுத்து வெளியில் எறியும்படி உத்தரவு செய்தார். பிறகு நான், “இந்த அழகிய பல்லக்கு எங்கிருந்து வந்தது?” என்று விசாரித்ததில், அது வந்து சேர்ந்த விதம் பின் வருமாறு என்றறிந்தேன்:- முன்னாள் இரவு இப்பல்லக்கு இப்படி இருக்க வேண்டுமென்று எங்களிடமிருந்து கேட்டறிந்த மாஹேசர், மறுநாள் காலை முதல், நாங்கள் அறியாதபடி, அவர்களுடைய பெரிய தோட்டத்தின் ஒரு மூலையில், தன் வேலையாட்களைக் கொண்டு ஒன்றை மிகவும் சிரமப்பட்டுக் கட்டிவைத்தாராம். இதைச் சரியாக ஜோடிப்பதற்கு அன்று சாயங்காலம் வரைக்கும் பிடித்ததாம். இதில் ஒரு முக்கியமான சமாச்சாரம் என்னவென்றால், சாதாரணமாக எவர்களும் பிணத்தைத் தூக்கும்படியான பல்லக்கைக் காணவும் அருவருப்படைவார்கள்; அதுவும் அன்றைக்கு வெள்ளிக்கிழமை தினம்; தங்கள் வீட்டிலிருந்த பெண்டிர் ஆட்சேபணைகளையும் கவனியாது, இதைச் செய்து அனுப்பிய மாஹேசருக்கு’ நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அந்தப் பல்லக்கில் படுக்கும்பொழுது, எனது நண்பருக்குச் சிரமமில்லாமலிருக்கும் படி, அதன்மீது பட்டு மெத்தைகளையும் பரப்பி அனுப்பினார்!

இத்தகைய அன்பினுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? இவ்வுலகத்தில் அநேகர் சுய நன்மையைப் பாராட்டுங் குணத்தைக் கண்டு என் மனம் வெறுப்படையும் பொழுதெல்லாம். அதற்கு மாறாக, சுய நன்மையைப் பாராதவர்கள் இவ்வுலகில் ஆயிரத்திலொருவராவது இருக் கிறார்கள் என்று இதை நினைத்து, என் மனத்தைத் தேற்றிக் கொள்வது என் வழக்கம். இதை நான் எழுதும்பொழுதும், அறுநூறு மைலுக்கப்பால் இருக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கு என் தலை வணங்குகிறேன். இதுதான் இவர்கள் செய்த உதவிக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு. இதை வாசித்தாவது, எனது நண்பர்களில் யாராவது பிறருக்கு நன்மை செய்வதே பேதை மாந்தர்களின் முக்கியக் கடன் என எண்ணுவார்களானால், நானிவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடனைக் கொஞ்சம் தீர்த்தவனாவேன்.

அன்றையத் தினம் நாடகம் முடியக் காலை இரண்டு மணியாயிற்று! அதன் பிறகு, நாடகத்தைப் பார்க்க வந்தவர்களுள் எங்களைத் தெரிந்தவர்கள் ஒருவரும் பாக்கியின்றி, உள்ளே வந்து எங்களைக் கொண்டாடினார்கள் என்று கூறுவது அதிகமாகாது. எனக்கு மிகவும் இளைப்பாயிருந்த போதிலும் அவர்களுடன் சில வார்த்தைகளாவது பேச வேண்டியதாயிற்று. நானும் எனது நண்பரும் இந்தத் தர்ம சங்கடத்திலிருப்பதைக் கண்ட, எங்கள் நண்பர் ராஜேந்திரர், “இப்படி வருபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால், பொழுது விடிந்து போம்!” என்று சொல்லி, ரங்கவடிவேலுவையும் என்னையும், பலாத்காரமாய்த் தன் வண்டியில் அழைத்துக்கொண்டு, வீடு போய்ச் சேர்ந்தார்.

அன்றைத் தினம் நான் உறங்குமுன் எங்கள் சபையின் நற்பெயரை இலங்கைத் தீபத்திலும் பரவச் செய்த இறைவனது பெருங்கருணையைப் போற்றிவிட்டு, பிறகு நிம்மிதியாய் உறங்கினேன்.

மறு நாள் சாரங்கதர நாடகம் நடத்தினோம். அதற்கு அத்தீபத்திலுள்ள சிங்களவர்களுக்குள் தலைமை வாய்ந்த பண்டாரநாயக் என்பவர் விஜயம் செய்தார். அவருடைய முழுப் பெயர், சர் சாலமன் டையஸ், பண்டார நாயக் மஹா முதலியார்! இப்பெயரிலுள்ள விசித்திரத்தை இதை வாசிக்கும் நண்பர்கள் கவனிப்பார்களாக. சர் என்பது துரைத்தனத்தார் அவருக்கு அளித்த பட்டப் பெயர்; சாலமன் என்பது ஹீப்ரு பதம்; டையஸ் என்பது போர்த்துக்கேய வார்த்தை; பண்டார நாயக் என்பது பாலி பாஷை வார்த்தைகள்; மஹா சமஸ் கிருதம்; முதலியார், தமிழ்ப் பதம்! மஹா முதலியார் என்பது சிலோன் கவர்ன்மெண்டார் கொடுக்கும் பட்டப் பெயர்;

