பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

வேங்கடம் முதல் குமரி வரை

மூவரும் ஏன் தவம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத் தல வரலாற்றைக் கொஞ்சம் திருப்பவேணும்.

அத்திரி முனிவர் தம் மனைவி அனசூயாதேவியுடன் இங்குள்ள வனத்தில் வாழ்ந்திருக்கிறார். அனசூயை கற்பொழுக்கத்தில் சிறந்தவளாக இருந்திருக்கிறாள். அவளை ஆசிரமத்தில் விட்டு விட்டு அத்திரி இமயமலைக்குத் தலம் செய்யப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இச்சமயத்தில் நாரதர் கலகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இரும்புக் கடலைகளைக் கொண்டு வந்து பார்வதி, லக்ஷிமி, சரஸ்வதி மூவரிடமும் கொடுத்து வேக வைத்துத் தரச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அது இயலாது என்று சொல்லவே அந்த இரும்புக் கடலைகளை அனசூயையிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அந்த அம்மையார், தமது கற்பின் மகிமையால் வேக வைத்துக் கொடுக்கிறார். இதைப் போய் தேவியர் மூவரிடமும் சொல்லிவைக்கிறார் நாரதர், தேவியர் ஏவிய வண்ணமே தேவர்கள் மூவரும் அன சூயையின் கற்பைப் பரிசோதிக்க வருகின்றனர், அத்திரி ஆசிரமத்துக்கு அகதிகளாக வந்தவர்களை உபசரித்து உணவு பரிமாற அனசூயை முனைகிறபோது, தேவர் மூவரும் அவள் பிறந்த மேனியாகவே தங்களுக்கு அன்னம் பரிமாற வேண்டும் என்கின்றனர். அனசூயையோ தன் கற்பின் மகிமையால் தேவர் மூவரையுமே மூன்று குழந்தைகளாக்கி அவர்களுக்குச் சோறூட்டுகிறாள். நாரதர் மூலம் விஷயம் தெரிகிறார்கள் தேவியர் மூவரும். உடனே மூவரும் அனசூயையிடம் வந்து தங்கள் கணவர்கள் சுயரூபம் அடையத் தவம் கிடக்கின்றனர். அனசூயை தேவர் மூவரையும் பழைய உருவங்களைப் பெறும்படி அருளுகிறாள். அவள் வேண்டிக்கொண்டபடியே தேவர் மூவரும் இணைந்து, ஒரே உருவத்தில் அந்தத் தலத்தில் தங்கி விடுகின்றனர், என்பது கதை.

தேவியர் தவம் செய்த காரணத்தைத் தெரிந்த கொள்ள முனைந்த நாம், தாணு. மால், அயன் மூவரும் இணைந்து நிற்கும் காரணத்தையுமே தெரிந்து கொண்டோம். இனி கோயிலுள் நுழையலாம். வாயிலைக் கடந்ததும் ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது