ஓ ஓ தமிழர்களே

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

ஓ! ஓ! தமிழர்களே!

(சொற்பொழிவு நூல்)





பாவலரேறு

பெருஞ்சித்திரனர்





நிறைமொழி வெளியீடு

சென்னை - 15

நூல் ஓ! ஓ! தமிழர்களே!
ஆசிரியர் பாவலரேறுபெருஞ்சித்திரனார்
உள்ளடக்கம் சொற்பொழிவுக் கட்டுரை
உரிமை ஆசிரியர்க்கு
பதிப்பு முதல் பதிப்பு
பதிப்பு நாள் கடகம்,தி,பி,2022(சூலை 1991)
தாள் வெள்ளைத் தாள் + செய்தியச்சுத் தாள்
பக்கங்கள் 80+ viii
படிகள் 1000 + 1200
விலை வெள்ளைத் தாள்

செய்தியச்சுத் தாள்

அச்சீடு நிறைமொழி அச்சகம்

Right|124,வேளச்சேரி சாலை சென்னை-600 015 }}

இஃது ஒரு சொற்பொழிவு நூல்!

இதுவரை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், நான் ஆற்றிய பன்னுாற்றுக் கணக்கான சொற்பொழிவுகளுள், முதன் முதல் நூல் வடிவில் வெளி வருவது இநநூலே! வெளிவர வேண்டுவன இன்னும் நிறைய உள

இது, கடந்த 17-2-91-இல், ஈரோட்டில், 'உலகத் தமிழின முன்னேற்றக் கழகச் சார்பில், 'மாவட்ட இரண்டாவது மாநாடும்', 'பாவேந்தர் நூற்றாண்டு நிறைவு விழா'வும் கலந்து நடந்த ஒருநாள் நிகழ்ச்சியின் பொழுது ஆற்றிய ஒன்றரை மணி நேரச் சிறப்புச் சொற்பொழிவு ஆகும்

அம் மாநாட்டில் கலந்துகொண்ட பலரும், இச் சொற்பொழிவு மிகவும் பயனுடைய ஒன்றாக இருந்ததென்றும். இதை நூல் வடிவில் கொணர்ந்தால், அம்மாநாட்டில் கலந்துகொள்ள இயலாதவர்களும், பிறரும், படித்து மிகுபயன் பெறுவார்களென்றும். என்னிடம் கருத்துத் தெரிவித்தமையால், இதனை நூல் வடிவில் கொணகும் தேவை உண்டாயிற்று

இந்நூலை அச்சேற்றி வெளியிடும் பொறுப்பை ஏற்றவர். அம் மாநாட்டைப் பற்பல இடையூறுகளுக்கும் இடர்ப்பாடுகளுக்கும், அஞ்சத் தகுந்த ஒரு சூழ் நிலைக்கும் இடையில், மிகவும் துணிவொடும், ஆர்வத்தொடும், அக்கறையொடும், முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்திய ஈரோடு மாவட்ட உ.த. மு. க. அமைப்பாளரும், என் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவரும், நெடுநாளைய 'தென் மொழி'த் தொண்டரும், தூய தமிழ்ப் பற்றாளரும், பெரியார் பின்பற்றாளரும் ஆகிய செம்புலவர் மானமிகு திரு. அரசமாணிக்கனார் அவர்களும் , என் மூத்த மகன் திரு.மா.பூங்குன்றன், அறி. இ; க.மு. அவர்களும் ஆவார்கள். அவர்களுக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றியையும், வாழ்த்தையும், முதற்கண் கூறிக் கொள்கிறேன். மேற்கொண்டு, இத்தகு பணியை அவர்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும் என்றும், அவர்களையும், அவர்களைப் போல் ஆர்வம் மிக்க சிலரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்

இம் மாநாட்டுச் சொற்பொழிவைத் திரு. அரசமாணிக்கனாரே, தமக்குற்ற குடும்ப இடையூறுகளுக்கும், துன்பங்கட்கும் இடையே, ஒலியிழைப் பதிவினின்று பெயர்த்து உதவினார். அதனை, என் இரண்டாவது மகன் திரு மா.பொழிலன், (க.மு.(ஆங்) ஒருமுறைக்கு இரு முறையாகச் சரிபார்த்தும், தெளிவுப்படி எடுத்தும் துணை நின்றார். அவர்களுக்கும். அவ்வகையில் அவர்களுடன் ஒத்துழைத்த என் நான்காம் மருகர் திரு. கி. குணத்தொகையன், க.மு. அவர்களுக்கும் என் வாழ்த்துகள் உரியவாகுக

இச் சொற்பொழிவு நூல், தமிழினத்திற்கென்று, அமைவாக, அதன் தாழ்ச்சி வீழ்ச்சிகளையும், எதிரிகளின் ஆட்சி சூழ்ச்சிகளையும், அவர்களோடுற்ற நம் இன இரண்டகர்களின் கரவு உறவுகளையும், இற்றை நாள் அரசியல், பொருளியல், குமுகவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒப்பவைத்துக் காட்டி உரைக்கும் சிறந்ததொரு நிறைகருத்து வெளிப்பாட்டு நூலாகும். இக்கருத்தின் மேல், அவர்கள் தங்களுடைய மேம்பாட்டிற்கென்று, செய்து கொள்ள வேண்டிய முயற்சிகளும், முனைப்புகளும் செயற்பாடுகளும், அவரவர்களுக்குள்ள கொள்கை உரனுக்கும், உறுதிப்பாடுகட்கும், அவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இழப்புகட்கும் ஈகங்கட்கும் ஏற்ப அமைத்துக் கொள்வனவாகும்

இவையன்றி. இவ்வின முன்னேற்றம் எளிதில் வாயாதென்க

இச் சொற்பொழிவில் கூறப் பெறும்- சுட்டிக் காட்டப் பெறும் - கருத்துகளும், காரணங்களும், பொதுவாகவும், சில விடத்துச் சிறப்பாகவும், உள்ளனவேனும், அவை அழுத்தமானவையாகவும், உண்மையானவையாகவும், எவருக்கும் அஞ்சாதனவாகவும். எவர் பொருட்டும் கரிசனம், கண்ணோட்டம் காட்டாதவையாகவும் உள்ளதை, இதை அழுந்திப் படிப்பவர் நன்கு உணர்ந்து கொள்வர்

கருத்துகளை உணர்ந்தவர்கள் எடுத்துச் சொல்வதும், அவற்றைப் பின்பற்றுவதும், அவ்வக் காலச் சூழ்நிலைக்கும். அவரவர் தனித் திறனுக்கும். தனித் தன்மைக்கும் ஏற்றனவாகவே அமைய முடியும்

எனவே, அவற்றைக் கருத்தூன்றிக் கவனிக்கும் முதுவர்களும் இளைஞர்களும் அறிஞர்களும் அறியாதவர்களும், வறிஞர்களும், வாழ்வில் பின் தங்கியிருப்பவர்களும், தாங்கள் தங்கள் ஏற்பு, இயல் வலிமைகளுக்கு ஒத்த வகையில், எவ்வாறேனும் ஒரு வகையில், செயல்படுத்தியே ஆக வேண்டும் என்னும் உறுதிப்பாட்டொடு, தீவிரமாகச் சிந்தித்துத் தனித் தனியான தங்கள் மேம்பாடுகளுக்கெனக் கருதிவிடாமல், ஒட்டு மொத்தமான இத் தமிழின முன்னேற்றத்திற்கும் விடுவிப்புக்குமாக என்று எண்ணி, இயங்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்

வாழ்க்கை என்பது வெறும் வளத்தையும் நலத்தையுமே அடிப்படைகளாகக் கொண்டதன்று. அவரவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய உரிமைகளையும், மேற்கட்டு விடுவிப்புகளையும், ஒட்டு மொத்தமாள இன முன்னேற்றங்களையும் கூட உள்ளடக்கியதாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துக் கடைப்பிடிக்கத் தக்கதாகும்

ஒரு மரத்தின் கிளைகள் பலவாயிருக்கலாம்; அக்கிளைகளில் தோன்றும் பயன்களும் பலவாயிருக்கலாம்; வேறுபட்டும் இருக்கலாம். அவ்வாறுதான் இருக்கவும் முடியும். ஆனால், அக்கிளைகளையும், அவற்றின், இலை, பூ, காய் பழம் முதலிய பயன்களையும், தனித் தனியாக மதிப்பிட்டுக் கொள்வதுடன் மட்டுமே அமையாமல், அக்கிளைகளையும் அவற்றின் பிற பயன்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் அம்மரத்தின் அடிப்பகுதி, அவை நிலத்தில் வேரூன்றியிருக்கும் தன்மை, அம்மரத்திற்கு இயற்கையாக வந்து வாய்த்திருக்கின்ற வெயிலும் நீரும், எருவும் காப்பும் ஆகிய தன்மைகளையும், அவற்றுக்குச் சொந்தமான செயற்கையாகப் பிறர் ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தடைகளையும் தீங்குகளையும் எண்ணிப் பார்த்து, அவற்றிற்கொரு தீர்வு காண்பதே முகாமையானதும் அறிவு நிறைவானதும் ஆகும். இதுவே இன நலத்தின் அடிப்படை மெய்ம்மம் (தத்துவம்) ஆகும் என்பதை எண்ணி உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்

நாம் ஒவ்வொருவரும் அம்மரத்தின் தனித் தனிப்பயன்களைப் போல், தனித்தனியான வகைகளில் சிறப்புற்றவர்களாக இருக்கலாம். நம்மில் கிளைகளாக விரிந்திருப்பவர்கள் பலர்; இலைகளாகப் பரத்திருப்பவர்கள், பலர்; மலர்களாக மலர்ந்திருப்பவர்கள், பலர்; அவற்றுள் பிஞ்சுகளாகக் காய்களாகப் பழங்களாகப் படிநிலை (பரிணாம) வளர்ச்சி பெற்றிருப்பவர்களும் பலராக இருக்கலாம். இவ்வெடுத்துக்காட்டுள், கிளைகள் நம் தனித் தனித் தொழில் பிரிவுகளாகவும், குலப் பிரிவுகளாகவும் இருக்கட்டும். இலைகளும், பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களும் . நம் தனித் தனியான முன்னேற்றங்களாகவும் இருக்கட்டும். ஆனால் நாம் இணைந்தும், பிணைந்தும் உறுப்புகளாகி நிற்கின்ற அடிமரமாகிய இனத்தையும், அது வேரூன்றி நிற்கும் நிலமாகிய நம் நாட்டையும் பற்றி - நாம் கவனியாமலும் கவலைப்படாமலும் இருத்தல் முடியுமா - என்பதையும் எண்ணிப் பாருங்கள்! அவற்றுக்கு வந்திருக்கும் ஊறுபாட்டையும் மாறுபாட்டையும் நாம் அறிந்து கொண்டு, நன்கு உணர்ந்து கொண்டு, நமக்கொரு தீர்வை, நம்மளவில் செய்யவில்லையானால், விளைவு என்ன ஆகும்? நம் எதிர் காலத்தில் நாம் எங்கே இருப்போம்? இனி, நம்மை அடுத்துவரும் படிப்படியான பருவக் காலங்களில், நம்மிடையில் தோன்றும் பூக்களுக்கும் பிஞ்சுகளுக்கும், காய்களுக்கும், கனிகளுக்கும், மலர்ச்சி வாய்ப்பும், வளர்ச்சி வாய்ப்பும் பயன்பேறும் எவ்வகையில் கிட்டும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டாமா? நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டாமா? அவ்வகைச் சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் அடிப்படையாக இருக்க வேண்டிய நல்லுணர்வுகளை இச்சொற்பொழிவு நூல் எழுப்பித் தரும் என்று நம்புகின்றேன்; மனமார எதிர் பார்க்கின்றேன்!

என் கடமைகள் தொடர்கின்றன! நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டு இருப்போம். அத்துடன் சித்தித்துக் கொண்டும் இருப்போம்! அவை ஒரு கால கட்டத்தில், விரைவில், மிக விரைவில், செயல்களாக மலரத்தான் போகின்றன

அவ்வுறுதிப் பாட்டுடன்தான் நான் உங்களிடையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்


சென்னை-5

அன்புடன்,

தி.பி 2022

பெருஞ்சித்தரனார்

ஆடவை 29,13-7-91

ஓ! ஓ! தமிழர்களே!

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய, இவ்விழாவின் ஒரு பகுதியாகிய, அறிஞர்கள் பாட்டரங்கிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும். தலைவர் அவர்களே!

நீண்ட காலமாகவே தமிழினத்திற்கும் தமிழ் மொழி விடுதலைக்கும், தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றி வருகின்ற என் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பாச்செம்மல் அரு கோபாலன் அவர்களே! இங்கே தலைமையுரையாற்றிய தமிழின விடுதலைக் கழக நெறியாளரும் பேரறிஞருமாகிய இராமதாசு அவர்களே காலையில் பாவரங்கத்தில் கலந்து கொண்டு. இருக்கிற பாவலர் பெருமக்களே! இளையோர் அரங்கத்திலே மிகச்சிறந்த கருத்துகளை வழங்கிய பறம்பை அறிவனார் அவர்களே! செல்வி முத்து வள்ளியம்மை அவர்களே! தஞ்சைப் பல்கலைக் கழகத்திலே அகரமுதலித் தொகுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருக்கிற சொல்லாய்வறிஞர் அருளி அவர்களே! பாவேந்தர் பாரதிதாசனாரின் பாட்டரங்கத்தில் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களே! மற்றும் இந்த 'உலகத் தமிழின முன்னேற்றக் கழக'த்தின் பெரியார் மாவட்டத்தின் இரண்டாவது மாநாட்டை மிகவும் அரும்பாடுபட்டு, இக்கட்டான இக்காலச் சூழ்நிலையில், உட்பகைக்கும் அஞ்சாது, இம்மாநாட்டைக் கூட்டி மிகவும் எளிமையாகவும், வலிமையாகவும், சிறப்பாகவும் தொண்டு செய்து கொண்டிருக்கின்ற என் அருமை நண்பர் பெருமைக்குரிய நம்முடைய புலவர். அரசமாணிக்கனார் அவர்களே! அவருக்கு மிகவும் தோன்றாத் துணையாக இருந்து உறுதுணையாக நின்று எல்லா நிகழ்ச்சிகளிலும் பல சிறப்பு நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிற மதிப்பிற்குரிய புலவர் வடிவேலனார் அவர்களே! காலையிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்து கொண்டிருக்கிற பெரியோர்களே! சான்றோர்களே! அறிஞர் பெருமக்களே! தமிழ் உணர்வுள்ள இளைஞர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவர்க்கும் என்னுடைய அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்

முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்!

இம்மாநாட்டில் காலையிலிருந்து மாலைவரை பல வகையான கருத்துகள் பேசப்பட்டன. அந்தக் கருத்துகளைப் பற்றி ஒருவாறு உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அந்தக் கருத்துகளிலே என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பாவலர் அரு.கோபாலன் அவர்கள். உலக அளவிலே இன்றைக்கு (குவைத்தில்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பெரும்போர் என்கின்ற அந்த நிலையை விளக்கிக் காட்டி, அதற்கும் நமது தமிழின விடுதலைக்கும் எந்த வகையிலே தொடர்பு இருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இனத்தாக்கம் எப்படி ஏற்படுகிறது; அதற்கு உலக அளவிலே எந்த எந்த அளவிலே முயற்சிகள் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் ஒர் அரசியல் கோணத்தில் எடுத்துக் காட்டினார்கள்

அதேபோல் காலையிலே நடைபெற்ற பாட்டரங்கத்திலே பலவாறான வல்லாண்மைத் தன்மைகளையெல்லாம் தமிழினத்தவர் மேல் எப்படி மாற்றவர்கள் கொண்டு செலுத்துகிறார்கள் என்பதையெல்லாம் பாவலர்கள் தெளிவாகப் பாடினார்கள்.

தமிழின முன்னேற்றத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகள்!

அதேபோல், அறிஞர்கள் தமிழின நலன்களையும், தமிழ்க் கல்வியின் தேவைகளைப் பற்றியும் நல்லபடியாக விளக்கினார்கள்

இந்த நிலைகளையெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் ஒரு பொதுவான உணர்வுக்கு வந்திருப்பீர்கள், தமிழ்மொழி முன்னேற்றம் அடைவதற்குப் பலவகையான தடைகள் இங்கே இருக்கின்றன. தமிழினம் தன்னை உணர்வதற்குப் பலவகையான எதிர்ப்புகள், தாக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு உரிமை பெறுவதற்குப் பலவகையான நிலைகளிலே தமிழினப் பகைவர்களாக இன்றைக்கு இருக்கின்ற இனப்பகைவர்கள், அரசியல் பகைவர்கள் எல்லாம் எந்தெந்த வகையிலே தடையாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். இந்த உணர்வுகளெல்லாம் இன்றைக்கு நாங்கள் ஏதோ புதிதாக ஊட்டுகிற உணர்வுகளாக நீங்கள் கருதிக் கொள்ளக் கூடாது. அது ஏதோ உங்களுக்குத் தெரியாத செய்தியை நாங்கள் சொல்ல வருகிறோம் என்றும் கருதிக் கொள்ளக் கூடாது. தமிழ் இன விடிவுக்காகவே, உரிமைக்காகவே, முன்னேற்றத்திற்காகவே, விடுதலைக்காகவே ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டை, இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே செலவிட்ட தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய உணர்வுகளைத்தாம் நாமெல்லாம் அப்போதைக்கப்போது புதுப்பித்துக் கொண்டு வருகிறோம். திரும்ப செய்து கொண்டு வருகிறோம். அவற்றை நடைமுறை நிலையிலே - நடைமுறை அரசியலுக்குப் பொருந்திய வகையிலே - நடைமுறை வரலாற்றியலுக்குப் பொருந்திய வகையிலே - பொருளியலுக்குப் பொருந்திய வகையிலே அதை விரிவாகப் பேசிக்கொண்டு வருகிறோம். என்னைப் பொறுத்த வரையிலே இந்தச் சிந்தனைகளெல்லாம் ஏற்கெனவே தோன்றி வளர்ந்து பரப்பப்பெற்ற சிந்தனைகள் தமிழைப் பற்றியோ, தமிழின வரலாற்றைப் பற்றியோ, தமிழ் உரிமைகளைப் பற்றியோ இனியாரும் புதிதாகக் கருத்துகளைச் சொல்லி விட முடியாது: சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை

பேசிப் பெருமை பெறலாம்;
செயலுக்கு வருவது எப்போது?

இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் சரி, அல்லது அடுத்த நூற்றாண்டுகள் ஆனாலும் சரி. இதே கருத்தைத்தான் நாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருப்பதன் வழி, அவரவர்கள் பெரிய அறிஞர்களாகவும், பெரிய தலைவர்களாகவும் தகுதி உடையவர்களாகவும். மதிக்கப் பெறுவார்களே தவிர, கருத்துகளைப் பொறுத்த அளவிலே அதைச் செயலுக்குக் கொண்டுவர இயலுமா? அப்படிச் செயலுக்குக் கொண்டு வர என்ன வகை - என்ன வகையிலே அதைச் செயல்படுத்தலாம் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். தமிழைப் பற்றிப் பேசினால் தமிழறிஞர் எனப்பாராட்டுப் பெறலாம்: தமிழைப் பற்றிப் பாடல்கள் பாடினால் பாவலர்கள், பாவேந்தர்கள் என்றெல்லாம் சிறப்புப் பெறலாம். பரிசுகள் பெறலாம்; மக்களால் வாழ்த்தப் பெறலாம். அதேபோலத் தமிழின வரலாறுகளை எடுத்துச் சொல்லித் தமிழ் இனநல உணர்வுகளை நாம் மக்களிடத்திலே பரப்ப முயன்றால் அதற்கும் ஒரு வழியிலே சிறப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்

என்னைப் பாராட்டுவதும் எனக்கு
வெட்கத்தையே தரும்

மிகவும் வெட்கத்தோடு ஒரு செயலைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: இம் மாநாட்டில் காலையிலிருந்து மாலை வரை, அறிஞர்கள் பேசிய பேச்சுகளிலே அடிக்கடி என்னுடைய எளிமைத் தொண்டை - ஒரு முயற்சியை இந்தத் தமிழின மக்களுக்குச் செய்யப்படவேண்டிய இன்றியமையாத செயலை - கடமையை அடிக்கடி நினைவூட்டி எதற்கும் பற்றாத என்னொடு பொருத்திச் சொன்ன அந்தச் சொற்கள் எனக்குப் பெரிய நாணத்தையும் வெட்கத்தையும் தந்தன என்று சொன்னால், அது உங்களுக்கு விளங்குமோ விளங்காதோ தெரியவில்லை.

