பாரதிதாசன் தாலாட்டுகள்/தாலாட்டும் பள்ளும்

விக்கிமூலம் இலிருந்து

தாலாட்டும் பள்ளும்


தாலாட்டுப் பாட்டிலே நம் கவிஞர்களுக்குள்ள ஈடுபாடு காரணமாக, எப்போது எப்போது அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், எளிதாக அழகிய சிறு தாலாட்டொன்றைப் பாடிவிடுகிறார்கள். தாலாட்டுப் பாடல் உள்ளத்திலே எழுப்புகின்ற இன்பமான நினைவுகளும், பாடலின் சுகமுமே இப்படிப் பாடுவதற்குக் காரணங்கள்.

பள்ளுப் பாட்டிலே பொதுவாக நாம் தாலாட்டைப் பார்ப்பதில்லை; தாலாட்டுக்கு அதில் சந்தர்ப்பமும் குறைவு. ஆயினும், நம்முடைய கவிஞரொருவர் சந்தர்ப்பத்தைச் சிருட்டித்துக்கொள்ளுகிறார்.

பள்ளியர் பலர் மிக்க உல்லாசத்தோடு நடவு நட வருகிறார்கள். இளம் பள்ளியர், முதிய பள்ளியர், அன்றி இடுப்பிலே குழந்தையை இடுக்கிபடியே வந்த பள்ளியர் - என இவர்கள் பலவகை, இளையவளும் முதியவளும் வயற்கரையை அடைந்தவுடன், நேரே சேற்றில் இறங்கிவிட முடியும். ஆனால் குழந்தையோடு வந்தவள் என்ன செய்வாள்? குழந்தையை எங்கு விடுவாள்?

நாம் தெருவிலே பார்க்கிறோம் அல்லவா? - சென்னைக் கார்ப்பொரேசன் ஊழியர்களாயுள்ள பெண்கள் சாலைகளில் மராமத்து வேலை செய்யும்போது, சாலையோரமுள்ள மரங்களில் ஏணைகட்டி அதில் குழந்தைகளைக் கிடத்தி ஆட்டி உறங்க வைத்துவிட்டுத் தங்கள் வேலைகளைக் கவனிக்கிறார்கள். குருகூர் ஆழ்வார் பண்ணையில் நடவு நடவந்த பள்ளியரும் இப்படியே செய்கிறார்கள்.

வயல் வரப்புகளிலும் வாய்க்கால் கரைகளிலும் வேம்பு முதலிய மரக்கிளைகளுக்குப் பஞ்சமா? ஏணைகட்டி அதில் குழந்தையைப் படுக்கவைத்துத்', 'தாய் மார் தாலாட்டுகிறார்கள் என்று கற்பனை செய்கிறார் கவிஞர்; இது உண்மையில் கற்பனையே அன்று; மெய்யாகவே நடக்கிற நிகழ்ச்சிதான்.

இரண்டு பள்ளியர் தாலாட்டுகிறார்கள். ஒருத்தியின் குழந்தை ஆண் குழந்தை; மற்றவள் குழந்தை பெண் குழந்தை. எப்படித் தாலாட்டுகிறார்கள் என்பதை மாற்றி மாற்றிக் கேட்போம்.

பள்ளரும் பள்ளியரும், திருக்குருகூர் நம்மாழ்வாரிடத்தில் அளவற்ற பக்தியுடையவர்கள், பரம்பரையாக ஆழ்வார் பண்ணையில் பயிர்த்தொழில் செய்து வருபவர்கள் என்பதை நாம் ஞாம்பத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒருத்தி பாடுகிறாள் :

அண்டர்தொழுதென்குருகூர்
ஆழ்வார்க்கு வாய்த்த வயல்
எண்திசையும் பண்ணை பயிர்
ஏற்ற பிறந்தானோ!

