பாரதிதாசன் தாலாட்டுகள்/ஆழ்வார் பாடிய தாலாட்டு

விக்கிமூலம் இலிருந்து

ஆழ்வார் பாடிய தாலாட்டு
இறைவன் மனித உயிர்களைப் படைத்தபோது அவற்றை ஆண், பெண் என இருபாலாகப் படைத்தான். உடல்வன்மை, மனவுறுதி, உழைப்பு ஆகிய வலிமைக்கான இயல்புகளை ஆடவனிடம் அமைத்தான். இரக்கம், பராமரிப்புத் திறன், இனிமை போன்ற மெல்லியல்புகளைப் பெண்ணிடம் அமைத்தான். இந்த இயற்கை அமைப்பின் பயனாக, மக்கள் வாழ்க்கையிலே குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆடவனுக்கு ஏற்பட்டது. அக் குடும்பத்தைப் பேணுகின்ற தனி உரிமை பெண்ணுக்கே சொந்தமாகிவிட்டது.

பேணுகின்ற தனி உரிமை பெற்றுள்ள பெண்ணிடத்திலே, இரக்கமுடைய நெஞ்சம், இன்முகமும், பொறையும் குடிகொண்டிருக்கின்றன. மக்கள் இனத்தைப் பெருக்குவதற்கான மகவு அவளிடத்தே தோன்றி, பெண்மையின் பெரும்பயனாகிய தாய்மை நிலையை அவளுக்கு அளிக்கும் போது, தான் ஈன்ற குழந்தையினிடத்திலே அவளுக்கு அளிக்கும் போது, தான் ஈன்ற குழந்தையினிடத்திலே அவளுக்கு அன்பு ஊற்றெடுத்துப் பெருகுகிறது. அவ் அன்பு காரணமாக, குழந்தைக்கு வேண்டிய பணிவிடைகளைச்செய்யும் போது, அது தரும் இன்னல்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டி வருகிறது. தனக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லால் தெரிவிக்க அறியாத சிறு மகவு, எதற்கெடுத்தாலும் அழக் கற்றிருக்கிறது. எதற்காக அழுகிறதென்பதை நேரத்தையொட்டித் திட்டமாக அறிந்து அதற்கேற்ற பணிவிடை செய்வது, தாயிடம் அமைந்துள்ள அருங் கலைகளில் ஒன்று என்றே சொல்வேண்டும். அழுத குழந்தையை எடுத்து தாய் பாலூட்டிய பின்னும், அது சிறிது முனகிக்கொண்டேதான் இருக்கிறது. இந்தச் சிறு முனைகலையும் நிறுத்த வேண்டி, அவள் குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி ஏதேனும் பாட்டுப் பாடுகிறாள்.

பாட்டுப் பாடினால் பாட்டைக் கேட்கிற சுகத்திலே ஈடுபட்டு இளங் குழந்தையானது மெய்மறந்து உறங்கிப் போகும். இப்படிப் பாடுகிற பாட்டு, சிறப்பாக ஏதேனும் சொல்லமைந்த பாடலாகத்தான் இருக்கும் என்பதில்லை, பெரும்பாலும் வெறும் ஒலியாகவே இருப்பதுண்டு. நாவை அசைத்து, இனிய ஒலி எழுப்பினாலே போதும்: குழந்தை கேட்டு உறங்கிவிடுகிறது. இவ்வாறு நா அசைத்தலும் பாட்டுப் பாடுதலுமே தாலாட்டு என்று வழங்கிவருகின்றன. (தாலு ஆட்டு, தாலாட்டு; தாலு-நா.).