பெரும்பாலும் பாராட்டுவதே நம்
இலக்கியங்களாக இருக்கின்றன

எனவே வருத்தத்தோடு சொல்லிக், கொள்கிறேன்: தமிழினத்திலேதான் - தமிழர்களிடத்திலேதான் ஒருவரை ஒருவர் பாராட்டுகிற உணர்ச்சி அதிகமாக இருக்கிறது. நம்முடைய மதிப்பிற்குரிய சண்முக சுந்தரனார் இங்கே குறிப்பிட்டார்கள்-அறிஞர் பெருமக்களைப் பாராட்டுகிறபொழுது, பாராட்ட வேண்டும் என்று சொன்னார்கள். பாராட்ட வேண்டியதுதான். ஆனால் பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற அந்த உணர்வு எனக்குச் சரியாகப் படவில்லை. நம்முடைய தமிழ் இலக்கிய வரலாற்றிலே, இன வரலாற்றிலே, அரசியல் வரலாற்றிலே நிறைய ஏராளமான அரசியல் கருத்துகளும், அறவியல் கருத்துகளும், அகவியல் கருத்துகளும், புறவியல் கருத்துகளும், இருக்கின்ற அதே தன்மையிலே, ஏராளமான பாராட்டுதல்களையும் பார்க்கலாம். அரசர்களையும், செல்வர்களையும், வள்ளல்களையும், புலவர்கள் தங்களுடைய அறிவுப் புலமையினாலேயே, என்னென்ன கோணங்களிலே அவர்கள் பாராட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கின்றவர்கள் மறந்துவிட முடியாது

திருவள்ளுவர் எவரையும் பாராட்டியதில்லை:
திருவள்ளுவரையும் எவரும் பாராட்டவில்லை

மிக வருத்தத்தோடு ஒரு புதிய செய்தியை நினைவூட்ட விரும்புகிறேன். இதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். நம்முடைய தமிழிலக்கிய வரலாற்றிலே காணப்பெறுகின்ற புலவர்கள் அனைவரும் ஒரு பணியும் செய்யாதவர்கள். எந்த வேலையும் செய்யாதவர்கள். எந்தப் புலவராவது எங்காவது வேலை செய்ததாக எந்தக் குறிப்புமில்லை. திருவள்ளுவர் ஒருவர்தாம் வேலை செய்து பொருளிட்டிக் கூலி பெற்று வாழ்ந்து கொண்டிருந்ததாக நமக்கு வரலாறு கிடைத்திருக்கிறது. அரசமுறை (தர்ம)ப் பணியை அவர் செய்தார். செய்தி அறிவிப்பாளராக அவர் இருந்தார் என்று சொல்லுகிறபோது, அவருடைய நூலைப் பார்க்கிற பொழுது, அவர் அந்தப் பணியைச் செய்து கொண்டு அதனால் வந்த வருவாயைப் பெற்றுப் பிழைத்திருக்கிறாரே தவிர, அவருடைய புலமையை விற்றுப் பிழைக்க வில்லை. எந்த அரசரையாவது திருவள்ளுவர் பாராட்டியிருக்கிறார் என்ற ஒரு பாட்டைக் காட்ட முடியாது. எந்த அரசரும் அவரைப் பாராட்டியதாக ஒரு செய்தியும் காட்டமுடியாது

ஏன் நான் இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் நம்முடைய புலவர்கள் வரலாற்றிலே திருவள்ளுவர் ஒருவர்தான் வேறு கோணங்களிலே கருத்துகளைச் சொன்னவர் என்னென்ன கருத்துகளை என்று சொன்னால், இயல்பான எல்லாப் புலவர்களும் இலக்கியங்களைப் பாடிக் கொண்டிருந்தபொழுது, அகவியல் பாடல்களையும், புறவியல் பாடல்களையும் அரசர்களின் மேல் ஏற்றிச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது-அவற்றிற்காகப் பரிசுகளையும், பெருமைகளையும், வாழ்வியல் நலன்களையும் பெற்றுக் கொண்டிருந்த பொழுது, இந்தத் தமிழின மக்களுக்காகப் பல வரலாற்று நிகழ்ச்சிகளை அவர்கள் என்றென்றும் நினைவிலே வைத்திருக்கவேண்டும் என்பதற்காக, முற்றிலும் அப்பொழுதிருந்த இலக்கிய வழக்குக்கு மாறுபட்ட நிலையில் ஒரு நூலைச் செய்திருக்கிறார். திருவள்ளுவர்

தமிழ் இனநலத்துக்கான ஒரு நூல் திருக்குறளே!

நன்றாக நீங்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். திருக்குறள் ஓர் அறவியல் நூல்: ஒரு வாழ்வியல் நூல்; ஒரு நீதி நூல்: இலக்கிய நூல் என்று நாம் வகையிலே, மிகச் சிறந்த நூல் என்ற நிலை இருந்தாலும்கூட, அது நமது தமிழ் இனத்திற்காகப் பாடிய நூல் என்பதை மறந்துவிடக்கூடாது; மறுக்கவும் முடியாது

ஓர் இனத்தின் வரலாற்று நிலையிலே, ஏதோ ஒரு வகையிலே, தன் நிலையைத் தமிழினம் இழந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துதான் திருவள்ளுவர் திருக்குறளைப் பாடினார். வேறு இலக்கியங்களைத் திருக்குறளோடு ஒப்ப வைத்துப் பார்க்கிறபோது, இது ஏதோ ஒரு புதுமையான இலக்கியம் செய்யவேண்டும் என்பதற்காக அவர் இதைச் செய்ததாகத் தெரியவில்லை

'சிற்றினம்' என்று திருவள்ளுவர்
யாரைக் குறிப்பிடுகிறார்?

இதில் "சிற்றினம் சேராமை" என்ற ஒர் அதிகாரம் இருக்கிறது. அறத்துப் பாலிலே ஆயிரக்கணக்கான குறிப்புகளை என்னாலே கொடுக்க முடியும், ஆனால் அது திருக்குறளைப் பற்றிய சொற்பொழிவாகப் போய்விடும் என்பதால் அவற்றையெல்லாம் நினைவுகூர விரும்பவில்லை. இந்தச் "சிற்றினம் சேராமை" என்றால் என்ன...இன்றைக்குவரை நமக்கு என்ன பொருள் சொல்லப்படுகிறது. சிறிய இனத்தவர்களோடு சேர்ந்து கொண்டு. அரசன் தன்னுடைய ஆட்சி அமைப்புகளை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டதாக நாம் நினைக்கிறோம். அவ்வாறு இல்லை

திருவள்ளுவருடைய நோக்கிலே பெரியவர்கள் சிறியவர்கள் என்கிற நிலை,தன்மை இருந்தாக நமக்குத் தெரியவில்லை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! என்ற சிறந்த மெய்ப்பொருள் உணர்வைப் பெற்று, மெய்யுணர்வைப் பரப்பிய ஆசிரியர் திருவள்ளுவர். அவர் சொன்ன "பெரியாரைப் பிழையாமை" என்கின்ற அதிகாரம்; அதே போல் "சிற்றினம் சேராமை" என்கின்ற அதிகாரம்: ஆக இரண்டை மட்டுமே சீர்தூக்கிப் பார்த்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். "சிற்றினம்" என்று சொல்லுவது தாழ்ந்த தன்மையுடைய குணநலன்களிலே மிகவும் எளிமையாக இருக்கின்ற தீயவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள், நடைமுறையிலே இழிந்தவர்கள் என்றெல்லாம் பொருளில்லை. அப்படி ஒரு மக்கள் இனத்தைப் பிரிக்க வில்லை, திருவள்ளுவர். சிற்றினம் என்பது சிறுபான்மை மக்கள் (minority people). அதை நீங்கள் நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ளவேண்டும். இன்றைக்கு யார் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்கள்? அன்றைக்கும் அவர்கள்தாம் சிறுபான்மை மக்கள். நூற்றுக்கு மூன்று விழுக்காடு என்று நாம் எந்த இனத்தைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறோமோ, அவர்கள்தாம் "சிறிய இனம்". அந்தச் சிறிய இனத்தவர்களிடத்திலே அரசர்கள் இணங்கிப் புழங்கிக்கொண்டு. இந்தத்தமிழின மக்களைத் தாழ்த்துகிற அந்த வரலாற்று நிலை நடந்து கொண்டிருந்தது. அன்று திருவள்ளுவர் அதை எச்சரித்திருக்கிறார். சிற்றினம் சேராமை என்று அதற்கு முன்னால் நீங்கள் எங்கேயாவது எந்த இலக்கியத்திலாவது இந்தச் சொல்லைக் காட்ட முடியுமா?

இதை எதற்குச் சொல்லுகிறேன். திருக்குறளிலே என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விரிவாகச் சொல்லத் தொடங்கினால், இந்த இனத்தினுடைய தன்மைகள் அப்படியே-அந்தக் காலத்திலே, தொடக்கத்திலே எப்படி இருந்ததோ அப்படியே தெளிவாகக் கண்ணாடி போலப் பார்க்கலாம். அதையே மூடி மறைத்து விட்டார்கள். அது பெரிய தர்ம நூல்,அற நூல் என்றெல்லாம் பெருமைப் படச்சொல்லி, ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டார்கள். நாம் உணராதபடி ஆக்கிவிட்டார்கள்

ஏற்பட்டுவிட்ட தமிழின வீழ்ச்சி!

இவற்றையெல்லாம் எதற்குச் சொல்கிறேன். ஒரு பார்வைக்காக ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். இந்த இனம் இன்றைக்கு நேற்றன்று;வீழ்த்தப்பட்ட அந்த நிலை. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீழ்த்தப்பட்டது. அதற்கும் இந்த நாட்டிலே வந்த வேற்று இனத்தவரான ஆரியர்களுடைய வருகைக்கும் தொடர்பு இருந்தது. இதை யாரும் மறுக்கமுடியாது. அதற்கு முன்னால் இருந்த தமிழினத்தினுடைய தன்மைகள் பெருமைக்குரியனவாக இருந்தன என்பதை நாம் பார்க்கிறோம். தமிழ்மொழியினுடைய தன்மை மிகச் சிறந்திருந்தது. அதையும் பார்க்கிறோம். படிப்படியாக அந்த நிலைகள் தாழ்த்தப்பட்டு-வீழ்த்தப்பட்டு- இழிக்கப்பட்டு-மறக்கடிக்கப்பட்டு-இந்த இனம் ஒர் ஏமாளித் தன்மைகொண்ட இனமாக - அடிமை இனமாக-உரிமையற்ற இனமாக-ஆக்கப்பட்ட நிலைகள்தாம் இடையிலே வந்த வரலாறுகள். கம்பன் காலத்திலே-சமய நிலைகளெல்லாம் விளங்கி நின்ற காலங்களிலே. அதற்குப் பின்னாலே வேற்று அரசர்கள் இங்கு வந்து ஆண்ட காலங்களிலே, அதற்குப் பின்னால் இந்தியாவைச் சேர்த்து இந்தத் தமிழினம் அடிமைப்பட்ட அந்த நிலைகளியிலே, இன்றுவரை இந்த இனத்தினுடைய வீழ்ச்சி படிப்படியாக எப்படி நிகழ்வுற்றது என்பதை நாம் பார்க்கிறோம், வரலாறுகளிலே. இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக எடுத்துச் சொல்லி, இத்தமிழினத்தை விழிப்படையச் செய்து விடவேண்டும் என்கிற முயற்சி ஒரு சிறு எல்லைக்குள் நடந்து முடிந்துவிடும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை

பலவேறு தமிழின முன்னேற்ற முயற்சிகள்:

தந்தை பெரியார் அவர்கள் அவர் காலக்கட்டத்தில் செய்த முயற்சிக்கும், அவரைத் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் செய்த முயற்சிகளுக்கும், இப்போது நாங்கள் செய்கிற முயற்சிகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். என் அன்புக்கும் பெருமைக்குமுரிய அறிஞர் பெருமகனார் வழக்குரைஞர் இராமதாசு அவர்கள் சில கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். அவர் சிறந்த பேரறிஞர் ஆவார். நான் விளையாட்டிற்காக அவரை வைத்துக் கொண்டு சொல்லவில்லை. முதுகலைப்பட்டப்படிப்பே மூன்று நான்கு படித்த ஆன்றவிந்து அடங்கிய கொள்கை சான்ற பேரறிஞராவார். அதே போல என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அன்பர் அரு.கோபாலன் அவர்கள் இன்றைக்கு நேற்றன்று: கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக இதே தமிழ் உணர்வோடும் எவ்வாறாகிலும் இத்தமிழினம் முன்னேறவேண்டும் என்ற வேட்கையோடும் - வேட்கை என்பது மட்டுமன்று அதையே வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். எனவே அவரால் முன்னேற முடியவில்லை, முன்னேற முடியவில்லை என்பதை அவர் வாழ்க்கை நிலைகளிலிருந்துதான் சொல்ல முடியுமே தவிர, அறிவிலே-முயற்சியிலே - சிந்தனையிலே ஏராளமான முன்னேற்றமடைந்திருக்கிறார்:

நம்முடைய முயற்சிகள் வெற்றியடையாமைக்கு
நம்மவர்களே காரணம்!

இவர்களெல்லாரும் எங்களோடு சேர்ந்து, நாங்கள் அவர்களோடு இணைந்து நின்று, அதே பெரியாருடைய தொடக்கக் காலத்துக் கருத்துகளை வேராகக் கொண்டு அவர் கூறிய திராவிட மரபு, திராவிட நிலைகள் என்று சொன்னதற்குமேல், அதற்குமுன் தமிழியமாகத் தமிழின நிலைகளையெல்லாம் வரலாற்றையெல்லாம் சிந்தித்து, இனி நாம் எப்படி இருக்க வேண்டும், எந்த முயற்சிகளைச் செய்தால் அந்த நிலைக்கு இந்த இனத்தைக் கொண்டு வர முடியும் என்கிற தன்மையில், இயங்கிக் கொண்டிருக்கிற அந்த நிலைகள் வேறு. தந்தை பெரியார் அவர்கள் அந்தக் காலத்திலே திராவிட இயக்க உணர்வோடு செய்து கொண்டிருந்த அந்த முயற்சிகள் வேறு; ஆனால் தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியையே ஒன்றுமில்லாமல் முறியடித்து விட்டார்களே. யார் முறியடித்தது? நம் எதிரிகளல்லர்; நம்மவர்களே! நீங்கள் இதை மறந்து விடக் கூடாது

நான் இதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு பாடலில் சொல்லியிருக்கிறேன். தமிழ் இனத்திற்கு இன்றைக்கு வரைக்கும் வந்திருக்கின்ற தீங்குகள், துன்பங்கள், இடர்ப்பாடுகள், வரலாற்றின் அடிப்படையிலே புள்ளிபோட்டு, எடுத்துச் சீர் தூக்கிப் பார்த்தோமானால், நமது வீழ்ச்சிக்கும் நம் உரிமைக்கும் நம் உரிமை இழப்புகளுக்கும் அறியாமை நிலைகளுக்கும் அடிப்படையான காரணங்கள் எதிரியினுடைய தாக்குதல்களால் ஏற்பட்டவையாகத் தெரியவில்லை. நம் இனத்தினுடைய காட்டிக் கொடுப்பினாலே ஏற்பட்ட தன்மை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது

பலவேறு காரணங்களுக்காகக் காட்டிக்
கொடுத்தார்கள்

இராமாயண காலத்திலிருந்து இந்த இனத்தை அரசியலுக்காகவும் பொருளியலுக்காகவும், மதத்துக்காகவும் சாதிக்காகவும், பண்பாட்டுக்காகவும், மொழிக்காகவும் காட்டிக் கொடுத்தவர்கள் பலபேர். பலகாலங்களிலே பல அறிஞர்கள், தலைவர்கள் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் எல்லாருமாக இருந்து, தம் இனத்தவர்களைப் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இந்தச் சிறந்தத் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து அழிவைச் செய்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நிலைவரை அழிப்பு வேலைகள் நடந்துகொண்டுதாம் இருக்கின்றன. எதிரியாக மற்றபடி நம்மைப் பகைவர்களாகக் கருதுகின்றவர்கள் எங்கேயோ இருந்து கொண்டிருக்கின்றவர்கள் நம்முடன் நேரிடையாக வந்து மோதவில்லை. ஆட்சியிலே இருக்கும் ஆட்சியாளர்களின் துணையோடு-பெரிய முதலாளிகளின் உற்ற துணையோடு சேர்ந்து, நமக்கு எவ்வளவு அழிவு வேலைகளைச் செய்ய வேண்டுமோ, அத்தனை அழிவுகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மீட்சியுறுவதும் கடினம்!

எனவே, ஏதாவது ஒரு சிறு நிலையிலே சிறிது முயற்சி செய்து, அல்லது சிறிய துறையின் மூலம் முயற்சி செய்து வென்றெடுக்க முடியாது; அரசியலிலே மட்டும் மிகவும் விழிப்பாக இருந்து ஆளுமை பெற்று ஆட்சியைக்கைப்பற்றித் தமிழினத்தை மீட்டுவிட முடியாது. அல்லது பொருளியலில் மட்டும் எந்த அளவு கவனம் செலுத்தமுடியுமோ. எந்த அளவு கவனம் செலுத்தி முதலாளியத்தைப் போராடி ஒழித்துப் பொருளியல் விடிவை-முன்னேற்றத்தைப் பெற்றுத்தர முடியுமோ. அந்த அளவு பெற்றுத் தந்தால் கூட இந்த இனம் முன்னேறிவிட முடியாது

நன்றாக நீங்கள் சிந்திக்கவேண்டும். அதேபோல கலைக்காகவோ பண்பாட்டுக்காகவோ, அவற்றிலே மட்டும் கவனம் செலுத்தி, நம்முடைய பழைய கலைகளையும் பண்பாட்டியல்களையும் அதன் வகையான ஆராய்ச்சிகளையும் முயற்சிகளைச் செய்து, அதற்காகப் போராடி இந்த இனத்தை மீட்டுவிட முடியாது. அதே போல், மொழியியல் அடிப்படையிலே மட்டுமே தமிழ் மொழிக்கு இதுவரைக்கும் ஏற்பட்டுள்ள தாழ்ச்சிகளை தாக்கங்களை அழிவுகளைக் கூறி, தமிழ்மொழியின் உண்மையான தன்மைகளை ஆற்றல்களை இயற்கைச் சிறப்பியல்களை அறிஞரிடம், உலக அறிவு அவையிடம் மக்களிடம் எடுத்துக்கூறி மட்டும், இந்த இனத்தை மீட்டு விடமுடியாது

அதே போல், வேறு நிலைகளிலே ஆரியத்தோடும் முதலாளியத்தோடும் போராடி நம்முடைய விரிவான உரிமையற்ற, மூடநம்பிக்கைகளை, மத, சாதி இழிவுகளை மட்டும் கூறி இந்த இனத்தை விடுவித்து விடமுடியாது,

பின் என்ன செய்ய வேண்டும்?

பின்னே என்ன செய்யவேண்டும் என்று சொன்னால், இந்தத் தன்மைகள் அனைத்திலும் மிகத்தெளிவான சிந்தனையுடைய, சிந்தனை, அறிவாற்றலுடைய அதுவும் இவை தற்கால அரசியலொடும், பொருளியலொடும், இனவியலோடும், பண்பாட்டியலோடும், மொழியியலோடும் பின்னிப் பிணைந்து இருக்கிறது என்கிற அந்த நிலையை மக்களிடையே பரப்பவேண்டும். நம்முடைய கருத்துகளையும் அறிஞர் பெருமக்கள் கருத்துகளையும் கலந்துரையாடி, அவற்றில் முகாமையான கருத்துகளை மேம்படுத்தி மக்களிடம் எடுத்துக் கூறித் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தால் படிப்படியாக - சிறிது சிறிதாக மீட்டுவிக்க நம் இன மக்களை விடுவிக்க முடியும். தந்தை பெரியாரின் சிந்தனை வெளிப்பாடுகள்:

இந்த முயற்சிகளைத் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலேயே, அவர் முழுமையாக எண்ணியிருந்தாலும், தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனைகள்.இந்த இனத்தின் முன்னேற்றக் கருத்துகள் இப்போதைய முன்னேற்றத்திற்கு மட்டுமன்று, இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவையானவை. இதற்கு யாரும் மாற்றுக்கருத்துக் கூற முடியாது. வேறு எவரும் இத்தகு எதிர்ச் சிந்தனையைச் செய்து விட முடியாது. எவை எவை நல்லவை என நினைத்துக் கொண்டிருந்தோமோ, அவையெல்லாம் நம்மை அடிமைப்படுத்தும் கூறுகள் என அவரைப்போல் வேறு யாரும் எடுத்துக் கூறியிருக்க முடியாது.

'திருமணமா, அது எதற்கு? தேவையில்லை' எனக் கூறுவார். 'கலையா, அது எதற்கு?’ என்பார் எந்தக் கலைகள் உயர்ந்தவை என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ, அவையெல்லாம் இந்த இனம் தாழ்ந்து போனதற்கான காரணங்களென்று வெளிப்படையாகக் கூறியவர். அவர் இதுபோல வேறு எந்த இனத்திலும், இந்தியாவில் மட்டுமன்று, உலக அளவிலேயே இம் மாதிரிச் சிந்தனைகள் இதுவரை தோன்றவில்லை. அப்படித் தோன்றியிருந்தால், யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த இனத்திலே இவர் இருந்தார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒருவருமில்லை. அந்த அளவுக்கு அம்மணமாகச் சிந்தித்தவர் எந்த வகையான உலகியல் பூசல்களும் ஒட்டாதபடி ஒதுக்கி தனிச் சிந்தனையாகப் பிரித்துச் சிந்தித்தவர். இதில் யாரும் ஐயுற முடியாது. அவரது சிந்தனையைத் தவறானது என்று யாராவது சொன்னால், அவருடைய கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள் ஏனென்று சொன்னால், நாங்கள், பெரியாரியவை, திருக்குறளை நாங்கள் எப்படி ஆராய்கிறோமோ, அப்படி ஆராய்கிறவர்கள். அவருடைய சிந்தனையிலே பிழையேயில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பிழை இருந்தது; இருக்கிறது. ஆனால் அந்தப் பிழைகளுக்கும் பின்னால் அவரே தீர்வு கண்டார். தனித்தமிழ் நாட்டுக் கொள்கையைக் கண்டார்

கடவுளைப் பற்றி நாம் கவலைப்பட
வேண்டியதில்லை:

பேரறிஞர் இராமதாசு அவர்கள் கூறியதைப் போல புலவர் திரு.அரசமாணிக்கனார் அவர்கள் 'தமிழும், நாத்திகமும் இரு கண்கள்' என்று கூறினார்களே, அதே போல, கடவுளை மறுக்கின்ற அந்தத் தன்மை, இந்தத் தமிழினத்துக்கு வேண்டும் என்பதற்காக அதைச் சொன்னார்கள். இந்தத் தமிழினத்துக்கு அடிமை எண்ணம் ஒழிய வேண்டும் என்பதற்காக உரிமையை மீட்க வேண்டும் என அவற்றைச் சொன்னார். அவர் கூறிய கருத்து சரியா இல்லையா என்பது பற்றி நாம் ஆராய வேண்டிய தேவையில்லை. அந்த வகையிலே காலத்திற்கேற்ற கருத்துகளாக அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்றுகூட அதைச் சொல்லலாம். ஏன் கடவுள் மறுப்பு கருத்துகள்? கடவுளை அவனுக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றான்; பார்ப்பனியத்துக்குச் சொந்தமானது தெய்வங்களெல்லாம் என்று கூறிக் கொண்டிருக்கின்றான், பார்ப்பான்!

"தெய்வாதீனம் ஜத் ஸர்வம்:
மந்த்ரா தீனந்து தெய்வதம்:
தன் மந்த்ரம் பிராமணா தீனம்:
பிராமணா மம தெய்வதம்:"

என்று சொல்லி மற்றவர்க்கெல்லாம் பிராமணர்கள்தாம் தெய்வங்கள். அவர்களை நீங்கள் வணங்குங்கள்’ என்று சொன்னால் அந்தத் தெய்வங்கள் ஒழிக்கப்பட வேண்டியவையா இல்லையா?

நீங்கள் (கடவுளைப் பற்றிய கருத்து பற்றி) சரியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா அல்லது தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்பது பற்றி எங்களுக்குத் தேவையில்லை.

