தான்பிரீன் தொடரும் பயணம்/சிப்பாய்களின் சிறந்த உதவி

விக்கிமூலம் இலிருந்து

7
சிப்பாய்களின் சிறந்த உதவி


டாபின் அம்மாளுடைய வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டு, தான்பிரீன் முதலானவர்கள் வேறிரண்டு நண்பர்களுடைய வீடுகளுக்குச் சென்றனர். அங்கிருந்து டுப்பிரிட் என்னும் இடத்திலிருந்த ரியான் என்பவருடைய வீட்டுக்குச் செல்ல நினைத்திருந்தார்கள். அங்கு வரப்போவதாகத் தகவல்களும் சொல்லி விட்டிருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் அங்கு செல்லாமல், கடைசி நோத்தில் மிக்செல்ஸ் நகரத்திற்குப் புறப்பட்டுவிட்டனர். அவர்கள் ரியான் வீட்டுக்குச் செல்வதற்காகத் தீர்மானித்திருந்த நேரத்தில், அங்கு எட்டுப் போலிஸார் அந்த வீட்டைச் சூழ்ந்து ரியானையும் கைது செய்துகொண்டு போயினார்.

மிக்செல்ஸ் நகருக்குப் போகும் பொழுது அவர்கள் இடையில் ஒபிரியன் என்பருடைய வீட்டில் விருந்தினராக இருந்தனர். அவர்கள் மேல் மாடியிலே படுத்திருந்தனர். அப்பொழுது திடீரேன்று பல பீலர்கள் (ஐரிஷ் போலிஸார்) கீழே வீட்டுக்குள் நுழைந்து உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். தொண்டர்கள் சண்டை நெருங்கி விட்டது என்று எண்ணித் துப்பாக்கிகளைக் கையிலெடுத்துக் கொண்டனர். மாடிப்படிகளிலே பீலர்கள் காலெடுத்து வைக்கவேண்டியதுதான் தாமதம், அவர்களை எமலோகத்திற்கு அனுப்பிவிடவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பீலர்கள் மாடிப் படிகளில் ஏறவுமில்லை, எமலோகத்திற்குப் போகத் தயாராகவும் இல்லை. பின்னால் விசாரித்ததில், நாய்களின் அனுமதிச்சீட்டுக்கு (லைசன்ஸுக்கு)ப் பணம் செலுத்துவது பற்றி விசாரிக்கத் தான் அவர்கள் வந்ததாகத் தெரிந்தது!

பிறகு தொண்டர்கள் மிச்செல்ஸ், கிழக்கு லிமெரிக் நகர்களைத் தாண்டி லாகெல்லி நகரையடைந்தனர். அங்கு ஒருவாரம் தங்கியிருந்தனர்.

