பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நலம் உள்ளடங்குவதில்லை. ஆனால் பொது நலத்தில் தன்னலம் நிச்சயமாக உள்ளடங்கியது. கழனியில் கிடக்கும் தண்ணீர் கழனியையும் தொடர்ந்து காப்பாற்றாது; கண் மாயையும் காப்பாற்றாது. ஆனால், கண்மாயின் தண்ணீர் கழனியைக் காப்பாற்றும். கண்மாய் - பொதுநலம், கழனி - தன்னலம். கண்மாயின் வாயிலாகக் கழனிக்குத் தண்ணீர் பாய்ச்சுதலே வாழ்வியல் முறை. கழனியின் மூலம் கண்மாய்க்குத் தண்ணீர் தேக்கமுடியாது.

ஆதலால், உயர்ந்த நன்மை விளைவிக்கக்கூடிய சொற்களே வாய்மை; சிந்தனையே வாய்மை; செயலே வாய்மை. இத்தகைய வாய்மையில் மனமும் வாயும் தோய்ந்து பழகவேண்டும். யாருடைய மனத்திற்கும் வாய்க்கும் பொய் கூச்சப்படும் பொருளாக இருக்கிறதோ, அவர்களே வாழ்வோர், வாழ்விப்போர். மனமும் வாயும் கூச்சப்படாமல் பொய்யைச் சொல்லுதலைத் திருஞானசம்பந்தர் கண்டிக்கின்றார். அவர்தம் பாடல்,

மாசூர் வடிவின்னார் மண்டையுணல் கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா வென்பார்கட் கில்லை யிடர்தானே.