பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22. மன்னார் கோயில் வேதநாராயணன்

வெங்கண் திண்களிறு அடர்த்தாய்
வித்துவக் கோட்டம்மானே!
எங்குப்போய் உய்கேன் உன்
இணைட்டியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரைகாணாது
எறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம் பேறும்
மாப்பறவை போன்றேனே.

என்று ஒரு பாசுரம். மிக அருமையான பாசுரம். ஒரு கப்பல் புறப்படுகிறது கடலில், அக்கப்பலின் கொடிமரத்திலே ஒரு பறவை இருக்கிறது. கப்பல் நடுக்கடலுக்குச் சென்றுவிடுகிறது. அப்போது பறவை பறக்க ஆரம்பிக்கிறது. நிலத்தை விட்டு நெடுந்தூரம் கப்பல் வந்துவிட்டதால் பறவையால் திரும்ப நிலத்துக்குச் செல்ல முடியவில்லை, கடலிலோ பறவை சென்று தங்க வேறு இடமும் இல்லை. ஆதலால் பறந்த பறவை திரும்பவும் கப்பலின் கொடி மரத்துக்கே வந்து சேருகிறது. நாமும் வாழ்வு ஆகிய கடலிலே இறைவனாகிய கப்பலின் கொடி மரத்தில் உள்ள பறவை போன்றவர்கள்தாமே? எப்படி எப்படிப் பறந்தாலும் கடைசியில் இறைவனிடத்துக்கே திரும்பி அவனது தாள்களையே பற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையல்லவா? இந்த அற்புத உண்மையைத்தான் நல்லதோர் உவமையோடு பாடல் கூறுகிறது. இந்தப் பாடலைப் பாடியவர் குலசேகரர்.

ஆம்! பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார்தான். சேரமன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். கொல்லி