உண்மையான பக்தி பூண்ட அடியவர்கள் இறைவனிடத்திலே எத்தனையோ விதங்களில் நெருங்கி உரிமை பாராட்டிச் சொற்களாலே குலவுகிறார்கள். ஆண்டான், அடிமை என்ற தொடர்பை வைத்துக்கொண்டு தாம் அடிமையாயிருந்து, தமக்கு அவனுடைய அருள் வேண்டுமென்று அடியவர் அந்த ஆண்டவனிடத்திலே நெருங்கிய தோதுமை பூண்டு, அந்த பாவத்திலே, தமக்கு வேண்டுவனவெல்லாம் தரும்படி அவனைக் கேட்பது மற்றொருவகை. எப்பொருட்குந்தலைவனாக இறைவனை நாயகனாகப் பாவித்துத் தம்மை நாயகி நிலையிலே வைத்துக் குலவிப் பாடுவது இன்னும் சிறப்பானது. ஆனால், சீவிலிபுத்தூர்ப் பட்டரான விண்டு சித்தர் என்று வழங்கிய பெரியாழ்வார் இந் ளநிலைகள் அனைத்திலும் மேலானதோர் அனுபவத்தைத் தமிழ்ப் பாடல்கள் மூலமாக நமக்குக் காட்டுகிறார்.

பக்தியினாலே கனிந்த அவருடைய இதயமானது தாய்மை நிலையை அடைந்திருக்கிறது. திருமாலைப்பற்றி எண்ணுந்தோறும், அவருள்ளத்திலே அவன் ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணனாகிய குழந்தைக் கண்ணன் கோலத்தோடேயே தோற்றுகிறான். தாயானவள் குழந்தையைத் கண்டுவிட்டால் கொஞ்சுவதற்குக் கேட்கவா வேண்டும்? ஆயர்பாடியில் கண்ணன் அவதரித்த சிறப்பையே பல பாடல்களால் பாடிப் பாடி இன்புறுகிறார் ஆழ்வார். பிறகு அத் தெய்வக் குழந்தையின் உருவ அழகை உள்ளங்கால் தொட்டு உச்சிவரைப் பாதாதி கேசமாகப் பார்த்துப் பார்த்து அனுபவிக்கிறார்; தம் கற்பனையில் ஆயர்பாடிப் பெண்கள். அனைவரையும் அழைத்து அவ் அழகை ஒவ்வொன்றாகக் காட்டுகிறார்.

இவ்வாறு அவர் காட்டி வருகின்ற நிலையிலே, குழந்தைக் கண்ணன் அழுகின்றான் என்ற ஓர் எண்ணம் தோன்றிவிடுகிறது. ஆயர்பாடியிலே அளவற்ற மாயங்கள் செய்த அம் மாயன் அழுவதாக ஆழ்வார்தம் தாயுள்ளம் எண்ணியதில் வியப்பில்லை. அழுகையை ஓயப்படுத்துவதற்கு எளிதான வழி இல்லாமலா போய்விட்டது? உடனே அருமையான தொட்டில் ஒன்றை அங்கே கொண்டு வருகிறார் ஆழ்வார். தொட்டில் யார் தந்தது? மாயக் கண்ணனுக்கு யாரால்தான் தொட்டிலமைக்க முடியும்? உலகனைத்தையும் படைத்த பிரமனே, படைத்துப் படைத்துத் தேர்ந்த தன் கைகளால், அழகிய சிறு தொட்டிலை ஆணிப்பொன்னாலே செய்து, அதில் மாணிக்கமும் வயிரமும் இழைத்து, கொண்டுவந்து தருகிறான். மாயம் வல்ல கண்ணன் அதில் உறங்குவானா? அவனோ, உலகெல்லாந் தனது ஓரடியால் அளந்த ரிெயவனாயிற்றே? எந்தத் தொட்டிலில் அவனைக் கண்வளரச் செய்யமுடியும் என்றெல்லாம் ஆழ்வார் அஞ்சவேயில்லை. அழகிய குறள் வடிவங்கொண்ட வாமனன் அல்லவா, இக்கண்ணன்? தொட்டிலிலே கண் வளர்வதற்கு என்ன தடை? ஆழ்வார் இப்படி அவனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுப் பாடுகிறார்;

மாணிக்கங் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுதொட்டில்-

பேணி உனக்குப் பிரமன் விடுத்தந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ.