சென்னையில் திவான் பகதூர் என்கிற மாதிரி, இவர் நாடகத்தைப் பார்த்துக் கெண்டிருந்தபொழுது நாடகத்தை மெச்சிவிட்டு; அருகிலிருந்த தனது நண்பராகிய டாக்டர் சின்னையா வென்பவரை; பத்மநாபராவ், ரங்கவடிவேலு இவர்களைப் பார்த்து இந்த ஸ்திரீகள் எந்த ஜாதியார் என்று கேட்க, அவர், இவர்கள் ஸ்திரீகளல்ல; ஆண் பிள்ளைகளேயென்று பதில் உரைத்தும், நம்பாது, “வாஸ்தவமா இவர்கள் ஸ்திரீகள்தான். இந்த உண்மையை இங்கு வெளியிட்டால் இவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடப்போகிற தென இச் சபையார் அதை மறைத்துச் சொல்லுகிறார்கள் போலும்!” என்று பதில் உரைத்தனராம். இதை டாக்டர் சின்னையா என்பவரே என்னிடம் நேராக உரைத்தார். இவ்வாறு கூறினவருடைய சந்தேகம் நிவர்த்தியாகும் பொருட்டு, பத்மநாபராவ், ரங்கவடிவேலு முதலிய ஆக்டர்களையும் என்னையும் மறுநாள் அவர் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோய், இன்னின்னாரென அவருக்குத் தெரிவித்தார். அதன்மீது அனைவரும் கொஞ்ச நேரம் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பிவிட்டோம்.

சாரங்கதர நாடகத்தில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு நடித்தது எல்லோராலும் மிகவும் மெச்சப்பட்டது. மனோஹரன் நாடகத்தையும் இதையும் மறுமுறை பார்க்க வேண்டுமென்று பலர் கேட்டதற்கு நாங்கள் இணங்குவதற்கில்லாமற் போயிற்று. இந்தச் சாரங்கதர நாடகத்துடன் கண்டிராக்டாக ஏற்படுத்தப்பட்ட ஐந்து நாடகங்களும் முற்றுப்பெற்றன. ஏறக்குறைய ஒவ்வொரு நாடகத்திற்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலானபடியால், கண்டிராக்டருக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதற்காக எனது நண்பர்களில் சிலர் வெறுப்படைந்த போதிலும், எனக்குத் திருப்திகரமாகவேயிருந்தது. லாபம் வந்ததனால் சரியாகப் போய்விட்டது; நஷ்டம் வந்திருந்தால் கண்டிராக்டர்தானே அதைப் பொறுத்திருக்க வேண்டும்? மேற்சொன்னபடி ஐந்து நாடகங்களும் முடிந்த பிறகு எங்களையெல்லாம் நல்வரவேற்று, எங்கள் சௌகர்யத்திற்கெல்லாம், முதலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்த ஹானரபிள் கனகசபை யென்பவர் இன்னொரு நாடகம் நடத்தி, அதன் வரும்படியில் பாதியை, இலங்கைத் தீபத்திய கவர்னர் ஏற்படுத்திய, டூபர்குலோசிஸ் வியாதி நிவாரண பண்டுக்காகக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன்பேரில் அதற்கு இசைந்தோம். என்ன நாடகம் போடுவதென்கிற கேள்வி வந்தபோது, இதுவரையில் சோகரசமும் வீரரசமும் அமைந்த நாடகங்களை இங்கு ஆடியுள்ளோம்; ஹாஸ்ய ரஸமமைந்த நாடகம் ஒன்று ஆடினால் நன்றாயிருக்குமெனத் தீர்மானித்து, “காதலர் கண்கள்”என்பதை ஆடுவதாகத் தீர்மானித்தேன். அப்படியே அந்நாடகமாடுவதாக விளம்பரம் செய்த பிறகு, ஆக்டர்களெல்லாம் தங்கள் தங்கள் பாடங்களைப் படிப்பதற்காக அப்புஸ்தகத்தைக் கொடுக்க வேண்டுமென்று, என்னைக் கேட்க நான் என்னுடன் கொண்டுபோன சில புஸ்தகங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றுள் இப்புஸ்தகம் ஒன்றேனும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? ஒரு புஸ்தகமுமில்லாமல் ஆக்டர்கள் தங்கள் பாகங்களை எப்படிப் படிப்பது? எப்படி நாடக தினம் புராம்டு செய்வது என்று மனக்கவலையுற்று, எங்கள் சிங்கள நண்பர்களுடன் இக்கஷ்டத்தைத் தெரிவித்து, ‘கொழும்பில், யாராவது அப்புஸ்தகம் படிக்க வாங்கியிருக்கிறார்களா?’ என்று பார்த்து எப்படியாவது ஒரு புஸ்தகம் கொண்டு வாருங்கள் என்று சொல்ல, சீதையைத் தேடக் கிஷ்கிந்தைவாசிகள் நான்கு புறமும் போனது போல் அவர்களுள் சிலர் அப்பட்டணமெங்கும் சைக்கிளை போட்டுக் கொண்டு தேடிப் பார்த்தனர். மறுநாட்காலை ஒருவர் ஒரு புஸ்தகம் கிடைத்ததெனக் கொண்டு வந்தார். அப்பொழுது எனக்குண்டான சந்தோஷம் கொஞ்சமல்ல; ஆயினும் ஒரு புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, “ஊருக்கு ஒரு தேவடியாள் யாருக்கென்று ஆடுவாள்?” என்னும் பழமொழிபோல், அப் புஸ்தகத்தை யாருக்குக் கொடுப்பது நான்? அதன் மீது என்னுடைய ஆக்டர்களையெல்லாம் சுற்றிலும் உட்கார வைத்துக் கொண்டு, நாடகத்தைக் கடைசி வரையில் ஒரு முறை படித்துக் காட்டினேன்! அவ்வளவுதான் ஒத்திகை! அவர்களில் சிலர் இதை முன்பே ஆடியிருந்தபடியாலும், எல்லோரும் அதிசிரத்தை உடையவர்களாய் இருந்த போதிலும் நாடகமானது ஒரு குறையுமின்றி, மிகவும் நன்றாக நடந்தது. இவ்வாறு நடித்ததில் ஒரு விசேஷத்தை நான் குறிக்க வேண்டும். இந் நாடகத்தில் “வீர்சிங்” என்பது ஒரு முக்கியமான பாத்திரம். அதைச் சென்னையில் கோபாலசாமி முதலியார் என்பவர் சாதாரணமாக நடிப்பார். நாங்கள் புறப்படும் பொழுது இந்நாடகம் ஆடுவதாக யோசனையில்லாதபடியால், அவரை இலங்கைக்கு அழைத்துக் கொண்டு போகவில்லை. அதன்மீது திடீரென்று இந் நாடகத்தை வைத்துக்கொண்டபோது, எனது இளைய நண்பர் டி.சி.வடிவேலு, சாதாரணமாக அவர் ஸ்திரீவேடமே தரிப்பவராயினும், இந்த ஆண் வேடத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறியதுமன்றி, அப்பாகத்தை நன்றாய்ப் படித்து மிகவும் நன்றாய் நடித்தார். அப்படி நடித்ததற்காக நான் செய்த கைம்மாறு என்ன வென்றால், அவருடன் ஒரு காட்சியில் நான் வாள் யுத்தம் செய்ய வேண்டி வந்த பொழுது இவரது கையில் என் வாளால் நன்றாய்க் காயப்படுத்தினதே! அவர் இன்றைத்தினம் அகஸ்மாத்தாய் என் வீட்டிற்கு வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, இந் நாடகத்தைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நான் கூறியபொழுது, இதை எனக்கு ஞாபகப்படுத்தினார்.

