தான்பிரீன் தொடரும் பயணம்/தேர்தல் வெற்றி

விக்கிமூலம் இலிருந்து

4
தேர்தல் வெற்றி


1918ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அயர்லாந்தில் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் ஸின்பீன் இயக்கத்திற்கும் ஐரிஷ் தொண்டர்படைக்கும் மகத்தான வெற்றி ஏற்பட்டது. மேலும் தேர்தலின் மூலம் அயர்லாந்தின் உள்ளக் கருத்து உலகத்திற்குத் தெளிவாக அறிவிக்கப்ட்டது.

அயர்லாந்துக்கென்று தனியான சட்ட சபையோ, பார்லிமென்டோ கினையாது. பிரிட்டிஷ் பார்லிமென்டுதான் அதற்கும் சட்டசபை பார்லிமென்டில் அயர்லாந்துக்கு 103 ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்ட்டிருந்தன. பார்லிமென்டுக்குப் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப் பொதுத் தேர்தல் நடக்கும் பொழுது, அயர்லாந்திலும் அத்தேர்தல் நடைபெறும். அதில் இடம் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட ஐரிஷ் பிரதிநிதிகள் தங்கள் தாய்நாட்டுக்காக விசேஷ நன்மை செய்ய முடியும் என்று சிலர் எண்ணியிருக்கலாம். இது தவறான எண்ணம். ஏனெனில் பார்லிமென்டிலுள்ள 700 அங்கத்தினரில் ஐரிஷ் பிரதிநிதிகள் ஏழில் ஒரு பாகத்தினரே. "இராவணனுக்குப் பத்துத் தலை, இங்கிலாந்தின் பார்லிமென்டுக்கு எழுநூறு தலை!“ என்று ஐரிஷ் மேதையான அன்னி பெஸன்ட் அம்மையார் கூறுவது வழக்கம். இந்த 700 தலைகள் அயர்லாந்துக்கு விரோதமாக நிற்கும் பொழுது, ஐரிஷ் பிரதிநிதிகள் என்ன செய்ய முடியும்? அவர்கள் கெஞ்சிப் பார்த்தார்கள். பரஸ்பர ஒத்துழையாமையைக் கையாண்டு பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை.

யுத்த காலத்திலும் அதற்கு முன்னும் மொத்தம் ஏழு வருடகாலம் அயர்லாந்தில் பொதுத் தேர்தலே நடக்கவில்லை. 1918ஆம் ஆண்டுதான் புதிதாய்த் தேர்தல் ஆரம்பமாயிற்று. இடையில் மக்களுடைய மனோபாவத்தில் விசேஷ மாறுதல் ஏற்பட்டிருந்தது. அவர்கள் இங்கிலாந்திடம் கொஞ்சமும் நம்பிக்கை வைக்கவில்லை; தங்களுடைய பிரதிநிதிகளைச் சீமைப் பார்லிமென்டுக்கு அனுப்புவதில் எவ்வித பயனுமில்லை என்பதை உணர்ந்திருந்தார்கள். அயர்லாந்துக்குச் சுயாட்சி கொடுக்கும் விஷயமாக இங்கிலாந்து செய்த நம்பிக்கை மோசமும், அது தயவு தாட்சண்யமின்றி இயற்றிய கட்டாய ராணுவச்சட்டமும் மக்களுடைய மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தன. 1916ஆம் ஆண்டு நடந்த சுதந்திரக் கலகம் அவர்களிடையே ஒரு பெரும் எழுச்சியை உண்டாக்கி விட்டது. அதனால் அவர்களுக்குப் புத்துயிரும் புதிய தைரியமும் உண்டாயின. தங்குதடையற்ற பரிபூரணமான சுதந்திரத்தையே அவர்கள் வேண்டினார்கள். முன்னால் நடத்த உபதேர்தல்களிலேயே இக்கருத்தை அவர்கள் வெளியிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தேர்ந்தெடுத்த இரு பிரதிநிதிகளும் குடியரசுக் கொள்கையுடையவர்கள். இப்பொழுது பொதுத்தேர்தலின் மூலம் மக்கள் குடியரசையே ஆதரித்து நின்றார்கள் என்பதை அறிவிக்க ஒர் அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி ஐரோப்பிய யுத்தம் முடிந்தது. அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னால் டிசம்பர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் முதல் முதலாக வயது வந்த சகலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆதலால் ஸின்பீன் இயக்கத்துக்கு மக்கள் எவ்வளவு ஆதரவு காட்டினார்கள் என்பதைப் பரீட்சித்துப் பார்க்க அதுவே தக்க சந்தர்ப்பமாயிற்று.