திரு.அரு.கோபாலனுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறதா, அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எனக்கு இருக்கிறதாக அவரும் கவலைப்படத் தேவையில்லை; திரு.இராமதாசு அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எங்களுக்குத் தேவையில்லை. திரு.அரசமாணிக்கனார்க்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பது பற்றி எங்களுக்கு அக்கறையில்லை

இனம் மீட்கப்பட வேண்டும் என்பதே
எங்கள் கொள்கை:

இந்த இனம் முன்னேற்றப்படவேண்டும். இந்த இனத்தின் அடிமைத் தன்மை ஒழிக்கப்பட வேண்டும்; நீக்கப்படவேண்டும்; அறியாமை ஒழிக்கப்பட வேண்டும்; மூடநம்பிக்கை தகர்க்கப்படவேண்டும்; மத இழிவுகள் அழிக்கப்படவேண்டும்; சாதிப் பூசல்கள் ஒழிக்கப்பட வேண்டும் - அடியோடு தொலைக்கப்பட வேண்டும்: இவைதாம் - இந்த நெருக்கடியான . இக்கட்டுகளிலிருந்து இந்த இனத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முயற்சிகளும், பேச்சுகளும், எழுத்துகளும், செயல்களும், இதுவே ஒரு புதுமையான உலகத்துக்கு 'புதியதோர் உலகம் செய்வோம்' என்று பாவேந்தர் பாடலாகச் சொன்னாரே அது போல வழிகாட்டும்.

பாரதியும் பாரதிதாசனும்!

பாரதிதாசன் என்று நான் சொல்ல மாட்டேன் என அய்யா (எசு.டி.விவேகி) அவர்கள் சொன்னார்களே, அதுபோல, நாங்கள் பாரதிதாசன் என்று சொல்வதில்லை. தேவையில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? பாரதியாரைத்தான் அவர்கள் பாராட்டுகிறார்கள். நம்மவர்களும் பாரதியார் பெயரைச் சொன்னால்தான் தங்களுக்குப் பெருமை என அறிஞர்களும்,புலவர்களும், பேராசிரியர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பாரதிதாசன் என்று அவர்தம் பெயரை வைத்துக்கொண்டதால் தான் அவருக்கு இந்த அளவுக்காவது பெயர் கிடைத்தது. பாரதிக்குத்தாசன், பாரதிக்குத்தாசன் என்று அவர்கள் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்குப் பெருமை. எங்கள் பாரதியாருக்கு ஒருதாசன். அவரும் தெரிந்து வைத்துக் கொண்டாரோ இல்லையோ. அந்த நிலையிலே அவர்கள் காலத்தின் ஆழமான வரலாற்றுத் தன்மைகள் என்ன, பாரதியின் நிலை என்ன என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று; நான் பாவேந்தர் அவர்களிடம் நேரிடையாகப் பழகியதாலே, சொல்லுகிறேன். பாரதியாரைப் பற்றி எது சொன்னாலும் உடனே சினம் வரும்; அவரைப் பற்றிக் குறைத்துச் சொன்னாலும் தவறு என்பார். சினங்கொள்வார். ஆனால் பாவேந்தர் அவர்கள். இயற்கையுணர்வு உடையவர் ஆனதினாலே - பாவலர் தன்மை உடையவர் என்பதனாலே - இந்த வகையிலே அவர் தெளிவாக அவருடைய கொள்கையை வகுத்துக் கொண்டிருக்க முடியாது. பாவேந்தரைப்போல் பார்ப்பனீயத்தை மிகக் கடுமையாக எதிர்த்த தமிழறிஞர் - பேரறிஞர் - வேறெவருமே இல்லை. ஆனால் பாரதியார் மேல் ஆசிரியப் பற்று கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்கள் இருவருமே நெருக்கமாகப் பழகினார்கள். உண்பதிலிருந்து உறங்குவது வரை இரண்டுபேரும் மிகவும் ஒன்றியிருந்தவர்கள். இதை அவர் வாயாலேயே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பாரதிக்குத் தாசன் என்பதால்தான் பாரதி தாசனைப்
பற்றிப் பார்ப்பனர்கள் பேசுகிறார்கள்:

எனவே பாரதிதாசன் என்று தொடக்கத்தில் நமது விவேகி அவர்களிடத்திலே குறிப்பிட்டதைப் போலே 'அதைத் தவறாக வைத்துக் கொண்டேன்’ என்று சொல்லியிருந்தாலுங்கூட, அப்படி வைத்துக் கொண்ட பெயரைத்தான் வளர்த்தெடுக்க எதிரிகள் விரும்பினார்கள்; இன்றைக்கும் விரும்புகிறார்கள். பாவேந்தர் என்ற சொல் அவர்கள் வாயிலே வராது. பாரதிதாசன் என்று சொல்லில் தான் அவர்களுடைய பாரதியும் இருக்கிறார். அவர்கள் நினைக்கும் தாசனும் இருக்கிறார். பாரதிதாசனுக்கு இப்போது கிடைக்கும் கொஞ்ச நஞ்சம் மதிப்பு கூட தொலைக்காட்சியிலே அவரின் பாடல்களை-திரைப் படங்களிலே அவருடைய பாடல்களை-அல்லது ஏதாவது சொற்பொழிவு பேச்சுகளிலே, பட்டிமன்றங்களிலே, பாட்டரங்குகளிலே, மேடைகளிலே, அவருடைய தனித்தன்மைகளை எடுத்துச் சொல்கிறார்கள் என்று சொன்னால், அதில் பாரதிக்குத் தாசன் என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்கவேண்டும்: என்பதே அவர்களுடைய நோக்கம். பார்ப்பனீயத்தின் நச்சு வேர் அதுதான். அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நம்மவர்கள் அதை விளங்கிக் கொள்வதே இல்லை, இன்றைக்கு நம்முடைய சண்முக சுத்தரனார் சொன்னது போல நம் புலவர்களை நாம் பாராட்டத் தவறினால், அவர்கள் வலிய வந்து கூப்பிட்டு உடனே பாராட்டத் தொடங்கி விடுவார்கள்: நாமோ ஒரு சிறிய படத்தைக் கண்ணாடிச் சட்டம் போட்டுக் கொடுத்தால், அவர்கள் ஒரு பெரிய நூலே வெளியிட்டு விடுவார்கள். ஆகையினாலே நம்மவர்களும் நம் புலவர்களும், அறிஞர்களும் அவர்களால் ஈர்க்கப் பட்டு-வளர்த்தெடுக்கப்பட்டு-அவர்களால் பெருமைப்படுத்தப்பட்டு, வையாபுரிகளாகவும், தெ. பொ. மீக்களாகவும், பக்தவச்சலங்களாகவும், சுப்பிரமணியன்களாகவும், கண்ணதாசன்களாகவும் இன்றைக்கு இருக்கிற வாழப்பாடிகளாகவும் மாறி விடுகிறார்கள், இன்றைக்கு இதுதான் நிலைமை!

நாம் போற்றிக் கொள்ளத் தவறுபவர்களைப் பார்ப்பான்
போற்றிக் கொள்கிறான்:

இந்த நிலையிலே நாம் சிலரைப் பாராட்டி உண்மையாகவே நம்மிடத்திலே எடுத்து வைத்துக் கொள்வதிலே ஒன்றும் தவறில்லை என்று கூட நான் நினைக்கிறேன். ஏன்? உண்மையும் இதுதான், நம்முடைய நிலைகளிலே ஏன் விபீடணன் இராமனிடத்தில் போய் இராவணனைக் காட்டிக்கொடுத்தான், கதைப்படி நான் வரலாற்றுப்படி கூட சொல்லவில்லை. கதைப்படி சொல்கிறேன். அவ்வீடணன் இராவணனுக்கு உகந்தவன். மிகவும் உயிருக்கு உயிரானவன். பின் ஏன் அவனைக் காட்டிக் கொடுத்தான் என்று சொன்னால், அவனிடத்திலிருந்து அவன் மாறுபட்டான். அரசியலில் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக அவன் எதிரியின் பக்கம் சென்றுவிட்டான். ஏன் இன்றைக்குக்கூட அரசியலில் அது தானே நடக்கிறது. அரசியலில் மட்டுமன்று அறவியலிலும் அதுதானே நடக்கிறது. நமது சிலப்பதிகாரமும், மணிமேகலையும் நமது சேரன் செங்குட்டுவன் கதை களும், கரிகாற் பெருவளத்தான் கதைகளும் தொலைக் காட்சியிலே வருவதில்லை. இராமாயண மகாபாரதக் காட்சிகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. அக்கதைகளைப் படமாக எடுத்தால்தான் அவர்களுக்கு ஆக்கம் பெற முடியும்

இந்தியாவில் உள்ள அத்தனை அறவியல்
கூறுகளுக்கும் தமிழ்தான் மூலம்:

எனவே எந்த நிலையிலும் நாம் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கினாலும், அந்தத் துறையிலும் ஆரியம் தான் மூலம்; பார்ப்பனீயம் தான் மூலம்; அதிலிருந்துதான் தமிழ் வந்தது என்று (நேரெதிராகச்) சொல்லிவிடுவார்கள், பார்ப்பனர்கள் தமிழ்மொழியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா, உடனே நம்மவர்களிலே ஒரு தமிழ் ஆராய்ச்சியாளரைக் கொண்டு வந்து மேடை மீது நிறுத்தி விடுவார்கள். இசைக்கலை, நாட்டியக்கலை இதுபோன்ற கலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்களா-கருத்து தெரிவிக்கிறீர்களா. பார்ப்பனீயந்தான் அதிலும் மூலம் என்று கூறிவிடுவார்கள். இந்தியாவிலே இருக்கின்ற அனைத்து அறிவு நிலைகள், கலைநிலைகள், பண்பியல் கூறுகள், மொழியியல் கூறுகள் எதுவானானும் சரி-அதை நீங்கள் சரியாக மனத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்- அவை முழுவதும் தமிழினத்தைச் சார்ந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது. அவை இசையானாலும் சரி, நாட்டியமானாலும் சரி, இலக்கியமானாலும் சரி, அல்லது மொழியியலிலே நாம் எத்தனை வகையான பிரிவுகளைக் காட்டி-இலக்கியங்கள், பண்பாட்டியல்கள், அல்லது சிறந்த தன்மையுடைய இலக்கணக் கூறுகள் என்று நான் மிகையாகச் சொன்னாலும் சரி - அனைத்தும் தமிழியல் கூறுகளைச் சார்ந்தவையே. இனி, அவர்களே கூறிக் கொண்டிருக்கின்ற வேதங்களிலே ஏதாவது சிறப்பான கூறுகள், பகுதிகள் இருக்கின்றதாக அவர்களே கூறினாலும் சரி, காட்டினாலும் சரி அந்தப் பகுதிகள் தமிழினத்தைச் சார்ந்தவை; தமிழ் முனிவர்களால் எழுதப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. இது வெறும் ஆசைக்காகச் சொல்லப் பெற்ற அடிப்படையற்ற சொற்கள் அல்ல. அல்லது எதிரியை மடக்க வேண்டும் என்பதற்கான உத்தியுடன் சொல்வதும் அல்ல. உண்மை. ஆகவே நாம் ஏமாறி விடக்கூடாது. இந்த உணர்வுகளைத் தாம் விழித்த விழிப்பாக (நாங்கள் உ.த.மு.க. வழி) செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம், மக்களிடத்திலே!

நம் முயற்சிகள் அனைத்தும் தமிழினத்தைப்
பற்றியவைதாம்!

எனவே விடிவு கட்டாயம் இந்த இனத்திற்கு உண்டு என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே, நாம் எந்நிலையிலும் சோர்வடைந்து விடக்கூடாது. அதனால்தான் அரசமாணிக்கனார் ஆனாலும் சரி. வடிவேலனார் ஆனாலும் சரி, யாராக இருந்தாலும், நாங்களே வேறு வேறு இயக்கங்களிலே இயங்கினாலும், அது தமிழ்நிலமாக இருந்தாலும், தென்மொழி யாக இருந்தாலும், அல்லது எழுகதிராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அவையெல்லாமே உண்மையான தமிழின முன்னேற்றத்திற்கான தீவிர முயற்சிகள் என்பதை நீங்கள் உணரவேண்டும். இந்த முயற்சிகள் இந்த நூற்றாண்டில் நாம் செய்யவில்லையானால், இன்றும் பத்து இருபது ஆண்டுகளுக்குள் - இங்கேயே இத்தமிழினத்தை மீட்கும் முயற்சியிலே வெற்றி பெறவில்லையானால் - கூடிய விரைவிலேயே, நாம் அழிக்கப்பட்டு விடுவோம்; படிப்படியாக இந்த அறிவுக்கூறுகள் அழிக்கப்பட்டு விடும் அல்லது ஆரிய நலன்களாக முழுமையாக ஆக்கப்பட்டுவிடும்.

இன்றைக்கு ஏறத்தாழ 75 விழுக்காடு தமிழ் அறிவு நிலைகளை, மொழி நிலைகளை, பண்பாட்டு நிலைகளை, கலை நிலைகளை, இலக்கியத் தன்மைகளை வரலாற்றுத் தன்மைகளை இந்தியாவின் கொள்கைகளாக ஆரியர்கள் என்ன சொல்கிறார்களோ, அனைத்திலும் 75 விழுக்காடு அவர்களுடைய நிலையாகக் காட்டுவதும், ஒரு சிறு அளவு கூறுகளையே தமிழகத்தின் திராவிட மக்களின் தன்மைகளாகக் காட்டுவதும் உங்களுக்குத் தெரிந்ததே! ஆனால் நூற்றுக்கு நூறு இந்தியாவிலே எந்தத்தன்மை பிறந்திருந்தாலும் சரி, மொழியியலா அதற்குத் தனி வரலாறு உண்டு; தன்மை உண்டு; கால எல்லை உண்டு; அது கிரேக்க இலத்தீனையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது-தமிழ் மூலமே என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. கலை-பண்பாட்டு இயலா? பாரதக் கலை, பாரதப் பண்பாடு என்று எதையெதை சொல்லுகிறாமோ அஃது எதுவாக இருந்தாலும் சரி.நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. இதை. நாங்கள் எந்த வரலாற்று ஆசிரியர் முன்னிலையிலும் எடுத்துக்காட்ட அணியமாக இருக்கிறோம், எதுவாக இருந்தாலும் அது தமிழியலைச் சார்ந்தவை. தமிழினத்துக்கு உரியவை. அதேபோல் அறக்கூறுகளாக அவன் சொல்லும் "தர்ம"க் கூறில் அவன் சொல்லும் தர்மம் வேறு நம்முடைய அறம் வேறு!

அவன் தர்மமும், நம் அறமும்:

மக்களிடையே நான்கு வர்ணங்களாகப் பிரித்து, அங்கே ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் ஒவ்வொரு கடமையாகக் காட்டுவதைத்தான் அவன் தர்மம் என்று சொல்லுகிறான். ஜாதிகள் என்பவற்றைக்கூட பிறப்பின் அடிப்படையிலேயே சொல்லுகிறான். 'ஜாதி' என்கிற சொல் வட சொல். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், தமிழ்ச் சொல் என்று சாதி என்பது தமிழ்ச் சொல். அதற்குக் கூட்டம் என்று பெயர்; குழு என்று பெயர்; ஒரு மக்கள் தொகுதி என்று பெயர். ஜாதி என்று சொன்னால் பிறவியிலேயே வேறுபாடு உள்ள மக்கள் தொகுதி என்று பெயர். ஜாதி 'ஜனி' என்ற வேரடியாகப் பிறந்த சமசுக்கிருதச் சொல். நம்முடைய 'சாதி' என்ற தமிழ்ச் சொல் 'தொழில் பிரிவு', மக்கள் பிரிவுகளை அந்தந்த நிலவேறுபாடாக - தொழில் வேறுபாடாக - நான்கு நிலங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைச் சுட்டிச் சொல்வது - என்பதை உணர வேண்டும், அதற்கு ஒரே ஒரு சான்று - எடுத்துக்காட்டு தெளிவாக விளக்கம் தருகிற ஒர் உண்மை - என்னவென்று சொன்னால், இந்தச் சாதிப்பிரிவு என்று என்னென்ன இருக்கின்றனவோ, அந்தப் பெயர்ப் பட்டியல் அனைத்தையும் எடுத்துப் படித்துப் பார்த்தால், அனைத்துப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். நாடார், பிள்ளை, கவண்டர், முதலியார், படையாட்சி, இதுபோன்ற எந்தச்சொல் ஆனாலும் தென்பகுதியில் வழங்குகின்ற சாதிச் சொற்கள், வட பகுதியிலே மாறியிருக்கின்ற சொற்கள் ஆக இருக்கும்

இங்கே 'நாய்க்கர்’ என்று இருப்பது கேரளாவில் 'நாயர்' என்றிருக்கும். ஆந்திராவுக்குப் போனால் 'நாயுடு' என்றிருக்கும். இஃது எல்லாமே தலைமையைக் குறிக்கின்ற சொல்லாக இருக்கும். வடபகுதியில் சென்றால் 'நாய்க்' என்றிருக்கும். எல்லாமே தலைமைச் சொல்! எல்லாமே தமிழ்ச்சொல்! ஏன்? இது தொழில் பிரிவாகப் பிரிந்த இனம், மிக நீண்ட காலமாகவே தொழிலின் பிரிவுகளாலே பிரிந்திருந்த இந்த இனம், அரசியலிலே வளர்ந்திருந்த இந்த இனம், பண்பாட்டியலிலே வளர்ந்திருந்த இந்த இனம், கலைகளிலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், நாகரிகத்திலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், மொழியறிவுக் கூறுகளாகிய மொழியியலிலே வளர்ச்சி பெற்றிருந்த இந்த இனம், -எவ்வளவு பெரிய பேரினம்!

இன்றைக்கு நேற்றன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய உருசிய மொழி, தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய ஆங்கில மொழி, அதற்கு முன்பாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய சமஸ்கிருத மொழி, அதற்குமுன் ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிரேக்க இலத்தீன் மொழிகள், முதலிய உலக மொழிகளுக்கு எல்லாம் மூலமான ஒரு மொழியாக நாம் பேசுகிற மொழியாகிய தமிழ்மொழி இருக்கின்றது என்று சொன்னால், இதை அடியோடு அவர்கள் மறுக்கின்றார்கள் - அழிக்கப் பார்க்கிறார்கள் . ஒழிக்கப் பார்க்கிறார்கள் - என்று சொன்னால், இதை ஏதோ நாம் அரசியல் புரட்சியாகவா செய்ய விரும்புகிறோம். ஏதோ ஒரு பொருளியல் புரட்சி செய்ய விரும்புகிறோமா? ஏதோ ஒரு பண்பாட்டியல் புரட்சியாகவா செய்ய விரும்புகிறோம்? இல்லை; கலைக் கூறுகளையா செய்ய விரும்புகிறோம்? இல்லை; இந்த இனம், அதனுடைய நாடி நரம்புகள் அதன் அடிப்படை வேர்கள். மூலங்கள். வித்துகள் அனைத்தும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பதை நினைக்கும்போதுதான் - இவ்வளவு சிறப்பாக வளர்ந்திருந்த பெரிய வரலாற்று பெருஞ் சிறப்பான ஓர் இனம் எந்த எந்த வகையிலே அடிமைப்பட்டுவிட்டது என்று எண்ணி-வருந்த வேண்டியிருக்கிறது.

"வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்:
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்.
நம்செயல், ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்;
நாம் உணர்ந்தோம் இந்நாள்; அவர் அஞ்சி

விழித்தார்"

என்று பாவேந்தர் அவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னால், நாம் உணர்ந்து விட்டோம் என்று இன்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கிறார்கள்

கலைஞர் ஆட்சிக் கவிழ்ப்பு :

ஆகவே, இனிமேல் இவர்களைத் தாக்குவது, எப்படி வீழ்த்துவது; எந்த வகையிலே பின்னடையச் செய்வது என்று எண்ணித்தான் 'இரவு வரைக்கும் நாங்கள் நீக்க மாட்டோம்' என்று சொல்கிறார் தலைமை அமைச்சா் 'கவிழ்க்க மாட்டோம் என்றும் ஒழிக்க மாட்டோம்' என்றும் சொல்கிறார். ஆம் என்று இவரும் (கலைஞரும்) நம்பி, தோள் மேல் கைபோட்டுக்கொண்டு செல்கிறார்: இரண்டு முறை பறக்கிறார் சந்திரசேகரிடம் பேசுவதற்கு. வி.பி.சிங்கிடத்தில் தொடர்பு கொண்ட அந்த நிலையினாலே, வெறுப்பினாலே சந்திரசேகரைத் தமக்குத் தோழமையாக்கிக் கொள்ள ஓர் அரசியல் தந்திரம் செய்து என்ன பயன்? ஒன்றுமில்லையே. இரவு தூங்கப் போகிறார் விடியலில் கவிழ்கிறது என்று சொன்னால் - இப்போது அரசியலில் அது எவ்வளவு வலிவு பெற்ற இனமாக இருக்கின்றது. இத்தனைக்கும் சந்திரசேகர் அப்படி என்ன ஆரியரா? இல்லையே! ஏன் அப்படி வீழ்த்தினார்? வீழ்த்துவதை அவர் விரும்பினாரா? - இல்லையே! ஒருவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், ஒருவர் ஆரியராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தச் செயல்கள் இந்தியாவில் நடக்கும் என்று சொன்னால், அவர்களின் வலிவு எப்படிப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்: ["கலைஞர் ஆட்சிக் கவிழ்ப்பு, தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கை ஓங்குவதற்குக் கலைஞர் இடங்கொடுத்ததால், தாம் சொந்தமாக எடுத்த முடிவு' என்று சொல்லிக் கொண்டுவந்த சந்திரசேகர், இராசீவ் மறைவுக்குப் பின்னர்.இந்திராப் பேராயம் நடுவணரசைக் கைப்பற்றிய பின்னர் - கலைஞர் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி இராசீவும், செயலலிதாவுந்தாம், வலியுறுத்தினர்’ என்று பேசினார். (தினமணி 27-6-91 சென்னைப் பதிப்பு) என்பது இங்கே கவனிக்கத்தக்கது.] அந்த செயலலிதா என்ற அரசியலில் இழிவான நிலையுள்ள நாடக நடிகையை, எவ்வளவு தான் நாம் இழிவாகச் சொன்னாலும், இந்த இருபதாம் நூற்றாண்டிலே, அறிவியல் வளர்ச்சி பெற்ற நிலையிலே. அறிவியல் கருவிகள் எல்லாம் உலகத்தை மருட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே - அமெரிக்கா, உருசியா போன்ற நாடுகளெல்லாம்கூட, உலகப் போர் வந்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருக்கிற இந்த நிலையிலே, இங்கு எப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். ஒன்றுமே திறனற்ற, வெறும் பேச்சுத்திறன் மட்டுமே கொண்ட ஒரு பெண்மணி, ஒரு நடிகை, அரசியலிலே உச்ச நிலையிலே. போய், உச்சிக் கிளையை ஆட்ட முடிகிறது என்று சொன்னால், இந்தியாவில் அரசியலா நடக்கிறது? அரசியல் ஒழுங்கா இருக்கிறது? என்ன அரசியல் அது? மக்களியல் தழுவிய அரசியல் அல்லவா சிறந்தது. அதற்கல்லவா நாம் துணைபோக வேண்டும். மக்களியல் தழுவாத மாறான செயலை அரசியலிலே தனிப்பட்ட ஒருவர் செய்கிறார் என்று சொன்னால், அது இந்தியாவில் நடைபெறுகிறது என்று சொன்னால் இந்த இந்திய அரசியலை நாம் நம்ப முடியுமா? நம்பலாமா?

இவர்கள் எப்படி இருந்தாலும் கவிழ்க்கப்
படுவார்கள் என்ற நிலையே இந்தியாவில்
உள்ளது

எத்தனைப் பெரிய தமிழன் தலைவனாக வந்தாலும் சரி, எந்த நிலையிலே, மேலோங்கி இருந்தாலும் சரி, 'தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தலைமகனாக வர வேண்டும்' என்றில்லை. அருமை மிகுந்த அரு.கோபாலன் அவர்கள் சொன்னார்கள் . காமராசர் என்ன அரசியல் மேதையா? அரசியலிலே பெரிய பட்டம் - பெற்றவரா? அல்லது கல்வியிலே மிகப்பெரிய படிப்புப் படித்தவரா? ஆனாலும். அவர் தமிழ் உணர்வோடு இருந்தார். வடநாட்டிற்கு என்றும் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது, விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்ற தன்மான உணர்வு, தாம் பேராயக் கட்சிக்காரராக இருந்தாலும், அவரிடம் இருந்தது. எனவே, அவருடைய ஓர் இசைவுக்காக வடநாட்டுத் தலைவர்கள் காத்துக் கிடந்தார்கள். இப்போது அப்படி இல்லையே: நிலைமை தலைகீழாக மாறியும் கூட, நம்மை அவர்கள் ஆட்சியில் வைக்க விரும்பவில்லையே! நூறு முறை நடந்தாலும், நூறுமுறை அவர்கள் உறுதி கொடுத்தாலும், நொடிப்பொழுதில் இவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்பதற்கு, ஒரு முறையா, இரண்டு முறையா தமிழ்நாட்டில் - நான்குமுறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

திராவிடக் கட்சி ஆட்சியிலமர்ந்து என்ன பயன்?

எனவே அரசியலிலே பெரியாரைப் பிரிந்து கொண்டு. துறந்து கொண்டு. அவர் கருத்தை மறுத்துக் கொண்டு இந்தத் தமிழ்நாட்டை நாம் மீட்டுவிட முடியும், தமிழினத்தை நாம் உயர்த்தி விடமுடியும் என்று கனவு கண்ட அண்ணா போன்ற பெருமக்கள் எவ்வளவு இதுபோன்ற பிழைகளைத் தொடர்ந்து செய்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த வரலாற்றை, நிலைகளை எடுத்துப் பாருங்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னாலே நமக்கு என்ன சிறப்புக் கிடைத்தது என்பதைப் புள்ளி விளக்கங்கள் வைத்து மதிப்பிட்டு பாருங்கள். குறைத்து மதிப்பிட்டுப் பார்க்க வேண்டாம். தமிழ்நாடு என்று பெயர் வந்ததா? உண்மையா? அஃது உண்மைதான், வந்தது. அது ஒரு பெருமைதான்; வைத்துக் கொள்வோம். அதனோடு சேர்ந்த வேறு சில செயல்களைச் செய்ய முடிந்ததா? அதாவது தெருப் பெயர்கள், சாதிப் பெயர்கள் மாற்றங்கள் இருந்தனவா? இருக்கிறதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நிலைமைகள் அப்படியேதாம் இருக்கின்றன

இனம் நலமாக - வலுவாக இல்லையானால்
என்ன சிறப்பிருந்தும் பயனில்லை

வள்ளுவர் கோட்டத்தினாலே நமக்கு நன்மை இருக்கிறதா? பெருமை இருக்கிறது. எல்லாவற்றிலும்தான் பெருமை திருக்குறளில் இல்லாத பெருமையா திருக்குறள் கோட்டத்தினால் வந்துவிடப் போகிறது? திருவள்ளுவருக்குத் தங்கத்தாலே ஒரு பெரிய சிலையைத் தமிழ்நாட்டிலே அமைத்தாலே கூட, அந்த சிலையெல்லாம் ஒரு நொடிப் பொழுதிலே வீழ்த்தப்பட்டு விடும். இலங்கையிலே வீழ்த்தப்படவில்லையே, ஒளவையார், திருவள்ளுவர் சிலைகள்? இலங்கையிலே தெருக்களிலே செல்வர்கள், வணிகர்கள் ஒன்பான் மணிகளை விற்கும் வணிகர்களெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டார்கள் இதை நினைக்கின்றபோதுதான் திருவள்ளுவரின் "மனநலன் நன்குடையாராயினும் சான்றோர்க்கு இனநலன் ஏமாப்புடைத்து" - என்பதன் வழி . அறிவு நிலையிலே உயர்ந்திருந்தாலும், பண்பு நிலையிலே உயர்ந்திருந்தாலும், கலைநிலையிலே எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தாலும், எவ்வளவு ஆட்சிச் சிறப்புப் பெற்றிருந்தாலும். எவ்வளவு வரலாற்று நிலையிலே பெருமை பெற்றிருந்தாலும், நாகரிகத்திலே, பண்பாட்டிலே உயர்வு பெற்றிருந்தாலும், மனநலம் நன்குடையராயினும், சான்றோர்க்கு இனநலன் ஏமாப்புடைத்து (காவல் உடையது) என்று கூறுகிறார். திருவள்ளுவர்

ஓர் இனம் நலமாக இருந்தாலும், அந்த இனத்தின் கூறுகள், அறிவியல் கூறுகள் முதல் - அரசியல் கூறுகள் வரை எந்தநிலையாக இருந்தாலும் அது காக்கப்பெறும். இல்லையானால் அது அழிக்கப்பெறும். அழிக்கப்பட்டு விட்டன; அழிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கண்ணுக்குக் கண்ணாகப் பார்க்கிறோம். இருப்பினும் நமக்கு அந்த உணர்வு வரவில்லையே ஏன்? நம்முடைய நிலைகள், எந்த நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் இப்படித்தான்!

இன்று தமிழினத்திலேயே ஒருவன்தான் வீரன்
அன்று நாம் வீரர்கள், இன்று நாம் கோழைகள் :

'அஞ்சி அஞ்சிச் சாவார்; அஞ்சாத பேரில்லை, நம் முடைய இனத்தினிலே - இதை அவர்கள்தாம் பார்த்துச் சொன்னது. நமக்கு உணர்த்தினது. அவர்கள் நம்மை இகழ்ந்து பேசினது இந்தத் தன்மைதான். நாம் எதற்கும் அஞ்சுகிறவர்கள், இன்றைக்குத் தமிழ் இனத்தினுடைய வீரம், வீரத்தினுடைய விளைவு - உண்மையாகவே தமிழினம் ஒருகாலத்தில் வீரமுற்றிருந்த இனம் என வரலாற்றிலே படித்திருக்கிறோம். இன்று தமிழினத்திலேயே ஒருவன்தான் வீரன்!

ஆனால், அந்த உண்மையான வரலாற்றுக்கு அடிப்படையாக இருக்கிறது ஒரே ஒரு வீரன் தான். அவர்தாம் தம்பி பிரபாகரன், வேறு, தமிழ் நிலத்திலே அப்படி ஒரு வீரனைக் காட்டமுடியுமா? அவனுடைய தன்னிகரற்ற வீரம் சான்றாக இருக்கிறது. வேறு எவரையாவது ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியுமா? வீரம் இருக்கிறது. என்று சொன்னால், அவனுக்கு இருக்கிறது தமிழ் வீரம். எனவே அந்த வீரத்தை வைத்துத்தான் உண்மையாகவே நமது தமிழ் இனம் வீரம் செறிந்ததாக இருந்திருக்க வேண்டும் என மதிப்பிட்டுக் கொண்டு ஆறுதல் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இல்லையானால் நாம் அத்தனை பேரும் உண்மையாக ஒரு போலி உணர்வு உள்ளவர்களாகத்தாம் இருக்கிறோம்: அரசியலில் இருந்தாலும் சரி, அறிவியல், ஆராய்ச்சித் துறையில் இருத்தாலும் சரி: பேராசிரியர் தொழிலில் இருந்தாலும் சரி: அல்லது கலைத்துறையில் இருந்தாலும் சரி; அல்லது ஒரு பொதுத் துறையிலே இருந்தாலும் சரி: அல்லது ஒரு கட்சியிலே தலைமை தாங்கும் ஒரு பொதுத் தொண்டு நிலையிலே இருந்தாலும் சரி: பொதுத் தொண்டர்களாக இருந்தாலும் சரி - எந்த நிலையிலும் நம்மால் ஆரியத்தையோ, பார்ப்பனியத்தையோ, வடநாட்டு முதலாளியத்தையோ எதிர்த்து ஒரு சொல் சொல்ல முடியவில்லை என்று சொன்னால், பண்டைய இலக்கியங்களிலே காணும் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்று கூற முடியுமா? துணிந்து ஒரு சொல் சொல்ல முடியவில்லை

கலைஞர் ஆட்சி பற்றிய முன்கணிப்பு:

இறுதியாக நான், இராமதாசு (பா.ம.க.). நெடுமாறன் போன்றவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தான் சொன்னேன், கூடிய விரைவில் கலைஞர் ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள் என்று சொன்னேன். யாரும் நான் சொன்னதை நம்பவில்லை. ஏன் அடிக்கடி தலைமை அமைச்சர், அல்லது அவரைச் சார்ந்தவர்கள் தமிழகத்திற்கு வரும்பொழுதெல்லாம் 'நாங்கள் தி.மு.க. ஆட்சியை இறக்கிவிடமாட்டோம், குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவரமாட்டோம்' என்று உறுதி கூறிக் கொண்டிகுந்தார்கள். நூறு முறை வலியுறுத்திச் சொல்கிறோம் என்றெல்லாம் உறுதி கூறிச் சென்றார்கள். ஆனால், நாங்களெல்லாம் சொன்னோம். இந்த ஆட்சி நீக்கப்பட்டுவிடும் என்று. கலைஞர் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கலைஞரைத் தவிர வேறு எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடைய நிலையும் அப்படித் தான். யாருக்காகவும் அவர்கள் விட்டுக்கொடுப்பதாய் இல்லை.

கலைஞருக்கு முன்பே கொடுத்த வேண்டுகை:

தமிழ் வளரக்கூடாது, தமிழினம் முன்னேறிவிடக் கூடாது. தமிழகத்தின் அரசியலிலே தமிழகத்தின் கை ஓங்கி இருக்கக்கூடாது இதுதான் அவர்களுடைய அடிப்படையான நோக்கங்கள், பார்வைகள், இந்த நிலைக்கு மாறாக எந்த நிலை ஏற்பட்டாலும் அதை விட்டுவைக்க மாட்டார்கள். அவர்கள் இறக்கி விடுவதற்கு முன்னால், கலைஞர் அவர்களே! 'நீங்களே சட்டமன்றத்தைக் கூட்டித் தமிழீழத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, நாங்கள் எங்கள் தமிழினத்தைப் பொறுத்த அளவிலே எங்களுக்கு உரிமை பெற்ற நாடு ஒன்று வேண்டும்; அது தமிழீழத்திலே நடைபெறுகிறது. பிரபாகரனுடைய தலைமையிலே தமிழீழம் மலரப்போகிறது. ஆகவே அந்தத் தமிழீழத்தை ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, நீங்களே முதல்வர் பதவியிலிருந்து நீங்கிச், சட்டமன்றத்தைக் கலைத்து வெளியேறுங்கள் என்று சொன்னேன். ஆனால் அதன்படி அவர்கள் செய்வார்கள் என்று எதிர் பார்க்கவும் முடியாது, கனவு காணவும் முடியாது. எனவே இந்த ஆட்சி கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. என்ன நடந்தது! மீண்டும், மீண்டும் பழைய வரலாறு. மீண்டும் மீண்டும் பழைய நிலை: மீண்டும் நமது பழைய திராவிட ஆட்சி மலரும் என நம்பிக்கொள்ளக்கூடாது. இது நான் தெளிவாக இந்த உலகத் தமிழின மாநாட்டிலே கூறுகின்ற உறுதிமொழி

திராவிட உணர்வுபோய்
தமிழினவுணர்வு வரவேண்டும்

{gap}}ஏன் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன? தமிழனுக்கு இருந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, மழுங்கிக்கொண்டிருக்கின்றன. பெரியார் காலத்திலே இருந்த உணர்வு வேறு, இப்பொழுது இருக்கிற உணர்வு வேறு அந்த உணர்வை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை; அந்த உணர்வை இழிபடுத்திக்கொண்டோம். இன்றைக்குப் பெரியாரியம் பேசுபவர்கள், பேசியவர்கள். தமிழின உரிமைக்காக பேசியவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இப்போது எதிரிகளிடத்தில் ஆட்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அரசியல் வலைக்குள்ளே விழுந்து சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இன்றைய நிலையில் நாம் நினைக்கிற அளவிலே, தமிழினம், திராவிட உணர்வுள்ளதாக இருக்கக் கூடாது. தமிழின உணர்வுள்ள இனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டாயம் நாம் எதிர்காலத்தில் விளைவைச் செய்துகொள்ள முடியும், அதற்கு நம்முடைய பெருமைக்குரிய அறிஞர் இராமதாசு (த.இ. வி.க.) போன்றவர்கள். அருமைமிகு அரு.கோபாலன் போன்றவர்கள், இன்னும் பாட்டாளி மக்கள் கட்சி இராமதாசு போன்றவர்கள். தமிழ்த் தேசிய இயக்க நெடுமாறன் போன்றவர்கள், இன்னும் சிறு சிறு உதிரி இயக்கங்களாக இருக்கின்றவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர வேண்டும். எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்து ஒரே இயக்கமாக வடிவம்கொண்டு, வலிமை சேர்த்து அஃது ஒரு மூன்றாவது இயக்க உணர்வை உண்டாக்க வேண்டும். இளைஞர்களுடைய கருத்தையும் சேர்த்துக்கொண்டு, ஒரு பெரிய வலுவான ஆற்றலாக மலரவேண்டும்; அப்படி மலர்ந்தால்தான் எதிர்காலத்திலே அரசியலை நம்பியோ, அல்லது வேறுவகையான வடநாட்டாரின் ஆட்சியை நம்பியோ, ஏமாளியாகாமல், நம் தமிழ் இன முன்னேற்றத்தைக் கட்டிக்காத்து அழிவின்றிப் பாதுகாக்கமுடியும்; இன விடுதலையையும் பெற முடியும். நாட்டு விடுதலையையும் பெற முடியும். இல்லையானால் எந்தவகையான, எந்த முயற்சியும் நமக்குப் பயன் அளிக்காது

இளைஞர்க்கு நாம் சொல்லிக்கொள்வது:

இந்தியாவை ஆட்டிப்படைக்கிற, இந்தியாவின் தேசிய இனங்களை ஆட்டிப்படைக்கிற, அடிமைப்படுத்தி, வைக்கின்ற அந்த நிலையில் இருந்து, நாம் மீள்வது என்பது மிகவும் அரிது. அரிதினும் அரிது, அது வரலாற்றிலே நடைபெற வேண்டுமானால் வலிமையான வழிமுறைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். வேறு யாரிடத்திலிருந்து அதைப் பெறுவது? வல்லரசுகளிடமிருந்து அதைப் பெறமுடியுமா? இல்லை:நம்மிடையே தாழ்ந்து கிடக்கின்ற வீழ்ந்துகிடக்கின்ற தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட, மிகவும் எளிமையாக புழு, பூச்சியைப்போல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் பின்புலத்தைப் பெறவேண்டும். மக்களின் ஆற்றலாக நம் அறிவு நிலைகளை மாற்ற வேண்டும். வெறும் அறிவுப் போரினால் மட்டுமே அவர்களை நாம் வென்றுவிட முடியாது. அறிவு நிலையிலே நாம் அவர்களோடு போராடுவதானால், அதன் பெரிய பெரிய கருவிகளை, ஆக்கத்தன்மைகளைக் கையிலே வைத்திருக்கின்ற அந்தக் காரணத்தால், உலக நிலையில் நமக்கு ஆதரவாக, பல வரலாறுகளை நாம் அமைத்துக்கொள்ள முடியும். வெறும் அறிவுப் போராட்டம் அன்று, நாம் போராடப்போவது. மக்கள் ஆற்றல் போராட்டமாக இருக்க வேண்டும்; மக்கள் புரட்சியாக மலர வேண்டும், அந்த நிலைகளுக்குத்தான் ஒரு விடிவு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.இளைஞர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ளுவதும் அதுதான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்கள் உணர்ந்துகொண்டு, வெளிநாட்டுப் போராட்ட நிலைகளைக் கருத்தில்கொண்டும், ஏதோ ஒரு நிலையில் , ஏதோ ஒரு கருவியைக் கையில் எடுத்துக்கொண்டு, உடனடியாக, எவ்வகைப் போராட்டத்திலும், கருவிப் புரட்சியில், இறங்கிவிடுவோம்.அதில் வென்றெடுத்துவிடுவோம் என்று கூறிவிட முடியாது .அவர்களைப் போல. உணர்வுள்ளவர்களைத் தந்தை பெரியாரின் காலத்திலே, நாங்களெல்லாம் இளைஞர்களாக இருந்தபோது, எத்தனையோ கூட்டங்களைப் பார்த்திருக்கிறோம்

வளர்ந்து வடிவெடுத்த தி.மு.கவின் நிலை என்ன?

அந்த இளைஞர்களின் கூட்டம்தான் பின்னால் தி.மு.க.வாக வடிவெடுத்தது. ஆனால் என்ன நடந்தது: பெரிய அளவிலே வளர்ந்த இருபது இலக்கம் உறுப்பினர்களை வைத்திருக்கிற பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும் கூட, அதற்கு முதுகெலும்பு இல்லாத, வலுவில்லாத ஒரு வீரமற்ற நிலையிலேதான் அதை அரசியலிலே பார்க்கிறோம்; ஏன்? அப்படி வந்தால் ஆட்சிக்கு வருபவர்கள் அத்தனைப் பேருக்கும் அதிகார ஆசையும், பதவி ஆசையும் தோன்றிப் பொருள் ஈட்டத்திலேயே அவர்களுடைய நாட்டங்களெல்லாம் கொண்டு செலுத்தப் பெற்று, இந்த இனத்தின் தன்மைகளையே மறந்து, அவர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அந்தச் செல்வ வாழ்க்கையைத்தான் சுவைத்துக் கொண்டு, யார் யார் அவர்களிடத்தில் போனார்களோ, அவர்களிடம் சென்றால் அமைச்சர் பதவி கிடைக்குமா என்று அலைகின்ற காட்சியாகத்தான் அரசியலிலே அதைப் பார்க்கின்றோம். அரசியலில் வாய்ப்பில்லை என்று சொன்னால், அடுத்தநிலை, இளைஞர்கள் படங்களிலே, திரைப்படங்களிலே ஈடுபட்டு விடுகிறார்கள்: அந்த நிலையில் திரைப்படங்களிலே போய், அவர்கள் பாடலாசிரியர்களாகவும், கதையாசிரியர்களாகவும், இயக்குநர்களாகவும். படப்பிடிப்பாளர்களாகவும் பெரிய அளவிலே வளர்ந்து, பெருமைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கிறார்கள்

வளர்ந்துவிட்ட மற்றவர்கள் நிலை என்ன?

இசையிலே மிகச் சிறந்த திறமை படைத்த இளையராசா என்ன ஆனார்? கோடிக் கோடியாகச் சம்பாதித்தார். கடைசியிலே பார்ப்பனீயத்துக்கு அடிமைப்பட்டார். அதேபோல நடிகர்கள் என்ன ஆனார்கள்? கோடிக் கோடியாகச் சம்பாதித்தார்கள். நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். நம்மின நடிகர்கள் ஓங்கிய நிலையிலே நடிப்புத் திறனிலே இருந்தவர்கள், இருக்கின்றவர்கள் என்ன ஆனார்கள்? ஆரியத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் அதேபோல வேறு எந்தத் துறையிலே எடுத்துக் கொண்டாலும் சரி. வரலாற்றுத் துறையா?, ஆராய்ச்சித் துறையா?. கல்லூரியா?, நடுவணரசைச் சார்ந்த ஆராய்ச்சிக் கூடங்களா? - அனைத்திலும் அவர்கள் அறிவுக்காக ஏராளமான பொருள்களை வாரி இறைக்கின்றார்கள்

நம்மவர்களில் சிறந்தவர்களையெல்லாம்
அவர்களுக்குத் துணையாக்கிக் கொள்ளுகிறார்கள்

நம்மவர்கள். நம் இனத் தமிழர்கள் பேரறிஞர்களாக இருக்கின்றவர்கள் எல்லாம், அவர்கள் காலிலே விழுந்து, அவர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். ஆகவே, எந்த முயற்சிக்கும் நம்மை மேலே ஏறிவிடாதபடி கண்காணிப்பாக இருந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள் பார்ப்பனர்கள். நம்மவர்களை அவர்களுக்கானவர்களாக மாற்றிக் கொள்ளுகிறார்கள்: எம்.எசு.சுப்புலட்சுமி வரலாறு ஒன்று போதுமே. இசைத்துறையிலே அந்த அம்மையார் எவ்வளவு பெரும் புகழ் பெற்றிருக்கின்றார்: அவரைப் போல இசைத் துறையிலே, இந்தியாவிலே எந்த இசைக்கலைஞர் ஒருவரும் இவ்வளவு பெருமை பெற்றதில்லை; அவர் யார்? தமிழர் - தமிழினத்தைச் சார்ந்தவர். அவரை அவர்களுக்கு எப்படி அடிமைப்படுத்தி விட்டனர்! பார்ப்பனரைத் திருமணம் செய்வித்து அந்த அம்மையாரைப் பார்ப்பனத்தி போலவே ஆக்கி விட்டார்கள். சேலை கட்டுவது, பேசுவது, நடப்பது, போவது, வருவது எல்லாமே பார்ப்பன அமைப்புதான். தஞ்சாவூர் தமிழச்சி அல்லவா!

