நாடக மேடை நினைவுகள்/இரண்டாம் அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து



இரண்டாம் அத்தியாயம்

னது ஆயுளில் 1891 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி ஒரு முக்கியமான தினமாம். அதற்குக் காரணம், நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் இன்றியமையாத முக்கியக் காரணமாயிருந்த “சுகுண விலாச சபை"யானது அத்தேதியில் சென்னையில் ஸ்தாபிக்கப் பட்டதேயாம். ஆகவே “சுகுண விலாச சபை’ ஸ்தாபிக்கப்பட்ட விருத்தாந்தத்தைச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன். மேற்கண்ட தேதியில் ௸ சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ஸ்ரீமான்கள் ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார், வி. வெங்கட கிருஷ்ண நாயுடு, அ. வெங்கடகிருஷ்ண பிள்ளை , த. ஜெயராம் நாயகர், ஜி.இ. சம்பத்து செட்டியார், சுப்பிரமணிய பிள்ளை , நான். மேற்கண்டவர்களில் முதல் மூவர்கள் காலகதியடைந்து விட்டனர். சம்பத்து செட்டியாரும், சுப்பிரமணிய பிள்ளையும் சபையைவிட்டு இடையில் நீங்கி விட்டனர். ஜெயராம் நாயகரும் நானும் சற்றேறக்குறைய 40 வருடங்களாக அச்சபைக்கு உழைத்து வருகிறோம்.

சென்னையில் “சுகுண விலாச சபை” ஸ்தாபிக்கப்பட்டதற்கு ஆதி காரணம், பல்லாரி கிருஷ்ணமாச்சார்லு என்பவர் இவ்விடம் பல்லாரியிலிருந்து வந்து விக்டோரியா ஹாலில் தெலுங்கு பாஷையில் நான்கு ஐந்து நாடகங்கள் நடத்தினதேயாம் என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சார்லு அவர்கள், அக்காலத்தில் ஏற்படுத்திய “சரச வினோத சபையார்” தெலுங்கில் அச்சமயம் ஆடிய நாடகங்களைப் பற்றி முன்பே தெரிவித்திருக்கிறேன். அந்நாடகங்களைக்கண்ணுற்ற சிறுவர்கள் மனத்தில் அப்படிப்பட்ட நாடக சபை ஒன்று சென்னையில் ஸ்தாபிக்க வேண்டுமென்று யோசனை பிறந்தது சகஜமே. அப்படிப்பட்ட எண்ணங்கொண்டவர்களுள் மேற்கண்ட எழுவரும் ஒரு பிரிவினராவர். அவர்களுள் வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் ஒருதினம் நான் அப்பொழுது வசித்துவந்த ஆச்சாரப்பன்வீதி 54 ஆம் நெம்பருடைய வீட்டிற்கு வந்தார். அச்சமயம் சரசவினோத சபையாருடைய கடைசி நாடகமாகிய சிரகாரி எனும் நாடகத்தைக்கண்ணுற்று அப்படிப்பட்ட நாடக சபையொன்றை ஏற்படுத்தி அதில் நடிக்கவேண்டுமென்று பெருங்கவலை கொண்டிருந்த நான், அந்த எண்ணத்தை ஈடேற்றுவதற்கு முதல் பிரயத்தனமாக, வேறுவகை யொன்றும் காணாதவனாய், மானியர்வில்லியம்ஸ் (Monier Williams) என்பவர் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “சகுந்தலா” என்னும் நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன். இந்த வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் எனது பால்ய சிநேகிதர்;அவர்குடும்பத்தாரும் என்குடும்பத்தாரும் மதுரையிலிருந்த பொழுது மிகவும் அந்யோந்யமாகப் பழகினவர்கள்; ஆகவே இவருக்குத் தமிழ் நாடகங்களின்மீது எனக்கிருந்த வெறுப்பு நன்றாய்த் தெரியும். அதனால் அவர்பல்லாரி சரச வினோத சபையைப் போல் சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிக்கவேண்டி ஒரு சபை கூடப்படும் என்று அச்சடித்த அறிக்கைப் பத்திரிகைகளை எனது இரண்டு மூத்த சகோதரர்களுக்குக் கொடுத்தார்; “நீ இதையெல்லாம் ஏளனம் செய்வாய்” என்று கூறி எனக்குக் கொடுக்கமாட்டேன் என்று மறுத்தார். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட நான், பணத்தைத்தேடிச் செல்லவேண்டுமென்று தீர்மானித்திருந்த ஒருவனுக்கு, அவன் வீட்டிலேயே பெரும் நிதி கிடைத்தது போல் சந்தோஷப்பட்டு, எனக்கும் ஒரு அறிக்கைப் பத்திரிகையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டேன். “நீ அக்கூட்டத்திற்கு வந்து ஏதாவது குறும்பாய்ப் பேசுவாய், உன்னை அழைக்க மாட்டேன்,” என்று பதில் உரைத்தார். (அக்குறும்பு குணம் இன்னும் என்னைவிட்டு முற்றிலும் அகலவில்லை என்றே எண்ணுகிறேன்.) அதன்மீது நானும் அப்படிப்பட்ட சபையொன்று ஏற்படுத்த உத்தேசங் கொண்டிருந்ததைத் தெரிவித்து, அதை மெய்ப்பிக்க வேண்டி, நான் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த ‘சகுந்தலா’ நாடகத்தையும் காண்பித்தேன். அதனாலும் அவர் சந்தேகம் நீங்கினவர் அன்று. அக்கூட்டத்திற்கு வந்து ஒன்றும் விரோதமாய் நான் பேசலாகாதென உறுதி மொழி வாங்கிக்கொண்ட பிறகுதான் என்னையும் அக்கூட்டத்திற்கு வரும்படி அழைத்தார். பிறகு அக்கூட்டத்திற்கு நான் போயிருந்தேன்.

அக்கூட்டம் சென்னையில் மண்ணடிக்கடுத்த ஒரு வீதியில், அக்காலத்தில் ஜாக்கியஸ் (Zacheus) பள்ளிக்கூடம் என்ற பெயரை உடைத்தாயிருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் கட்டிடத்தில் நடைபெற்றது. சுமார் முப்பது அல்லது நாற்பது பெயர்தான் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கப்படுமுன், அன்றுதான் முதல் முறை, அந்நாள் முதல் இந்நாள்வரை எனது நண்பராயிருக்கும் த. ஜெயராம் நாயகரைக் கண்டேன். எங்கள் பொது நண்பராகிய வெங்கடகிருஷ்ண நாயுடு, எங்களிருவரையும் ஒருவருக்கொருவர் இன்னாரெனத் தெரிவித்தார். கூட்டத்திற்கு அக்கிராசனாதிபதியாக ம-ள-ள-ஸ்ரீ (தற்காலம் திவான்பஹதூர் என்கிற கௌரவப்பட்டம் பெற்ற), பி.எம். சிவஞான முதலியார் பி.ஏ.பி.எல். வீற்றிருந்தார். அமிர்தலிங்கம் பிள்ளை பி.ஏ. என்பவரும், இன்னும் ஒன்றிரண்டு பெயர்களும் ஆங்கிலத்தில், சென்னையில் சரசவினோத சபையைப்போன்ற கற்றறிந்தவர்கள் சேரக்கூடிய நாடக சபை ஒன்று உண்டாக்க வேண்டும் என்கிற விஷயத்தைப்பற்றிப் பேசினார்கள். அன்று அக்கூட்டத்தில் பேசிய விஷயங்கள், ஒன்றைத்தவிர மற்றவை, எனக்கு இப்பொழுது ஞாபகத்திலில்லை. எனக்கு இப்பொழுது முக்கியமாக ஞாபகத்திலிருப்பதென்ன வென்றால், அக்கிராசனம் வகித்த முதலியார் அவர்கள், சிறுவர்களாகிய நீங்கள் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்கக் கூடாதென்று எடுத்துப் பேசியதே! “இளங்கன்று பயம் அறியாது"என்னும் பழமொழிக்கிணங்க அந்த உபதேசமானது எங்கள் செவியிற்புகவில்லை. கூட்டத்தின் முடிவில் யார் யார் இப்படிப்பட்ட சபையை ஸ்தாபிக்க இஷ்டமுடையவர் களாயிருக்கிறார்களோ, அவர்களெல்லாம் மேஜையின் பேரில் வைத்திருக்கும்காகிதத்தில் கையொப்பமிடலாம் என்று தெரிவிக்கப்பட, எனது நண்பர் ஜெயராம் நாயகர்முதலில்கையொப்பமிட்டார். எனக்கு ஞாபகமிருக்கிறபடி நான் இரண்டாவது கையொப்பமிட்டேன். இக்காரணம் பற்றி அன்று முதல் இன்றுவரை ஜெயராம் நாயகர் அவர்கள் சுகுண விலாச சபைக்கு முதல் அங்கத்தினராகக் கௌரவப்படுத்தப்பட்டு வருகிறார்.

