பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூசாதுரைக்கும் சொல்!

51


சிந்தையில் எழுதிக் கொள்ளுதலாகும். ஒளியைத் தாங்கிப் பேரொளிப் பிழம்பாகிய பரம்பொருளை வழிபடுதல் செயல் - சடங்கு. அதன் பயன் உயிர் ஒளிமயமாதல். ஆதலால் பயன் நோக்கியே செயல் - சடங்கு.

மனம் வாழ்க்கையின் அடிநிலம். அது எண்ணவல்லது; நினைக்க வல்லது; உணரவல்லது. ஏன் இத்தனைத் தொழிற்பாடு? மனம் நல்லவண்ணம் விளைந்து பயனுறுதற்கே! மனம்தானே மனிதனுக்கு உருவம் கொடுப்பது; வாழ்விப்பது; மனத்தின் வண்ணமே மனிதனின் வடிவு - செயல். ஆங்கிலக் கவிஞன் மில்ட்டன் “மனமே நரகத்தையும் சொர்க்கத்தையும் படைப்ப”தென்றான். இன்று சிலர் சொர்க்கத்தை நிலவரைப்படத்தில் தேடுகின்றார்கள்! பரிதாபம்! மனமே சொர்க்கத்தின் பிறப்பிடம்! அப்பரடிகளும், “மனத்தகத்தான்” என்றார். வாய்மை சொல்லி, மற்றவர்க்கு நன்மை வராது தீமைவரின் அது வாய்மையல்ல. சொல்லளவில் வாய்மை போலத் தோற்றினாலும், இயல்பால்-தன்மையால் வாய்மையன்று. பொய் சொல்லுவதின் மூலம் பிறர்க்கு நன்மை விளையுமானால் அந்தப் பொய்ம்மையை வாய்மையாகக் கருதலாம் என்பதே வள்ளுவத்தின் கருத்து. வாழ்க்கையின் இலட்சியம் நன்மை விளைவித்தலே. அந்த முழு நன்மையே - புரைதீர்ந்த நன்மையே கடவுள். “நன்றுடையானை” என்பது தேவாரம். புரைதீர்ந்த நன்மை எது? அது எப்படி இருக்கும்? இன்று அதைப் பார்த்தவர் யார்? யாருக்கும் தீமை தராமல் நன்மை தருவதே புரை தீர்ந்த நன்மை. ஆதலால் இன்றைய உலகியல், நன்மை - தீமைக் கலப்படமாகவே விளங்குகிறது. அதற்கு முதற்காரணம் மனிதன் வாழ்வித்து வாழவும், மகிழ்வித்து மகிழவும் விரும்புவதில்லை. அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையுணர்வே பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. ஒரு மனிதனுடைய ‘தன்னலம்’ பெரும் பகுதி மற்றவர்க்குத் தீமையாகவே இருக்கும். ‘பிறர் நலம்’ பெரும் பகுதி நன்மையாகவே இருக்கும். தன்னலத்தில் பொதுநலம் - பிறர்