அங்கே அவர்கள் இருந்த நிலைமையைக் கண்டால், கல்லும் கசிந்துருகும். அவர்களை ஒத்த பிற வாலிபர்கள், தங்கள் அறிவையும் ஆற்றலையும் விற்று, அந்நிய அரசாங்கத்தின் கீழே வேலைபார்த்தும், வேறுபல தொழில்கள் செய்தும் ஏராளமாகச்சம்பாதித்துப் பெற்றோர், பெண்சாதி, பிள்ளை குட்டிகளுடன் இன்ப வாழ்க்கை நடத்துகையில் அவர்கள், துப்பாக்கியும் தேச பக்தியுமே துணையாய்க் கொண்டு, காடும் மலையுமாக அலைந்து கொண்டிருந்தனர். உணவுக்கும், உடைக்கும், உட்காரும் இடத்திற்கும் அவர்கள் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. கையில் ஒருசதமேனும் காசு இல்லை. சொந்த நாட்டில் பகலில் வெளியே தலைநீட்ட வழியில்லை. திருடர்களைப் போல் நள்ளிரவில் நடக்கவேண்டியிருந்தது. இரண்டு இரவுகளை ஒரே ஊரில் கழிக்க வழியில்லை. குட்டிப்போட்ட பூனைப்போல், ஊரூராய்த் திரியும்படி நேர்ந்தது. இதைப்பார்க்கிலும் இன்னும் எத்தனைகஷ்டங்களையும் அவர்கள் தாய்த்திரு நாட்டிற்காக ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்தனர். ஆயினும் ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் நெஞ்சு பொறுக்கவில்லை. நாட்டில் அவர்களை ஆதரிப்பவர் எவருமில்லை. அவர்களைப் பற்றி மலைமலையான கண்டனங்கள் குவிந்தனவேயன்றி, அணுவளவு ஆதரவுமில்லை. ஸின்பீனர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பழைய நண்பர்களில் பலரும் அவர்களைக் கைவிட்டுவிட்டனர். அவர்களைக் கண்டவுடன் நண்பர்கள் நடுங்கி விலகினார்கள். எனினும் ஒரு விஷயத்தை மட்டும் தொண்டர்கள் மறக்காது ஆறுதலடைந்து வந்தனர். காலம்மாறும்; இன்று நாம் செய்ததைக் கண்டிப்பவர்கள் நாளை உண்மையை அறிந்து நம்மைப் போற்றிப் பின்பற்றுவார்கள். 1863இல் கலகம் செய்தவர்களையும், 1867இல் புரட்சி செய்தவர்களையும், 1916இல் சுதந்திரப்போர் தொடுத்தவர்களையும் அக்காலத்து மக்கள் கண்டித்தார்கள்; பின்னால் அவர்களே ஆதரித்தார்கள். குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் உறுதி கொண்டுள்ளார்கள். ஆனால் அதற்காக வேண்டிய காரியத்தை ஆரம்பித்தால் கண்டிக்கிறார்கள். பின்னால் எல்லோரும் நம்முடன் சேருவார்கள். அப்பொழுது நமது கொள்கை வெல்லக் காண்போம் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உற்ற துணையாயிருந்தது.

சில இடங்களிலே அவர்களுக்கு ஓர் இரவு தங்ககுவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை. மிகக் குளிரான இரவுகளில், யார் வந்து ஒதுங்கினாலும் இடம் கொடுக்கக்கூடியவர்கள், அவர்களைத் தாட்சண்யமின்றி வெளியேற்றி விட்டனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு குடியானவன் வீட்டில் தங்கியிருந்தார்கள். வெளியே யாரோ கதவைத்தட்டும் ஓசை கேட்டது. குடியானவன், யாரது? என்று கேட்டான். போலிஸ் என்று பதில் வந்தது. அவ்வார்த்தையைக் கேட்டவுடன் உள்ளேயிருந்த திருக் கூட்டத்தார் எழுந்து துப்பாக்கிகளைத் துக்கிக் கொண்டு தயாராய்நின்றனர். கதவு திறக்ககப்பட்டது. அடுத்த வீட்டுக்காரன் ஒருவனே ஏதோகாரியமாக அங்கு வந்திருந்தான். அவன் விளையாட்டாகவே போலிஸ் என்று சொன்னானாம்! அவன் போனவுடன் தொண்டர்களுடைய கைகளில் துப்பாக்கிகளைக் கண்ட குடியானவன், 'துப்பாக்கி ஆசாமிகளுக்கு இங்கு இடமில்லை, வெளியேறுங்கள்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. வானமே கூரையாகப் பூமியைப் பாயாகக் கொண்டு, அவர்கள் வெளியேறினர். வழக்கம்போல் வழிநடையை மேற்கொண்டனர். கிழிந்த ஆடைகளும், கேடுற்ற பூட்ஸ்களும், அவர்களைக் குளிரில் வாட்டி வருத்தின. அவர்கள் எதிர்பார்த்துச் சென்ற நண்பர்கவில் பலர் தங்க மாட்டுத்தொழுவங்களிலே கூடத் தங்க இடம் கொடுக்கவில்லை. துன்பம், துணுக்கம், பசி, கால்வலி, விழிப்பு இவற்றைத் தவிர வேறொன்றும் அவர்களுக்குத் துணை நிற்கவில்லை. எவ்வளவு சுற்றியும் அவர்கள் ஸோலோஹெட்பக்கிலிருந்து பத்துமைல் தூரத்திற்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தனர்.

