வேங்கடம் முதல் குமரி வரை 3/027-033

விக்கிமூலம் இலிருந்து

27. பாண்டிக் கொடுமுடியார்

ராமனும் அனுமனும் ஒரு நாள் அயோத்திநகரில் இருந்து வெளியூர்களுக்குப் புறப்படுகிறார்கள். போகிற வழியில் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆற்றிலோ வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படகு இல்லாமல் ஆற்றைக் கடத்தல் இயலாது என்று படுகிறது ராமனுக்கு. ஆனால் அனுமனோ 'ராம, ராம்' என்று சொல்லிக்கொண்டு ஆற்றில் இறங்கி விடுகிறான். ஆற்றில் ஓடிய வெள்ளமும் அப்படியே ஸ்தம்பித்து நின்று, ஓர் ஆள் போகக் கூடிய அளவுக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. அனுமன் ஆற்றைக் கடக்கிறான் ராம நாமஸ்மரணை செய்து கொண்டே. ராமனும் அவன் பின்னாலேயே இறங்கி நடந்தே ஆற்றைக் கடக்கிறான் அன்று, இப்படி ஒரு கதை, கதை உண்மையாக நடந்திருக்க வேண்டும் என்பதில்லை. ராமனைவிடப் பெரியது ராமநாமம் என்று அழுத்தமாகச் சொல்வதற்குக் கற்பித்ததாகவே இருக்கலாம். ஆம்! ராம நாமம் ராமனைவிட எவ்வளவு சிறந்ததோ அவ்வளவு சிறந்தது, நமசிவாய என்ற பஞ்சாக்ஷர மந்திரம், அந்த மந்திரத்தின் ஆதிகர்த்தாவாகிய சிவபெருமானை விட. அதனால் தான் அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தைச் சைவப் பெருமக்கள் ஓதி ஓதி வழிபடுகிறார்கள்; இகபர

சௌபாக்கியத்தை எல்லாம் பெறுகிறார்கள், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது' அந்த நாதன் நாமம் நமச்சிவாயவே என்று ஞானசம்பந்தர் பாடினால், 'கல்தூணைப்பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நல்துணையாவது நமச்சிவாயவே' என்று பாடுகிறார் அப்பர். மணிவாசகரோ, ‘நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க' என்றே தம் திருவாசகத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் இவர்கள் எல்லோரையும் தூக்கி அடிக்கிறார் சுந்தரர் நமச்சிவாய பதிகம் பாடுவதிலே, 'இறைவா! உன்னை நான் மறந்தாலும் என் நா நமச்சிவாய என்று சொல்ல மறப்பதில்லையே. அதனால்தானே பிறவாதபேறு எல்லாம் எனக்கு எளிதில் சித்தியாகி விடுகிறது' என்று எக்களிப்போடு பேசுகிறார்.

மற்றுப் பற்று எனக்கு இன்றி
நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்,
பெற்றலும் பிறந்தேன் இனிப்
பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும்



சீர் கறை ஊரில் பாண்டிக் கொடிமுடி
நற்றவா! உன்னை நான் பறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே.

என்பது சுந்தரர் பாட்டு. நல்லூர்ப் பெருமணத்தில் சோதியில் கலக்கும்போது ஞானசம்பந்தர் நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறார். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் தம்மைக் கல்லில் கட்டிக் கடலில் எறிந்தபோது நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறார் திருநாவுக்கரசர். ஆனால் சுந்தரரோ, காவிரிக் கரையிலுள்ள பாண்டிக் கொடுமுடிக் கோயிலுக்கு வந்து இங்கு இறைவனை வணங்கித் தொழும்போதே நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறார். இப்படிச் சுந்தரர் வாக்கால் நமச்சிவாயத்தைக் கேட்கும் பேறு கிடைக்கிறது. நமக்குப் பாண்டிக் கொடுமுடியை நினைத்தால், அந்த கொடுமுடி என்ற தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கொடுமுடி திருச்சிக்கு மேற்கே 62 மைல் தூரத்தில் இருக்கிறது. இத்தலம் செல்லத் திருச்சி ஈரோடு லயனில் உள்ள கொடுமுடி ஸ்டேஷனில் இறங்கவேணும். சென்னையிலிருந்து கோவை செல்லும் ரயிலில் வந்து ஈரோட்டில் வண்டி மாற்றி 23 மைல் தென்கிழக்கே வந்தாலும் இத்தலம் வந்து சேரலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நாலு பர்லாங்கு தொலையில் கோயில் இருக்கிறது. கோயில் காவிரியின் மேல்கரையில் இருக்கிறது. தெற்கு நோக்கி வந்த காவிரி இங்குதான் கிழக்கு நோக்கித் திரும்புகிறது.