அதேபோல, அகிலன் யார் தமிழன்: புதினத்துறையிலே மேம்பட்ட எழுத்தாற்றல் பெற்றவர். என்ன நடந்தது? அவரிடமும் பார்ப்பனத்தியை அனுப்பி, இரண்டாம் திருமணம் செய்யச் சொல்லி, அவரைப் பார்ப்பானாக மாற்றிக் கடைசியில் அவருக்கு இந்திய அளவிலே பரிசு கொடுக்கச் செய்து. அவரையும் ஒரு பார்ப்பானாகவே ஆக்கிக்கொண்டார்கள். எந்தக் கலைத்துறையிலே எந்தச் சிறந்த மேதைகள் வந்தாலும் சரி, அறிவுத்துறையிலே ஆராய்ச்சியாளர் வந்து சிறந்தாலும் சரி;அறிவியல் துறையிலே எவ்வளவு பெரிய அறிஞர்களாக சிறந்து விளங்கினாலும் சரி; எந்த வகையிலே அரசியல் அறிஞர்களாக இருந்தாலும் சரி; அல்லது தலைவர்களாக இருந்தாலும் சரி. உடனே அவர்களைத் தங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். இது உண்மையா, பொய்யா?

அதேபோல, சமயத்துறையிலே கூட நம்மவர்களிலே யாராவது தப்பித்தவறி அவர்களின் புராண, இதிகாசக் கதைகளையும், அவர்கள் வெளியிலே சொல்லிப் பரப்புகிறவர்களாக இருந்தால், அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் தங்களுக்குச் சார்பாக ஆக்கிக்கொண்டு, நம்முடைய தமிழர்களை மூடர்களாகவும், மூடநம்பிக்கை உடையவர்களாகவும், மதத்திலே, சேற்றிலே புதைத்துவிடுகிறார்கள். அந்த நிலைகளை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்

நமக்குரியனவற்றையும்
அவர்களுடையனவாக்கிக் கொள்கிறார்கள்:

அதேபோல, பண்பாட்டியல் துறையிலே என்று எத்தனைத்துறை? இந்தியா முழுவதும் ஒருமைப்பாடு, ஒற்றுமை என்கிற பெயராலே, இந்தியப் பண்பாட்டியல் துறைகளுக்கு எவ்வளவு பொருள்களை வாரி இறைக்கிறார்கள்! இத்தனையும் பாரதப் பண்பாடு, பாரதக் கலைகள் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழினத்தின் அனைத்துக் கலைகளும் படிப்படியாக அழிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன

இறுதியிலே இன்னுமொரு பத்தாண்டு, இருபதாண்டு போனால், நம்முடைய இளைஞர்களிடத்திலே தமிழ் மொழியைப்பற்றிக் கூறினால், அவர்கள் அதை ஏளனமாகக் கருதுகின்ற நிலைதான் உள்ளது. 'தமிழ்மொழியா அதென்ன உங்களுக்கு இவ்வளவு மொழி வெறி. அது வெறும் கம்யூனிகேசன்’தானே, என்று நம் இளைஞர்களே நம்மை இழிவாக(கேவலமாக)ச் சொல்லும் இழி நிலையாக, கடுமையாக, வெறுப்பாகக் கருதிக்கொள்ளும் நிலைதான், இப்போதைய இளைஞர்களின் நடுவில் நிலவிக்கொண்டிருக்கிறது. நன்றாக நினைத்துப் பாருங்கள். எனவே, இனிமேல் எந்த நிலையாக இருந்தாலும் சரி, நாம் ஒன்றுபட வேண்டும். பல நிலைகளை விளங்கிக்கொள்ளவேண்டும்,

நாம் எல்லா நிலைகளிலும் தனித்தனியாக இயங்குகின்றோம்:

திராவிடர் கழகம் இனிமேல் ஓர் உண்மையான திராவிட இனத்தினுடைய, தமிழ் இனத்தினுடைய தன்மான உணர்வை அது வளர்த்துக் கொள்ள உதவுகிறது என்கிற நிலையிலே, பெரியார் தோற்றுவித்த தீவிர இயக்கம் என்ற உண்மைப் பாதையிலே நின்று, அதை மக்களிடம் ஏதாவது சொன்னால், அது கடவுள் இல்லை என்ற நாத்திகத்தைக்கூறும் கழகம் என்று கூறி. எனவே நாங்கள் அந்த இயக்கத்தை மதிக்கவில்லை என்று கூறும் இளைஞர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையிலே சமயத்தைப் பொறுத்தோ, சாதி நிலைகளை வைத்தோ, தமிழினம் தன்னை ஈடேற்றிக்கொள்ள முடியாது எவ்வாறாகிலும் நாம் நம்முடைய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டால் நல்லது. ஒவ்வோர் உரிமையாகப் பெறப்பெற அந்த ஒவ்வொரு நிலையிலும் தனித்து நிற்கிறீர்கள் என்கிற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்; எந்த நிலையிலும் நாம் தனித்துப் போராடினால் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும்

நாம் தனித்தனியாக இயங்குவதையே அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்

இப்பொழுது "பாட்டாளி மக்கள் கட்சி"' - என்பது முன்பு வன்னியர் கட்சியாக இருந்தது; அதை மறைமுகமாக ஊக்குவித்தார்கள். அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆறேழு இயக்கங்கள் உண்டு. அவற்றைத் தனித்தனியாகக் கண் முன் தெரியாமல் ஊக்குவிக்கிறார்கள். ஏன் அவ்வாறு ஊக்குவித்து அவர்களுக்குத் தமிழ் இன ஒற்றுமை இன்றி ஆக்குகின்றார்கள்? அவையெல்லாம் வளர்ந்தால்தான் நல்லது. இல்லையேல் தமிழினம் ஒன்றுபட முடியாது

அதேபோல, கட்சிகளில் கூட எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அ.தி.மு.க. என்றால் எத்தனை அ.தி.மு.க மூன்று, அ.தி.மு.க. என்று மூன்றையும் மறைமுகமாக வளர்க்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன? குமரிஅனந்தன் போன்றவர்கள் எல்லாம் சிலப்பதிகாரம் என்று கத்திக்கொண்டு இருந்தவர்கள். இன்றைக்கு ஏதாவது ஒரு சில நிலைகளிலே அந்த சாம, பேத, தான, தண்டம் என்கிற தந்திர முறைகளைப் பின்பற்றிப் பணம் கொடுக்கிறார்கள். இல்லையானால், மறைமுகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடுகிறார்கள். அச்சுறுத்தி அவர்களை ஒன்றுசேர்க்கிறார்கள். தமிழக அரசு வாழப்பாடி மீது வழக்குப் போடுகிறது. உடனே நடுவண் அரசு அவருக்குக் கை கொடுக்கிறது. 'நீ கவலைப்படாதே அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று. நீங்கள் மட்டும் எங்களுக்குச் சார்பாக இருந்தால் போதும். சரி, நீங்கள்தாம் எல்லாம், இப்படித் தனித்தனியாக, அச்சுறுத்தியும், அதிகாரத்தைக் காட்டியும், - பலவகையில் கவர்ச்சியை ஊட்டியும், பல நிலைகளிலும் பணத்தைக் கொடுத்தும் பல கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்

நான் என் மக்களுக்காக எழுதிக் கொண்டுதான்
இருப்பேன்; பேசிக்கொண்டுதான் இருப்பேன்;

எனவே, இந்த நிலையிலே நாங்கள் சொல்வதெல்லாம் யாருடைய காதிலும் விழாது. இவர்கள் ஏதோ கத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எள்ளி நகையாடுகிறார்கள். நன்றாக "நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்; உள்துறை அமைச்சகம் எனக்கு ஓர் அறிக்கை கொடுத்துள்ளது. நீங்கள் இனிமேல் பேசக் கூடாது; எதையும் எழுதக்கூடாது; அப்படி எழுதினால் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம்"' என வெளிப்படையாகவே எனக்கு ஓர் அறிக்கை, கொடுத்தார்கள். நான் உடனே அவர்களுக்குத் தெளிவான விடை எழுதினேன். நீங்கள் என்னை எழுதக்கூடாது, பேசக்கூடாது என்று சொல்வதற்கு, சட்டத்திலே உரிமை இல்லை என்று அவர்களுக்குத் தெரிவித்தேன். நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி. அதிகாரத்தில் இருந்தாலும் சரி, இந்திய ஆட்சியின் சட்டத்திலே, என் மொழிக்காகவும் என் தமிழினத்துக்காகவும் என்னுடைய நாட்டு முன்னேற்றத்திற்காகவும், தமிழக முன்னேற்றத்திற்காகவும் நான் எழுதுவேன். பேசுவேன். எந்த நிலையிலும் நீங்கள் என்னை அப்படிச் செய்யக்கூடாது எனக்கூற உங்களுக்கு உரிமை இல்லை. நான் அப்படி ஏதாவது இந்தியச் சட்டத்திற்கு மாறாகப் பேசுவதாகக் கருதினால், என்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் என்னை அச்சுறுத்திப் பணியவைக்க முடியாது’ என்று நடுவணரசுக்கு ஒரு பெரிய அறிக்கை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைத் 'தமிழ்நில'த்திலும் வெளியிட்டேன், அவர்கள் எனக்குக் கொடுத்த அறிக்கை, பின் நான் அவர்களுக்குக் கொடுத்த மறுப்பு அறிக்கை அத்தனையையும் அவர்களால் என்னை ஒன்றும் செய்ய இயலவில்லை என்ன செய்து விடுவார்கள்?

உரிமைக்குப் போராடுவது எல்லா நாடுகளிலும்
நடப்பதுதான்; எனவே ஏன் அச்சம்?

கலைஞர். தமிழகம் உடனே தனியாகப் பிரிய வேண்டும்’ என்று தப்பித் தவறி ஒருசொல் கூறியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்; என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது. சதாம் உசேன் எவ்வளவு பெரிய ஆள்? எவ்வளவு சிறிய நிலையிலே இருந்துகொண்டு. ஒரு சிறிய பகுதியை ஆண்டுகொண்டு. எவ்வளவு பெரிய வல்லரசான அமெரிக்காவை மட்டுமன்று: அதோடு சேர்ந்த 28 நாடுகளின் போர்ப்படையை எதிர்த்து நிற்கவில்லையா? சூளுரைக்க வில்லையா? எதிர்த்துப் பேசவில்லையா? - அவரை என்ன, உடனே, கொன்றுவிட்டார்களா? இதனால் அந்த நாட்டு மக்கள் அழிகிறார்கள் என்று சொன்னால், எந்த நாட்டு மக்கள் போராட்டத்தாலே அழிக்கப்படாதவர்கள்? எல்லா நாட்டு மக்களும் அப்படித்தான் இருப்பார்கள். ஒரு புரட்சி என்று வந்தாலும், போர் என்று வந்தாலும் அந்த நிலைதான் ஏற்படும். அதற்காகப்பொதுமக்கள் அழியக் கூடாது என்று கூறமுடியாது: அது நடக்கக் கூடியதும் அன்று. ஆனால் அது அவனுடைய துணிவு, அந்த நாட்டு மக்களையும், நாட்டையும் ஆணவப் பிடியிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற, மதத்தையும் காப்பதற்காக அவன் துணிந்து நிற்கின்ற தன்மை! அனைத்தையும் விட நமக்கு மானம் பெரிதல்லவா? இவ்வளவு பெரிய இனம் பின்புலமாக நிற்கின்ற பொழுது, துணிந்து நின்று, உங்கள் உரிமைகளைக் கூறுவதால், உங்களை என்ன செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஆட்சியில் அமர்ந்திருந்தும் இந்தத் துணிவு உங்களுக்கு வரவில்லையே. ஆட்சியிலே இருக்கின்றீர்கள் என்பதால் நீங்கள் சற்று எளிதாகக் கூறலாம்; ஆனால் துணிவாகச் சொல்ல முடிய வில்லையே, எவ்வளவு பெரிய இழுக்கு! நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே நம்முடைய நிலையிலிருந்து ஒரு சில மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஐயா அவர்கள் சொன்னார்கள், அரங்க நிகழ்ச்சிகளிலே நம்பிக்கை இல்லை என்று : உண்மைதான். இதைப்போல, இதுபோன்ற ஆயிரம் நிகழ்ச்சிகளிலே இது குறித்து உலகம் முழுவதும் பேசிவிட்டேன்

வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நிறையக்
கூட்டங்கள் பேசியுள்ளேன்! ஆனால் பயனில்லையே!

மன்னிக்க வேண்டும் நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை தமிழைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும், தமிழ்நாட்டு விடுதலையைப் பற்றியும், தமிழகத்திலே பிறந்த எவரும் அத்தனைக் கூட்டங்கள் பேசியிருக்க முடியாது. அத்தனைக் கூட்டங்கள் உலகம் முழுவதும், ஐரோப்பாவிலே ஏறத்தாழ 58 கூட்டங்கள், இலங்கையிலே ஏறத்தாழ 86 கூட்டங்கள், கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கை நாடுகளுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன். ஏறத்தாழ 80, 90 கூட்டங்கள். இங்கே தமிழகத்திலே ஒவ்வோர் ஊரிலும் கடந்த 35. ஆண்டுகளாக எத்தனையோ நிகழ்ச்சிகள், அரங்க நிகழ்ச்சிகள்! (எந்த விளைவும்) நடக்கவில்லையே; அறிஞர்கள் வளர்ந்தார்கள். உண்மையாகவே தமிழறிவு பெற்றார்கள் தமிழின உணர்வை, தமிழ்நாட்டுணர்வைப் பெற்றார்கள். ஆனால் நிலை என்ன? இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறோம்; விளைவு ஒன்றும் இல்லை. -

என் மகனும் இளைஞர்களும் எங்களை விடத் தீவிரம் காட்டுகிறார்கள்

என்னுடைய மகன் என்னைத் தூக்கி எறிந்து விட்டான். நீங்கள் எல்லாம் இவ்வாறு பேசிக்கொண்டே இருப்பீர்கள்: நாங்களெல்லாம் உங்களை நம்புவதற்கு அணியமாக இல்லை; அவர்கள் எப்படி நம்மோடு மோதுகிறார்களோ, நாமும் அப்படி நேரடியாகவே மோத வேண்டும்; அதை எங்களிடத்திலே விட்டுவிடுங்கள், நீங்கள் உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் - என்று எங்களையெல்லாம் தவிர்த்து விட்டான் இன்றைக்கு அவர்கள் செய்த ஒரு நிகழ்ச்சியிலேயே அலறி அடித்துக் கொண்டு, ஒரு பெரிய வீழ்ச்சியே எங்களுக்கு ஏற்பட்டு விட்டது.

அதனாலும் பெரிய அளவு தாக்கங்கள் எங்களுக்கு

நாங்களெல்லாம் வெளியிலே துணிவாக முன்புபோல் குழுவாக நடமாட முடியவில்லை. எங்குப் போனாலும் தடைகள், எங்குப் போனாலும் மறிப்புகள். இந்த "உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்" இந்த மாநாட்டை ஈரோட்டிலே இரண்டாவது மாநாடாக நடத்துகிறது என்று சொன்னால், என்னுடைய அருமை நண்பர் அரசமாணிக்கனார் அவர்களை, அவர்களின் துணிவை மிகவும் பாராட்ட வேண்டும் . எது வந்தாலும் உ.த.மு.க வுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் கடந்த 4ஆண்டுகளாக அதிகத் தாக்கங்கள். எனவே எதுவும் செய்ய முடியாதபடி செய்துவிட்டார்கள். நீங்கள் இதுபற்றி நன்கு சிந்திக்க வேண்டும்

காவல்துறையினர் தமிழகம் முழுவதும் எல்லாத் தென்மொழி அன்பர்களையும், தென்மொழி, தமிழ்நிலம் விற்பனையாளர்களையும் போய் அணுகி, வீடுவீடாகப் பலரிடத்தில் இருந்த தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களைப் பிடுங்கிச் சென்றுவிட்டனர், பலர் அதனைத் தூக்கி எறிந்தும் விட்டார்கள். தென்மொழி'யைக் கையில் வைத்திருந்தாலே, அவன் ஒரு 'கொடுமையாளன்' (வன்முறையாளன்) என்று கருதிக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கடுமையான அடி, உதையோடு, தலைகீழாகத் தொங்கப்போட்டுப் பலவகையானா உறுப்புச் சிதைவுகள். (சித்திரவதைகள்) அச்சுறுத்தல்கள், குடும்ப மிரட்டல்கள். அவர்களுடைய பெரும் பொருள் கைப்பற்றப்பட்ட வகையில் இழப்புகள் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. அக்கொடுமைகளுக்குப் பின்னும் நாங்கள் இன்னும் இருக்கிறோம். இன்னும் எங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இளைஞர்களும் இருக்கிறார்கள், இல்லாமல் போய் விடவில்லை

அதிகார நடவடிக்கைகளால் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது

இன்றைக்கு ஏதாவது எங்களை மிரட்டிப் பார்க்கலாம்; அடக்கிப் பார்க்கலாம்; அல்லது அச்சுறுத்திப் பார்க்கலாம். காலம் இப்படியே இராது. இன்னும் இதற்கு மேலும் இதை விட வலிவான இளைஞர்கள், அடுத்தத் தலைமுறையினர்கள் தோன்றுவார்கள், தோன்றிக் கொண்டே இருப்பார்கள் . ஒரு பிரபாகரன் அங்கே தமிழீழத்தில் மட்டும் தோன்றியிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். பிரபாகரன் என்கின்ற ஒரு வீரன் தமிழினத்தில் ஒருவன் மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். எத்தனையோ பிரபாகரன்கள் இங்கே இருக்கிறார்கள்; தோன்றிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் விரைவிலே எழுந்து நிற்கப் போகிறார்கள், பிரபாகரன் எழுந்த பின்தான் அவனுடைய வீரம் உலகத்திற்கே வெளிப்பட்டது. அதுபோன்ற நிலைகள் தமிழகத்திலும் வரப்போகின்றன. எனவே அதற்குப் பின்னாலே கூப்பிட்டு, நீங்கள் அமைதியாகப் பேசி ஓர் அரசியல் நிலையிலே, ஓர் இன நிலையிலே, ஒரு சமநிலை காணுகின்ற முயற்சியிலே ஈடுபட்டாக வேண்டியிருக்கும். ஏனென்றால் காலம் அறிவியல் காலமாக மாறிவருகிறது. நீங்கள் என்ன அறிவியல் கருவிகளை எடுக்கிறீர்களோ, அதே கருவிகளை மக்கள் அனைவரும் எடுப்பதற்கு வாய்ப்புகள் மிகுகின்றன. எனவே அவ்வாறான தன்மைகள், அப்படிப்பட்ட நிலைகள் வளர்ந்து வருகின்றன. எனவே யாரையும் அச்சுறுத்தி, காவல் துறையை விட்டு அல்லது படைத்துறையை அனுப்பி, ஒரு பெரிய எதிர்ப்பினுடைய உணர்வை, உரிமை எழுச்சியைத் தடுத்துவிட முடியாது - என்பதை அரசு உறுதியாக நினைவுகூர வேண்டும்

உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின்
நோக்கமும், முயற்சியும்!