அடுத்தவள் - பெண் குழந்தையை யுடையவள் - பாடுகிறாள் :

அன்னதருத் தென்குருகூர்
ஆழ்வார் வளவயலில்
செந்நெல் நடவந்த
செல்வ மகளாரோ!

ஆழ்வார் பண்ணையிலே தாங்கள் மகிழ்ச்சியோடு தொழில் செய்வதைப் போலவே தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற பிள்ளையும் பெண்ணும் பெற்றமை குறித்து இத் தாய்மார்களுக்கு என்ன மகிழ்ச்சி, என்ன உல்லாசம்! மேழிச் செல்வமாகிய பெருஞ் செல்வத்தை ஈட்டுபவன் ஆதலால், பள்ளனை எப்படிச் சிறப்பித்தாலும் தகுமல்லவா? பிள்ளையைப் பார்த்துச் சொல்கிறாள் பள்ளி;

சேறாடி சூழச்
சிறந்த குடை நிழற்ற
வீறாய் முரசதிர
விளையாடுவான் மகனோ.

கோழைபடாத மேழிச் செல்வத்தைத் தேடுகின்ற பள்ளன், குடை நிழற்றவும் முரசதிரவும் விளையாடுவான் என்றால், மிகையன்று.

இதை யொத்த பாவத்தில் மற்றவள் பாடுகிறாள் :

அரவணை யானைப் பரவும்
ஆழ்வார் வளவயலிற்
குரவையிட்டுக் களைபறிக்கும்
கோமளப் பெண்ணாரமுதோ.

கோமளப் பெண் - ஆம் உலகமெல்லாம் உண்ண வேண்டும் என்பதற்காக, நடவுநட்டு, குரவையிட்டுக் களை பறிப்பவள் கோமளப் பெண்ணாரமுதான், சந்தேகமில்லை.

இப்படியெல்லாம் குழந்தையைப் பள்ளி எவ்வளவோ கொஞ்சியாயிற்று. சரி, ஆனால் இக் குழந்தையால் பண்ணைத் தலைவரான ஆழ்வாருக்குப் பயனுண்டா?

கேட்பானேன்? எவ்வளவோ உண்டு, ஆழ்வார் அமுது செய்வதெல்லாம் இவன் விளைவித்துக் கொடுக்கின்ற உணவு தானே? இந்த பாவத்தில் வருகிறது பாட்டு:

வளஞ்சேர் குருகைமகிழ்
மாறர் அமுதுசெய்யக்
களஞ்சியத்தில் நெல்லளந்து
கட்டப் பிறந்தானோ.

சரி ஆண் குழந்தைதான் ஆழ்வாருக்கு இப்படித் தொண்டு செய்வான். பெண் குழந்தை?

மற்றவள் சொல்கிறாள். நெல் விளைந்தால் போதுமா? அது களத்திலே கண்டு முதல் பண்ணும்போது, சிந்தி மங்கிச் சீரழியாமல் பெருக்கிச் சேர்க்கவேண்டாமா? இது பெண் செய்யவேண்டிய வேலை. வழக்கமாய் ஆண் செய்வதன்று. களத்திலே தன் பெண் ஆழ்வாரின் அமுதுக்குரிய நெல்லைப் பெருக்கிச் சேர்ப்பாள் என்ற எண்ணமே, தனக்குப் பெருவாழ்வையே சேர்த்து தந்ததுபோல இருக்கிறது இப் பள்ளிக்கு.

தண்ணிலஞ்சி
மாறர் களம் பெருக்கிப்
பெருவாழ்வு எனக்கு வரப்
பிறந்த மகளாரோ.

இங்ஙனமாகப் பள்ளியர் தங்கள் பிள்ளையையும் பெண்ணையும் தாலாட்டும் இச் சிறு தாலாட்டு, ஆழ்வாருக்கும் நமக்குமே பெரிதும் உவப்பான தாலாட்டு என்பதில் சந்தேகமில்லை.