பக்கம்:மணி பல்லவம் 5.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

836

மணிபல்லவம்

“இதுதான் வாழ்க்கை! நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும்போது நம்முடைய நினைவில் அந்த வினாடிவரை தோன்றாத ஏதேனும் ஒரு புதிய திசையைக் காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதன் அவசியத்தை யாராவது நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே வந்து சேருகிறார்கள்” என்று எண்ணியபடியே விசாகையிடமும் புத்ததத்தரிடமும் விடைபெற்றுக் கொண்டான் இளங்குமரன். அவர்களும் மகிழ்ச்சியோடு அவனுக்கு விடை கொடுத்தார்கள்.

“நானும் எங்கள் பெளத்த சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட விரைவில் இங்கிருந்து பூம்புகாருக்குத் திரும்பி விடுவோம், திரும்பும்போது நாங்கள் மணிநாக புரத்தில் இறங்கமாட்டோம். ஆயினும் நான் பூம்புகாரில் உங்களைச் சந்திப்பேன்” என்றாள் விசாகை.

புத்ததத்தர் இளங்குமரனை வாழ்த்தினார். ஓவியன் மணிமார்பன் அங்கிருந்தே பாண்டி நாட்டுக்குப் புறப்படுவதாகச் சொன்னான்.

“ஐயா! இங்கிருந்தே பாண்டிநாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய கொற்கைக்குப் பல கப்பல்கள் புறப்படுகின்றன. மணிபல்லவத் தீவையும், வைசாக பூர்ணிமை விழாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் இந்திர விழாவுக்கு வந்திருந்த நானும் என் மனைவியும் பூம்புகாரிலிருந்து உங்களோடு இங்கே புறப்பட்டு வந்தோம். விரும்பியபடி இந்தச் சிறிய ஞானத் தீவையும் இதில் நிகழும் அறிவுத் திருவிழாவையும் கண்டுகளித்தாயிற்று. இன்றோடு நாங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஏறக்குறைய இரண்டு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்து விட்டது. என்னுடைய வயது முதிர்ந்த பெற்றோர்கள் நானும் என் மனைவியும் வருகிற நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்தக் கொண்டிருப்பார்கள். கொற்கைத் துறைமுகப்பட்டினத்தில் இறங்கிப் போகிற போக்கில் அங்கு உள்ள சலாபத்தில் நடைபெறும் புகழ்பெற்ற முத்துக்குளிப்பு விழாவையும் பார்த்துவிட்டு நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/54&oldid=1231788" இலிருந்து மீள்விக்கப்பட்டது