எனவே, உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்று சொன்னால், உலகத்தில் உள்ள ஒரு பெயருக்காக, அப்படித் தமிழினங்களையெல்லாம் ஒன்றுபட வேண்டும் என்கிற ஒரு நோக்கத்திற்காக, கொள்கைக்காக உண்மையான ஒரு முயற்சிக்காக, அவ்வாறு ஒரு தலைப்பு தேவைப்படுகிறது. மற்றபடி நமது முயற்சி அனைவர்க்கும் பொதுவானது. எந்தச் சாதியைத் தழுவியோ, எந்த கட்சியைத் தழுவியோ, எந்த மதத்தைத் தழுவியோ அல்லது ஏதோ ஒரு துறையில் மட்டும் பாடுபடுகிற, ஈடுபடுகிற முயற்சியாக அதைக் கருதிக் கொள்ளக் கூடாது. அனைத்தும் ஒட்டு மொத்தமாக இந்த இனத்தை மீட்டு எடுக்க வேண்டிய முயற்சி என்று நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்குத் தமிழ் ஈழத்திலே போராடுகிற தமிழ் இளைஞர்கள் அனைவரும் இங்கே வந்து தங்கி, ஒன்றி உறவாடியவர்கள்தாம். நாங்களெல்லாம் அதற்குத் துணையிருக்கிறோம் என்று எங்கள் பெயரை எல்லாம் செயலலிதா மேலே எழுதிக் கொடுத்திருக்கிறார். வாழப்பாடி எழுதிக் கொடுத்திருக்கிறார். இன்னும் பல கட்சிக்காரர்கள் அங்குப் போய்ச் சொல்லி இருக்கிறார்கள். எங்கள் பெயரில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கட்டும் என்றுதான் இருக்கிறோம். அதற்காக அச்சப்பட்டு அமர்ந்துவிட வில்லை; ஓய்ந்து விடவில்லை; ஒளிந்து கொள்ளவில்லை. எந்த நிலையிலும் ஏதாவது ஒரு முயற்சி நடக்க வேண்டும். அது உண்மையாக நடக்க வேண்டும். உறுதியாக நடக்க வேண்டும். தொடர்ந்து நடக்க வேண்டும்

ஏற்ற கொள்கையை எந்த நிலையிலும் ஒருவன் கைவிடக்கூடாது - என்பதே பெருமைக்குரியது:

கருமம் செய்ய ஒருவன் கைதூவேன்" - என்கிற குறளை வள்ளுவப் பெருந்தகை சொல்வார். நீ ஏதாவது ஒரு கொள்கையை மேற்கொண்டால் - ஏற்றுக் கொண்டால், அதனுடைய செயல்பாடுகளுக்கு உன்னை உள்ளாக்கிக் கொண்டால், நீ எந்தச் சூழலிலும், எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும், உன்னுடைய கையை நெகிழ்த்துக் கொள்ளாது இருப்பதுதான் இன்றைய உலகத்திலே நிலைபெற்றது. பெருமைபடக்கூடியது - என்று அவர்கள் சொல்வார்கள். இதை எங்கே சொல்கிறார்: குடிசெயல் வகையிலே முதல் குறளாகச் சொல்கிறார்

"கருமம் செயஒருவன் கைதூவேன்' என்னும்
பெருமையின் பீடுடுடைய தில்" (1021)

எனக் கூறுகிறார். எனவே எந்த நிலையிலும் குடி தாழ்ந்து கிடந்தது: குடி என்றால் குடும்பம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். தமிழ்க் குடியைச் சொல்லியுள்ளார். இந்தத் தமிழ்க் குடியை அனைத்து நிலைகளிலும் நிலை நிறுத்த வேண்டும். அறிவு, தமிழ், திருக்குறள் என்று தனித்தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்

திருக்குறள் என்பது தமிழின மீட்பு நூல் :

திருக்குறள் தொடர்பாகப் போராடுகிற அனைத்து அறிஞர்களுக்கும் நான் சொல்லிக் கொள்ளுகிறேன். திருக்குறள் என்பது இன மீட்பு நூல் என்பதை மறந்துவிட வேண்டாம். அதிலே வாழ்க்கை, சொல்லப்பட்டிருக்கிறது. எந்த வாழ்க்கை, "தமிழியல் வாழ்க்கை" : அதிலே அறம் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த அறம்: "தமிழியல் அறம்" அதிலே பண்பு சொல்லப்பட்டிருக்கிறது எந்தப் பண்பு? "தமிழியல் பண்பு"

இந்தத் தமிழினம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே தோன்றி

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றி மூத்தகுடி"

என்று சொன்னால், அந்த மூத்தகுடி ஒரு படிநிலை வளர்ச்சி பெற்றுக் கலையியல் - பண்பாட்டியலில் வளர்ந்து, நாகரிகமுற்று, மொழியியலிலே, இலக்கியத் தன்மையிலே, அரசியல் தன்மையிலே, பொருளியல் தன்மையிலே வளர்ச்சி பெற்று, ஒரு பெரிய சிறந்த வாழ்வினமாக இருந்தது. அந்த இனத்தைப் படிப்படியாக வீழ்த்துகின்ற நிலையிலே, அந்த இனத்தின் நல்லியல்புகளை, நல்லியல் கூறுகளை, அரசியல் கூறுகளை, வாழ்வியல் கூறுகளை, உண்மையியல் கூறுகளை மெய்யியல் கூறுகளை, ஒன்றாக ஓரிடத்திலே குவித்துக் காட்டி, வருங்காலத் தமிழினத்திற்கு அவற்றை வழிகாட்டியாக ஆக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு திருவள்ளுவர் எழுதிய நூல்தான் திருக்குறள்

அது ஏதோ தர்மத்தைப் படைப்பதற்காக - மக்களுக்கான நல்வியல்புகளைக் குறிப்பதற்காக - மட்டும் தோற்றுவிக்கப்பட்ட நூல் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நல்லியல்புகள் அனைத்தும் அதிலே இருக்கின்றன. இந்த இனத்தின் மீட்சி அதிலே சொல்லப் பட்டிருக்கின்றன. இந்த இனத்தின் பண்பாடுகள். சொல்லப்பட்டிருக்கின்றன: நீண்ட நெடிய வரலாற்று. நாகரிகக் கூறுகள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இனத்தின் மெய்யறிவியல் அங்கே சொல்லப்பட்டிருக்கிறது

இருப்பினும் திருக்குறளை மட்டுமே வைத்துக் கொண்டு இனத்தை மீட்டுவிட முடியாது

அதிலே அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது. பொருளியல் அங்கே உணர்த்தப்பட்டிருக்கிறது. இன்ப இயல் அங்கே காட்டப்பட்டிருக்கிறது. அனைத்துக் கூறுகளுக்கும் இலக்காக இருக்கிற-வழிகாட்டியாக இருக்கிற ஒரு கலங்கரை விளக்காக நின்று கொண்டிருக்கிற-அந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு, அதை மட்டுமே வைத்துக்கொண்டு - நாம் தமிழ் இனத்தை மீட்டுவிட முடியும் என்று கருதிக் கொள்ளக் கூடாது என்று திருவள்ளுவம் சார்ந்த அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியலால் மட்டுமே இனத்தை மீட்டு விட முடியாது:

அதேபோல, அரசியல் சார்ந்த அறிஞர்களையும் கேட்டுக் கொள்கிறேன் . வெறும் அரசியல் தன்மைகளிலேயே மக்களிடத்திலே அரசியலால், பதவிகளால், அதிகாரத்தால் ஏதாவது ஒரு மறுமலர்ச்சியை, முன்னேற்றத்தைத் தோற்றுவித்து விடமுடியும் - அதுவே போதும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்

பொருளியல் முயற்சி மட்டுமே போதாது:

அதேபோல, பொருளியல் கற்ற மேதைகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். பொருளியலால் மட்டும் இந்த இனத்தை முன்னேற்றிவிட முடியாது. இந்த இனத்தினுடைய தலையாய தேவை அடிமை நீக்கம், அறியாமை நீக்கம், மடமை நீக்கம், மிடிமை நீக்கம், சாதி நீக்கம், மதப்பூசல்கள் நீக்கம், அரசியல் கட்சிப் பூசல்கள் நீக்கம் இணைந்த இத்தனை நீக்கங்களையும் நாம் செய்து, இந்த இனத்தைத் தூய்மையான ஒரு தமிழினமாக மாற்றினால்தான், அதிலே திருக்குறள் இருக்கும்: அறம் இருக்கும்; அரசியல் இருக்கும்: பண்பாடு இருக்கும்; கலைகள் இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி, 'மனநலம் நன்குடையராயினும் சான்றோர்க்கு இனநலம் போய் விட்டால், எல்லாம் போய்விடும்; எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்; சிதறடிக்கப்பட்டுவிடும்; கடைசியில் ஒன்றுமே இருக்காது

எதிரிகள் நாம் முன்னேறி விடக்கூடாது என்பதில் எத்துணை விழிப்பாக இருக்கிறார்கள் :

ஒரு கண்ணகி கோயிலை நம்மால் மீட்க முடியவில்லை. ஒரு சிலப்பதிகாரத்தைக் கதை என்ற அளவிலே கூட காட்ட முடியவில்லை. ஆனால் வெறும் கற்பனைக் கதையான இராமாயண, மகாபாரதத்தை இந்தியா முழுவதும் பரப்புகிறார்கள் என்று சொன்னால் - ஏன்? அந்த இனத்தினுடைய பெருமையைக் கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு எதிரெதிராக இருந்து ஏமாறிக் கொண்டிருக்கிற மக்கள் ஏமாறிக் கொண்டிருப்பார்கள். அதற்குச் சார்பாக நின்று வலுப்பெறுகின்ற அந்த இனம் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த இரண்டு விளைவுகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடிமைப்பட்ட இனம் அடிமைப்பட்டே இருக்க வேண்டும். அதை அடிமைப்படுத்தி இருக்கின்ற இனம் விழிப்பாக இருக்கவேண்டும்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்குத்தான் இராமாயண, மகாபாரதக் கதைகள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி, வானொலிகளில், எழுத்துகளில் எந்த எந்த நிலைகளில் திறமையோடு சிறுவர்களுக்கு வண்ணப்படங்களில் சிறிய சிறிய கதைகளாக-பெரியவர்களுக்குப் பெரிய விளக்கங்கனோடு உளவியல் தன்மை இவ்வளவு இருக்கிறது. அவ்வளவு இருக்கிறது என்று அடடா - யாருக்கும் விளங்காதபடி கூறி - ஆக்கி வைத்திருக்கிறார்கள் ஆரியர்களும் முதலில் மெய்யறிவியலான ஐம்பூதங்களைத் தாம் வணங்கினார்கள். அவர்கள் ஆசியாவிவிருந்து கொண்டிருக்கும்போது, அந்த வணக்கம் கிடையாது. ஒன்றும் கிடையாது. இதெல்லாம் வரலாறு சொல்கின்றது. நாம் ஒன்றும் இட்டுக் கட்டிச் சொல்வதில்லை: அவர்களுடைய எந்த நிலையுமே இங்கு வந்த பின்னே ஏற்பட்ட நிலைமைதான்! அவர்களுடையன் மொழிநிலை கூட இங்குவந்த பின்னால்தான் செப்பமாக அமைத்துக் கொள்ளப்பட்டது. அதுதான் சமசுக்கிருதம். அது கி.மு.2500 ஆண்டுபோல் ஏற்பட்ட ஒரு மொழி. தமிழ் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்றுநாம் சொல்லவில்லை, மொழி ஆராய்ச்சி அறிஞர்கள். உலகியல் அறிஞர்கள், உயிரியல் அறிஞர்கள் எல்லா நிலைகளையும் உணர்ந்து சொல்லுகின்ற மாந்தவியல் அறிஞர்கள் எல்லோரும் - கொள்கையைக் காட்டி வரையறுத்துக் கூறியுள்ளார்கள். எல்லா மொழியியல் அறிஞர்களும் மொழியியல் வரலாறுகளைச் சொல்லி, ஒவ்வொரு மொழியிலும், இன்ன இன்ன அளவிலே படி நிலை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைக் காட்டியுள்ளார்கள். எனவே நாம் தமிழிலே பிறந்து விட்டோம் - தாய்மொழி தமிழ் என்பதற்காக, தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறானால் அதில் பொருள் இருக்காது

"தமிழ்வாழ்க என்பதால் தமிழ் வளர்ந்து விடுமா"?

"தமிழ் வாழ்க" என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் வளர்ந்து விடுமா? மின்சாரம் கூட நின்று போகின்றது. இங்குள்ள அத்தனை பேரும் சேர்ந்து "மின்சாரம் வாழ்க மின்சாரம் வாழ்க" - என்று கத்திக் கொண்டிருந்தால் மின்சாரம் வந்து விடுமா? அல்லது மழையே வரவில்லை என்றால் அதற்காக 'மழையே வருக’, ‘மழையே வருக' - என்று மந்திரம் ஓதிக் கொண்டிருந்தால், மழை வந்துவிடுமா? இதெல்லாம் உண்மையா? இதெல்லாம் நடக்குமா? - அப்படியிருந்தால் எத்தனை விளைவுகளை இந்த உலகத்திலே உருவாக்கிக் கொள்ள முடியும்

தெய்வ நம்பிக்கையும் இனவிடுதலைக்குப் பயன்பட்டுவிடாது:

அங்கிருக்கின்ற தமிழினம் - தமிழீழத்திலே அழிக்கப்படுகின்றபோது, அவர்களெல்லாம் 'தமிழ் மக்களே அழிந்து போங்கள்' - என்றா சொல்லிக் கொண்டிருப்பார்கள், 'கடவுளே காப்பாற்று' எங்களையெல்லாம். 'காப்பாற்று' என்றுதான் கையைப் பிசைந்து கொண்டிருப்பார்கள். அல்லது கோயிலிலே இருக்கின்ற மணிகள் எல்லாம் எரிந்துபோக வேண்டும் என்றா ஆட்டிக் கொண்டிருப்பார்கள். 'ஐயோ, தெய்வமே! எங்களைக் காப்பாற்று' என்றுதான் அலறிக் கொண்டிருப்பார்கள். ஏன் அவர்கள் காப்பாற்றப்படவில்லை? எண்ணிப் பார்க்கவேண்டும். வெறும் தெய்வ இயல் கூறுகளால் மட்டுமே இந்த உலகியலிலே பலவகையான செயல்களைச் செய்து விளைவித்து விடமுடியாது. (தெய்வ இயல் என்பது) ஏதோ ஒரு மாந்த நிலையிலே, உயிரியல் தன்மையிலே, ஒரு வலுவான உணர்வைத் தருகிறது. என்றாலும்,ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது என்றாலும், ஒர் உறுதிப்பாட்டை நமக்கு விளைவிக்கிறது என்று சொன்னாலும், அதுவே நம் செயலுக்குப் பயன்பட்டு விடும் என்று சொல்லிவிட முடியாது- என்பதை அறிவியல் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலேகூட விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் வேறு எப்பொழுது விளங்கிக் கொள்வார்கள்? தென்ஆப்பிரிக்காவிலே கருப்பர் இன மக்களை விரட்டினார்கள் அங்கே ஒரு மண்டேலா இருந்து பாடுபட்டார். அல்லது வேறொரு வகையில், அவர்களுக்கு நமக்கு இருக்கிறது போலவே ஏராளமான தெய்வ நம்பிக்கையும், மத நம்பிக்கையும், கடவுள் கோயில்களும் இன்றைக்கும் இருந்து கொண்டுதான் உள்ளன. ஏன்? அரேபியர்களுக்கு இல்லையா? இசுரேலியர்களுக்கு இல்லையா? அந்தக் கிறித்துவம் தோன்றிய இடமே அங்கு தானே? ஏன் இந்த விளைவுகள் தெய்வ இயலால் வரவில்லை? நான் எதற்காகச் சொல்லுகிறேன்? நம்முடைய நம்பிக்கையை நான் பழுது சொல்லவில்லை. அதைப்பற்றி இழித்துச் பேசவும் விரும்பவில்லை. அது ஓர் அறிவு நிலை அது அறிவு நிலையாக இருக்க வேண்டுமே தவிர அந்த நிலை செயல்நிலையாக வாழ்வியலாக, ஆகிவிடமுடியாது

நம் பூசல்களாலும் வேறுபாடுகளாலுமே இனம் தாழ்வடைந்து விட்டது:

வாழ்வியல் என்பது நாம் கண்கூடாகப் பார்க்கின்ற செயல்களை உள்ளடக்கியது. எனவே, மதத்திற்காகவும், சாதிக்காகவும் நாம் பிளவு ஏற்படுத்திக் கொண்டு, நமது முயற்சிகளை முடப்படுத்திக் கொண்டு, உரிமை இழப்புகளுக்கு ஆளாகி விடக்கூடாது. அந்த உரிமை இழப்புகளால்தான் இத்தனையாயிரம் ஆண்டுகளாக நம் உடைமைகளை இழந்து, அழிந்து கொண்டிருக்கிறோம். உலகத்திலே இன்றைக்கு மாந்த இனங்கள், மக்கள் இனங்கள். தேசிய இனங்கள் என்று சொன்னால் இருக்கின்ற அத்தனை தேசிய இனங்களிலும், மக்கள் இனங்களிலும் மிகப்பழமையான இனம், மிகப்பெருமை வாய்ந்த இனம். மிகப்பெரிய நாகரிகத்தைப் பெற்றிருந்த இனம், மிகச் சிறந்த பண்பாட்டைப் பெற்றிருந்த இனம், மிகச் சிறந்த அறிவியல் கூறுகளைப் பெற்றிருந்த இனம், என்று தமிழினத்தைத் தவிர்த்த வேறு எந்த இனத்தையும் சுட்டிச் சொல்ல முடியாது, வரலாற்றிலே, நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. உலக வரலாறு படித்த அறிஞர்கள் தெரிந்திருப்பீர்கள். பின் ஏன் இந்த இனம் இழிவடைந்து விட்டது? என்ன காரணம்? நமக்குள்ளே இருக்கின்ற பூசல்கள், சாதி வேறுபாடுகள்

"ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி"

என்னயா இது வேடிக்கை! எப்படி சாதிகள் வந்தன? எப்படி வருண வேறுபாடாக மாறின? எப்படி இழிவு தாழ்வுகள் தோன்றின?

வேற்றுமைப் படுத்துகிற இறையியலும் மதமும் எங்களுக்கு வேண்டாம்:

இன்றைக்கும் சொல்லுகிறாய், "நீ தேவன்” என்று; "நீ உயர்ந்தவன்" என்று இன்றைக்கும் ஒருவனைத் தாழ்ந்தவன் என்று சொல்லுகிறாய்; பிற்பட்டவன் என்கிறாய்; இழிந்தவன் என்கிறாய்; ஒருவனுடைய மொழியிலே இறைவனிடத்திலே பூசை செய்யக்கூடாது, வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்கிறாய். இறைவன் என்று இருந்தால். அவன் எல்லா மொழியையும் தெரிந்திருக்கவேண்டும் என்பதுதானே சரி குறவர்கள் தங்கள் மொழியிலே சொல்லுகிற, வழிபாட்டையும் கூட. இறைவன் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே. அல்லது, உயிரினங்கள் ஆகிய எறும்பு முதல் யானை வரை அவை பேசிய பேச்சுகள், மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்தானே? ஏன் தமிழிலே வழிபடக்கூடாது என்று சொல்லுகிறாய்? அது என்ன இறைமை இயல்? அஃது என்ன பிலாசுபி (Philosophy) இண்டியன் பிலாசுபியா? இண்டு பிலாசுபியா? அல்லது 'பாரத மாதா பிலாசுபியா?’ என்னது அது? ஏன்; தமிழர்கள் கோயில்களை வைத்துக் கொண்டு தமிழிலே மந்திரம் சொன்னால் என்ன? எங்களுக்கு ஒரு தமிழியல் வரலாறு இல்லையா? எங்களுக்கும் ஒரு மத இயல், இறைமையியல் இல்லையா? இருக்கிறது. மக்கள் இன நலத்திற்குப் பொதுவான ஒர் உணர்வு அது. அதைச்சரி என்று சொன்னாலும் தவறு என்று சொன்னாலும்,அஃது இருக்கிறது; அது இருக்கவேண்டும் என்று சொன்னாலும் இருக்கக் கூடாது என்று சொன்னாலும் அது இருக்கிறது. ஒரு காலத்தில் இல்லாமல் பிறகு தோன்றியிருக்கிறது; ஒரு காலத்தில் இருந்திருந்து பிறகு இல்லாமல் போய் இருக்கிறது, அது. அதையெல்லாம் ஆராய்ந்து கொண்டுதான் அந்த உரிமைகளையெல்லாம் கொடுப்பேன், வழங்குவேன் என்றும், உங்களையெல்லாம் உயர்ந்த மக்களென்றும் சொல்லுவேன் என்று சொன்னால், அது என்ன பித்தலாட்டம்? அதற்கு எதற்கு அரசியல்? அதற்கு எதற்கு மக்களியல்? - மாந்த வியல்? - சட்டதிட்டங்கள்? - நெறிமுறைகள்? - மாநில அரசுகள்? எல்லாவற்றுக்கும் நீயே வல்லாண்மையாக இருந்துவிட்டு, எல்லாவற்றுக்கும் நான்தான் தலைமை என்று சொல்லி அனைத்ததிகாரமும் எனக்குத்தான் உண்டு; கடவுளுக்கு அடுத்தபடி நான்தான்; நீங்களெல்லாம் எனக்கு அடிமைகள் ஏதிலிகள், புழுக்கள்: பூச்சிகள்; பூண்டுகள்; மரங்கள்: மட்டைகள்: நாங்கள் சொல்லுகிறபடிதான் நீங்கள் கேட்க வேண்டும் என்கிறதுதான் மதம் என்று சொன்னால். அது போன்ற மதம் எங்களுக்கு வேண்டாம், நாங்கள் சொல்வது என்ன? இதுதான். இந்து மதத்தின் கோட்பாடு. ஓர் இன மக்களை அடிமைப்படுத்தித்தான் வைத்திருப்போம். ஓர் இன மக்கள் தாழ்த்தப்பட்டுதான் இருக்க வேண்டும்.ஏன் என்றால் அடிமையாக உழைப்பதற்கு வேறு இடத்திலிருந்து மக்களைக் கூட்டிக் கொண்டு வர முடியாது. தமிழின மக்களைத்தாம் - சூத்திர இன மக்களைத்தாம் . அதற்கு ஒதுக்கி இருக்கிறோம் - என்று சொன்னால் அந்த இந்து மதம் எங்களுக்கு வேண்டாம். அந்தக் கடவுள்களே எங்களுக்கு வேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்லுவோம்.

...அதேபோல் அரசியலிலும் வேற்றுமைகள்
என்றால், உன்னுடைய ஆட்சியும் எங்கட்கு
வேண்டாம்

எல்லாருக்கும் பொதுவான இறைவனை உனக்கு ஒருவனுக்கு உன்னுடைய சாதிக்கு என்று சொல்லிக் கொள்ளுவது போலவே, அரசியலிலும் நீ ஆளுமைச் சாதியாக இருக்கிறாய்; மேம்பட்ட சாதியாய் இருக்கிறாய். உயர் சாதியாய் இருக்கிறாய். உச்ச நிலையிலே உச்சாணிக் கொம்பிலே ஏறிக்கொண்டு மற்ற எல்லா இனமக்களையும் காலிலே போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறாய். அரசியலிலே தாழ்ச்சி. இனவியலிலே தாழ்ச்சி, கல்வியிலே எங்கள் தாய் மொழியிலே கற்க முடியவில்லை. வழிபாட்டுக்கு நாங்கள் விரும்புகிற மொழியிலே வழிபாடு செய்ய முடியவில்லை. எங்களுடைய தாய்மொழியைப் பேச முடியவில்லை. அதை அரசு மொழியாக ஆக்கமுடியவில்லை : இதைப் பண்பாட்டு மொழியாகச் செய்ய முடியவில்லை. எல்லாவற்றிலும் நாங்கள் அடிமைப்பட்டு இழந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால், 'உன்னுடைய ஆட்சியும் எங்களுக்குத் தேவை இல்லை; உன்னுடைய மதம் தேவையில்லை; உன்னுடைய ஒழுக்கம் தேவை இல்லை; உன்னுடைய பாரதப் பண்பாடு தேவையில்லை என்று நாங்கள் சொல்வதிலே என்ன தவறு? என்ன ஒருமைப்பாடு? என்ன ஒற்றுமை? மக்களை இழி மக்களாகக் கருதுகிற உன்னுடைய இழிவான தன்மைகளைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

நாங்கள் பிரிவினையாளர்கள் இல்லை; நீதான் பிரிவினைக்காரன்:

நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர். இந்தத் தமிழ்நாடு பிரிய வேண்டும் என்று சொன்னால் அது உங்களால் தான். நாங்கள் நாட்டைப்பிரிக்கவேண்டும் என்று சொல்லுகிறோம். அதில் ஒன்றும் தவறு இல்லையே. நீ மாந்தனையே பிரித்தாளுகிறாயே! மக்களையே பிரிக்கிறாயே. இவன் தாழ்ந்தவன், இவன் பிற்பட்டவன், இவன் தொடப்படாதவன், தீண்டப்படாதவன், இழிந்தவன் என்று ஆயிரம் சாதிகளை வைத்துக் கொண்டு உன்னை மட்டும் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாய்-பார்ப்பனன் என்று சொல்கிறதில்லை.