டோனோ என்னும் கிராமத்தில் அவர்கள் தங்கியிருக்கையில் அவர்களுடைய பழைய நண்பன் ஸீமஸ் ராபின்ஸன் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். ராபின்ஸன் வெடிமருந்து வேட்டையில் அவர்களுடன் இருந்தவன். பல வருஷங்கள் பிரிந்த நண்பனை மீண்டும் கண்டபோது யாவரும் ஆனந்தம் கொண்டனர். பாடி ரியான் என்னும் தேசபக்தரான வர்த்தகர் ஒருவர் அவர்களுக்கு மிகுந்த உதவி செய்தார். அக்காலத்தில் அவர்கள் மக்களைத் தங்கள் வசப்படுத்தித் தேசத்தில் பெரும் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் திட்டங்கள் போடுவதில் பொழுதைப் போக்கிவந்தனர். அவர்களுடைய தீவிரமான திட்டம் எதையும் டப்ளின் தலைநகரில் இருந்த தலைமைக் காரியாலயத்தார் ஏற்றுக்கொள்ளவழியில்லை. ஆயினும் தலைநகரில் இருந்த நண்பர்கள் சிலர் தான், பிரீன் கூட்டத்தாரை அமெரிக்காவுக்கு ரகசியமாக அனுப்பிவிட வேண்டும் என்று ஒரு கப்பலைத் தீர்மானித்து வைத்து அவர்களைத் தயாராய் இருக்கும்படி தகவலும் சொல்லி விட்டனர். தான்பிரீன் அதைக் கேட்டுக் கோபமடைந்தான். தன்னையும் நண்பர்களையும் தேசப்பிரஷ்டம் செய்வதற்கே இந்தச்சதி செய்யப்பட்டதாக எண்ணி, மனம் வாடினான். தலைமை நிலையத்தார்.அவர்களுக்கு உதவி செய்து போரை மேலும் நடத்த வேண்டியிருக்க அதை விட்டொழித்து, அவர்களையும் நாடு கடத்தத்துணிந்து விட்டனரே என்று தொண்டர்கள் மனக் கசப்படைந்தனர். எது நேரினும் அயர்லாந்தை விட்டு வெளியேற முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டனர்.

டோனோவிலிருந்து 'அப்பர் சேர்ச்' வழியாக அவர்கள் நகருக்குச் சென்றனர். அங்கேதங்களுடைய யுத்த சபைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். தலைமை அதிகாரிகள் உத்தரவு கொடுக்காவிட்டாலும், தாங்களாகவே வேலையை ஆரம்பித்து விட முடிவுசெய்தனர். திப்பெரரியில் தங்கியிருந்த ராணுவத்தார் உடனே அந்த எல்லையை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்றும், இல்லாவிடில் அவர்களுடைய உயிர் அவர்களுக்குச் சொந்தமில்லை என்றும் ஓர் எச்சரிக்கை விளம்பரத்தைத் தயார் செய்தார்கள். அந்த விளம்பரம் தேசம் முழுவதும் ஒட்டப்பட்டது. பத்திரிகைகள் அந்த விளம்பரத்தை வெளியிட்டு ஏளனம் செய்து எழுதின. அந்த எச்சரிக்கை கானல் நீராகக்கருதப்பட்டது. ஆனால், அது உண்மையாகி விட்டதாகப் பிற்காலச்சரித்திரத்திலே காணலாம்.

