வேங்கடம் முதல் குமரி வரை 2/திருக்கோவலூர் திருவிக்கிரமன்

விக்கிமூலம் இலிருந்து
4

திருக்கோவலூர் திருவிக்கிரமன்

தென் பெண்ணை ஆற்றங்கரையிலே ஒரு சிறிய கிராமம். அங்குள்ள வீதி ஒன்றில் சிறிய வீடு ஒன்று. நேரமோ இரவு. அந்தச் சமயத்தில் வீதி வழி வந்த பெரியார் ஒருவர் அந்த வீட்டுக்காரரிடம் இரவு தங்க இடம் கேட்கிறார். வீட்டுக்காரரோ பரம பாகவதர். ஆதலால் வீடு தேடி வந்த பெரியவரிடம் வீட்டில் இருந்த இடைகழியை (ரேழி என்று சொல்லுகிறோமே, அதைத்தான்) காட்டி, 'இதில் ஒருவர் படுத்துக் கொள்ளலாம். படுத்துக் கொள்ளுங்கள்' என்கிறார். அவரும் இசைந்து அங்கே படுத்துக் கொள்கிறார். கொஞ்ச நேரம் கழிந்ததும் மழை பெய்கிறது. இரண்டாவது ஆளாக ஒருவர் வருகிறார். அவரும் தங்க இடம் கேட்கிறார். 'ஓ! இந்த ரேழியிலே இருவர் இருக்கலாம், வாருங்கள்' என்று அவரையும் உள்ளே அழைத்துக் கொள்கிறார் முதலில் வந்தவர். இன்னும் கொஞ்ச நேரம் சென்றதும், மூன்றாவது ஆளாக ஒருவர் வருகிறார். அவருமே தங்க இடம் கேட்கிறார். 'சரிதான் இந்த ரேழியிலே ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், வாருங்கள், வாருங்கள்' என்று உபசரித்து அவரையும் சேர்த்துக் கொள் கிறார்கள். இப்படியே, ஒரு சிறிய இடைகழியிலே மூன்று பேர்கள் நின்று இரவைக் கழிக்கிறார்கள். நட்ட நடுநிசியில், இவர்களோடு இன்னொரு ஆளும் வந்து நின்று கொண்டு இட நெருக்கடியை உண்டு பண்ணுகிறார். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து கூடவே நிற்கும் ஆள் யார் என்று தெரியவில்லை. விளக்கு போட்டுப் பார்க்கவும் முடியவில்லை . முன் வந்த மூவரும் சிறந்த பக்தர்கள். ஆகவே, அவரவர்கள் எண்ணத்தில் எழுந்ததை, ஆளுக்கு பாட்டாக பாடுகிறார்கள். முதலில் வந்த பொய்கையாரும், இரண்டாவது வந்த பூதத்தாரும், ஞானச் சுடர் விளக்கை ஏற்றுகிறார்கள், தங்கள் தங்கள் பாட்டால். மூன்றாவது வந்த பேயரோ, நான்காவது ஆளாக வந்து நெருக்கும் நபர் யாரென்று கண்டுபிடித்து விடுகிறார். அதைச் சொல்கிறார்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன் புரி சங்கம் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று

என்ற அழகான பாட்டில். ஆம்! மூன்று பக்தர்கள் கூடிய இடத்தைவிட வந்து இருந்து கொள்ள வேறு நல்ல இடம் அந்தப் பரந்தாமனுக்குக் கிடைக்கவா போகிறது? இப்படிப் பெருமானை நெருக்கத்திலே கண்ட மூவர் வேறு யாருமில்லை. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்பவர்கள் தான். இவர்களையே தமிழ் உலகம் முதல் ஆழ்வார்கள் என்று போற்றி வழிபடுகிறது. இந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் திருக்கோவலூர் என்ற தலம். இந்தக் கோவலூரை உள்ளடக்கிய அந்த நாட்டையே,

பாவரும் தமிழால் பேர்பெறு
பனுவல் பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக்கு
ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு

என்று பாரதம் பாடிய வில்லிபுத்தூரார் குமாரர் வரந்தருவார் புகழ்ந்து பாடுகிறார்.

