பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 127


அமைவது மனையறம். அத்தகைய மனையறத்தில் அறிவறிந்த காதல் வாழ்க்கையில் தோய்ந்து நன்மக்கட்பேறடைதல் வேண்டும் என்று வள்ளுவம் எடுத்துக் கூறுகிறது. ஒரு குடும்பத்தின் இல்வாழ்க்கை சிறப்புற்று விளங்கியதா? பெற்றோர், வரலாற்றில் இடம் பெறத்தக்க நல்ல தாயா? நல்ல தந்தையா? என்பதனை உறுதிப்படுத்தத் துணை செய்பவர் அவர்களுடைய மக்களே! நாடறிந்த, புகழ்மிக்க குடும்பங்களில் கூட, தந்தை தாய்க்கு நற்புகழ் வாங்கிக் கொடுக்கக் கூடிய பிள்ளைகள் தோன்றவில்லை. இதனைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறள் எச்சரித்திருக்கிறது. மனையற வாழ்க்கை பெயரும், புகழும், சிறப்பும் பெறுவது அம்மனையற வாழ்க்கையின் பயனாகத் தோன்றிய மக்கள் மூலமேயாம். ஒரு குடும்பத்தின் செல்வமும், புகழும் விரிவடைய வேண்டிய ஒன்று. அது தேய்ந்து குறுகுதல் கூடாது. ஒரு குடும்பம் வளர்ச்சிக்குரிய இயற்கை நியதிகளின் படி வளர்ந்து வருமானால் குடும்பத்தின் முன்னோரை வைத்தோ மூத்தோரை வைத்தோ அந்தக் குடும்பம் அறிமுகமாவது சிறப்பன்று. இன்றைய வாழ்க்கைக் களத்தில் புகழ் பூத்திருக்கும் தலைமுறையைப் பொறுத்து அறிமுகம் ஆகவேண்டும் என்பது திருவள்ளுவர் குறிப்பு. அதாவது பாட்டனை வைத்துப் பெயரனுக்கு அறிமுகம் வருதல் வளர்ச்சியன்று. தந்தையை வைத்து மகனுக்கு வரும் அறிமுகம் வளர்ச்சியின் சின்னமன்று. மகனை வைத்துத் தந்தைக்கும் பாட்டனுக்கும் கிடைக்கும் அறிமுகமே சிறப்புடையது; போற்றுதலுக்குரியது; புகழ்ச்சிக்குரியது.

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
எனநோற்றான் கொல்லெனும் சொல்"

(70)

என்பது குறள். "இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" என்ற குறட் சொற்றொடரைத் திரும்பத் திரும்பச் சிந்தனை செய்து உணர்க. இங்ங்ணம் புகழ்மிக்க வரலாறு