அன்பர் ஒருவர் கேட்டார்-பார்ப்பணன் என்றால் என்ன, பிராமணன் என்றால் என்ன, ஆரியன் என்றால் என்ன என்று எல்லாம் வேறு வேறு, ஆரியர்கள் என்றால் எப்படி? தமிழர்கள் என்றால் எப்படி என்று வரலாறு சொல்கிறது.

தமிழினத்திற்கு ஏதாவது செய்யத்தானே நாம் பதவிக்குப் போக வேண்டும்.

"தென்மொழி" கடந்த முப்பத்தோர் ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதே போல தமிழ்ச்சிட்டு இருபத்தைந்து ஆண்டுகளாக நடக்கிறது. யார் அதைப் படித்தார்கள்? எங்கோ மாணவர்கள் ஒரு சிலர் படித்துவிட்டு ஆசிரியர்கள் ஆனார்கள்; அறிஞர்கள் ஆனார்கள், ஆட்சியிலே அமர்ந்தார்கள். இன்றைக்கு இருக்கிற அமைச்சர்களில் பெரும்பாலானோர் தென்மொழி படித்தவர்கள். மாணவர் நிலையிலே நமக்குத் துணையாக இருந்தவர்கள். இல்லையென்று சொல்லவில்லை, இதை எதற்குச் சொல்லுகிறேன்? ஒரு பதவியைப் பெற்ற பின்னாலே - ஓர் ஆளுமையைப் பெற்ற பின்னாலே - ஓர் அதிகாரத்தைப் பெற்ற பின்னாலே. கொஞ்சம் பொருள் வரவு பெற்ற பின்னாலே உணர்வுகள் எல்லாம் அவர்களிடத்தில் மங்கி விடுகின்றன: மழுங்கி விடுகின்றன. அவர்கள் இழந்து விடுகின்றனர்.மீண்டும் அடிமையாகப் போய்விடுகின்றனர். அவர்கள் அடிமையாகப் போகிற பொழுது அடிமையாவது அவர் மட்டுமல்லர்: அவருடைய குடும்பம் மட்டுமன்று: இங்கிருக்கிற ஏழரைக் கோடி மக்களும்! இந்த உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிற பதினேழரைக் கோடி தமிழர்களையும் அடிமைகளாக ஆக்குகிறார்கள். இவர்களைக் காட்டிக் கொடுத்து அவர்கள் பல நலன்களைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்று கேட்டால் இவர்களுக்கு நலன்கள் செய்வதற்குத்தான் அவர்கள் அங்கு போகிறார்களாம். ஆம் நம்முடைய நலத்துக்காக நம்முடைய உரிமைக்காகத்தான் - என்று கூறித்தான் பதவிக்குப் போகிறார்கள். ஆனால் அங்கு போனபின் என்ன நடக்கிறது? மேலோட்டமாகச் சில சீர்திருத்தங்கள். மேலோட்டமாகச் சில செயற்பாடுகள். அது, தமிழுக்காக யார் வந்தாலும் அதே செயல்கள்தாம், ஆட்சிக்காக அவர்கள் அங்கு போக, வேண்டியதில்லை ஆட்சி என்பது ஒரு பணி - ஓர் ஆசிரியப் பணி போன்றது. அந்த ஆசிரியப் பணிக்கு வந்த ஆசிரியர் ஒருவர் கல்வியை மாணவர்களுக்குச் சொல்லித் தருவது போல அஃது ஒரு கடமை, அது நிகழ வேண்டும்.

ஆட்சி என்பது யார் வந்தாலும் நடக்க வேண்டிய ஒரு பணி போன்றது : நாம் ஆட்சிக்குப் போவது இனத்தின் நன்மைக்காகவே இருக்க வேண்டும் :

இவர்கள் போனாலும் நிகழும்; வேறுயார் போனாலும் நிகழும்: நம்மவர்கள் போகிறார்கள் என்று சொன்னால், நம்முடைய இனத்தின் தாழ்ச்சியை மீட்பதற்காக - அவர்களுடைய உரிமையைப் பெறுவதற்கான - முயற்சிகளைத் தான் செய்யவேண்டும். அதற்குத்தான் திருவள்ளுவர் சொல்வார். "அப்பா, நீ எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாமல் போனால், அது உன்னுடைய அதிகாரத்திலே, அறிவிலே, உழைப்பிலே முயற்சியிலே தடையாகி விடும்.

இதில் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாமல் விடுவது ஒன்று: அல்லது செய்ய வேண்டாதவற்றைச் செய்வது மற்ற ஒன்று.

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்"

நம்(ம) இவர்கள் பாவேந்தர் விழாவைக் கொண்டாடிய அழகு :

பாரதிதாசனுடைய நூற்றாண்டு விழா என்று சொன்னால், அதிலே எங்களையெல்லாம் குழு உறுப்பினர்களாக்கி, என்னையெல்லாம் கேட்டார்கள், ஒரு பெரிய குழு 28, 30 பேர். இப்போது 45 பேர். நான் ஓர் எட்டே எட்டுக் கருத்துகளை மட்டும் வைத்தேன். மிகவும் சிறந்த கருத்துகள். 'தென்மொழி'யிலேயே அதை வெளியிட்டு இருக்கிறேன். அதைக் கேட்டுவிட்டு, அமைச்சர் அன்பழகன் சொல்லுகிறார்: "இவர்கள் பாரதிதாசனுடைய நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவதற்குக் கருத்தைச் சொல்லுங்கள் என்று சொன்னால், அவருடைய விழாவை நூறாண்டுகள் விழாவாகக் கொண்டாடுவதற்குரிய கருத்துகளைச் சொல்லுகிறார்கள்" என்று சொன்னார்

எங்கே நான் நூறாண்டு கொண்டாடுவதற்காகவாக் கருத்தைச் சொன்னேன்? இல்லை. பாரதிதாசனை நிலைப்படுத்துவதற்காகச் சொன்னேன். பாரதியாருக்கு எத்தனைக் கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாது, சொன்னால் வியப்படைவீர்கள். புள்ளி விளக்கங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. அவருடைய வீட்டை விலைக்கு வாங்கி, நிலத்தை விலைக்கு வாங்கி, ஊரிலே போய் அதற்கென்று ஒரு பெரிய நிலத்தை வாங்கி, எட்டயபுரத்திலே, அவருடைய நினைவு மண்டபம், மணி மண்டபம், இவ்வாறு எவ்வளவு பெரிய உருவாக்கம். ஆனால் பாரதிதாசனுக்கு ஒரு சிறிய உருவாக்கமும் இல்லை. ஆங்காங்கே கூட்டம்; பட்டிமன்றம்: பாட்டரங்கம், பாராட்டு, பரிசுகள், விழா வேடிக்கைகள்: இவ்வளவோடு சரி. இதுதானா பாரதிதாசன் நூற்றாண்டு விழா இதைத்தான் சொன்னேன் நான். மன்னிக்க வேண்டும். நான் குறை சொல்ல வில்லை. நமக்கு இருக்கின்றது முழுப் பட்டினி முழுப் பசி! அதற்குப் போய், நீ துளியளவு கடலைமிட்டாய் கொடுத்துச் சாப்பிடு என்று சொல்லுகிறது போல் உள்ளது, (விழாக் கொண்டாடிய அழகு) பசி அடங்குமா?

ஆட்சி வாய்ப்புள்ள பொழுது பயன்படுத்திக்
கொள்ள வேண்டாவா?

நமது அரசியல் உரிமைகள், தேவைகள் பல. பொருளியல் உரிமைகள் பல. அதை இரவலனுக்கு (பிச்சைகாரனுக்கு)ப் போடுவது போல, மக்களுக்கெல்லாம் சோறு போட்டுவிட்டு, நான் மக்களுக்கெல்லாம் சோறு போட்டுவிட்டேன்.மாணவர்களுக்கெல்லாம் சோறு போட்டுவிட்டேன் என்று சொல்லுகிறாயே - சரியாய்ப் போய் விட்டதா? இலவய வேட்டி கொடுத்தாய். சரியாகப் போய்விட்டதா? இனிமேல் எப்படிக் கிடைக்கும் இலவய வேட்டி? இனி இலவய அரிசி எங்கே கிடைக்கும்? அடுத்த ஆண்டிலிருந்து யார் கொடுக்கப் போகிறார்? இப்பொழுதே எல்லாருக்கும் சரியாகக் கிடைக்கவில்லை. இதெல்லாம் வீண் வேலை. இதற்கெல்லாம் எத்தனைக் கோடி ரூபாய் செலவு தெரியுமா? புள்ளி விளக்கத்தைப் பார்த்தீர்களென்றால் வியப்படைவீர்கள். குறை சொல்லவில்லை. நாம் செய்து கொள்ளவேண்டிய தேவைகள் நிறைய உள்ளன. வாய்ப்புக் கிடைத்தது. அந்த வாய்ப்பை இப்பொழுது இழந்து விட்டோமே! எனவே அரசியல் முயற்சிகளில் மட்டும் நாம் நிறைவடைந்து விட முடியாது? ஏதாவது சில உரிமைகளை மட்டுமே கேட்டுப் பெற்றுவிட முடியாது. பொருளியல் உரிமைகளால் நமக்கு என்ன கிடைத்து விட்டன? எங்கே நமக்கு உரிமைகள்?

நம் பொருளியல் திட்டம் என்ன உருப்பட்டது?

அரசுடைமையாக்கப்பட்ட வைப்பகங்கள். "அதிலே கடன் கொடுக்கிறோம், அது கொடுக்கிறோம். இது கொடுக்கிறோம்' என்று சொல்லுகிறார்கள். நீங்கள் சிற்றூர்களுக்குப் போங்கள். உழவர்களைப் பாருங்கள், உங்களுக்கு என்ன கடன்கள் கிடைக்கின்றன என்று கேட்டுப் பாருங்கள். 10,000 அவன் கடன் கொடுத்தால், அவர்கள் கையில் பெறுவது 5,000. அந்த ஐந்தாயிரத்தை வைப்பக அதிகாரி அலுவலர், அமைச்சர் வரை எல்லாகும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். அதற்காகத் தான் கடன் திட்டமே வைத்திருக்கிறான். எப்படிப் பின்னே வருமானம் வரும்? பெரிய இடத்துத் திருட்டுகள், அரசியல் திருட்டுகள், புரட்டுகள், ஏமாற்றுகள், எத்துகள், தொழிலியல் திருட்டுகள், ஏமாற்றுகள்!

கல்விக் கூடங்களிலே என்ன வாழ்கிறது?

கல்விக்கூடங்களில் எல்லாம் பெரிய பெரிய தொகைகளை வாங்குகிறார்கள். காலையில் பேசிய அந்த அம்மையார் சொன்னார்கள்; மிகச் சிறப்பாகச் சொன்னார்கள், பெண்களுக்கு எங்கே வேலை: கல்லூரிகளில் சேர்த்துக் கொள்கின்றனரா? சிறு மழலைப் பள்ளியிலே சேர்வதற்கு 5,000-10,000- சென்னையிலே தொடக்கப் பள்ளியிலே சேர்வதற்கு 5,000 - 10,000, உயர்நிலைப் பள்ளியிலே சேர்வதற்கு 20,000- 30,000, கல்லூரியிலே சேர்வதற்கு 50,000 ஓரிலக்கம், இரண்டிலக்கம், பணியிலே சேர்வதற்கு 30,000-இலிருந்து 2 இலக்கம் வரைக்கும். பொறியியல் படித்த மாணவன் ஒருவன் முதல் வகுப்பிலே தேறினாலே கூட, அவனுக்குப் பணி கொடுக்க ஓரிலக்கம் கேட்கிறார்கள். யார் நம்மவர்கள்? இது எங்கே? மண்டல் அறிக்கை - என்று சொல்வது உண்மையா? சரிதானா? அல்லது வேறு எங்காவது இருந்து இங்கு வந்தார்களா? நம்முடையவர்கள்தாம். ஒரிலக்கம் 50 ஆயிரம் கேட்கின்றனர். காவல் துறையிலே, காவல் கண்காணிப்பாளராக வரவேண்டும் 2 இலக்கம் உரூபா, காசு கொடுக்காமல் எந்தப் பணியையும் கல்வியையும் வாங்கிவிட முடியாது. தகுதியினாலோ, மண்டல் அறிக்கையின்படி நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று ஏதோ இருந்தாலும் பணியில்லை.

பெரியார் பெயரால் உள்ள கல்வி
நிறுவனங்களில் மட்டும் நேர்மையாக உள்ளனரா?

சரி, பெரியார் வைத்துவிட்டுச் சென்றாரே. அந்தச் சொத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவே என்று, அங்கு சென்றால் இலவயமாக சேர்த்துக் கொள்வார்களா? ஒன்றும் முடியாது. வெளியிலே அரசுக் கல்வி நிறுவனங்களிலே 50,000 என்றால் அங்கே உரூ. 20,000 கேட்பார்கள். அவ்வளவுதான் சலுகை. அய்யோ நான் பிற்படுத்தப்பட்டவன். அப்படி என்றால் அதற்குத்தான் உரூ. 20,000 தாழ்த்தப்பட்டவன் என்றால் சரி, 2,000 குறைத்துக்கொள்; உரூ 18,000 கொடு. எப்படிப் படிப்பான்? படிப்பதே அரிது. படித்துவிட்டு வேலைக்குப் போவது அதைவிட அரிது. எனவே மானிடராய்ப் பிறத்தல் அரிதென்று சொல்வ தெல்லாம் பொய் எத்துணை மக்கள் நெருக்கம் இப்போது, அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. எங்கே போய் மானிடராய்ப் பிறக்கிறது? ஈ, எறும்பு, கொசு போல எல்லாம் மக்களாகப் பிறந்து விடுகிறார்கள். இப்போதைய மக்களைப் பார்த்தாலே, மாடு. எருமை, குதிரை போல. எனவே 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது இல்லை. மானிடராய்ப் பிறந்தாலும், கல்வி கற்றல் அரிது பணி கிடைப்பது அரிது: அப்படிப் பணி. கிடைத்தாலும் அரசியலைக் கைப்பற்றுதல் அரிது என்று அப்படிப் பாட வேண்டிய இரங்கத்தக்க நிலை, இப்போது!

விழிப்புற்று எழ வேண்டும்!

எனவே, நாம் அந்தப் பழமையிலே ஊறிக்கொண்டு அடிமைத் தனத்திலிருந்து மீளாத தன்மையிலே அடிமையுற்று, மடமையுற்று, மிடிமையுற்று அறியாமையுற்று இருக்கக் கூடாது. விழிப்புற்று எழவேண்டும். அதைத் தான் பாவேந்தர் அவர்கள் நூற்றாண்டு விழாவிலே நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அந்த முயற்சிகளுக்கு "உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்" ஒருவாறு துணை செய்கிறது. "தமிழின விடுதலைக் கழகம்" ஒருவாறு துணை செய்கிறது. நாங்கள் வைத்திருப்பதெல்லாம் சிறிய சிறிய இயக்கங்கள். 100-பேர், 500 பேர் சேர்ந்த இயக்கங்கள். இலக்கம் பேரைச் சேர்த்துக் கொள்ளுகிற அளவிற்குக் கூட எங்களுக்குப் பொருள் ஏந்துகள் இல்லை. வசதி, வாய்ப்புகள் இல்லை. அது இருந்தால் அ'து எப்படி ஆகுமோ அ'து எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த அளவு அப்படியெல்லாம் வளர்ந்து, இதையே ஒரு பெரிய அரசியல் கட்சி போல் ஆக்கிவிடக் கூடாது என்பதற்காகவே பெரிய அளவில் அதை வளர விடவில்லை. உண்மை அதுதான். இல்லையானால் நிறைய வளர்ந்திருக்கும்.

இந்த உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதனால்தான் நடுவணரசு. கைவைப்பதற்கு அஞ்சுகிறது. ஜரோப்பாவில், அமெரிக்காவில், ஆசிய நாடுகளிலே. இலங்கையிலே எல்லா இடங்களிலும் நம்முடைய அன்பர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குப் போகின்ற அரசியல் தலைவர்கள் எல்லாம் பார்த்து வியந்துவிட்டு வருகிறார்கள். எண்ண அளவிலே, கருத்தளவிலே, கொள்கை அளவிலே! இயக்க அளவிலே அன்று. இன்றைக்கு நாங்கள் அதை ஒர் இயக்கமாக ஒரு கட்டளை போட்டு, அங்கே அதை ஏதாவது ஒரு செயலைச் செய்து விடுங்கள் என்று சொன்னால், அதை அங்கே அவர்கள் செய்து முடிக்கிற நிலையிலே எங்கள் இயக்கங்கள் இன்னும் வளரவில்லை. கொள்கை அளவிலே - கருத்து அளவிலே - ஒரு செயலுக்கு முந்தைய முயற்சி நிலையிலே - அது நின்று வளர்ச்சி பெற்று வருகின்றது. இந்த இயக்கம். இந்த நான்கு ஆண்டுகளாக இடைக்கால நிலையிலே பலவகையான அரசியல் தாக்கங்களால் நலிந்து, மெலிந்து வாடி நிற்கின்றதே தவிர, அது மறைந்து போய்விடவில்லை; இறந்து போய்விடவில்லை; அழிந்து போய்விடவில்லை; அதை அழிக்க முடியாது. யாரும் மறைத்துவிட முடியாது என்பதை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்துவதற்காகத்தான், இங்கு, பெரியார் மாவட்ட அளவிலே, இவ்வளவு பெரிய இக்கடடான சூழ்நிலையில், இக்கட்டான இந்நாளில், நம்முடைய மாநாடு, பெரியார் மாவட்டத் தலைவர், நம்முடைய புலவர். ஆற்றல் மிக்க உண்மையான மறவர். தமிழின மறவர் அரசமாணிக்கனார் அவர்களால் நடத்தப் பெறுகிறது. இங்கே வந்திருப்பவர்கள் குறைவானவர்களாக இருக்க லாம். வரமுடியாதவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இது மாநில அளவிலே கூட்டப்பட்ட மாநாடு அன்று. எனவே நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்ய முடிய வில்லை. அதிகமாக இதற்குச் செலவழிக்கவும் விரும்ப வில்லை. மக்களிடத்திலே ஏதோ ஒரு வகையிலே கையேந்தித் துண்டேந்தி வாங்கிச் சேர்த்த காசுகளாலே, நாமெல்லாம் ஒருவர் கருத்துகளை ஒருவர் பரிமாறிக் கொள்ளுகிற தேவையிலே இக்கூட்டம் கூட்டப் பெற்றிருக்கிறது.

எங்கள் முயற்சிகளுக்குத் துணை நில்லுங்கள்

பெரியோர்களே! இது எதற்காகவோ, பதவிக்காகவோ, ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ நாங்கள் முயற்சி செய்யவில்லை; இம்மாநாட்டைக் கூட்டவில்லை. அந்த நோக்கம் எங்களுக்கு அறவே கிடையாது. மக்களுக்கு உண்மையான கருத்து விளக்கங்களைத் தர வேண்டும்; அவர்கள் உண்மையான அறிவு பெறுவதற்குத் துணையாக இருக்கவேண்டும். அவர்கள் ஒரு காலக் கட்டத்திலே எழுச்சி பெற்று. இந்த இன மக்களின் வலிவை எதிரிகளுக்குக் காட்டவேண்டும். அந்த வகையிலே இந்த இனத்தை மேம்பாடு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஒரு சில முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

சான்றோர்களே, பெரியோர்களே, உண்மையான வணிக உள்ளங்களே, வள்ளல் நெஞ்சங்களே! தமிழர்களே! நீங்கள் எல்லாம் இந்தக் கருத்துகளுக்கு இந்த முயற்சிகளுக்கு, என்றென்றும் துணை நிற்கவேண்டும் . இந்த முயற்சிகளை வரவேற்க வேண்டும். வாழ்த்த வேண்டும். ஆதரவு தரவேண்டும். வாழ்விக்க வேண்டும். இந்த இனம் தன்னுடைய பழைய வலிவு பெறுவதற்கு, பழைய பெருமையைப் பெறுவதற்கு, உண்மையான தமிழினமாக மலர்ச்சியுறுவதற்கு நீங்கள் துணைநிற்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு, இந்த நீண்ட நெடுநேரம் காத்திருந்து, இம்மாநாட்டைச் சிறப்புற நடத்திக் கொடுத்த உங்களுக்கு. இந்தக் கழகத்தின் முதல் தொண்டன் என்கிற வகையிலே என்னுடைய நெஞ்சு நிறைந்த வணக்கங்களையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.


தமிழ இனமே! தமிழ இனமே!

தமிழ இனமே! தமிழ இனமே!
கமழக் கமழக் கழகக் காலத்து
ஒங்கிய வாழ்க்கை தாங்கியிருந்து,
நீங்குதல் அறியா அடிமை நிலைபெறத்
தாழ்ந்து கிடக்கும் தமிழ இனமே!
வாழ்ந்து கிடந்த வரலாற்றைப் புதுக்குவாய்!


உனைவிழிப் பிக்கவும் உனைவாழ் விக்கவும்
உனையில் வுலகத்துள் உரிமை இனமெனப்
பட்டயங் கட்டிப் பழம்புகழ் மீட்கவும்,
கொட்டிய முரசம் எத்தனை தெரியுமா? 10
கூக்குரலிட்டவர் எவர் எவர் அறிவையா?
ஏக்கமுற் றுன்னை எழுக எழுகென
எழுதிக் குவித்த கைகள் எத்தனை?
தொழுது வேண்டிய வாய்கள் எத்தனை?


தோளை உலுக்கித் தூக்கி நிறுத்தி
வாளைச் சுழற்றடா என்றுனை வாழ்த்திய
பாட்டின் வேந்தன் பாரதி தாசற்கு
நீட்டி முழக்கி விழா நிகழ்த் தினையே!
என்ன பொருளில் இவ்விழா வெடுத்தாய்?
சொன்னவன் பாட்டின் சொற்பொருள் என்ன20.
என்ன சொன்னான்: எவர்க்கவன் சொன்னான்?
இன்ன விளக்கங்கள் எல்லாம் அறிவையா?