இந்தத் திருக்கோவலூர், பெண்ணையாற்றின் தென் கரையில் இருக்கிறது. விழுப்புரம் திருவண்ணாமலை ரயில் வழியில் விழுப்புரத்துக்கு மேற்கே இருபத்தைந்து மைல் தொலைவில் இருக்கிறது. ரயில் வழியாகவும், இல்லை ரோடு வழியாகவும் போகலாம். காஞ்சியைப் போல் இந்த ஊரும் இரண்டு பிரிவாக இருக்கிறது மேலூர், கீழூர் என்று. மேலூரில் கோயில் கொண்டிருப்பவர் திருவிக்கிரமன் என்னும் மகாவிஷ்ணு. கீழூரில் இருப்பவர் வீரட்டேசுரர் என்னும் சிவபெருமான். ஆம் அன்று கச்சியிலே முந்திக் கொண்டு அதிக இடத்தை வளைத்துக்கொண்டாரே அந்த ஏகம்பன். அதற்கு எதிர்ப்புக் காட்டுவதுபோல் பெருமாள் இங்கு முந்திக் கொண்டு, அதிக இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்; பெரிய கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்; இதையெல்லாம் விட அந்தச் சிவனை ஆற்றங்கரைப் பக்கத்துக்கே ஒதுக்கி இருக்கிறார். ஊரிலே பெரிய உத்சவமெல்லாம் பெருமாளுக்குத்தான். ஆதலால் நாமும் முதலிலே பெருமாளையே தரிசித்துவிடலாம்.

இந்தப் பெருமாளின் சந்நிதி, வீதியின் கீழ்க் கோடியில், ஒரு பெரிய கோபுரம் பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. ஆனால் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சின்னக் கோபுரம் தான். பெரிய கோபுரத்தை எட்டியிருந்து பார்த்து விட்டே, கோயில் வாசலுக்கு வந்து விடலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் மூலஸ்தானம். அங்கேதான் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன், நல்ல நெடிய திருவுருவம். 'வியந்தவர் வெருக்கொள விசும்பின் 'ஓங்கிய' பெருமாள் அல்லவா? அதனால் விண்ணுற "நிமிர்ந்தே நிற்கிறார். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். முகத்திலே நல்ல வசீகரம் என்றாலும், தூக்கிய திருவடி அவ்வளவு இயற்கையாக இல்லை . திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள். இந்த திருவிக்கிரமனை வணங்கிய பின் கோயிலைச் சுற்றலாம்.

கோயிலின் முதல் பிராகாரத்தின் முகப்பிலே துர்க்காம்பாள். விக்கிரமன் ஆணையின் பேரில், கோவிலுக்கு அவள் காவல் நிற்பதாகக் கூறுவர். துர்க்கை சிலை அநேகமாக விஷ்ணு கோயில்களிலே காண்பது இல்லை. இந்தப் பிராகாரத்திலேயே லக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிவராஹன், லக்ஷ்மி நரசிம்மன் மூவருக்கும் தனித்தனி சந்நிதி. இன்னும் ராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகளின் சந்நிதிகளும் தனித் தனியே இருக்கின்றன. இரண்டாவது பிராகாரம் கல்யாண மண்டபம் எல்லாம் கடந்து சென்றால் புஷ்ப வல்லித் தாயாரைக் கண்டு சேவிக்கலாம். கோயில் பிரும்மாண்டமான கோயில், கட்டட நிர்மாணத்தைக் கவனித்தால் நாயக்க மன்னர்களே கோயிலின் பெரும் பகுதியைக் கட்டியிருக்க வேண்டும். அதற்கேற்றாற் போல் நாயக்க மன்னர்கள் சிலையும் அங்கே நிறைய இருக்கின்றன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாஸனம் செய்திருக்கிறார். 'தீங்கரும்பும் கண் வளரும், கழனி சூழ்ந்த திருக்கோவலூர் அதனுள் அடியவர்களுக்கு ஆரமுதம் ஆனான் தன்னைக் கண்டேன் யானே' என்று பெருமிதத்தோடு பாடுகிறார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.