சில நாட்களுக்குப் பிறகு தொண்டர்கள் தலைமை அதிகாரிகளுடைய உத்தரவை மீறித்தலைநகரான டப்ளினுக்கே சென்று விடவேண்டும் என்று துணிந்து புறப்பட்டனர். ராபின்ஸனும், டிரீஸியும் முன்னதாகவே டப்ளினில் இருந்தனர். அங்கு மிகுந்த எச்சரிகையுடன் நடமாட வேண்டியிருந்தது. ஏனெனில் போலிஸ் கெசட்டில் லொலோஹெட்பக் கொலைகளில் சம்பந்தப்பட்டவர் ஒவ்வொருவரைப் பற்றிய விவரமும், அங்க அடையாளங்கள் முதலியவையும் வாரந்தோறும் விளம்பரமாகி வந்தன. பிடிப்பவர்களுக்குப் பரிசும் கிடைக்கும்.

தான்பிரீன்தானும் விரைவாக டப்ளின் செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். அங்கு சென்றால்தான் பல கஷ்டங்களும் நீங்குமென்று கருதினான். டிம் ரியான் என்னும் தோழன் ஒரு மோட்டார்காருடன் உதவிக்கு வந்து சேர்ந்தான். டாம்மி என்பவன் காரை ஒட்டுவதற்கு முன்வந்தான். தான்பிரினும் ரியானும் காரின் பின் பக்கத்திலும், ஹோகனும் டாம்மியும் முன்பக்கத்திலும் அமர்ந்து கொண்டு, வடதிசைநோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் லிமெரிக் நகருக்குச் செல்லும் வரை ஒரு விசேஷமும் ஏற்படவுமில்லை.

லிமெரிக் நகர வீதியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மோட்டார் லாரிகளில் வந்து கொண்டிருந்தனர். அத்தனை பேர்களும் ஏதோ பெருங் கூட்டங்களைக் கைது செய்யப்போவதாகத் தோன்றியது. தான்பிரீன் கூட்டத்தாரைப் பிடிக்கவே ராணுவத்தார் லாரிகளில் சுற்றிக் கொண்டிருந்தனர். தொண்டர்கள் எங்கோ பக்கத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு அவர்களைப் பிடிப்பதற்காகவே ஏராளமான ஆயுதங்களையும், யந்திரத்துப்பக்கிகளையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர்.

தான்பிரீனும் பெரிய அபாயம் ஏற்படப்போவதாக எண்ணினான். ஒரு சிப்பாய் சிறிது சந்தேகம் கோண்டுவிட்டாலும், அவனுடைய கூட்டத்தாருக்கே ஆபத்துத்தான். சிப்பாய்களில் பணி அவர்களுடைய அங்க அடையாளங்களைப் பற்றி நன்றாகப் படித்து வைத்திருந்தனர். எப்படியாவது பதினாயிரம் பவுண்டு பரிசைப் பெறவேண்டும் என்பதும் பல சிப்பாய்களின் ஆசை. அத்துடன் மற்றக் குற்றவாளிகளைப் பார்க்கிலும், லோலோஹெட்பக் ஆசாமிகளையே பிடிக்கவேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம்.

எல்லாச் சிப்பாய்களும் தான்பிரீனுடைய காருக்குள் உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றனர். தான்பிரீனும் தோழர்களும் கலக்கமடைந்தால், காரியம் கெட்டுவிடும். அவ்விடத்தை விட்டுத் திரும்பிச் சென்றாலும், சிப்பாய்களுக்கு வேறு சந்தேகம்வேண்டியதில்லை. எனவே தொண்டர்கள் ஒரு பாவமும் அறியாதவர் போல் அமைதியாக இருந்து விட்டனர்.

இருபது லாரிகளைக் கடந்தாயிற்று. பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் அவர்கள் பட்டாளத்தாரை வியப்போடு பார்த்துக்கொண்டே சென்றனர். அவர்களுடைய பார்வை, அளவற்ற கிருபையுடன் எங்களை ஆண்டடக்கும் துரைமார்களே, எவ்வளவு அலங்காரமான உடைகளை அணிந்து செல்கிறீர்கள் என்று பரிகசிப்பது போல் தோன்றிற்று. எல்லா லாரிகளையும் தாண்டியாகி விட்டது. ஒரு சிப்பாய்கூட அவர்களைச்சந்தேகிக்கவில்லை. ஆனால், வீதியில் ஒரு மூலையிலே சென்றவுடன், அங்கு காவலுக்காக நிறுத்தப்பட்டிருந்த சிப்பாய் 'நிறுத்தங்கள் காரை' என்று ஒரு போடு போட்டான் கார் உடனே நிறுத் தப்பட்டது!