மேற்கண்ட கூட்டம் கூடிய இரண்டு மூன்று தினங்களுக்கெல்லாம், 1891 ஆம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி, மேற்குறித்த லிகிதத்தில் கையொப்பமிட்ட எழுவரும் சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிப்பதற்காகத் தம்பு செட்டி வீதியில் ஜெயராம் நாயகருடைய தகப்பனார் வீட்டில் ஒரு கூட்டம் கூடினோம். அன்று அச் சிறு கூட்டத்திற்கு என்னை அக்கிராசனம் வகிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்; அங்ஙனமே செய்தேன். அன்று மாலை சுமார் 6 மணிக்கு சென்னையில் ஒரு நாடக சபை ஸ்தாபிக்க வேண்டுமென்றும், அதற்கு ‘சுகுண விலாச சபை’ யென்று நாமதேயம் வைக்கவேண்டுமென்றும் தீர்மானித்தோம். எனக்கு ஞாபகம் இருக்கிறவரையில் ‘சுகுண’ என்கிற வார்த்தை அப்பெயரில் இருக்க வேண்டுமென்று பிரேரேபித்தவர் ஊ. முத்துக் குமாரசாமி செட்டியார்; ‘விலாசம்’ என்ற பதம் அடங்கியிருக்க வேண்டுமென்று பிரேரேபித்தவர் சம்பத்து செட்டியார். இக் கூட்டத்தில்தான் முத்துக்குமாரசாமி செட்டியாரும் வெங்கடகிருஷ்ண பிள்ளை யென்பவரும் எனக்குப் பரிச்சயமானார்கள். இக்கூட்டத்தில் முத்துக்குமாரசாமி செட்டியார், வெங்கடகிருஷ்ண நாயுடு, வெங்கடகிருஷ்ணப் பிள்ளை , ஜெயராம் நாயகர், நான் ஆகிய ஐவரும் சபையின் காரியங்களைப் பார்க்க நிர்வாகச் சபையாக ஏற்படுத்தப் பட்டோம். முத்துக்குமாரசாமி செட்டியார் காரியதரிசியும் பொக்கிஷதாரருமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், சுகுண விலாச சபையை மேற்கண்டபடி ஸ்தாபித்த எழுவரும் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் வாசித்துக் கொண்டிருந்த சிறுவர்கள், அல்லது அப்பொழுதுதான் பள்ளியை விட்ட சிறுவர்களாயிருந்தோம் என்பதே. முதல் அங்கத்தினராகிய ஜெயராம் நாயகருக்குச் சுமார் பதினேழு வயதிருக்கும்; பள்ளிக் கூடத்தில் அக்காலத்திலே மெட்ரிகுலேஷன் (Matriculation) என்று சொல்லப்பட்ட பரீட்சைக்குக் கிறிஸ்துவ கலாசாலை எனப் பெயர் வழங்கிய பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார். இவர் பூவிருந்தவல்லியில் டிஸ்டிரிக்ட் முன்சீப் வேலையிலிருந்து பென்ஷன் வாங்கிக் கொண்ட ம-ள-ள-ஸ்ரீ செல்லப்ப நாயகர் அவர்களுடைய கடைசி குமாரர். வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் மதுரையில் நட்சத்திரங்களின் நிலையைக் கணிக்கும் ஆபீசில் இருந்த சேஷாசலம் நாயுடு என்பவரின் குமாரர். எல்.எம்.