அகண்ட காவிரியாகவே இங்கு ஆறு இருக்கும், அதிலும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஆறு நிறைந்து போகும் போது மிக அழகாக இருக்கும். இப்படிக் காவிரி கரைபுரண்டு போவதைக் கண்டுதானே மாணிக்கவாசகர், 'அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டிவெள்ளமே!' என்று இறைவனைக் கூவி அழைத்திருக்கிறார். அகத்தியர் கமண்டலத்தில் கொண்டுவந்த கங்கையை இங்குள்ள விநாயகர் காக்கை உருவில் வந்து கவிழ்த்திருக்கிறார். அதனால் காவிரி என்ற பெயரே இந்நதிக்கு வந்தது என்பது வரலாறு. இன்னும் இக்காவிரியின் நடுவிலே உள்ள பாறையை அகத்தியர் மலை என வழங்குகின்றனர் மக்கள், காகம் கவிழ்த்த விநாயகர், காவிரி கண்ட விநாயகர் என்ற பெயரில் கோயில் பிரகாரத்திலேயே இருக்கிறார். கோயிலுள் செல்லும்போது அவரைத் தரிசித்துக் கொள்ளலாம்.

இத்தலத்தில் மலை ஒன்றும் இல்லையே, இத்தலத்துக்கு எப்படிக் கொடுமுடி என்று பெயர் வந்தது என்று அறிய விரும்புவோம். அதற்கும் அந்தப் பழைய கதையை ஒரு புதிய மெருகுடனே, தலவரலாறு கொடுக்கும். தேவலோகத்திலே ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் ஒரு பலப்பரீக்ஷை. சேடன் மகாமேருவைப் பற்றிக் கொள்ள வாயு தன் பலம் கொண்ட மட்டும் வீசி அதைப் பறிக்கப் பார்க்கிறான். முழு மலையும் பெயரவில்லை என்றாலும் மூன்று சிறு துண்டுகள் பெயர்ந்து விழுந்தது. அவையே காளத்தி, திருச்சி, திரிகோணமலை என்ற குன்றுகள் என்று முன்னமேயே தெரிந்திருக்கிறோம்.

வாயுவின் வேகத்தில், ஆதிசேடன் தலையில் உள்ள ஐந்து மணிகள் வேறே சிதறியிருக்கின்றன. அவைகளில் சிவப்புமணி அண்ணாமலையிலும், மரகதம் ஈங்கோய் மலையிலும், மாணிக்கம் வாட்போக்கியிலும், நீலம் பொதிகையிலும், வைரமணி இத்தலத்திலும் விழுந்திருக் கின்றன. வைரம் மற்ற மணிகளில் எல்லாம் சிறந்த மணியாயிற்றே. அதுவே கொடுமுடியாக நின்றிருக்கிறது இங்கே. அந்தக் கொடுமுடியின் சிகரமே இக்கோயிலில் லிங்கத் திருஉருவாகவும் இருக்கிறது என்று அறிவோம். கொங்கு நாட்டில் உள்ள இக்கொடுமுடிக்குப் பாண்டிக் கொடுமுடி என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை.

இனி நாம் கோயிலுள் நுழையலாம். கோயில் பெரிய கோயில். மூன்று பிரிவாக இருக்கின்றன. இறைவனுக்கு, இறைவிக்கு என்பதோடு திருமாலுக்குமே ஒரு சந்நிதி. ஒவ்வொருசந்நிதியையும் ஒவ்வொரு கோபுரம் அழகு செய்கிறது. வடபக்கம் கொடுமுடிநாதர் கோயில், இவரையே மகுடேசர், மலைக்கொழுந்தர் என்றெல்லாம் அழைக்கிறார்கள், தேவியோ வடிவுடையநாயகி, பண்மொழி அம்மை. இவளோ தென்பக்கத்துக் கோயிலில் இருக்கிறாள். இருவருக்கும் இடையே தனிக் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கியவராய் அறிதுயிலில் இருக்கிறார். இவர் எங்கே இங்கு வந்து சேர்ந்தார்? பிரமனும் விஷ்ணுவும் மகுடேசுவரரைத் தரிசிக்க வந்தவர்கள். இவர்களில் பிரம்மா மேலப் பிரகாரத்தில் வன்னி மரத்தடியில் தங்கியிருக்கிறார். தரிசனம் கிடைப்பதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது போலும்! அந்த நேரத்தில் அயர்ந்து படுத்திருக்க வேணும் இந்த வீரநாராயணர். மைத்துனர் துயிலைக் கலைக்க வேண்டாம் என்று கொடுமுடிநாதர் எண்ணி விட்டார் போலும்!

