பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. திருமெய்யம் சத்தியமூர்த்தி

சந்தியசந்தனான அரிச்சந்திரன் கதை பிரசித்தமானது. அயோத்தி மன்னனாக இருந்த அரிச்சந்திரன் விசுவாமித்திரரால் கடுஞ்சோதனைக்கு உள்ளாகிறான். சொன்ன சொல்லைக் காப்பாற்ற நாட்டைத் துறந்து புறப்படுகிறான். மனைவியைப் பிறன் ஒருவனுக்கு அடிமையாக்குகிறான்; மகனை விற்கிறான். மேலும் மேலும் துன்பங்கள் வளருகின்றன. தன் மகன் பாம்பு கடித்து இறந்த போதும் காசி மன்னன் மகனைக் கொன்றதாகத் தன் மனைவி குற்றம் சாட்டப்பட்ட போதும் மனம் கலங்காமலேயே இருந்தான். பின்னர் தன்னை அடிமை கொண்ட வீரபாகுவின் ஆணைப்படி தன் மனைவியையே வெட்ட வாளை ஓங்கியபோதும்

பதி இழந்தனம் பாலனை
இழந்தனம், படைத்த
நிதி இழந்தனம் நமக்கு
உளதென நினைக்கும்
கதி இழக்கினும்
கட்டுரை இழக்கிலம்

என்ற உறுதிப் பாட்டில் நிலைத்து நின்றிருக்கிறான். அதனால் அவன் வெட்டிய வெட்டே மாலையாக விழுந்திருக்கிறது அவன் மனைவியின் கழுத்தில். சத்தியம் தலைகாக்கும், 'சத்யமேவ ஜயதே' என்ற உண்மையும் நிலைத்திருக்கிறது. இந்த சத்யகீர்த்தியின் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஓர் அதிசயம். இப்படி வட நாட்டு அயோத்தி மன்னன்தான் புகழ் பெற்றான் என்றில்லை. தென் தமிழ் நாட்டிலும் ஓர் ஊர் சத்தியத்துக்கு உறைவிடமாக விளங்கியிருக்கிறது. அந்த ஊரில்தாள்: சத்தியமூர்த்தியாம் விஷ்ணுவும் சத்திய கிரீசுவரராம் சிவனும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மலை சத்யகிரி.;