பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தினற்பொருட்டாற் கொல்லாது

45

மு. அருணாசலக் கவிராயர் அவர்களும், பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும், பிறரும் தாங்கள் பதிப்பித்த பதிப்புகளில் இவ்வுரையை அப்படியே பொழிப் புரையாக்கிப் பதிப்பித்திருக்கிறார்கள்.

மூலத்திற்கும் உரைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதைத் தயவுசெய்து அமைதியாக இருந்து எண்ணிப் பார்ப்பது நல்லது.

தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லாதிருந்தால் என்று மூலத்தில் இருக்கும்போது, பரிமேலழகரும் பிறரும் தின்பதற்காக உலக மக்கள் வாங்காதிருந்தால் என்று கருதும்படி உரை எழுதுவானேன் என்பது நமது ஐயப்பாடு.

குறளுக்கு உள்ள சரியான உரை இது:-தின்பதற்காக என்று உலக மக்கள் கொல்லுவதில்லையானால், விலை பெற்று ஊன் தருபவர் எவரும் இருக்கமாட்டார்கள்" என்பதே.

இவ்வுரை சரியானதே எனினும், கருத்தில் பெரும் பிழை காணப்படுகிறது. அதாவது, தின்பதற்காகக் கொல்லு கிற எவனும் வேறு எவனுக்கும் விலை கொடுக்க வேண்டியிராது. அவனே கொன்று தின்பான். கொன்று தின்பவனிடம் சும்மாவிருப்பவன் விலை கேட்கமுடியாது. கொடுப்பதற்கும் அவனிடம் ஊனும் இராது. ஆகவே இவ்வுரையும், குறளும் பெருங் குழப்பத்தை விளைவிக்கின்றன. ஆகவே ‘உண்மை எது?’ என ஆராய வேண்டியிருக்கிறது.

முதன் முதலில் ஏடு எழுதியவரோ, அச்சுக் கோர்த்த வரோ, பதிப்பித்தவரோ செய்த சிறு பிழையே இக் குழப்பத்திற்கெல்லாம் காரணமாயிற்று. ‘கொல்லா’ என்பது தவறு. ‘கொள்ளா’ என்பதே சரியான பாடம் ஆகும். இப்போது கொல்லா என்பதைக் கொள்ளா எனத் திருத்தி மூலத்தைப் படித்துப் பாருங்கள். இக் குழப்பங்கள் அனைத்தும் ஒழிந்து வெளிப்படையாகப் பொருளைக் காண்பீர்கள்.

தின்பதற்காக வாங்குபவர்கள் இல்லையானால் பொருளுக்காக கொன்று விற்பவர் எவரும் இரார் என்பதே