பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துறவு எது?

57



அப்பரடிகள் ஐயாற்றில் கயிலையைக் காண்கிறார். கயிலைக் காட்சியை ஊனுருக, உளமுருக நின்று பாடுகிறார். கயிலையில் “காதல் மடப்பிடியோடும் களிறு வருவன” காண்கிறார். சுந்தரர், பரவையாரை மணந்து பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக வாழ்ந்தார் என்று சேக்கிழார் பாடுகின்றார். இவர்கள் நமது நாயன்மார்கள்; வழிகாட்டும் தலைவர்கள். ஒன்று தெளிவாகத் தெரிகிறது. வாழ்க்கைத் துறவை நம்முடைய சமய ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

வாழ்க்கை, பல்வேறு கூறுகளை உடையது. உடல் வாழ்க்கை - உயிர் வாழ்க்கை - உணர்வு வாழ்க்கை என்றெல்லாம் பகுத்துக் காணுவர். சிலர், உடல் வாழ்க்கைக்குரியதையே உயிர், உணர்வு வாழ்க்கைக்கும் உரியதாக்கிவிடுவர். அது விலங்கியல் வாழ்க்கை. இந்த வாழ்க்கைப் படிகள் அனைத்தையும் அடைந்து அனுபவித்து அதனதன் எல்லையிலே நின்று உணர்விற் சிறந்து வாழ்தல் சிறப்புடைய வாழ்க்கை - சீலம் நிறைந்த வாழ்க்கை.

திருஞானசம்பந்தர் சமணத் துறவிகளைப் பார்த்து வியப்புப் பொருள்படக் கூறுவதுபோலக் கூறுகிறார், “துறவி யாகுமே” என்று! நீ துறவியாவாய் - எப்பொழுது? துறப்பதினால் மட்டும் துறவியாகி விடுவதில்லை. துறக்கக் கூடாத ஒன்றைத் துறக்காமலிருப்பதின் மூலமே துறவியாகின்றாய்? துறந்த பொருட்களின் பட்டியல் பெருகலாம். ‘உடை துறந்தேன்’ என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்பு? உடலுக்கல்லவா இழப்பு? “உணவைத் துறந்தேன்!” என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்பு? உடலுக்கல்லவா இழப்பு? துறந்த பொருள்களின் பட்டியல் பெருகுவதால் பயனில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் வைத்து கொண்டா வாழ்கிறார்கள்? மகிழ்கிறார்கள்? காலால் நடத்தல் துறவு என்றால், உலகத்தில் ஆயிரம் ஆயிரம் பேர் கால்களால் நடக்கிறார்கள். அவர்கள் எல்லாம் துறவிகளா?