மக்களிடையே மிகுந்த பிரசாரம் செய்யவேண்டியிருந்தது. ஸின்பீன் இயக்கத்தைப் பற்றி அவர்களிடையே பல தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்கள் அரசியல் கட்சியான ஸின்பீனையும், பட்டாளப் பயிற்சிபெற்ற ஐரிஷ் தொண்டர் படையையும் நன்றாய்ப் பாகுபாடு செய்து தெரிந்துகொள்ளவில்லை. 1916ஆம் ஆண்டு கலகம் ஸின்பீன் கலகம் என்றழைக்கப்பட்டது. தொண்டர்கள் லின்பீன் தொண்டார்கள் என்று கருதப்பட்டது. இவ்வாறு ஸின்பினுக்கும் தொண்டர் படைக்குமுள்ள வித்தியாசத்தை மக்கள் தெரிந்துகொள்ளாமலிருந்ததால், பெருத்த நஷ்டமொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. ஏனென்றால் நாளடைவில் ஸின்பீன் கட்சியார் குடியரசுக் கொள்கையை ஒப்புகொண்டு வந்தனர். தேர்தல் காலத்தில் எல்லாக் கிராமங்களிலும் நகரங்களிலும் ஸின்பின் சங்கங்கள் தோன்றின. ஒரு சங்கத்தினுடைய தலைவரோகாரியதரிசியோ உள்ளூர்த் தொண்டர்படையின் தளகர்த்தராகவும் இருப்பது சகஜம். ஸின்பின் கட்சியிலிருந்த பெரும்பாலான வாலிபர்கள் தொண்டர்படையிலும் ஊழியர்களாய்ப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்தலில் மக்களுக்கு ஸின்பீன் வெறி பிடித்துவிட்டதென்றே சொல்லலாம். பாதிரிமார்களிற் பலர் அதில் சேர்ந்து கொண்டனர். ஸின்பின் கொள்கைகள் காட்டுத் தீப்போல் நாடெங்கும் பரவின. நாட்டிலும் நகரத்திலும் எங்கு பார்த்தாலும் திறமையுள்ள சொற்பொழிவாளர்கள் மேடைகளில் மக்களுடைய கடைமையைப் பற்றிப் பல்லாயிரம் பிரசங்கங்கள் செய்து வந்தார்கள். எங்கும் உற்சாகத்திற்கும் உழைப்பிற்கும் குறைவேயில்லை. தேர்தலில் ஏற்பட்ட உற்சாகத்தினால் ஐரிஷ் தொண்டர்படையின் தொகை குறைய ஆரம்பித்தது. பலர் அதிலிருந்து பிரிந்துவிட்டனர். ஆனால் எஞ்சி நின்றவர்கள், தேர்தலுக்குப் பின்னால் படையை மீண்டும் திறம்பட அமைத்துக் கொள்ளலாம் என்று கருதி தேர்தலில் தீவிரமாக இறங்கி உழைத்தார்கள். எல்லோரும் குடியரசு அபேட்ககர்களுக்காகப் பிரசாரம் செய்தனர். நாட்டில் ஒரு வீடு, சுவர், மரம் பாக்கியில்லாது விளம்பரங்கள் ஒட்டப்பட்டன. அறிக்கைகள் எழுதப்பட்டன. எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும், 'குடியரசுக்கே வாக்களியுங்கள்' 'ஸின்பீனையே ஆதரியுங்கள்!' 1916 ஆம் வருடத்திய வீரரை மறவாதீர் என்ற விளம்பரங்களே காணப்பட்டன. குடியரசை ஆதரிப்பவர்கள் வெற்றி பெற்றால், பார்லிமென்டுக்குச் சென்று பதவி ஏற்பதில்லை என்றும், அயர்லாந்திலேயே தங்கித் தனிக் குடியரசை அமைத்து உழைப்பர் என்றும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மக்களும் அத்திட்டத்தில் மோகங்கொண்டுவிட்டனர்.

பொதுத் தேர்தலில் உழைத்த பல வாலிப வீரர்களும் வேறு பல காரணங்களுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டும் உள்நாட்டுக் கலகத்தில் சுடப்பட்டும் இறந்துபோயினர். அவர்களுடைய சுயநலமற்ற உழைப்பினாலேயே அயர்லாந்து முன்னேறிச்செல்லமுடிந்தது. தேர்தலில் குடியரசுக்காக நின்ற லின்பீனர்களுக்குப் பெரியதோர் வெற்றி கிடைத்தது. 'பிரிட்டிஷ் ஆட்சி வேண்டாம், ஐரிஷ் குடியரசையே ஆதரிப்போம்' என்று கூறியவர்களுக்கே வெற்றி கிடைத்தது. மொத்தம் நூற்றைந்து ஸ்தானங்களில் எழுபத்திமூன்றுக்குக் குடியரசுக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தப் பிரதிநிதிகள் 1919ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி டப்ளின் நகரில்கூடி அயர்லாந்து குடியரசாதிவிட்டது, என்று உலகறியப் பிரகடனப்படுத்தினார்கள். அத்துடன் புதிய தேசிய அரசாங்கத்தையும் அமைத்துக்கொண்டார்கள். இவ்வாறு கூடிய எழுபத்திமூவர் கூட்டமே டெயில் ஜரான் என்ற ஐரிஷ் பார்லிமென்டு. இதற்கும் ஆங்கில அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை. டெயில் ஜரான் அயர்லாந்தை ஆள்வதற்குத் தனக்கே உரிமை உண்டென்று கூறிவிட்டது. இந்த நேரத்தில் தான்பிரீனும் தோழர்களும் தங்கள் நகருக்கு அருகில் இருந்த லோலோஹெட்பக் என்னுமிடத்தில் தங்களுக்குத் தெரிந்த முறையில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அது ஆங்கில அதிகாரத்தைக் கிள்ளி எறிந்துவிடத் தக்கதாயிருந்ததது. நாட்டில் வாலிபர்கள் தயாராயிருக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டால் பின் காரியங்களை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். கட்டாய ராணுவச்சட்டம் அமுலுக்குவாந்ததால் பல தொண்டார்கள் முதலிலேயே விலகி வெறும் அரசியல்வாதிகளாகப் போய்விட்டனர். இந்நிலையில் தீவிரமான சில காரியங்களைச் செய்து தேசத்தை எழுப்பிவிட வேண்டுமென்று தான்பிரீன் கூட்டத்தார் எண்ணினார்கள். அதனால்தான் ஸோலோஹெட்பக்கில் தங்கள் முதற்போரைத் தொடங்கினார்கள்.