உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் தாலாட்டுகள்/முல்லை நறுமலர்

விக்கிமூலம் இலிருந்து

முல்லை நறுமலர்

இந்த இருபதாம் நூற்றாண்டில், கவிஞர்தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் தாலாட்டுபாடுகின்ற ஒரு தாயை நமக்குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். அத்தாயின் சொற்களிலே கவிதையின் எளிமையையும் கவிதைச் சுவையின் உயர்ந்த சாதனையும் நேர்முகமாய் நாம் கண்டு அனுபவிக்கிறோம்.

தமிழ் மக்களுக்குப் பூவினிடத்தில் எல்லையற்ற ஈடுபாடு. தாய்மைப் பேறடையப் போகும் பெண்ணுக்குச் செய்யும் சடங்குகளில் முதல் சடங்குப் பெயரே பூச்சூட்டல் என்பது. பூவிலே மக்கள் மனம் எப்போதும் ஈடுபட்டிருக்குமானால் கவிஞர் மனம் இன்னும் எவ்வளவு அதிகமாய் அதில் தோய்ந்திருக்கும்?

குழந்தைக்க உறக்கம் வரவேண்டிப் பாடத் தொடங்குகின்ற தாய் பாடுகிறாள்:

முல்லை நறுமலரோ
முருகவிழ்க்கும் தாமரையோ
மல்லிகைப் பூவோ
மருக்கொழுந்தோ சண்பகமோ,

தாய் சில மலர்களின் பெயர்களை மட்டுமே சொல்கிறாள். நிரல் படச் சொல்லுகிறாள். கற்பனைச் செறிவோ, கருத்துச் சிக்கலோ, சொல்லடுக்கோ காணப்படவில்லை. ஆனால், இவ்வரிகளில் தாய்மையின் பெருமிதம், உணர்ச்சியின் பெருக்கு, இயல்பான தாயன்பின் எளிமை, அழகுச் சுவையின் எல்லை இவை நம்கண்முன் வந்துவிடுகின்றன. வரிசையாக மலர்களின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சொற்களில் தாயின் அன்பு நிறைந்து, நாமும் கவிதையின் உணர்ச்சி வரப்பட்டு நிற்கிறோம், நேர்முகமாய் உணர்ச்சி வசமாகும் போது, சொற்கோவையோ விளக்கமோ தேவையில்லாமற் போகிறது. குழந்தையால் யாருக்குத்தான் இன்பம் இல்லை? முல்லையும் தாமரையும் மல்லிகையும் சண்பகமும் யாருக்குத்தான் இன்பம் தரமாட்டா?

கவிஞரே தாயாகப் பாடுகிறார். அவருடைய அனுபவம் பாட்டாகிறது. கவிஞருடைய மனம் சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார் அருட் பாசுரங்களிலும் நிரம்பிய ஈடுபாடு உள்ள மனம். ஆதலால், அதற்கேற்றவாறே குழந்தையும் காட்சியளிக்கிறான்.

பூமாலை வாடும் மணம்
பொன்மாலைக் கில்லையென்று
பாமாலை வைத்தீசன்
பாதம் பணிபவனோ!

பாலமுதம் உண்டுதமிழ்ப்
பாமாலை பாடியிந்தத்
தாலம் புகழவரும்
சம்பந்தன் நீதானோ!

கொன்றையணிந்தம்பலத்தில்
கூத்தாடும் ஐயனுக்கு
வன்றொண்டனாக
வளர்ந்தவனம் நீதானோ!

கல்லைப் பிசைந்து
கனியாக்குஞ் செந்தமிழின்
சொல்லை மணியாகத்
தொடுத்தவனும் நீதானோ!

தேவாரப் பாகும்
திருவாசகத் தேனும்
நாவார உண்ணஎம்மான்
நன்மகவாய் வந்தானோ!

நாலா யிரக்கவியின்
நல்லமுதம் உண்டிடமால்
பாலாழி நீங்கியொரு
பாலகனாய் வந்தானோ!

குழந்தை என்பதற்கேற்ப, கவிஞருக்கு இங்கு பாலசுப்பிர மணியனிடத்திலும், பாலகிருட்டிணனிடத்திலும் பக்தி பெருகியிருக்கக் காண்கிறோம். அந்தப் பக்தி தாலாட்டுப் பாட்டிலும் வெளிப்படுகிறது.

புள்ளி மயிலோடு
புனங்காத்து நிற்குமந்த
வள்ளி மணவாளன்
மதலையாய் வந்தானோ!

ஆயர் பதியில்
அற்புதங்கள் செய்துநின்ற
மாயவனே இங்கெமக்கு
மகவாகி வந்தானோ!

பெண்கள் சிறுவீட்டைப்
பேணாதழித்தவர்தம்
கண்கள் சிவக்க வைக்கும்
கண்ணபிரான் நீதானோ!

முடிவில் அழுகின்ற குழந்தையை அழவேண்டாம் என்று சொல்லிப் பாட்டு முடிகிறது. குழந்தைக்குச் சலுகை மாமாவிடம். ஆதலால், மாமா வருவார் என்பதே கடைசியான கூற்று.

சப்பாணி கொட்டித்
தளர்ந்தனையோ அல்லதுன்றன்
கைப்பாவைக் காகக் -
கலங்கி அழுதனையோ?

திந்திக்கும் தேனும்
தினைமாவும் கொண்டுன்றன்
அத்தை வருவாள்
அழவேண்டாம் கண்மணியே.

மாங்கனியும் நல்ல
வருக்கைப் பலாக்கனியும்
வாங்கியுன் அம்மான்
வருவார் அழவேண்டாம்.

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
ஆராரோ ஆராரோ
ஆரரோ ஆரிவரோ.