இந்நாடகத்தின் வசூலில் செலவு போக, பாதிப் பணத்தை டூபர்குலோசிஸ் வியாதி நிவாரணநிதிக்குக் கொடுத்துவிட்டு, மிகுந்த பாதியை நாம் பட்டணம் கொண்டு போக வேண்டியதில்லை; இவ்வளவு அன்பும் ஆதரவுமுடன் நம்மை உபசரித்த சிங்கள சிநேகிதர்களுக்கே செலவழிக்க வேண்டுமென்று, அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு விருந்தளிக்க வேண்டுமென்று தீர்மானித்து, மறு நாள் அவர்களுக்கு அவ்விருந்தை ஏற்பாடு செய்து, எங்கள் நாகடத்திற்கு வந்திருந்த சீமாட்டிகளையும் சீமான்களையும் வரவழைத்தோம்.

மறுநாட் காலை விருந்தினர்க்கு உபசரணைக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்யும் பொருட்டு பப்ளிக் ஹாலுக்குப் போய் அவைகளையெல்லாம் செய்து விட்டு, நாங்கள் கொழும்புக்கு வந்ததற்கு ஞாபகார்த்தமாக, எல்லோரும் உட்கார்ந்து ஒரு போட்டோ பிடித்துக்கொண்டு, சபை தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தேன். சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சென்னையிலிருந்து, சுமார் மூன்று வயதுடைய எனது இரண்டாவது பெண் மிகவும் அசௌக்கியமா யிருக்கிறதாயும், வைத்தியர்கள் டைபாய்ட், ந்யுமோனியா இரண்டுமே கலந்திருப்பதாகச் சந்தேகிப்பதாகவும் எனக்கு ஒரு தந்தி வந்தது! அதைப் பார்த்தும் இடி விழுந்தவன் போலானேன். சாதாரணமாக நான் பட்டணத்தை விட்டு வெளியிற்போனால் திரும்பி வருமளவும் என் மனைவி மக்களுக்குக் கடிதம் எழுதுவதில்லை; அவர்களையும் எழுதச் சொல்வதில்லை. “ஒரு சமாச்சாரமும் இல்லாவிட்டால் சுப சமாச்சாரம்தான்” என்னும் ஆங்கிலப் பழமொழியொன்றைக் கடைப்பிடித்து நடப்பவன் நான்; ஏதாவது மிகவும் முக்கியமான சமாச்சாரமாயிருந்தால்தான் எனக்கு எழுத வேண்டும் என்று என் மனைவிக்குச் சொல்லியிருந்தேன். ஆகவே, இம் மாதிரியான தந்தி வந்தவுடன் என் குழந்தை ஆபத்திலில்லாவிட்டால் எனக்குத் தந்தியனுப்பி யிருக்கமாட்டார்கள் என்று நினைக்க வேண்டியதாயிற்று.

நான் இன்னது செய்வதென்று தெரியாது திகைத்தேன்; ஒருபுறம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கொழும்புப் பிரயாணத்தைச் சந்தோஷகரமான முடிவிற்குக் கொண்டு வந்தபின், இன்று சாயங்காலம், எங்கள் சபையைக் கௌரவப்படுத்தின சீமாட்டிகளையும் சீமான்களையும் பார்க்காமலா போகிறது என்கிற எண்ணம்; மற்றொருபுறம் என் குழந்தை மரணாவஸ்தையிலிருக்கும் பொழுது, அதன் அருகிலில்லாமலிருப்பதா? அதற்கு ஏதாவது நேரிடுமாயின், என் மனைவிக்குத் தேறுதல் சொல்லாமலிருப்பதா? என்கிற எண்ணம். உடனே ஏகாந்தமான ஓரிடத்திற் போய் உட்கார்ந்து கொண்டு, என் கண்களை மூடிக்கொண்டு கருணையங்கடவுளைத் தியானித்தேன்; அப்பொழுது, கொழும்பில் என் கடமையைச் செய்தாயது, என் சுய நன்மையைப் பார்க்கலாகாது, பட்டணம், போய் நோயாய்க் கிடக்கும் என் குழுந்தையருகில் இருக்க வேண்டியதுதான் என் கடமை என்று எனக்குத் தோன்றியது. உடனே நான் பட்டணம் வருவதாகத் தந்தி கொடுத்துவிட்டு, எனக்குத் துணையாக வருவதாக இசைந்த எம். துரைசாமி ஐயங்காருடன் அன்று சாயங்காலம் கப்பலேறி, மறுநாட்காலை தூத்துக்குடி சேர்ந்து, ரெயிலேறி மறுநாள் சென்னை வந்து சேர்ந்தேன்.