இதனாலே இக்கோயிலை உத்தமர் கோயிலைப்போல் திரிமூர்த்திகள் கோயில் என்றே கூறுகின்றனர். பெருமாள் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவர் துணைவி மகாலக்ஷ்மியுமே வந்திருக்கிறாள். எப்போதும் காலடியில் இருப்பவள் இங்கு தனிக்கோயிலில் பெருமாளுக்குத் தென்புறம் தலைமாட்டிலேயே உட்கார்ந்திருக்கிறாள். இவர்களையெல்லாம் சென்று கண்டு வணங்கி எழலாம். வெளிப் பிரகாரத்தைச் சுற்றினால் அங்கு தலவிருட்சமான வன்னி. அங்கே ஒரே பீடம், அதில் பிரம்மா எல்லோரும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் தெற்கே கோயிலின் வடமேற்கு மூலையில் அனுமாருக்கு என்று ஒரு கோயில். அங்கு பெரியதொரு சிலை வடிவில் ஆஞ்ச நேயர். ஊசி நுழைய இடம் கொடுத்தால் ஓட்டகத்தையே நுழைப்பவர் போல், இந்தப் பெருமாளுக்கு இடம் கொடுக்க அவர் தம் சிறிய திருவடியையுமே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

இது எல்லாம் தென் நாட்டில் நிலவிய சைவ வைஷ்ணவ ஒற்றுமையைக் காட்டுவதற்காக எழுந்தவை என்று தெரிந்து கொண்டோமானால் அது சமய சமரசத்தை வளர்க்க உதவும்.

இக்கோயிலில் ஒரு சிறப்பு, நாம் பார்த்த சில தலங்களில் சூரியன் கோபுரவாயில் கொடிமரம்நந்தி முதலிய எல்லாவற்றையுங் கடந்து கருவறை வந்து இறைவனைத் தழுவியிருக்கிறான் வருஷத்தில் இரண்டு மூன்று நாட்களில். ஆனால் ஒரு தலத்திலும் இறைவியை அவன் பூசித்தாக இல்லை. இத்தலத்தில் மட்டும் ஆவணி, பங்குனி மாதங்களில் மூன்று நான்கு தினங்கள் சூரியன் ஒளி, முறையே இறைவன் அம்பாள் இருவர் பேரிலுமே விழுகின்றது. இப்படிச் சூரிய ஒளி படும்படி கோயில் கட்டிய சிற்பிகள் எத்தனை கற்பனை உடையவர்களாக இருந்திருக்கவேண்டும் என்று மட்டும் எண்ணினால் நம்மை அறியாமலேயே நமது தலை அந்தச் சிற்பிகளுக்கு வணங்கும்.

இத்தலத்தில் சித்திரைத்தேர், ஆடி பதினெட்டு, மார்கழித் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடக்கின்றன. கோயிலைவிட்டு வெளிவருமுன் இக்கோயிலில் உள்ள செப்புச் சிலைகளையும் பார்த்துவிடவேண்டும். ஆனந்த நடராஜர், சிவகாமி எல்லாம் மற்றக்கோயில்களில் உள்ளவர்களைப் போலத்தான். சோமாஸ்கந்தர், திரிபுராந்தகர், சமயக் குரவர் நால்வர் எல்லாம் செப்புப்படிமங்கள். இவர்களோடு காளிகா தாண்டவத் திரு உருவம் ஒன்று. இரண்டு காலையுமே ஊன்றி அநாயாசமாக ஆகாய வீதியை நோக்கி நடக்கும் நர்த்தனர் அவர் மிக அழகான வடிவம். இவரைக் காணவே ஒரு நடை போடலாம் இந்தத் தலத்துக்கு.

இத்தலத்துக்குச் சமயக் குரவர் நால்வருமே வந்திருக்கிறார்கள். மணிவாசகரது அனுபவத்தை முன்னரே
நடராஜர்

பார்த்தோம். சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடுவதற்குத் தெரிந்தெடுத்த தலமே இதுதான் என்றும் தெரிந்தோம். சம்பந்தர் அப்பர் இருவரும் வேறு பாடி இருக்கிறார்கள்.