தொட்டிலிற் கிடத்திய குழந்தைக்கு ஆழ்வார் பல அணிகலன்களைப் பூட்ட வேண்டுமென்று ஆசை கொள்கிறார். அவர் நினைத்த மாத்திரத்திலே தேவர்களெல்லாரும் ஓடிவந்து பற்பல அணி வகைகளையும் கொண்டுவந்து குவிக்கிறார்கள்.

சின்னஞ்சிற காலில் அணிவதற்கேற்ற கிண்கிணி யொன்றை இந்திரன் தருகிறான். சங்கின் வலம்புரியென்ன, சேவடிக்கேற்ற பல கிண்கிணிகளென்ன, அங்கைக்கேற்ற சரிவளை என்ன, அரையிலணிவதற்கு நாண், தொடர்கள் என்ன-இத்தனையும் தேவர்கள் கொண்டுவருகிறார்கள். குபேரனுக்குச் சொல்லவா வேண்டும்? மார்பிலணிவதற்கு என்று மாலையும் ஐம்படைத் தாலியும் தருகிறான். கடல் வளங்களையெல்லாம் - முத்துமாலை, உயர்ந்த சாதிப்பவளம் அருமையான சங்குவளை ஆகியவற்றை-வருணன் கொண்டு வருகிறான். ஈசனும் அழகுமிக்க அணிகலன் ஒன்றை அனுப்புகிறான். அது, மணிகளும் ஒளிமிக்க மாதுளம்பூவும் தெழ்கம் இடைவிரவிக் கோத்த அணி.

இத்தனை அணிவகைகளையும் குழந்தைக்கு ஆழ்வார் தம் கற்பனையிலே பூட்டி 'அழேல், அழேல்' என்று தாலாட்டுகிறார். உலக முற்றும் அளந்த அந்தக் குழந்தைக்கு என்ன குறைவு இருக்கப்போகிறது? எல்லாவற்றுக்கும் உடையவனான குழந்தை அவன். எனவே, அழவானேன்?

உடையார் கனமணியோ(டு) ஒண்மாதுளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய்! அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ.

இவ்வுளவு பெற்றும், அம்மாயக் குழவி தன் அழுகையை நிறுத்தவில்லை, மேலும் அழுகிறானாம். அவனுக்கு ஏதோ குறையாயிருக்கிறது. என்னதான் ஆடையயும் அணிகலனம் பிறர் கொண்டுவந்து தந்தபோதிலும், அவன் மனத்திலே திருப்தி பிறக்கவில்லை. அவனுக்கு உரியவளான திருமகள் அனுப்பிய பொருள் ஒன்றும் காணவில்லையே! திருமகளிடத்து அவனுக்குள்ள ஈடுபாட்டை நாம் நன்றாக அறிவோம். மார்பில்லவா அவளைத் திருமால் வைத்திருக்கிறான்! அவ்வளவு அருமை பொருந்திய திருமகளின் அன்புக்கு அடையாளமான பொருள் ஒன்றும் இன்னும் வரவில்லையென்றால், மாயன் பொறுப்பானா? இதனாலேதான் மீண்டும் அவன் அழுகின்றானாம்.

திருமகளும், தன் காதலன் பிரிவைப் பொறுப்பாளா? உடனே விரைந்து அன்போடு ஒரு கையுறை அனுப்புகிறாள், ஆழ்வார் தொட்டிலிற் கண் வளர்த்திய மாயக் கண்ணனுக்கு. அது என்ன பொருள்? இந்திரனும். குபேரனும் வருணனும் அனுப்பிய அணிகலன்கள் போல ஏதேனும் அணிகலனா? அன்று.

