பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்தல் உயிரினத்தின் தலையாய கடமை. மனிதர்க்கு உறுப்பென அமைந்த புலன்கள் இயல்பில் அழுக்குச் சார்புடையன. இழுக்குடை நெறியில் உயிர்களை இழுத்துச் செல்லும் தகையன. இது புலன்களின் தன்மை. தன்மையென்றாலும், இயற்கையன்று; மாறுதலுக்குரியது; வளர்ச்சிக்குரியது. கீழ்மைப் படாது வளரப் புலன்களை வெற்றி கொள்ள வேண்டும். புலன்களை வெற்றி பெறாதார் நல்லவர்களாதல் முடியாது. அவர்களுக்கு இறையருளும் கிட்டாது. ஆதலால் வென்ற ஐம்புலன் உடைய சான்றோர் வாழும் ஊர் திருத்தலம்.

திருத்தலம் திருக்கோயில் மட்டுமன்று. முடிந்த முடிபாகத் திருக்கோயிலும் திருக்கோயிலைச்சூழத் தக்காரும் வாழும் ஊரே திருத்தலம் என்பது திருஞானசம்பந்தர் திருவுள்ளம். தகுதி பலவும் உடையார் வாழும் பதியே திருத்தலம். தகுதியுடையார்தாமே தனக்குவமையில்லாதானைச் சிந்தனை செய்ய இயலும். சிந்தனை சிவத்தில் தோய்ந்தால்தானே புலன்கள் அழுக்கினின்றும் அகலும். சிந்தனையைச் சிவத்தில் வைத்தார், இறைவனை நீங்காது போற்றுவர். உள்ளம் அதனால் தூய்மை பெறும்; அகநிலை செழிக்கும்; பொறிகள் புனிதம் பெறும். இத்தகு தக்கோர் எண்ணுவன விளங்கும். செய்வன துலங்கும். அவர்கள் வாழும் சூழலே இன்பச் சூழல். எம்பெருமான் இந்தச் சூழலில் திருவருள் திருவோலக்கம் கொள்ளும். அப்பொழுதே ஊர் திருத்தலமாகிறது.

நிலநீரொ டாகாச மணல் காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ் செய்யார் போற்றோவார்

சலநீத ரல்லாதார் தக்கோர் வாழுந் தலச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே,

என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு.