பக்கம்:மணி பல்லவம் 5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

825

கொடுத்தருளுங்கள்” என்று அருட்செல்வ முனிவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கியபடியே மன்றாடினான் இளங்குமரன். அவனுடைய பவித்திரமான கண்களிலிருந்து பெருகிய கருணை நீர்ப் பெருக்கில் அவருடைய தளர்ந்த பாதங்கள் நனைந்தன. அவர் அவனை நோக்கிக் கேட்டார்:

“பல நாட்களாகத் தீர்க்க வேண்டிய பழி சுமந்து கிடக்கும் போது இந்த ஒரே ஒரு நாளை என்னிடமிருந்து பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”

“வாழ்க்கைத் துன்பங்களுக்கு வேறு விதமான மருந்து காணவேண்டுமென்ற தாகம் ஒரு நாளில் ஏதோ ஒரு விநாடியில்தான் புத்தருக்கு உண்டாகியிருக்க வேண்டும். அந்தப் புனித ஞாயிறு பிறந்த ஒளி நாளைக்குப் பரவ இருக்கிறது. நாளைக்குக் காலையில் நான் மணிபல்லவத்துக்கு வருவதாக விசாகையிடம் சொல்லியிருக்கிறேன். நாளைக்கு ஒருநாள் மட்டுமாவது என்னைக் கோபமும் கொதிப்பும் அடையவிடாமல் என் போக்கில் வாழ அனுமதி தந்தருளுங்கள். நாளைக்கு இரவில் இதே நிலா உச்சி வானத்தை அடைவதற்குள் நான் மறுபடி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். அதன் பின்பு என்னை எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் நீங்கள் நடத்திக் கொண்டு போகலாம். நாளைக்கு மறுநாள் பொழுது புலர்வதற்குள் என்னுடைய குடியின் வரலாறுகளெல்லாம் அடங்கிய இந்தச் சுவடிகளை நான் படித்து முடித்து விடுவேன். என் அறிவின் வலிமையால் இந்தச் சுவடிகளை நான் படிக்கும்போது என் மனம் யார் மேல் வைரமும் பகையையும் கொள்ள முடியுமோ, அவர்களைக்கூடப் பொறுத்து நிற்க நான் முயல்வேன்.”

“அப்படிப் பொறுத்து நிற்பதற்கு நீ முயலக்கூடாது குழந்தாய்! கோபத்தில் இரண்டு வகை இருக்கிறது. சீற்றம் என்பது ஒன்று. செற்றம் என்பதும் ஒன்று. சீற்றம் என்பது கோபம் விளைய வேண்டிய நிகழ்ச்சி நிகழ்ந்த உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/43&oldid=1231781" இலிருந்து மீள்விக்கப்பட்டது