பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடியார்க்கு நல்லவையே!

85


நஞ்சையும் அமுதாக்கியவன். காக்கும் கருணையைக் காட்டும் கறைக் கண்ட முடையவன். அவன், இணையற்ற இன்பப் பேரொலியாகிய வீணையொலியுடன் என் நெஞ்சத்தில் எழுந்தருளியுள்ளான். திங்களின் குறை நீக்கி நிறை வழங்கியவன். வையத்து இடர் நீக்கக் கங்கையைச் சடையில் தாங்கியருளினவன். அவன், என்னுள்ளத்தே புகுந்திருக்கின்றான். இனி, நான் மனிதனல்லன். எந்தை ஈசனின் அடியார்களில் ஒருவன். அவனுடைய தண்ணருளை, நாடி நரம்பில் எல்லாம் தேக்கி நான் வாழ்கிறேன். அதனால் நாளும் கோளும் நம்மைத் தீண்டா. இயல்பில் துன்பந் தரும் அவை, எமைத் தீண்டித் துன்பந் தராததோடன்றி நல்லவையும் செய்யும். எந்தை ஈசனின் கொற்றாள், நந்தமக்கும் கொற்றாளல்லரோ? எனவே நாளும் கோளும் சிவனடியார்க்கு நல்லவையே! என்றும் நல்லவையே; எப்பொழுதும் நல்லவையே! அவை அஞ்சுதற்குரியனவும் அல்ல”. இங்ஙனம் நாளையும் கோளையும் வழிபடுவதை ஏழாம் நூற்றாண்டிலேயே மறுத்துப் பேசிய பெருமை திருமுறைத் தமிழுக்குண்டு.

ஐயன்மீர்! ஆளுடைய பிள்ளையின் வழிபாட்டைப் போற்றுமின்! நாளை - கோளைக்கண்டு அஞ்சன்மின்! இறைவன் உம் நெஞ்சத்தில் வந்து அமரத்தக்கவாறு தூய தவம் பேணுமின்! துன்பம் நலியும். இன்பம் பெருகும். இது திருஞானசம்பந்தரின் அறவுரையன்று; ஆணை!

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.