இவ்வளவு தூரம் வந்த நாம், இன்னும் கொஞ்சம் காலை எட்டிப்போட்டு மேற்கே பத்துமைல் போய் இதே பெண்ணையாற்றங்கரையிலே உலகளந்த அலுப்புத் தீரக் காலை நீட்டி நிமிர்ந்து படுத்து கிடக்கும் திருவரங்கத் தானையுமே பார்த்து விடலாம். 'எல்லோரும் தொழ நின்ற திருவரங்கம்' அந்த பொன்னியாற்றிலே உள்ள தீவிலே இருக்கிறது என்றுதானே அறிவோம். இல்லை, இந்தப் பெண்ணையாற்றங் கரையிலுமே ஒரு திருவரங்கம். உண்மையில் இந்தக் கிராமமே, ரெவின்யூ கணக்குகளில் திருவரங்கம் என்று பதிவாகி இருக்கிறது. இங்குள்ள அரங்கநாதனே தமிழ்நாட்டில் உள்ள சயனத் திருக் கோலங்களில் அளவில் பெரியவர். அத்துடன் ஒரு சிறப்பும் கூட, சீதேவியின் மடியில் தலை சாய்த்துப் பூதேவி அடி வருடப் பள்ளிக்கொள்கிறார். வலக்கையைத் தலைக் கணைத்து, இடக்கையை உயர்த்தி, பிரம்மாவுக்கு உப தேசிக்கின்ற நிலை. சுதையில் உருவானவரே என்றாலும், தைலக்காப்பு எல்லாம் இல்லாமல் அழகாக இருக்கிறார். உலகளந்தார் நீண்டு வளர்ந்தவர் என்றால் இவர் நீட்டிப் படுக்க இருபத்து நான்கு அடி நீளம் உள்ள படுக்கை வேண்டியிருக்கிறது. அத்தனை பெரிய வடிவத்தார் அவர்.

இந்தத் திருவரங்கம் பெரிய கோயில் என்றாலும், கோயிலின் முன் முகப்பும் பல பாகங்களும் சிதைந்தே கிடக்கின்றன. காவிரித் திருநதியிலே துயிலும் கருணைமா முகிலுக்கு அடித்த அதிர்ஷ்டம் இவர் பங்கில் இல்லை . இங்கும் தாயார் சந்நிதி உண்டு. ராமர், ஆண்டாள் எல்லாம் நல்ல அழகிய வடிவங்கள். இத்தனை அழகிய ஆண்டாளை வேறு கோயில்களில் நான் காணவில்லை. ஆனால் அவளோ அங்கு, கேட்பாரற்று நிற்கிறாள். ஆண்டாளை வணங்கியபின், அங்கு நிற்கவே தோன்றாது நமக்கு. தமிழ் நாட்டில் இவளைப்போல் எத்தனை சிற்ப வடிவங்களோ? இன்னும் பழுதுற்று நிற்கும் கோயில்கள்தான் எத்தனை எத்தனையோ என்ற நம் சிந்தை அலையும். ஆதலால் திரும்பவும் திருக் கோவலூருக்கே வந்து, அங்கு பார்க்காமல் விட்டுப்போன வீரட்டேசுவரரைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி விடலாம்.