கொழும்பை விட்டுப் புறப்பட்டது முதல் சென்னை வந்து சேரும்வரையில் என் மனத்தில் ஒரு பிரார்த்தனைதான் இருந்தது; அதாவது, எப்படியாவது ஈசன் கருணையினால் என் குழந்தையை உயிருடன் காணவேண்டுமன்பதுதான்! ஈசன் என் பிரார்த்தனைக்கிணங்க என் குழந்தையை உயிருடன் கண்டேன். இந்த விஷயமாக, நாடக மேடைக்குச் சம்பந்தமான சமாச்சாரமாக இல்லாவிட்டாலும், நேரிட்ட ஒரு சிறு சமாச்சாரத்தை இங்கு எழுத விரும்புகிறேன். நான் என் வீடு சேர்ந்து குழந்தையின் தேகஸ் திதியைப்பற்றி விசாரித்தபொழுது, என் குடும்ப வைத்தியர், வியாதி அதிகப்பட்டிருப்பதால் வீட்டிலுள்ளவர்கள் பார்த்துக் கொள்ள முடியாது; இரவும் பகலும் மணிப்பிரகாரம் ஔஷதம் முதலியன கொடுப்பதற்காக, நர்ஸ் இருக்க வேண்டியது அதி அவசியம் என்று ஏற்படுத்திய ஒரு ஆங்கில நர்ஸ், எனக்குக் கூறியதை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன்; “என்ன ஆச்சரியம், மிஸ்டர் முதலியார்! குழந்தைக்கு விடாது ஐந்தாறு தினங்களாக 104, 105 டிக்ரி ஜ்வரம் இருந்து கொண்டிருந்தது; என்ன மருந்து கொடுத்தாலும் கொஞ்சமாவது இறங்கவேயில்லை; புத்தி மாறாட்டத்திலும் உங்களைப்பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தது. நீங்கள் திரும்பி வருவதாக வந்த தந்தியை அதற்குக் காட்டி, உங்கள் அப்பா சீக்கிரம் வருகிறார்கள் பயப்படாதே, என்று சொன்னேன்; அந்தக் காகிதத்தை வாங்கித் தன் தலையணையின்கீழ் வைத்துக் கொண்டு உறங்கி விட்டது. அந்த க்ஷணமுதல் படிப்படியாக ஜ்வரம் குறைந்து விட்டது. என்ன வேடிக்கையாய் யிருக்கிறது!” என்றாள். அந்த அம்மாளுக்கு வேடிக்கையாயிருந்திருக்கலாம். எனக்கு வாஸ்தவமாயிருந்தது. என் சுய நன்மையைப் பாராட்டி, நான் உடனே புறப்பட்டு வருவதாகத் தந்தி கொடுத்திராவிட்டால், என் குழந்தை இறந்திருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்றளவும் அந்த நம்பிக்கை மாறவில்லை. என் மனத்திற்குக் கஷ்டமாயிருந்தபோதிலும் என் கடமைப்படி நான் செய்தபடியால் கடவுள் அக் குழவியை எனக்குக் காப்பாற்றியருளினார் என்று முழு மனத்துடன் நம்புகிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்களில் சிலர், ‘இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? காக்கை ஏறப் பனம்பழம் விழுந்த கதை போலிருக்கிறது’ என்று நகைக்கலாம். அவர்கள் அவ்வாறு எண்ணி நகைப்பது தவறு என்று நான் சொல்லமாட்டேன். ஆயினும், மேற்கூறிய என்னுடைய தீர்மானத்தினின்றும் நான் மாறமாட்டேன்!

இக் கிளைக்கதையை இதனுடன் விட்டு, இனிக் கொழும்பில் நடந்ததைப்பற்றி எழுதுகிறேன். இதைப்பற்றி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் எனக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் பப்ளிக் ஹாலுக்குப் போனது முதல், வந்தவர்களெல்லாம் ஒருவர் பாக்கியின்றி, ‘எங்கே மிஸ்டர் சம்பந்தம்?’ என்று வினவ, அவர்களுக்கு, நான் திடீரென்று பட்டணம் திரும்பிப் போகவேண்டி வந்த காரணத்தை அவர்கள் தெரிவிக்க, அனைவரும் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். அன்றியும் இரண்டு நாள் பொறுத்து, என் குழந்தை அபாயத்தினின்றும் நீங்கியது என்று என் தந்தி போய்ச் சேருமளவும் பன்முறை பட்டணத்திலிருந்து ஏதாவது சேதி வந்ததா என்று பலர் கேட்டனுப்பியதாகச் சொன்னார்கள். இவ்வாறு என் குடும்ப சுகத்தைப்பற்றிக் கேட்டவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அப்படி விசாரித்தவர்களில் நூற்றில் தொண்ணூற்றொன்பது பெயரை நான் பார்த்தவனுமன்று; ஏதோ நான் நாடக மேடையில் அவர்கள் மனத்தைச் சிறிது சந்தோஷிக்கச் செய்தது, அத்தனை பெயரையும் என்மீது அவ்வளவு ப்ரீதி கொள்ளும்படி செய்தது; நாடகமாடுவதிலும் கொஞ்சம் பலன் உண்டு என்று நான் நம்ப வேண்டியதாயிருக்கிறது.