இறைவழிபாட்டுக்கு என்ன வேண்டும்? ஆடம்பரமான கோயிலும் விரிவான பூசை முறைகளும் மேளவாத்தியங்களும் இசைப் பாடல்களுமா? பால், நெய், தேன் முதலிய அபிடேகப் பொருள்கள், பழம் பலவகை அடிசில் முதலிய நைவேத்தியங்கள், அழகான மணம்மிக்க மலர்கள், மலர்களாலான அலங்காரங்கள்-இவைகளா? இவைகளைச் செய்வார் செய்க; ஆனால் எல்லோருக்கும் இவை வேண்டுவன அல்ல. உண்மையான அன்பு-பக்தி- இது மட்டும் ஒருவன் - அகத்திலே இருக்குமானால் இவையொன்றும் வேண்டாம். வெறும்புல் இருந்தால் போதும்; பச்சை இலை இருந்தாலும் போதும். அதுகொண்டு இறைவனை வழிபடலாம். 'யாவர்க்குமாம் ஒருபச்சிலை' என்கிறார் அடியவர். அப்பச்சிலைக்கு அவன் வயப்பட்டுவிடுவான்.

கண்ணன் துலாபாரம் என்ற சரித்திரம் இவ்வுண்மையை உணர்த்துகிறது. சத்தியபாமையின் அளவற்ற பொன்னுக்கும் மாணிக்கம் ஆபரணத்துக்கும் கட்டுப்படாத கிருஷ்ணன், ருக்குமணியின் அன்புக்கு அடையாளமான ஒரு சிறு துளசி இலைக்குக் கட்டுப்பட்டுவிட்டான். எனவே, அவ்வளவு அன்பையும் உட்கொண்டுள்ள அத் துளசி இதழின் அருமைதான் என்ன?

ஆழ்வாருடைய குழவிக் கண்ணனுக்கு, இத் துளசி இதழ்களால் ஒரு மாலை கட்டித் திருமகள் அனுப்புகிறாள். இதன் அருமையை யார்தான் சொல்லமுடியும்? (துளசியைத் தமிழிலே திருத்துழாய் என்று அருமை பாராட்டிச்சொல்லுகிறோம்.) காட்டிலே தழைத்த துழாயனபடியால், அருமையான மணமெல்லாம் அதனிடத்திலே பொருந்தியிருக்கிறது. மேலும், அந்த மாலையிலே, திருமகளுடைய கை வேலையின் திறனெல்லாம் அமைந்திருக்கிறது.

கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்;
கோனே! அழேல் அழேல் தாலேலோ
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ.

காத்தற் கடவுளாகிய திருமாலுக்கு உலகத்திலுள்ள எல்லாச் செல்வமும் உரியது; அவனே செல்வத்துக்கு நாயகன். திருமகளுக்கு அவன் நாயகன் என்பது போலவே, உழவுச் செல்வம் அனைத்துக்கும் இடமாயிருக்கிற பூமியும் அவனுக்கே தேவியாகிறாள் என்று நம்மவர்கள் கொண்டிருக்கிறார்கள். திருமகள் கண்ணனுக்குத் தன் கையுறையை அனுப்பியதும், பூதேவி தானும் சில கையுறைகளை அனுப்புகிறாள். கச்சு, சுரிகை, பொன்வளை சுட்டி, தாளில் அணிவதற்காகப் பொற்பூக்கள் என்றெல்லாம் பலபொருள்களை அச்சுதனுக்கென்றே அவள் தருகிறாள்:

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுதனுக் கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய்! தாலேலோ
நாராயணா! அழேல் தாலேலோ.