காருக்குள்ளே இருந்தவர்கள் நெருக்கடி ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார்கள். மற்ற சிப்பாய்கள் எல்லோரும் வேண்டுமென்றே தங்களை விட்டுவிட்டுப் பின்னால் தாங்கள் ஓடி விடாதபடி சூழ்ந்து கொள்ளவே சூழ்ச்சி செய்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். இருக்கும் நிலைமையில் என்ன செய்வது என்று யோசித்தனர்கள். தான்பிரின் துப்பக்கியை எடுத்து வெளிக்குத் தெரியாமல் மறைவாகப் பிடித்துக் கொண்டான். முதல் குண்டை யார் தலையில் செலுத்த வேண்டும் என்று குறிபார்த்துக் கொண்டான். அவ்வேளையில் ஓர் அதிகாரி அங்கு விரைந்து ஓடிவந்தார்.

'கனவான்களே, உங்களைத் தாமதப்படுத்தியதற்காக மன்னிக்க வேண்டும்' என்று அவர் கூறினார். மன்னிப்பு என்ற சொல்லைக் கேட்டவுடன், தான்பிரீன் திடுக்கிட்டுப் போனான். மறைவாகத்துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டான். அந்த அதிகாரி காவற் சிப்பாய்களின் தலைவர்.வீதியில் இரண்டு லாரிகள் உடைந்து கிடப்பதாயும், அவை குறுக்கே அடைத்துக் கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய் கார்செல்ல முடியாதென்றும், எல்லோரும் கீழே இறங்கி நடந்து செல்வது நல்லது என்றும் அவர் கூறினார்.

இதற்குள் தான்பிரீன் மனம் அமைதி பெற்று விட்டது. அவன் மரியாதையாக அதிகாரியைப் பார்த்து, ஐயா! மிக முக்கியமான வேலையின் நிமித்தம் நாங்கள் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. நீண்ட தூரம் காரில் வந்ததால் களைப்படைந்திருக்கிறோம். அத்துடன் என் காலில் வாதநோய். நான் எப்படி நடக்கமுடியும்? நீரே யோசித்துச் சொல்லும் என்று கூறினான். அதிகாரி இாக்கமைந்து நாலைந்து சிப்பாய்களை அழைத்து, துப்பாக்கிகளைக் கீழே வைத்துவிட்டுத் தான்பிரீனுடைய காரைத் தள்ளிக் கொண்டு போய் மறுபக்கத்தில் விடும்படியாக உத்தரவிட்டார். அவர்கள் அறுநூறு அடி தூரம் காரைத் தள்ளிக்கொண்டுபோய் விட்டனர்.

அந்தச் சிப்பாய்களுக்குத் தான்பிரீன் சொன்ன வந்தனங்களுக்கு அளவே யில்லை! சிப்பாய்களும் திரும்பத் திரும்ப 'சலாம்' செய்து விட்டு எங்கோ மறைந்திருப்பதாய்க் கேள்விப்பட்டதான் பிரீன் கூட்டத்தாரைக்கண்டு பிடிக்க மற்றச்சிப்பாய்களோடு சென்றுவிட்டனர்!

சிப்பாய்கள் விடைபெற்றுச் சென்ற மறுகணத்திலேயே தான்பிரீனுடைய கார் வேகமாய்ப் பறக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்ற பின்பு தொண்டர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு வயிறு வெடிக்கும்படி சிரித்தனர். அதுவரை உள்ளத்தில் கட்டுப்பட்டிருந்த சந்தோஷம் வெள்ளப் பெருக்கெடுத்தது போலிருந்தது.