பக்கம்:மணி பல்லவம் 5.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

819

கொடியவன். அன்றிரவு அனுப்பிய பணியாட்கள் செய்ய வந்த பணி என்ன தெரியுமா? சம்பாபதி வனத்துப் புதரில் வைத்து உன்னையும் என்னையும் கொன்றுவிட முயன்ற பணிதான். தெய்வ சித்தத்தால் அன்று நீயும் நானும் உயிர் தப்பிவிட்டோம். அதன் பின்புதான் நான் அதிகமான விழிப்பையும் கவனத்தையும் அடைந்தேன். என் மனத்தில் இடைவிடாமல் சிந்தித்து இப்படி மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டேன்.

வளநாடுடையாரின் இல்லத்திலிருந்து வெளியேறி நானே என்னுடைய தவச்சாலைக்குத் தீ வைத்துவிட்டு நகரில் நான் இறந்து போனதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பிய பின் இந்தத் தீவுக்குப் புறப்பட்டுவிடலாம் என்றும் அப்படி புறப்படுமுன் நீலநாகரிடமோ வள நாடுடையாரிடமோ மட்டும் உண்மையைக் கூறிக் காலம் வருகிறவரை அந்த உண்மையை அவர்கள் வெளியிடக் கூடாதென்று வாக்கும் வாங்கிக் கொண்டு விடவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். இந்த எண்ணத்தோடு நான் வளநாடுடையாரின் வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இரகசியமாக வெளியேறிச் சக்கரவாளத்துக்குள் நுழைந்தபோது வன்னி மன்றத்திற்குப் போகிற வழியில் ஒரு புதரருகே நமக்கு ஆகாதவர்களின் பேச்சுக் குரல் கேட்டு நின்று கவனித்தேன். முதல் நாள் இரவு சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் நம்மைக் கொன்று விட முயன்றவர்களே இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய மறுநாளன்று இருள் மயங்கும் மாலையில் என் தவச்சாலைக்குத் தீ வைத்துவிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது, எதைச் செய்வதற்காக நான் போலியாய்த் திட்டமிட்டுக் கொண்டிருந்தேனோ அதை மெய்யாகவே செய்வதற்குத் திட்டமிடுகிறவர்களைப் பற்றி அறிந்தபின் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்கள் வைக்கிற நெருப்பில் சிக்கி அழிந்தது போலத் தோன்றும் படி பொய் செய்துவிட்டு நான் யாரும் அறியாமல் தப்பி வளநாடுடையாரைச் சந்தித்து அவரிடம் கூறவேண்டிய தைக் கூறியபின் இரவோடிரவாகப் புறப்பட்டு இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/37&oldid=1206676" இலிருந்து மீள்விக்கப்பட்டது