திருக்கோவலூர் கீழூரில், ஆற்றங்கரைப் பக்கம் உள்ள கோயிலில் மேற்கே பார்த்து நின்று கொண்டிருக்கிறார். பிறப்பே இல்லாத சிவனுடைய மூர்த்தங்கள் அனந்தம். அவற்றுள் அறுபத்து நான்கை வகைப்படுத்தி அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் என்று சிவ பராக்கிரமம் கூறும். அந்த மூர்த்தங்களில் சில சாந்த நிலை, சில ஆடும் தாண்டவ நிலை, சில அனுக்கிரகிக்கும் நிலை, சில சம்ஹார நிலை, சம்ஹார மூர்த்தங்கள் எட்டு. அந்த மூர்த்தங்களில் சிவனை வழிபடும் தலங்களையே அட்ட வீரட்டம் என்று சொல்கிறோம். அந்தகாசுரனைச் சம்ஹரித்த தலமே திருக்கோவலூர். இங்குள்ள மூர்த்தியை அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி என்று அழைக்கிறார்கள். மூலவர் லிங்கத் திருவுருவில்தான் இருக்கிறார் மேற்கு நோக்கிய சந்நிதியில், அந்தக் கோயிலுக்குள்ளேயே செப்புச் சிலை வடிவில் அந்தகாசுர சம்ஹாரரும் உருவாகியிருக்கிறார். அந்தகாசுரனைக் காலின் கீழ் போட்டு மிதித்துக்கொண்டு அவன் பேரில் சூலத்தைப் பாய்ச்சுகின்ற நிலையில் வடித்திருக்கிறான் சிற்பி, நல்ல சோழர் காலத்துச் செப்புப் படிமம். ஓங்கியும், தாழ்ந்தும் சூலம் ஏந்தும் கைகள். அதை ஓர் உயிர் ஓவியமாக ஆக்கிவிடுகிறது. இந்தக் கோயில் சமீப காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு நல்ல அழகாக வைக்கப்பட்டிருக்கிறது. அம்மையின் பெயர் சிவானந்த வல்லி. அவளது கோயில், வீரட்டேசுரர் கோயிலுக்கு இடப்புறம் தனித்ததொரு கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது. அம்மையின் வடிவம் அழகானது. இத் தலத்துக்கு ஞான சம்பந்தரும் அப்பரும் வந்திருக்கிறார்கள். இருவருமே இந்த வீரட்டானரைப் பாடியிருக்கிறார்கள்.

தலைசுமந்து இருகை நாற்றி
தரணிக்கே பொறையது ஆகி
நிலையிலா நெஞ்சம் தன்னுள்
நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத்து அறுக்க மாட்டேன்,
வேண்டிற்றேவேண்டி எய்த்தேன்
குலைகொள் மாங்கனிகள் சிந்தும்
கோவல் வீரட்டன் நீரே,

என்பது அப்பர் பாடிய தேவாரம். மேலூர் உலகளந்தாரைக் காணச் சென்றவர்கள், திரு அரங்கநாதரையும் தரிசித்துத் திரும்பியது போல், கோவல் வீரட்டனாரைக் காணச் செல்பவர்கள் பெண்ணையின் வடகரையில் உள்ள அறையணி நல்லூர், அறையணி நாதரையும் அவரது மனைவி அருள் நாயகியையும் கண்டு வழிபட்டுத் திரும்பலாம். திருக்கோவலூரிலிருந்து அறையணி நல்லூர் செல்ல ஆற்றைக் கடக்கும்போது ஆற்றின் நடுவிலே, பாறையிலே ஒரு சிறிய கோயிலைப் பார்க்கலாம். அதனை இடைச்சிக் குன்று என்பார்கள். பெண்ணையின் நீர்ப் பெருக்கமோ பிரசித்தி உடையது. 'வெண்ணெய் உருகுமுன் பெண்ணை பெருகும்' என்பார்கள். எவ்வளவோ காலங்களுக்கு முன் இடைச்சி ஒருத்தி அறையணி நல்லூரிலிருந்து கோவலூருக்குச் செல்ல ஆற்றைக் கடந்திருக்கிறாள். அக்கரையில் இறங்கும்போது தண்ணீரே இல்லாதிருந்த ஆற்றில், இக்கரை சேருமுன் பெருவெள்ளம் வந்திருக்கிறது. ஆற்றின் நடுவிலே இருந்த பாறைமீது ஏறி நின்று தப்பித்திருக்கிறாள். அவளே அப் பாறையில் ஒரு கோயில் கட்டி படிகளும் அமைத் திருக்கிறாள். அதனையே இடைச்சிக் குன்று என்று கூறுகிறார்கள் மக்கள். அங்கே கபிலர்பிரதிஷ்டை செய்த லிங்கத் திருஉரு இருப்பதாகச் சொல்வார்கள். ஏறிப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால் ஆற்றைக் கடக்கும் போது இக்குன்றைப் பாராமலும் இருக்க முடியாது.

