பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரித்து அழிப்பதைப் போல், மரத்தைக் கரையான் அணைந்து அரித்து அழிப்பதைப் போல், காலமும் நாள் என்ற பெயரில் வளர்வது போல, நயந்து காட்டி, அரித்து அழிக்கிறது.

கோள் என்பது, பூத காரியங்களுள் ஒன்று. கோள்கள் மாறுபடின் தட்ப வெப்பம் மாறலாம். தட்பவெட்பம் மாறுபடின் மனிதனின் வாழ்வில் மாறுபாடுகள் தோன்றலாம். ஆனாலும் அவை மனிதனை அழித்து விடா. மனிதன் காலத்தத்துவத்தில் காலூன்றி நின்று கடமைகளைச் செய்து, காலம் அவனிடத்தில் கிழட்டுத்தனத்தைச் சேர்க்காமல் காலத்தை வெற்றி கொள்ள வேண்டும். இதுவே வாழ்க்கை முறை.

ஆனால் எதையும் எளிதில் வழிபடும் மனப்போக்குடைய நம்முடைய சமுதாயத்தினர் நாளையும் கோளையுங் கூட வழிபாட்டுப் பொருளாக்கி விட்டனர். அதுவும் அன்பில் மலர்ந்த வழிபாடா? இல்லை! அச்சத்தில் தோன்றிய வழிபாடு! வழிபாட்டிற்கு அடிப்படை, அச்சமாக இருப்பது முறையன்று. இன்று பலர், கடவுளைக் கூட வழிபடுவதில்லை. ஒன்பது கோள்களையே (நவக்கிரகங்களையே) வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். என்ன பேதைமை! எப்படியிருந்தாலும் சைத்தான் சைத்தான் தானே! சைத்தான் என்னதான் நன்மை செய்தாலும் அது மாறாகத் துன்பத்தைத்தான் தரும். வழிபடுதற்குரியது கடவுள் ஒன்றேயாம்.

திருஞானசம்பந்தர், சமணரோடு பொருத மதுரைக்குப் பயணமாகிறார். பாலறாவாயர்மீது பரிவு கொண்டோர் “நாளும் கோளும் நன்றாக இல்லை” என்று சொல்கின்றனர். காழிப் பிள்ளையாரோ நாளும் கோளும் நமக்கு என்றும் நன்றே என்று ஐயத்திற்கிடமின்றிக் கோள்வழிப் பட்ட அச்சத்தை மறுக்கின்றார்.

“எனது தந்தை ஈசன், அருளே உடனாகவுடைய அம்மையைப் பங்கில் கொண்டவன். அந்த அருள் முன்னே இந்தக் கோள்கள் என்ன செய்ய முடியும்? எந்தை ஈசனோ