பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்விப்பதன் மூலமே அவன் வாழ்வான். ‘இயல்வது கரவேல்’ என்பது அவனது பொருள் பொதிந்த வாழ்க்கைப் பழமொழி. கொடைத் தன்மைக்கு கையிலுள்ள பொருள் அளவல்ல. அல்லது இன்றைக்கு உருக்குலைந்து வழங்கும் பண்பற்ற பழமொழியாகிய “தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்” என்ற பழமொழியின் பாங்குமல்ல.

ஈதல், இசைபட வாழ்தல் உயிர்க்குற்ற நெறியாகும். கொடுத்தால் மட்டும் போதுமா? சிலர் கொடுப்பர், ஆனாலும் அது கொடையாகாது. பெறுவான் தவம் தூண்டக் கொடுப்பதும் உண்டு. இயல்பாக நிகழ்வதே கொடை. ஏதாவதொரு தூண்டுதலின் மூலம் கொடை நிகழுமானால் அதுவும் கொடையன்று. கொடைக்குக் கொடையே குறிக்கோள்! அஃதின்றி கொடைக்கு வேறு உள்நோக்கம் வருமானால் அது கொடையன்று; வணிகமே! அறவிலை வாணிகர் ஆதலைத் தமிழகத்து ஆன்றோர் விரும்பியதில்லை. இவையெல்லாவற்றையும் விட கொடை வழங்கக் காலம் தாழ்த்தக்கூடாது. காலம் தாழ்த்தப்படுமாயின் கொடை பெறுவானின் தகுதி குறையும். பெறுவானின் தகுதியைக் குறைக்கும் வகையில் வழங்குதல் கொடையன்று. பெறுவான் தகுதியை உயர்த்தும் வகையில் கொடை நிகழுதல் வேண்டும். ஆதலால் காலம் தாழ்த்திக் கொடையளித்தல் தகுதியுடையதன்று. சிலர் காலம் தாழ்த்துதல் மட்டுமின்றிப் பலதடவை கூறிக் காலத்தைத் தள்ளிப்போடுவர். சிலர் கொடைக்கு மனம் இருப்பதாகவும் ஆனால் காலம் ஒத்து வரவில்லையென்றும் கூறுவர். அங்ஙனம் கூறுதல் வண்மைக்கு அழகன்று; வாழும் நெறியுமன்று.

சீர்காழியில் வாழ்ந்த மக்கள், வண்மையிற் சிறந்தவர்கள்; வழங்குவதில் புகழ்பெற்றவர்கள்; காலத்தில் கொடுத்தவர்கள்; எக்காரணத்தை முன்னிட்டும் ‘நாளை’ என்றும், ‘மறுநாள்’ என்றும் காலம் கூறிக் கடத்தாமல் வழங்கியவர்கள். அதனால்தான் போலும்,