அறையணி நல்லூரை, மக்கள் அரகண்ட நல்லூர் என்கிறார்கள். இங்குதான் திருக்கோவலூர் ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் இருக்கின்றன. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் வந்து பின்னும் தெற்கே சென்றால், ஒரு சிறிய குன்றின் மேல் பெரிய கோபுரத்தோடு கூடிய கோயில் ஒன்றிருக்கும். கோபுரம் தனித்துத் தென் வாயிலில் இருக்கிறது. அதற்கு ஒரு தொடர்பும் இல்லாமல் மேற்கே பார்த்த சந்நிதியில் அறையணிநாத ஈசுவரர் இருக்கிறார். அருள்நாயகியோ தனித்த சிறு கோயிலில் கிழக்கு நோக்கி நிற்கிறாள். கோயில் வாயிலில் வலம்புரி விநாயகர் சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டிருக்கிறார். விரசண்ட ரிஷி பூசித்த தலம் என்பார்கள். இவர்களையெல்லாம் வணங்கிவிட்டுத் திரும்பலாம். கோயிலுக்குக் கிழக்கிலும் தெற்கிலும் பாறையிலேயே ஒரு பெருங் குளம் இருக்கிறது. அக்குளக் கரையிலே பஞ்ச பாண்டவர் குகை ஒன்றும் உண்டு. அதில் ஐந்து அறைகளும், திரௌபதைக்கு என்று ஒரு சிற்றறையும், ஒரு சிறு சுனையும் இருக்கின்றன. ஏதோ ஜைன முனிவர்கள் தங்க அமைத்த குடைவரைச் சைத்தியமாக இருக்க வேண்டும். ஐந்தும் ஒன்றும் சேர்ந்து ஆறு அறைகள் இருப்பதனால், பஞ்ச பாண்டவர்களின் தொடர்பு ஏற்படுத்திப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. மாமல்லபுரத்தில் ஐவர் ரதம் என்று கூறுவது போல, இங்கும் இக்குகைகள் பஞ்சபாண்டவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இத் திருக்கோவலூர் ஏதோ சமயப் பிரசித்தி மட்டும் பெற்ற ஊரில்லை. நல்ல இலக்கியப் பிரசித்தியும் பெற்றுள்ள ஒரு பழைய நகரம், சங்க காலத்திலே மலையமான் நாடு மலாடு என்று புகழுடையதாக இருந்திருக்கிறது, வள்ளல் பாரி மகளிராம் அங்கவை சங்கவையை மணம் புரிந்த தெய்வீகன் இருந்து அரசாண்ட இடம். இவன் வழி வந்தவர்களே மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர் முதலியோர், இந்தத் தெய்வீகனோ மலையமான் திருமுடிக்காரியின் வழித் தோன்றல். இந்தத் திருமணத்தை முடிப்பதையே தம் கடமையாகக் கொண்டவர் பாரியின் நண்பர் புலவர் கபிலர். திருமணம் முடிந்த பின்னர் இத்திருக்கோவலூரிலேயே ஒரு பாறை மீது எரி வளர்த்து அதில் வீழ்ந்து முத்தி எய்தித்தம் ஆருயிர் நண்பர் பாரி சென்ற இடம் சேர்ந்தார் என்பது வரலாறு. இதைச் சொல்கிறது ஒரு கல்லிலே பொறித்த கவிதை.

வன்கரை பொருது வருபுனல் பெண்ணை தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத்து இயலும் முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதை செஞ்சொல் கபிலன்
மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலம் பெண்ணைமலையற்கு உதவி...
மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்
கனல்புகும் கபிலக் கல்.

என்பது கவிதை. இந்தக் கபிலக் கல்லுக்கும் வணக்கம் செலுத்திய பின்னர் நாம் திரும்பலாம், கோவலூரை விட்டு.