பக்கம்:மணி பல்லவம் 5.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

790

மணிபல்லவம்

பின்னிக் கொண்டிருந்த நாக நங்கையர்கள் சிலர் கூட்டமாக எதிர்ப்பக்கத்து வீதியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். இருந்தாற் போலிருந்து வீதியில் எல்லா விதமான இனிய இசைக் கருவிகளும் மிக நளினமாக ஒன்று சேர்ந்து கொண்டு இங்கிதமான குரலில் ஒலிப்பது போல அந்த நாக நங்கையர்களின் காலணிகளும், வளைகளும் ஒலித்தன. அந்தக் கூட்டத்திலேயே அழகு மிக்கவளும், ஏழு பிரிவாகத் தன் கூந்தலை வகிர்ந்து சடைவில்லை போல நாகணி அணிந்து அலங்கரித்துக் கொண்டிருந்தவளுமாகிய ஒருத்தியை ஏறிட்டு நோக்கிய மணிமார்பன் கண்களை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

“என்ன? இந்த ஏழாற்றுப் பிரிவில் உங்கள் கப்பல் கவிழ்ந்துவிடும்போல் இருக்கிறதே? நான் ஒருத்தி உங்கள் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருப்பதை மறந்துவிட வேண்டாம்” என்று கணவனின் தோளைத் தொட்டுத் திருப்பினாள் பதுமை. மணிமார்பன் தன் மனைவியின் பக்கமாகத் திரும்பிப் பார்த்து நாணத்தோடு நகைத்தான்.

“இல்லை பதுமை! அவள் தன் கூந்தலை ஏழு பகுப்பாகப் பிரித்துப் புனைந்து கோலம் செய்திருக்கிற அழகைச் சித்திரத்தில் அப்படியே தீட்ட முடியுமா என்றுதான் கூர்ந்து நோக்கினேன்!”

“அதுதான் முன்பே சொல்லியிருக்கிறேன், அன்பரே ! ஏழாற்றுப் பிரிவில் கப்பல் கவிழ்ந்து விட்டால் மீள்வது அருமை...”

என்று பதுமை மறுமொழி கூறியபோது தன் மனைவியின் சொற்களில் சிலேடையாக வந்து ‘ஏழாற்றுப் பிரிவு’ என்ற இரு பொருள் அழகை உணர்ந்து புரிந்து கொண்டு பெருமைப்பட்டான் மணிமார்பன். அவளை மேலும் வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. “நீ கூடச் சில சமயங்களில் அழகான வாக்கியங்களைப் பேசிவிடுகிறாய், பதுமை! பார்வையிலும் தோற்றத்திலும் பிறக்கும்போதே பிறந்த அலங்காரங்களாலும், பிறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/8&oldid=1231749" இலிருந்து மீள்விக்கப்பட்டது