பக்கம்:மணி பல்லவம் 5.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

807


“நவரசங்கள் உன்னுடைய கண்களிலிருந்துதான் பிறந்தன. உன் கண்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் என்னுடைய நினைவிலிருந்து நவரசங்களும் மறைந்து விட்டன. அலங்காரங்கள் எல்லாம் உன்னுடைய பேச்சிலிருந்துதான் பிறந்தன. உன் பேச்சைக் கேட்க முடியாத தொலைவுக்கு நான் வந்துவிட்ட பின் அலங்காரங்களை மறந்து போய்விட்டேன். தாளங்களுக்கும் அவற்றையுடைய வாத்தியங்களுக்கும் உன்னுடைய நடையிலிருந்துதான் இனிமைகள் பிறந்தன. உன் கால்களில் ஐம்பொன் மெட்டி ஒலிக்கும்போது என் நாவிலே கவிதையும் பிறந்து ஒலித்தது. உன்னுடைய நடையைக் காணமுடியாத தொலைவுக்கு நான் வந்து விட்ட பின் அவையும் எனக்கு நினைவில்லை. உன்னை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகருவதுபோல மந்தமாகி ஏதோ நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

இந்த வாக்கியங்களைப் படித்ததும் இளங்குமரனுக்குக் காரணம் புரியாத வேதனை ஒன்று பிறந்தது. இந்த வாக்கியங்கள் தோன்றக் காரணமாயிருந்த காதலர்களாக அந்த ஓவியத்தில் இருப்பவர்களை நினைத்துப் பார்த்தான் அவன். அந்தக் காதலர்களை அப்படியே அப்போதே உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக்கொண்டு வணங்க வேண்டும் போலப் புனிதமான உணர்ச்சி யடைந்தான் அவன். ஏடுகளை முடிந்து வைத்துவிட்டுக் கடைசியாக மறுபடியும் அந்த ஓவியத்தைப் பார்த்தபோது அதில் தலை குனிந்து நாணி நின்ற நங்கையின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே தன்னை நோக்கிப் பெருகி வருவதுபோல் அவனுக்குத் தெரிந்தது. இளங்குமரனுக்கு அருகில் வளநாடுடையாரும் நின்று அந்த ஓவியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவில், “ஐயா! இந்தக் குடும்பத்தின் புகழ் பெற்ற பல தலைமுறைகளுக்குப் பின்பு துன்ப மயமானதொரு தலைமுறை இந்தப் பெண்ணின் காதலிலிருந்து தொடங்குகிறது. இவளுடைய அழகு இந்தக் குடும்பத்தின் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/25&oldid=1231766" இலிருந்து மீள்விக்கப்பட்டது