மேற்குறித்த சந்தர்ப்பத்தினால், அக்குழந்தையைச் சில வருஷம் வரையில் “கொழும்பு குழந்தை” என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். அன்றியும் இந்த அனுபவத்தை, நான் இப்போதைக்கு இரண்டு வருஷங்களுக்கு முன் எழுதிய “தாசிப்பெண்” என்னும் நாடகத்தில் கதாநாய கியாகிய மீனாட்சி மரணாவஸ்தையிலிருந்து தப்பிப்பிழைத்த காட்சியில் சற்று மாற்றி, உபயோகித்திருக்கிறேன். இக் குழந்தை பெரியவளாகி, விவாகமாகி, தெய்வக் கடாட்சத்தினால், ஒரு பெண் குழ்ந்தையைப் பெற்றிருக்கிறாள். அந்த என் பேத்திக்கு மீனாட்சி என்று பெயர் வைத்திருக்கிறேன். 

இரண்டு மூன்று தினங்கள் பொறுத்துக் கொழும்பிலிருந்து எனது நண்பர்கள் எல்லாம் சுகமாய்ப் பட்டணம் வந்து சேர்ந்தனர். அதன் பிறகு கொஞ்ச நாளைக்கெல்லாம், கொழும்பு நகரவாசிகள், எங்கள் சபைக்குச் செய்த மரியாதையாக வெள்ளி வேலை செய்யப்பட்ட, சுமார் 500 ரூபாய் பெறும்படியான, ஒரு யானையின் விக்ரஹத்தின் முதுகின் பேரில் வைக்கப்பட்ட கண்டி நகர வேலைப் பாடுள்ள கிண்ணமும், இலங்கைத் தீவுக்கு அறிகுறியாக ஒரு வெள்ளித் தென்னைமரமும், ஒரு பெரிய வெள்ளித் தட்டும் வந்து சேர்ந்தன.

நாங்கள் கொழும்பிலிருந்த பொழுது, அங்குள்ள சில பெரிய மனிதர்கள், என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு வுக்கும், எனக்கும் பொற்பதக்கமளிக்க வேண்டுமென்று இரண்டு பதக்கங்களைத் தயார் செய்தும் எங்கள் சபையின் சட்டங்களின்படி நாங்கள் அவைகளைப் பெறலாகாது என்று மறுத்தோம்; உங்களுக்கு விருப்பமானால் எங்கள் சபைக்குப் பொதுவாக மரியாதை செய்யலாமேயொழிய சபையின் அங்கத்தினர்க்குப் பிரத்யேகமாய் மரியாதை செய்யக்கூடாதென்று தெரிவித்தோம். இதை உத்தேசித்துத் தான் கொழும்பு நகரவாசிகள் மேற்கண்டபடி சபைக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமென்று எண்ண வேண்டிய தாயிருக்கிறது. இதற்குப் பிரதியாகக் கொழும்பு தமிழ்ச் சங்கத்தார் இவ்வருஷம் கடைசியில் சென்னைக்கு வந்த பொழுது, எங்கள் சபையார் அவர்களுக்கு அலங்கார வெள்ளிக்கேடயம் ஒன்று ஞாபகார்த்தமாக அளித்தனர்.

இவ்வாறு, பலர் அசாத்தியமான காரியம் என்று கூறிய இப்பெரும் வேலையை, சந்தோஷகரமாய் முடித்ததற்கு, என்னை ஒரு சிறு கருவியாகக் கொண்ட எம்பெருமான் பேரருளைப் போற்றி, இனிமேல் நடந்த கதைகளை என் அன்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

இவ் வருஷக் கடைசியில் மாட்சிமை தங்கிய நமது ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி, மகுடம் புனைந்த கொண்டாட்டம் சென்னையில் நடந்தபொழுது, அக்கொண்டாட்டத்தின் கமிட்டி மெம்பர்கள் வேண்டுகோளின்படி ஜிம்கானா மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெரிய கொட்டகையில் இந்திய தேசச் சரித்திரத்தின் சில முக்கிய காட்சிகளைத் தோற்றக் காட்சிகளாகக் காண்பித்தோம்,

இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் வேதம் வெங்கடாசல ஐயர் இயற்றிய “விதிலேக வைத்தியுடு” என்னும் நூதனத் தெலுங்கு நாடகத்தை நடத்தினார்கள். இது பிரான்சு தேசத்திய பிரபல நாடகக் கவியாகிய மாலியர் என்பவர் எழுதிய பிரஹசனமொன்றின் மொழி பெயர்ப்பாம். இதை நான் தமிழில் அமைக்கலா மென்றிருக்கிறேன், பரமேஸ்வரர் ஆயுள் கொடுப்பாராயின். இவ் வருஷத்திய தசராக் கொண்டாட்டத்தில் நடந்த ஒரு விசேஷத்தை இனி எழுதுகிறேன். தசராவில் ஏதாவது புதிதாய்ச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டிருந்த எனது பால்ய நண்பர் வி.வி.ஶ்ரீனிவாச ஐயங்காரின் வேண்டுகோளைத் தட்டக் கூடாது என்று எண்ணினவனாய், எங்கள் சபையிலுள்ள எட்டு ஸ்திரீ வேடம் தரிக்கும் ஆக்டர்களைக்கொண்டு, கோலாட்டம் போட்டு வைக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு நட்டுவனையும் பிடித்து இரகசியமாகக் காலை வேளைகளில் ஒத்திகைகள் நடத்தி வந்தேன்; ஒத்திகைளெல்லாம் முடிந்தவுடன் இதைத் தசராவில் ஒரு நாள் போடுவதென்றால் அதற்கு ஒரு காரணம் வேண்டுமேயென்று யோசித்து “சபாபதி முதலியாரின்” தங்கை வயதடைந்த சடங்கிற்காக அவர் வீட்டில் கோலாட்டம் நடக்கப்போகிறதெனப் பெயர் வைத்துத் தசராவின் முதல் நாள் கொண்டாட்டத்தில் சபாபதி முதலியார் தனது நண்பர்களையெல்லாம் அழைப்பது போல, சபையின் அங்கத்தினர்க்கெல்லாம் பத்திரிகை கொடுக்கச் செய்தேன். ஆயினும் இதில் ஒரு கஷ்டம் வந்து சேர்ந்தது. சபையிலுள்ள ஸ்திரீ வேஷதாரிகளெல்லாம் கோலாட்டம் போடும் தாசிகளாக வேடம் பூண வேண்டி வந்தது. ருதுவடைந்த சபாபதி முதலியாரின் தங்கையாக உட்கார்ந்திருக்க வேறொருவரும் கிடைக்கவில்லை! வேடம் பூணக்கூடிய உருவமுடைய சிலரை அண்டிக் கேட்டபோது, அவர்கள் அந்தப் பெண் வேடம் பூணுவதென்றால் வெட்கமாயிருக்கிறதென மறுத்தனர். இந்தத் தர்ம சங்கடத்தினின்றும் தப்ப வேறு வகையில்லாதவனாய், அந்த வேடம் நானே பூணத் தீர்மானித்தேன். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் ஏளனம் செய்வார்களென்று இச்செய்தியை இரகசியமாய் வைத்திருந்தேன். தசராவின் முதல் தினமும் இந்த வேடம் நான் பூணுவதை மற்றவர்கள் அறியக்கூடாதென்று நினைத்து, அன்றைத் தினம் நான் வெளியூருக்கு வியாஜ்ய சம்பந்தமாகப் போவதாக வெளியிட்டுவிட்டு, அன்றைத் தினம் மத்தியானம் ஒருவருமறியாதபடி விக்டோரியா ஹாலின் மேல் மாடிக்குப்போய், ஆக்டர்கள் தவிர மற்று யாரும் நேபத்தியத்திற்குள் வரக்கூடாதென்று விளம்பரம் போட்டுவிட்டேன். இம்முறை ரங்கவடிவேலுவும், ஜெயராம் நாயகரும் எனக்கு நன்றாகத்தான் பெண் வேஷம் போட்டு வைத்தார்கள். காட்சி ஆரம்பத்தில் முதலியார்கள் வீட்டின் வழக்கம்போல், கலியாணப் பெண்ணை மங்களப் பாட்டுடன் நாதஸ்வரம் வாசிக்க, சிருங்காரித்திருந்த வீட்டின் மத்தியில் கொண்டுபோய் உட்கார வைக்க வேண்டியிருந்தது; அப்பொழுது தலைகுனிந்து, வாயைத் திறவாமல், மேடையின் மீதிருந்த நாற்காலியின்பேரில், என் தாயாராக வேடம் பூண்ட ஒரு ஆக்டர் கொண்டுபோய் உட்கார வைத்தபொழுது, என்னை இன்னானென ஒருவரும் கண்டுபிடிக்க முடியவில்லை. நம்முடைய சூழ்ச்சி பலித்தது, நம்மை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை என்று நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, இரண்டு நிமிஷத்திற்கெல்லாம், சபையிலுள்ள அனைவரும் கொல்லென்று நகைத்துக் கை கொட்டினர்! ஓகோ! நம்மைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அறிந்தவனாய் அக்காட்சி முடியும் வரையில் என் தலையைத் தூக்கவில்லை நான்!

பிறகு நான் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்று விசாரித்ததில், என்னுடைய தமையனார் ஆறுமுக முதலியாரால் வெளியாயது என்று கண்டேன். காட்சியின் துவக்கத்தில் அவர், அப்பொழுது ஸ்மால்காஸ் கோர்ட்டு சீப் ஜட்ஜாயிருந்து, பிறகு ஐகோர்ட்டு ஜட்ஜான கிருஷ்ணன் என்பவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாராம். நான் மேடையின் மீது உட்கார்ந்தவுடன், இது யார் புதிய ஆக்டர் என்று எல்லோரும் வினவிக் கொண்டிருக்க, மிஸ்டர் கிருஷ்ணனும், சபையின் காரியதரிசியாயிருந்த என் தமையனாரை நோக்கி, இது யார் என்று கேட்க, அவர் மெல்ல அவரிடம், “இது சம்பந்தம்” என்று தெரிவித்தாராம். இதைக் கேட்டவுடன் மிஸ்டர் கிருஷ்ணன் “சம்பந்தமா!” என்று உரக்கச் சொல்லி நகைத்துவிட்டனராம். உடனே இந்தச் சமாச்சாரம் ஹால் எங்கும் பரவிவிட எனது நண்பர்களெல்லாம் கைகொட்டி நகைத்து விட்டனர் என்பதை அறிந்தேன்.

அன்றைத்தினம் கோலாட்டம் போட்டது மிகவும் நன்றாயிருந்ததெனச் சொல்லி, மறுபடியும் அதைப் போடும்படி சபையின் அங்கத்தினர்கள் கேட்டது எனக்கு ஞாபகமிருக்கிறது.

