பக்கம்:மணி பல்லவம் 5.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

799

ஞானத்தையும், சான்றாண்மையையும் பார்த்துப் பெருமைப்பட உங்களைப் பெற்றவள் இப்போது அருகில் இருக்க வேண்டும்’ என்று விசாகை பூம்பொழிலில் ஒருநாள் தன்னிடம் கூறியபோதும் இளங்குமரன் மனம் நிறையக் கண்களாய் மாறிக் கலங்கி அழுதிருக்கிறான். அறிவு முதிர்ந்த வழியில் நடந்து போகிறவனின் ஞான யாத்திரையில் கடைசியாகக் கால்கள் நிற்குமிடம் மனத்தின் அழுகையாகிய இந்தக் கருணைதான். எல்லார் மேலும் பரிவும் பாசமும் கொண்டு எல்லாருடைய துக்கத்திற்காகவும் மனத்தால் அழுது தவிக்கும் இந்தப் பரந்த தாய்த் தன்மையே மனிதனுக்கும் அவன் வணங்கும் பரம்பொருளுக்கும் நடுவிலிருப்பதாகச் சொல்லப்படும் தொலைவைக் குறைத்து இருவரையும் அருகருகே நெருங்கச் செய்கிறது. தன்னுடைய மனத்தின் எல்லையெல்லாம் நிறைந்திருந்த இந்தப் பரந்த கருணையை அழவைத்துப் புண்படுத்துவது போல் வளநாடுடையார் மணிநாகபுரத்து வீதியில் ஒவியனைத் தனியே பிரித்து அனுப்பியபோது இளங்குமரன் பெரிதும் புண்பட்டான். ஒவியனிடம் தனக்குள்ள கருணையை அப்போது வெளிப் படுத்துவதனால் குலபதியும் வளநாடுடையாரும் வருந்த நேரிடுமே என்று எண்ணி அழுது புலம்பும் மனத்தோடு சிரித்து மகிழும் முகத்தோடும் நின்றான் இளங்குமரன். அந்த நிலையில் குலபதி அவனிடம் தானே பேசலானான்.

“ஐயா! இந்த முத்துமாலை மேலேயிருந்து உங்கள் தோளில் விழுந்தபோது காண்பதற்கு அந்தக் காட்சி எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா? பொன்னிற் செய்து பின்பு மெருகிட்டுப் புனைந்தாற் போன்ற உங்கள் தோள்களிலேயே மறுபடி இதைக் காண வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது எனக்கு தயைக்கூர்ந்து இந்த மாலையை இப்படிக் கையில் வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாகக் கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும் நீங்கள்.”

அப்போது அந்த விநாடி வரை வீதியில் வளநாடுடையார் மணிமார்பனிடம் பேசிக் கொண்டிருப்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/17&oldid=1231759" இலிருந்து மீள்விக்கப்பட்டது