திருமகளையும் புவிமகளையும் இவ்வாறு எண்ணியும் அழைத்தும் தாலாட்டிய ஆழ்வாருடைய கலையுள்ளத்திலே, இந்தச் சக்திகளுக்கெல்லாம் மூலசக்தியாகிய அன்னை பராசக்திக்கு இடமில்லாமற்போகவில்லை. கற்பனையிலே அழுகிற இளங்கண்ணன், அழுகையை நிறுத்திச் சிறிது பொழுது உறங்கவேண்டும். உறங்கி விழித்தெழுந்த வுடனே அவனை நீராட்ட வேண்டுமென்ற கருத்தோடு பராசக்தியானவள் வந்து நிற்கிறாள், குழந்தையின் உடம்பெல்லாம் திமிர்ந்து குளிப்பாட்டுவதற்கேற்ற நானப்பொடியும் மஞ்சளும் வைத்திருக்கிறாள். நீராட்டியபின் கண்ணுக்கு அழகுபெற இடுதவற்கான அஞ்சனமும் நெற்றியில் திலகமிடுவதற்கான சிந்துரமும் கொண்டுவந்திருக்கிறான்.

இவ்வளவையும் கற்பனை செய்துகொண்டு, 'ஐயா, அழேல்' என்று ஆழ்வார் கண்ணனைத் தாலாட்டுகிறார்:

மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள்
ஐயா! அழேல் அழேல தாலேலோ
அரங்கத் தணையானே! தாலேலோ

ஆழ்வார் தந்த தாலாட்டானது பின்னே தமிழிலக்கியம் விரிந்து வளர்வதற்கு எவ்வளவோ உதவி இருக்கிறது என்பதைக் காண்போம். பின்னாலே வந்த குலசேகராழ்வார், கணபுரத்தி லெழுந்தருளியுள்ள காகுத்தனைக் கண்டு வழிபட்டபோது, அக் காகுத்தனான இராமன் சரிதத்திலே ஈடுபட்டு, அச் சரிதத்தையே பத்துப் பாடல்கொண்ட ஒரு தாலாட்டுப் பதிகமாகப் பாடியருளினார்.

மன்னு புகழ்க் கௌசலை தன்
மணிவயிறு வாய்த்தவளே
தென்னிலங்கைச் கோன்முடிகள்
சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதிள் புடைசூழ்
கணபுரத் தென் கருமணியே

என்னுடைய இன்னமுதே
இராகவனே தாலேலோ.

பாராளும் படர் செல்வம்
பரதநம்பிக் கே அருளி
ஆரர் அன் பிளையவனோடு
அருங்கானம் அடைந்தவனே
சீராளும் வரைமார்பா
திருகண்ண புரத்தரசே
தாராளும் நீள்முடி என்
தாசரதீ தாலேலோ.

இந்தப் பாடல்களில் ஈடுபடாதோர் யார்?

பின்வந்த கவிஞர்களுடைய புதிய பிரபந்த வகைகளில் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் 'தாலாட்டுவதையே அப்பருவத்துக்குரிய பொருளாகக் கொண்டார்கள். இதுவுமின்றி, தெய்வங்கள் மீதும் 'தாலாட்டு' என்ற பெயரோடு பாடப்பெற்ற நூற்றுக்கணக்கான தாழிசைகளைக் கொண்ட பிரபந்தங்கள் பின்னர்த் தோன்றியிருக்கின்றன. இவ்வளவையும் ஒருபுடை தழுவி, நாடோடிப் பாடலாகவும் வாய்மொழியாகவும் நம் தாய்மார் நாவில் வழங்கும் தாலாட்டுப் பாடல்களுக்குக் கணக்கில்லை.

இவ்விதமாக, தாம் தாயாயிருந்து முழுமுதற் பொருளான இறைவனையே குழந்தையாக ஏந்தியெடுத்துக் தாலாட்டுப் பாடி, அதன் மேல் அடியவர் உள்ளமெல்லாம் அன்புவெள்ளம் கரை கடந்தோடவும், தமிழ் இலக்கியம் பல துறையிலும் விரிந்து வளரவும் செய்து புதுவழி வகுத்த உத்தம பக்தாரன ஆழ்வாரைத் தமிழுலகமானது “பெரியாழ்வார்” என்று ஆராமை மீதூர வியந்து போற்றுவதுல்லது, வேறென்ன செய்யக்கிடக்கிறது?