இவ்வருஷம் நடந்த நிகழ்ச்சிகளுள், மிகுந்த வியசனகரமான தொன்று, எங்கள் சபையின் அத்யட்சகராயிருந்த ஆனரபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் மரணமே. இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் அவர் ஹைகோர்ட் ஜட்ஜ் பதவியிலிருந்து, சென்னை கவர்னர் அவர்களுடைய கவுன்சில் மெம்பராக நியமிக்கப்பட்டார். அதைக் கொண்டாடும் பொருட்டு, ஜனவரி மாதம் 29ஆம் தேதி, சபையில் பெரும் மகிழ்ச்சி கொண்டாடி ஒரு விருந்து செய்தோம். ஒரு வருஷத்திற்குள்ளாகவே அவர் காலமாவார் என்று ஒருவரும் எண்ணவில்லை. ஆயினும் தெய்வம் விதித்த விதி அப்படியிருந்தது. இவரது குணாதிசயங்களைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தை இங்கு எழுத விரும்புகிறேன். இவ் வருஷம் சென்னை கவர்னர், தனது ஐந்து வருட ஆளுகை முடிந்து சீமைக்குத் திரும்பிப் போக வேண்டிய சமயம் வந்தபொழுது, சென்னையில் சில தனவான்கள் அவருக்கு உபசரணையாக ஒரு விருந்து செய்ய வேண்டுமென்று தீர்மானித்தனர். மற்றும் சிலர் அங்ஙனம் செய்யக்கூடா தென்று ஆட்சேபித்தனர். இவ்வாறு சென்னையில் இதைப்பற்றி இரண்டு கட்சிகள் ஏற்படவே, எங்கள் சபையாரைக் கவர்னரது உபசரணை விருந்தில் ஏதாவது நாடகமாட வேண்டுமென்று ஒரு திறத்தார் கேட்க, அதைப்பற்றி இரண்டு கட்சிகள் இருக்கும் பொழுது, சபையார் இதில் கையிட்டுக் கொள்ளக் கூடாதென்று தீர்மானித்தோம். பிறகு வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த உபசரணை ஐலண்டு கிரௌண்டில் நடக்க, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் வரவழைக்கப்பட்டுப் போயிருந்தபொழுது, ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்குக் கொட்டகையில் வி. கிருஷ்ணசாமி ஐயர் வந்தவுடன், தூரத்திலிருந்த நாங்கள் நமஸ்காரம் செய்வதைக் கண்டவராய், உடனே நாங்கள் இருந்த இடம் விரைந்துவந்து எங்கள் கையைக் குலுக்கிவிட்டு, என் காதில் மெல்ல “நம்முடைய சபை செய்தது மிகவும் சரி!” என்று ரகசியமாய்ச் சொல்லிவிட்டுப் போனார்! நாங்கள் இவர் எங்கள் சபையின் அத்யட்சகராயிருந்தும், கவர்னா கவுன்சில் மெம்பராயிருந்தும், கவர்னருக்குச் செய்த உபசரணையில், எங்கள் சபை சேரக் கூடாது என்று தீர்மானித் ததைப்பற்றி எங்கு கோபித்துக் கொள்ளுகிறாரோ என்று பயந்திருந்தோம். இதை அறிந்தவராய், அப் பயம் நீங்கும்படி அச்சமயம் எங்களிடம் இதை வந்து தெரிவித்துப் போனது நான் என்றும் மறக்கற்பாலதன்று.

என்னிடம் மிகுந்த அன்பு பாராட்டிய இச்சீமானை விட்டு அகலுமுன் இவரைப்பற்றிய இன்னொரு சிறு கதையை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு முறை தெலுங்கு நாடகமொன்று நடந்து கொண்டிருந்தது - பிரஹ்லாத நாடகமென்று நினைக்கிறேன் - அதில் பிரமாவினுடைய பாத்திரம் பெரிய தொப்பையை உடைய ஒரு ஆக்டருக்குக் கொடுத்திருந்தனர். அவரைக் கண்டதும், கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் இப் பாகத்தை இப்படிப்பட்ட வருக்குக் கொடுக்கக் கூடாதென்று கண்டித்தவராய் “எங்கே சம்பந்தம்? கூப்பிட்டு வாருங்கள்” என்று, அரங்கத்திற்குள்ளே இருந்த என்னை அழைத்தனர். நான் என்ன சமாச்சாரமோ என்று அவர் அருகிற் போய் நிற்க, “இந்த பிரமா வேஷம் பெரும் குடத்தைப்போல் தொப்பையையுடைய இந்த ஆக்டருக்கு உன்னை யார் கொடுக்கச் சொன்னது?” என்று கேட்டார். “இது தெலுங்கு நாடகம், இதில் நான் ஒன்றும் பிரவேசிப்பதற்கில்லை” என்று நான் பதில் சொல்ல, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீதான் எனக்கு உத்தரவாதம், இம்மாதிரியான தவறுகள் நடக்காதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார். இதன் பேரில் நான் என்ன சொல்லக்கூடும்!

கிருஷ்ணசாமி ஐயர் கூறிய வார்த்தைகளினின்றும், தென்னிந்திய நாடக மேடை அபிவித்தியடைய வேண்டுமென்று விரும்புவோரெல்லாம் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றிருக்கிறது - அதாவது நாடகப் பாத்திரங்களை ஆக்டர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பொழுது, ஒவ்வொரு ஆக்டரும் நடிக்கவேண்டிய பாத்திரத்திற்குத் தக்க ரூபம் முதலியன உடையவனாயிருக்கிறானா என்ற பார்த்துக் கொள்ள வேண்டியதாம். இது தமிழ் நாடக அபிவிருத்திக்கு ஒரு முக்கியமான விஷயமாதலால் இதைப்பற்றிச் சற்று விவரிக்க விரும்புகிறேன். நான் கண்ணாரக் கண்ட சில ஆபாசங்களை இங்கெழுதுகிறேன். ஒரு நாடகக் கம்பெனியார் ஆடிய நாடகத்தில் ஒருவன் மன்மதனாக வேடம் பூண்டான்; முகத்தை நோக்குமளவில் அவனுக்கு ஹனுமார் வேஷம்தான் தக்கது என்று தோன்றும்படியிருந்தது; அதன் மீது அந்தக் கம்பெனியின் சூத்ரகாரை இவனுக்கு ஏன் இந்த வேஷம் கொடுத்தீர்களென்று கேட்க, இவன் மிகவும் நன்றாய்ப் பாடுவான் சார், என்று பதில் தெரிவித்தார்.

