பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19
அடியார்க்கு நல்லவையே!

இன்று தமிழ்ச் சாதியை - பாரத சமுதாயத்தை அரித்து அழிக்கும் தீய பழக்கங்களில் ஒன்று நாள் பார்த்தல் என்பது. ‘நாள் பார்த்தல்’ என்ற வழக்குத் தொன்மைக் காலத்தில் நாளை உரியவாறு பயன்படுத்துதல் என்ற பொருளிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றோ, பணிகளைத் தள்ளிப் போடவும், அவ்வழி பயனை இழக்கவும்தான் நாள் பார்த்தல் என்னும் கொள்கை பயன்படுகிறது. மனிதனோடு தொடர்புடைய தத்துவங்களிலெல்லாம் மிகச் சிறந்த தத்துவம் காலம்தான். காலத் தத்துவம்தான் மனிதனை வளர்க்கிறது; பதப்படுத்துகிறது; துய்ப்பிற்குத் துணையாக நிற்கிறது. மனிதன் காலத் தத்துவத்திற்குக் கட்டுப்பட்டவன். அதாவது விரைந்து செல்லும் காலத்தின் இயல்பை அறிந்து, காலத்தை உரியவாறு பயன்படுத்திக் கொள்ளத் தவறி விடுவானானால் காலம் அவனை அழிக்கும். இம்மையும் மறுமையும் நரகமே கிடைக்கும்.

நாள் என்பதே காலத் தத்துவத்தை மனிதனுக்கு உணர்த்தும் ஒரு சொல். நாள் என்பது மனிதனின் வாழ்நாளின் ஒரு பகுதி. ஒரு மனிதனின் வாழ்நாள் சட்டென முழுமையாக அழிந்து விடுவதில்லை. இரும்பைத் துரு