எஸ். என்னும் வைத்தியப் பரீட்சைக்காகச் சென்னையில் வைத்தியகலாசாலையில் படித்துக் கொண்டிருந்தார். வெங்கட கிருஷ்ணப்பிள்ளை என்பவர் ஜெயராம் நாயகருடைய பந்து; முதல் எல்.எம்.எஸ்.பரீட்சையில் அப்பொழுதுதான் தேறி, இரண்டாவது எல்.எம்.எஸ். என்னும் வைத்தியப் பரீட்சைக்கு சென்னை வைத்திய கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தார். முத்துக்குமாரசாமி செட்டியார், அப்பொழுதுதான் பி.ஏ. பரீட்சையில் தேறி, அவர் தகப்பனார் ஊ. புஷ்பரத செட்டியார் காலஞ்சென்றமையால் அவர் ஸ்தாபித்த கலாரத்னாகரம் அச்சுக்கூடத்தை மேல் விசாரணை பார்க்க ஆரம்பித்தார். நான், (இப்பதத்தை இவ்வியாசங்களில் அடிக்கடி உபயோகிக்க வேண்டி வரும்; இதற்குக் காரணம் என் அகம்பாவமன்று; எனது நாடகமேடை நினைவுகளைப் பற்றி நான் எழுதப் புகுந்தமையால் இப்பதம் அடிக்கடி உபயோகிக்க வேண்டியது அவசியமாகிறதென எனது நண்பர்கள் குறிப்பார்களாக) அக்காலம், சென்னை பிரசிடென்சி (Presidency) கலாசாலையில் பி.ஏ. பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அப்பொழுது வயது 18; என் தகப்பனார் பள்ளிக்கூடங்களுக்கு இன்ஸ்பெக்டர் (Inspector) வேலையிலிருந்து, 60 வயதாகிக் கொஞ்ச காலத்திற்கு முன் பென்ஷன் வாங்கிக்கொண்ட ம-ள-ள-ஸ்ரீ பம்மல் விஜயரங்க முதலியார். சம்பத்து செட்டியார் என்பவருக்கும் ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். பி.சி. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பி.ஏ. பட்டம் பெற்றிருந்தார். அவருக்கு என்னைவிட சுமார் நான்கு ஐந்து வயது அதிகமாயிருக்கும். இங்ஙனம் சுகுண விலாச சபையை ஸ்தாபித்தவர்கள் எழுவரும் சிறு வயதுடையவர்களாயிருந்தோம். அன்றியும் எங்களுக்குள் சிலருடைய தகப்பன்மார்கள் உயர் பதவியிலிருந்து சம்பாத்தியமுடையவர்களா யிருந்தபோதிலும், நாங்களாகப் பெரும்பாலும் சுயார்ஜிதமுடையவர்களாயில்லை. எங்களுக்குக் கையில் பணம் இல்லாவிட்டாலும், மேற்கொண்ட கருமத்தை முடிக்க வேண்டுமென்னும் கருத்தில் பெரும் உற்சாகம் மாத்திரம் எங்கள் மனத்தில் குடிகொண்டிருந்தது என்று நான் உறுதியாய்க் கூறவேண்டும். இந்த உற்சாகமே அன்று முதல் இன்றுவரை நாற்பது வருஷங்களாக அச் சபையை என்ன இடையூறுகள் இடையில் வந்த போதிலும், அவற்றையெல்லாம் பாராது, ஈசன் கருணையினால் தளரா ஊக்கத்துடன் நடத்தி வரும்படி செய்ததெனக் கூறல்வேண்டும். இதுதான் சுகுண விலாச சபை பிறந்த கதையும் நாமகரணம் செய்யப்பட்ட கதையுமாம்; இனி அது வளர்ந்தோங்கிய கதைகளைப் பின்வரும் அத்தி யாயங்களில் இறைவன் திருவருளை முன்னிட்டு எழுதுகிறேன்.