இன்னொரு சமயம் ஒரு நாடகக் கம்பெனி எனது மனோஹரன் நாடகத்தை நடத்தியபொழுது, விஜயாள் வேஷம் பூண்ட பெண், ஒன்றறைக் கண்ணுடையவளாயிருந்தாள்! இதைச் சாதாரண ஜனங்கள் “டப்ஸா கண்” என்று சொல்வார்கள். (தமிழ் வித்வான்கள் இப்பதத்தை நான் உபயோகித்ததற்காக மன்னிப்பார்களாக) இப்படிப் பட்ட கண்ணையுடைய ஆக்டெரஸ் மேடையின் மீதிருந்து “பிராணநாதா” என்ற அழைக்கும் அநேக சமயங்களில் மனோஹரனைப் பார்த்து அழைக்கிறாளா அல்லது ராஜப் பிரியனைப் பார்த்து அழைக்கிறாளா அல்லது சபையிலிருக்கும் யாரையாவது பார்த்து அழைக்கிறாளா என்று சந்தேகிக்க இடங்கொடுத்தது! இன்னொரு கம்பெனியில் நான் பார்த்த “விஜயாள்” பத்மாவதியைப் பார்க்கிலும் மூன்று பங்கு பெருத்த உடலையுடையவளாயிருந்தாள்! நான் சாதாரணமாகப் பரிஹாசமாக எழுத வேண்டுமென்று எழுதவில்லை. நான் கண்ட வாஸ்தவத்தை உண்மையில் எழுதவேண்டுமென்றே எழுதுகிறேன்; இவள் நடக்கும் பொழுது ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள ஹிப்பப்போடமஸ் நடப்பது போலிருந்தது! இப்படிப்பட்டவளுக்கு ஏன் இந்த விஜயாள் வேஷம் கொடுக்கப்பட்டது என்று விசாரிக்குமளவில் இவள்தான் இந்நாடக. கம்பெனியில் “அயன் ஸ்திரீ பார்ட்க்” ஆகவே இவளுக்கு இந்தப் பாத்திரம் கொடுக்கப்பட்டது என்று பதில் உரைக்கப்பட்டது. இதனால் நாடக மேடை ஏற விரும்பும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது யாதெனில், நாம் என்ன வேடம் வேண்டு மென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என்கிற சுதந்திரம் நம்மில் யாருக்காவது இருந்தபோதிலும், நமக்கு ஏற்ற பாத்திரத்தையே எடுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, சரீரத்தைக் கருதியோ, சாரீரத்தைக் கருதியோ நமக்கு ஏற்றதாயிராத பாத்திரத்தை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாதென்பதேயாம். முன்பே நான் ஹரிச்சந்திரனாக நடித்தது தவறு என்று எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கின்றேன். ஒரு தெலுங்குப் பழமொழி இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது; அதைத் தமிழில் “என் வீட்டிற்கு நானே பெரியவன்; பூனைக்குப் போட்டா பெரிய நாமம்” என்று மொழி பெயர்க்கலாம். இந்தப் பழமொழிக் கிணங்க, நான் பீமசேனன் வேடம் தரித்தால் எப்படியிருக்கும்! ஆகவே, இவ் விஷயத்தை எனது நண்பர்களாகிய ஆக்டர்களும் கண்டக்டர்களும் நன்கு கவனிப்பார்களாக.

இந்த 1911ஆம் ஆண்டின் முடிவில், நான் மேற்சொன்னபடி ஹானரபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் நமது தேசம் செய்த துர்ப்பாக்கியத்தால் காலகதியடைந்த பொழுது, எங்கள் சபையில் ஒரு பொதுக் கூட்டம் கூடி, சபையின் துக்கத்தைத் தெரிவித்தது மன்றி, ஐயர் அவர்களுடைய படம் ஒன்றைச் சபையில் வைக்க வேண்டு மென்றும் தீர்மானித்தோம். சீக்கிரத்தில் 500 ரூபாய் செலவழித்து அவரது முழு உருவப்படமொன்று சபையில் வைத்தோம். அன்றியும் அவர் ஞாபகார்தத்திற்காக அவரது சிலா உருவம் ஒன்று வைப்பதற்காக ஒரு பண்டு சென்னையில் ஏற்படுத்தியபொழுது, அதற்குல் சபையின் பணத்திலிருந்து 1000 ரூபாய் கொடுத்தோம். என்ன செய்தும், அவர் எங்கள் சபைக்குச் செய்த உதவிக்காக, ஆயிரத்திலொரு பங்குகூட எங்கள் சபையின் கடனை அடைத்தவர்களாகோம் என்பது என் நிச்சயமான எண்ணம். அவர் மாத்திரம் சில வருஷங்கள் உயிரோடிருந்திருப்பா ராயின், சுகுண விலாச சபை இருப்பதற்கோர் கட்டடமும், நாடகமாடுவதற்கோர் புதிய நாடக சாலையும், என்றோ பெற்றிருக்கும்!