பெண்ணமர் மேனியினாரும்,
பிறைபுல்கு செஞ்சடையாரும்
கண்ணமர் நெற்றியினாரும்,
காதமரும் குழையாரும்,
எண்ண மருங் குணத்தாரும்,
இமையவர் ஏத்த நின்றாரும்,
பண்ணமர் பாடலினாரும்,
பாண்டிக் கொடுமுடியாரே

என்பது சம்பந்தர் தேவாரம். கோயிலில் உள்ள காளிகா தாண்டவத் திருவுருவின் முன் நின்று இப்பாடலைப் பாடித்தான் பாருங்களேன். அவர் நம்மோடு பேசத் தயங்க மாட்டார் என்பதனைக் காண்போம். பண்ணமைந்த பாடலால் சம்பந்தர் பாடினார். அப்பரோ,

சிட்டனை, சிவனைச்
செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை
ஆலநிழல் அமர்

பட்டனைத் திரும்ப
பாண்டிக் கொடுமுடி
நட்டனைத் தொழ
நம்வினை நாசமே

என்று அடக்கமாகவே பாடி மகிழ்கிறார். இந்தப் பாடல்களையெல்லாம் பாடி மகிழ்ந்தால், அங்குள்ள நிர்வாகிகள் சொல்வார்கள், கொங்கு நாட்டில் உள்ள தலங்களில் இத்தலம் ஒன்றுதான் மூவராலும் பாடப் பெறும் பேறு பெற்றது என்று. நான் சொல்லுவேன், இக் கொடுமுடியாரைப் பாடும் பேற்றை இந்த மூவர் என்ன, சமயக் குரவர்கள் நால்வருமே பெற்றவர்கள்தான் என்று. இத்தலத்து இறைவன் பாடல் உகந்த பெருமான் என்றும் தெரிகிறது. நால்வரது பாடல் பெற்றதோடு அவர் திருப்தியடையவில்லை, கபிலதேவ நாயனாரின் பாடல் ஒன்றையும் பெற்றிருக்கிறார். பதினோராம் திருமுறையில் இரட்டை மணிமாலையில் ஒரு பாட்டு, நல்ல அகத்துறையில் அமைந்திருக்கிறது. ஒரு பெண் கொடுமுடியாரிடம் காதல் கொண்டு வாடுகிறாள். அந்தப் பெண்ணின் தாய் இறைவனிடம் சென்று இப்படி அவள் நாளுக்கு நாள் மெலிந்து வாடி நைய விடலாமா? என்று கேட்கிறாள். இந்தக் கேள்விதான் பாட்டாக வருகிறது கபில தேவ நாயனாரது வாக்கில்.

நிறம் பிறிதாய், உள் மெலிந்து
நெஞ்சு உருகி வாளா
புறம் புறமே நாள் போக்கு
வாளோ? - நறுந்தேன்
படுமுடியாய் பாய்நீர்
பரந்து ஒழுகு பாண்டிக்
கொடு முடியாய்! என்றன் கொடி

பாடலைப் பாடிப்பாடி மகிழலாம். இந்தப் பாடல் நம் உள்ளத்தை உருக்குகிறது.

இக்கோயிலில் கல்வெட்டுக்கள் நிறைய உண்டு. இத்தலம் 'அதிராஜ மண்டலத்துக் காவிரி நாட்டுக் கறையூர் திருப்பாண்டிக் கொடுமுடி யென்றும், இறைவன் பெயர் திருப்பாண்டிக் கொடுமுடி மகாதேவர், ஆளுடைய நாயனார்' என்றும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. சுந்தர பாண்டியன் கோனேரின்மை கொண்டான், கொங்கு மன்னன் வீரநாராயண ரவிவர்மன் முதலியோர் கல்வெட்டுக்களின் மூலம் இங்கு பள்ளிக்கொண்ட பெருமாள், பெரிய திருவடி, இளைய பிள்ளையார் முதலியவர்கள் எழுந்தருளிய விவரமும் கோயில் பூசனை, திருவிழா திருப்பணிகளுக்கு ஏற்படுத்திய நில தான விவரங்களும் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வார் ஆராயட்டும். நாம் இறைவன், இறைவி, பெருமாள், பிரம்மா முதலியவர்களை வணங்குவதோடு அங்குள்ள முருகனை, அருணகிரியாருடன் சேர்ந்து 'குரு எனச் சிவனுக்கருள் போதா? கொடுமுடி குமரப் பெருமாளே!' என்று பாடிப் பரவி விட்டுத் திரும்பி வந்து விடலாம்.

ஊரை விட்டுத் திரும்புமுன், அங்குள்ள அன்பர்கள் ஊருக்குத் தென்மேற்கு மூலையில் தேரோடும் வீதியில் உள்ள மலையம்மன் கோயிலுக்கும் அழைத்துச் செல்வர். பர்வத வர்த்தினியே அங்கு கன்னிக் கோல உருவில் எழுந்தருளியிருக்கிறாள். அம்மன் சந்நிதியில் நந்தி இருக்கிறது. இன்னும் அக்கோயிலுள் நாகநாதர், ஆனந்த வல்லி, பேச்சியம்மாள், கருப்பணசாமி முதலியவர்களது சந்நிதிகளும் இருக்கின்றன. இவர்களையுமே பார்த்துவிட்டு ரயிலேறி ஊர் திரும்பலாம்.