குட்டக் குட்ட்க் குனிந்து கொடுக்கும்
முட்டாள் தமிழனே மூடப்பிறவியே
ஒன்று கேள்: நீயோர் ஊமைய னல்லன்:
தொன்றுதொட் டடிமைத் தொழும்பனு மல்லன்
அன்றுன் தமிழ்க் கொடி பனிமலை ஆண்டது!
இன்றுன் தமிழ்த்தலை இந்திக்குத் தாழ்ந்தது:

வடவரின் தொடர்பால் மானமும் வறண்டது!

தொடவும் கூசித் தோளைச் சிலிர்த்தவன்

30


திட்டத் திட்டப் பல்லொளி தெறிக்க,
தொட்டுத் தொட்டுச் சிரித்துப் பழகுவாய்!
நீயோர் அடிமை என்பதை நினையாய்!
பாயோ தரையோ படுத்துத் துரங்குவாய்!
படைத்ததை உண்ணப் பழகிக் கொண்டனை!
கிடைத்ததில் உள்ளக் கிறக்கம் கண்டனை!


உரிமை வேண்டிக் கேளடா என்றால்
உரிமைக்குப் பொருளென்ன என்று கேட்கிறாய்!
உரிமைக்குப் பொருளே உரிமை என்பதை -

நரியும் நாயும் நன்றாய் உணருமே!

40


கட்டிய நாய்க்குக் கழுத்து முட்டக்
கொட்டி வளர்க்கினும் குரைத்துக் குரைத்துத்
தன்னுரி மையினைத் தவறாது முழக்குமே!
உன்னுரி மைக்கோ உளவு கேட்கிறாய்!
உலக இனத்துள் உன்னினம் ஒன்றுதான்
பலநெடுங் காலமாய் அடிமைப் பட்டது!
குடிமை தளர்ந்தது; பண்பு குலைந்தது;
மிடிமை சான்றது; மேல்வர மறந்தது!


தமிழனே இதுகேள்! உன்னினம் தாயினம்!
{{rh|அமிழ்தெனும் உன்மொழி அனைத்தினும் தாய்மொழி!

|| 50 }}

உன்நா கரிகம், உன்பண் பாடே
எந்நா கரிகத் தினுஞ்சிறந் திருந்தது!
உன்றன் பண்போ ஒருதனிப் பண்பாம்!
உன்றன் அறமும் அரசியல் அமைப்பும்
என்றும் பொருந்திப் பொதுமை இயல்வது:
ஒன்றும் பொதுமை புதிய தில்லையே!
காரல் மார்க்சு கண்ட பொதுமையைப்
பாருக் குரைத்தது பழம்பெருந் தமிழே!

இந்தப் பொதுநிலை கழக நூல் உரைக்கும்!
அந்த வரலாறு அடியொடு மாறியே 60
இன்றைய அடிமை இனவர லாறாய்க்
குன்றிக் குலைந்து கொடுமைப் பட்டதே!


உரைக்கக் கேளிதை; உன்னினம் இன்றோ
அரைக்காணி நிலத்தையே அளப்பருஞ் சொத்தாய்க்
கருதிக் கொண்டு கவலாது கிடக்கும்!
பெருநிலம் உனக்குச் சொந்தம் என்பதோ,
மொழிவழி உன்றன் முன்னோர் அதனையே
வழி வழித் தாயமாய் வைத்தனர் என்பதோ,
அடிமையாய் போன பின் அறிந்ததிலை நீயே!

தடிமையாய்ப் போனதுன் தோலும் மானமும்!

70


விடியாத் தமிழனாய் வீழ்ந்து கிடப்பாய்!
படியாய்ப் போனதுன் முதுகு, பாரடா!


ஆரியன் வந்தான்; அரசைக் குலைத்தான்!
ஊரிலே புகுந்துன் உறவைக் கெடுத்தான்!
தமிழனாய் வாழ்ந்தவன் தலைத்தலைப் பிரிந்தே
உமிழத் தக்க ஒரு நூறு குலமாய்ப்
பிரிந்து தன்பழம் பெயரையும் மறந்தாய்!
உரிந்து தள்ளினான், ஊசைப் பார்ப்பான்!
குலத்தைக் காட்டிக் குனி, நீ என்றான்:

நிலத்தைக் காட்டி நிமிர், உழை என்றான்?

80


குனிந்தாய் நிமிர்ந்தாய்: குடுமியன் சொற்குப்
பணிந்தாய்; படுத்தாப் பற்பல கதைகளைச்
சொல்லிக் கிடந்தான்; சொக்கிப் போனாய்!
கல்லி எடுத்தான் மூளையை! கவன்றிலை!


சொல்லில் செயலில் வல்ல நீ, அதன்பின்
பல்லி சொல்லுக்குப் பயன் கேட்டு நின்றாய்
கல்லை நிமிர்த்திக் கடவுள் என்றாய்!
பொல்லாப் பழங்கதை புழக்கத்தில் வரவும்

கொள்ளை போனதுன் பழந்தமிழ்க் கொடிமரம்!
மொள்ளைகள் பற்பல வந்து முளைத்தன!
வேதியர் வேதம் விண்ணையும் ஆண்டது!
சாதிச் சண்டைகள், சமயச் சழக்குகள்,
கல்வியில் வீழ்ச்சி, கடமையில் தொய்வு,
செல்வத் தாழ்ச்சி, சீரழி வெல்லாம்
படிப்படி யாகப் பழக்கத்தில் வந்தன.
பொடிப்பொடி யாகப் போனதுன் பெருமை !


அதன்பின், களப்பிரன், பல்லவன், மராட்டியன்,
புதிதாய் அரபியன், போர்ச்சுக் கீசியன்,
பிரெஞ்சுக் காரன் யாவரும் முறையே
அரசாண்ட பின்னை ஆங்கிலன் வந்தான்!

அதற்குள் உன்றன் அடிநிலை மறந்தது.

100


உதைகள் வாங்கி வாங்கி உன்றன்
தோலும் மரத்தது; தோள்கள் கும்பின
காலும் மடிந்தது: கைகளும் ஒய்ந்தன!
ஆகவே கிண்ணிச் சோற்றுக் கலைந்தாய்!
சாகக் கிடந்தவன் உன்றனைச் சாகாது
காத்ததும், கல்விக் கண்ணைத் திறந்ததும்,
மீத்த தடயத்தால் பழம்வர லாறு
காட்டி, மொழித்திறன் கணித்ததும்,உயிர்ப்பினை

மீட்டுக் கொடுத்ததும், பார்ப்பன மேட்டிமை

110


வீழ்த்தி உனக்கு விலக்குக் கொடுத்ததும்,
தாழ்த்திய உன்றன் தலையை நிமிர்த்ததும்
ஆங்கி லேயனே!


ஆயினும் வடவன்

தூங்கிய உன்றன் தொடையிலே கயிற்றை
நன்றாய்த் திரித்தான்; நாடு பெறுகையில்
"ஒன்றே யாமென" உன்னையும் இணைத்துப்
பொன்றா உன்றனிப் போக்கைத் தடுத்துத்

தமிழ அம்மியை வடக்குக் குழவியால்
திமிறத் திமிற அரைத்துத் தேய்க்கிறான்!
அம்மி தேய்ந்தபின் முதுகிலும் அரைப்பான்!
உம்மென நீதான் ஊங்கொட் டுவையே!


இத்தகு போக்கில் மொழியையும் இழந்து
மொத்தமாய் உன்றன் மூளையும் இழந்து,
சொத்தெலாம் இழப்பாய் என்றே சொன்னால்,
செத்தையும் சருகும் செருப்பும் போல
ஒத்துழைப் பதுவே ஒற்றுமை என்பாய்!
மெத்தவும் உன்றன் மேனி தடித்தது!


இனித்தமிழ் நாடே இந்தியத் தினின்று
தனித்துப் போவது தக்கதாம் என்றால்,

அரசியல் அடிப்படை என்னென ஆய்ந்தே

130


உரசிக் கேட்பாய்; உண்மை உணர்கிலை,
பொருளியல் அடிப்படை புகலுக என்கிறாய்!
மருளுமுன் மனத்தினை என்னென மதிப்பேன்?


தமிழகம் பிரியா திருப்பது தவறெனற்(கு)
அமிழாக் கரணியம் பத்தென அறைக!


ஒன்றே, தமிழ்மொழி உயர்நிலை கெடுமே
இரண்டே இந்தி என்றையும் புகுமே!


மூன்றே சமயமும் குலமும் மூட்டிய
ஆன்ற புரட்டினை அகற்றலும் அரிதே!


நான்கே பார்ப்பனன் நச்சுத் தன்மையால் 140
தீங்குறும் இனத்தினைத் தேற்றலும் அரிதே!

ஐந்தே, தமிழ்ப்பண் பாடகன் றொழிமே!

ஆறே, தமிழ்மொழி இலக்கிய இலக்கணம் வேறு
வேறாய் விலகி யழியுமே!

ஏழே, சமசுக் கிருதம் எழுந்து
பாழெனத் தமிழரை அடிமைப் படுத்துமே!

எட்டே, தமிழினம் இனியும் சிதறிக்
கெட்டுப் படிப்படிக் கீழ்மையுற் றழிமே!

ஒன்பதே, பொதுநிலை யுடைமை கிரம்பிய
மன்பதை இங்கு மலர்த்துதல் அரிதே!150

பத்தே. அரசியல் அதிகார நிறைவே
எத்தானும் எய்தல் இயல்வதா காதே.


இத்தகு வியலாமை என்றும் இருந்திட
ஒத்ததுன் உளமெனில் ஒற்றுமை பேசலாம்!
இத்தளை நீக்கி எதிர்கா லத்துப்
புத்துணர் வெய்திடும் புதுக்குமு காயம்,
தோற்றிட வேண்டும் என்பையேல் அரசினை
மாற்றிட வேண்டும் இந்நிலை மறுத்தே
ஒற்றுமை ஒற்றுமை என்றே உரைப்பது
வெற்றுரை மட்டு மன்றே; வீணுரை160


ஒன்றை மட்டும் நினைவில் ஊன்றுக
என்றைக் கென்னினும் எவரிடத் தென்னினும்
அரசியல் நலன்கள் ஆயிரம் வரினும்
பொருளியல் நலன்கள் பூத்துக் குலுங்கினும்
உரிமை யில்லாத் தமிழகம் தமிழர்க்குக்
கருவில் லாத கழிநிலை மலடி!

“துறக்கமே எனக்குச் சிறையாக வாய்ப்பினும்
இறப்பத் தாண்டிக் குதிக்கவே விரும்புவேன்”
எனுமோர் அறிஞன் இயம்புதல் தெளிவாய்!
பினுமுன் பேதைமை பேசுவ தொழிவாய்170


ஆகவே தமிழனே! அழைக்கின் றேன், உனை!
சாகவே என்னினும், விடுதலைச் சாவே!
இன்றைத் தமிழகம் அடிமைவிட் டெழுந்தால்
பின்றைத் தமிழகம் பெரும்பயன் எய்தும்!


உன்னை விடுதலைக் கொப்புவித் திடுக!
அன்னை நாட்டினை விடுதலை செய்க!
முன்னைப் பெரும்புகழ் உலகெலாம் முழக்குக!
“என்னைக்கும் என்னை இனத்திற்கும் என்னைப்
பின்னைக்கும் யானே பெரும்புகழாம் நின்றே”னென்
றன்னைக்கும் சொல்லி,அத்தனுக்கும் சொல்லி,180
உன்னைக்கும் உன்னின் உழைக்கும் உறவுக்கும்
பன்னி யுரைத்துப் பலவா றெடுத்துரைத்து
மின்னிப் புறப்படுக; மேனிலையை
உன்னி நடத்திடுக, உறுபயன் விளையவே1972


இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணிர்!

இலங்கையில் தமிழ மக்கள்
எத்தனை யோ, நூற் றாண்டாய்
விலங்குக ளோடும், தீய்க்கும்
வெயிலொடும் குளிரினோடும்
கலங்கிய கண்ணீ ரோடும்
கடுமையாய் உழைத்து ழைத்துப்
புலங்களைத் திருத்தி னார்கள்!
புதுப்புலம் விளைவித் தார்கள்! 1


காடுகள் அழித்து நல்ல
கழனிகள் தோற்று வித்தார்!
மேடுகள் குழிகள் எல்லாம்
சமநிலை மேவச் செய்தார்!
மாடுகள் போலு ழைத்தும்,
மண்வளம் பெருக்கி வாழ்ந்தும்,
நாடுகள் அற்ற-வாழ்க்கை
நலமற்ற-குடிக ளானார்! 2


நினைக்கையில் உயிரும் நெஞ்சும்
நெருப்பாகிக் கனலும்! நல்ல
பனைக்கீடாய் உழைப்பைத் தந்தார்;
பயன்தினை யின்றிப் போனார்!
வினைக்கவர் உரியர் என்றால்,
விளைவுக்கும் உரியர்; ஆனால்,
மனைக்கொரு நிலமும் இன்றி
அடிமையாய் மாள்கின் றாரே! 3


கல்விக்கங் குரிமை யில்லை;
சிங்களம் கற்றல் வேண்டும்! .
செல்வத்தைச் செய்வா ரேனும்
செழிப்புள்ள வாழ்க்கை யில்லை!
பல்வளம் பெருக்கு கின்ற
பாட்டாளி மக்க ளேனும்
நல்வள வாய்ப்பு மின்றி,
நலிவோடு வாழ்த லுற்றார்! 4

தேயிலைத் தோட்டத் துள்ளே
தேட்டங்கள் செய்வ தெல்லாம்
நோயினில், கொடுமை தன்னில்
நொந்துடல் மெலிவ தெல்லாம்
நாயினும் இழிவாய் வாழும்
நந்தமிழ்க் கூட்ட மே, ஆம்!
வாயிலாப் புழுவாய் அங்கே
வதைப்பட்டுச் சாகின் றார்கள்! 5


கொய்வது குளம்பிக் கொட்டை
குடிப்பது பச்சைத் தண்ணிர்!
நொய்விப்பால் எடுப்ப தெல்லாம்
நொடிகின்ற தமிழர் கூட்டம்
உய்வதும் நாட்டை யாளும்
உரிமையும் சிங்க ளர்க்கே!
செய்வதங் கின்ன தென்று
தெரியாமல் திகைக்கின் றார்கள்! 6


இமிழ்கடல் வரைப்பில் தோன்றி
இவ்வுல கெல்லாம் ஆண்ட
தமிழ்மொழி அடிமை மக்கள்
தாய்மொழி யாகும், அங்கே!
தமிழ்மொழிக் கல்விக் கங்குத்
தனியிடம் அளிப்ப தில்லை?
உமிழ்தரு சிங்க ளத்தில்
உரையாற்றல் சட்டம், அங்கே! 7


பாண்டியன் மரபில் தோன்றி
உலகெலாம் பரந்து வாழும்
மாண்டிறல் தமிழ ரைத்தாம்
மரமேறும் கூலி என்பார் !
வேண்டிய தெல்லாம். நன்கு
விளைவித்துக் கொடுத்த கூட்டம்
கூண்டிலே அடைக்கப் பெற்ற
அரிமாப்போல் குறுகிற் றங்கே! 8


பதவியோ தமிழர்க் கில்லை;
படையினில் சேர்ப்ப தில்லை:
முதலிட்டு வணிகஞ் செய்யும்
முதலாளிப் பேறங் கில்லை;
கதவுக்குத் தாழ்ப்பாள் போல
களைக்கொத்துக் காம்பைப் போல
உதவிடும் தமிழர்க் கங்கே
உண்மைப் பேர் கள்ளத் தோணி! 9


காடற்ற உழைப்பால் நீண்ட
களைப் புற்ற தமிழர்க் கங்கே
வீடற்ற தெரு நாய் வாழ்க்கை!
விடிவற்ற இருண்ட காட்சி!
நாடற்றும் உரிமை யற்றும்
நலமற்றும் பதவி யற்றும்
கேடு ற்ற தமிழர் அங்கே
கிளையற்று வாழ்தல் கேளீர் 10


தமிழினம் உலகை யாண்ட
தனியினம் என்றே நாமும்
அமிழ்தெனப் பேசிப் பேசி
ஆண்டாண்டா யடிமை யானோம்!
உமிழ்கின்ற எச்சில் சோற்றுக்
கோடிடும் நாய்க ளைப்போல்
தமிழினம் தமிழர் நாட்டில்
வாழ்தலைத் தவிர்ப்பார் இல்லை! 11


என்னினம் இலங்கை நாட்டில்
இடர்ப்பட்டு வாழ்தல் கேட்டால்
மின்னொன்று தலையிற் பாய்ந்து
மேனியைத் தீய்த்தாற் போல -
இன்னுயிர் நடுக்கங் கொள்ளும்!
என்செய்வார் இங்கே உள்ளார்?
என்னினும் கேடுற்றோர் யார்
என்றிந்தத் தமிழன் கேட்பான்? 12


தமிழர்க்குத் தமிழர் நாட்டில்
தனியர சுரிமை இல்லை;
தமிழர்க்கிங் குடப்புக் கூட்டில்
தமிழுயிர் ஓடல் இல்லை;

தமிழரின் குருதி யோட்டம்
தனித் தமிழ் ஒட்டம் இல்லை :
தமிழரைத் தமிழர்_நாட்டில்

தமிழனே மதிப்ப தில்லை!

13


அடிமைக்கோ ரடிமை தன்னால்
ஆகிடப் போவ தென்ன?
மிடிமைக்கு மிடிமை யாங்கன்
மேல்துணை வருதல் கூடும்?
விடிவிலாத் தமிழன் சொந்த
வீட்டிலும் வறுமை காய்ந்தால்
மடிதட்டி வரவா செய்வான்,

தம்பியின் மலைப்ப சிக்கே?

14


கொடுமையாம் கொடுமை! என்றன்
குலமே, நீ கேட்டுக் கொள்க !
கடுமையிற் கடுமை என்னல்
உரிமையில் கவலை யற்றல்!
நெடுமையாங் கால மாக
தமிழ்க்குல மரபே, நீதான்
கெடுமையை நலமென் றெண்ணிக்

கீழ்மையை உரிமை என்றாய்!

15


இலங்கையில் தமிழர் கூட்டம்
இழிசெயப் படுவ தற்கும்.
கலங்கிய அதன் கண் ணீரைத்
துடைத்துநீ காவா தற்கும்
விலங்கொன்றுன் காலில் கொண்ட
விளைவதே கரணம் என்பேன்!
துலங்குயர் விடுத லைதான்

இருவர்க்கும் துணையாம் இன்றே!

16


தமிழர்க்கிங் குரிமைச் சாவே
விடுதலை வாழ்வாம் என்க!
கமழ் புகழ் பேரி னந்தன்
காலந்தேர் கால மெல்லாம்
அமிழ்கின்ற அடிமைச் சேற்றில்
அலைவுறல் வாழ்க்கை என்றால்,
உமிழ்கந்த வாழ்க்கை யின்மேல்;

ஒருகோடி தீமை சாகும்!

17

என்னினம் உலகத் தின்மேல்
எந்நாட்டிற் போய்வாழ்ந் தாலும்
பொன்னினம் பொன்னி னந்தான் !
புகழ்பூத்த பேரி னந்தான் !
மின்னினும் கதிரி னும்போல்
மேலினப் பழமை என்பேன்!
முன்னினும் பெருமை யாக

முகிழ்ப்பதற் குரிமை வேண்டும்!

18


உரிமை நல் லுணர்வு பூத்த
ஓரினத் தன்மேல் வந்து
நரிமைகள் மொய்ப்ப தில்லை;
நாய்களும் மோப்பதில்லை!
உரிமைநல் லுணர்வு செத்த
ஓரினந் தன்னைக் காத்தல்
அருமையின் அருமை யாகும்!

அவ்வினம் கிளைத்தும் சாகும்

19


தாய்நாட்டில்-தமிழர் நாட்டில்- -
தமிழர்கள் சாகும் போது,
சேய்நாட்டில் அவரின் சேய்கள்
செழிப்புற வாழ்தல் எங்ஙன்?
பாய்கின்ற குருதி யாறு
பாய்ந்தன்றோ உரிமை என்னும்
காய்காய்க்கும்; கனிப ழுக்கும்!

கருத்தினில் வைத்துக் கொள்க!

20


இலங்கையில் பிசியில் மற்றும்
எந்நாட்டும் தமிழர் வாழ்ந்து
கலங்கையில், தமிழர் நாட்டின்
கருப்பையின் குழந்தை நெஞ்சும்
மலங்கியுள் துடித்தல் வேண்டும்!
மாண்புயிர் வேதல் வேண்டும்!
நலங்குலைந் திழிவு பட்ட

தமிழா, அந் நாளும் உண்டோ?

21


அயல்நிலந் தாவிப் போந்தீர்!
அடிமையாய் வாழ்த லுற்றீர்!
மயலுறும் கொடிய ராட்சி
மலையினால் மோத லுற்றீர்!

வயலுண்டு; வளமு முண்டு!
வாழ்தமி ழகத்தில்; ஆனால்
செயலுண்டோ, உரிமை யுண்டோ,

உங்களைச் சீந்து தற்கே?

22


குலைகுலை யாகப் பூத்த
குலமே,செந் தமிழ்ப்பூக் காடே!
விலையிலை உன்மொ ழிக்கே:
விளைவுக்கும் வரலா றில்லை!
அலையலை யாகப் போனாய்,
அயல் நிலத் தேடி! அங்கே
இலையிலை யாக வீழ்ந்தாய்!

இருப்பது கிளையொன் றேயாம்?

23


அடிமரம் தமிழ்நி லந்தான்!
ஆனாலும் மரத்தின் வேரில்
குடி கொளும் ஆரி யந்தான்
கொடுநாகம்! அந்நா கத்தின்
முடிமயல் கொள்ளு மாறு
மகுடிவைத் துாதும் ஆட்சி!
விடியுங்கொல், இருளுங் கொல்லோ,

விறல்தமிழ் மரத்தின் வாழ்க்கை?

24


விடுதலை ஒன்றே வாழ்க்கை
விடிவுறச் செய்யும் மாற்றார்
கெடுதலைத் தூள்தூ ளாக்கும்!
கீழ்மையைத் தலைகீ ழாக்கும்!
அடுதலைச் செய்க! உண்மை
ஆர்வத்தால் உணர்வால் பூக்கும்
விடுதலை! அதைநி னைத்தால்

மண்ணன்று; விண்நம் கையில்!

25


-1975

***

தென்மொழியின் தனித்தமிழ் வெளியீடுகள்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின்

புதுமுறை இலக்கியங்கள்
.
1 எண்சுவை என்பது (அச்சில்)
2 பாவியக் கொத்து (முதல் தொகுதி) 15.00
3 பாவியக்கொத்து (2 ஆம் தொகுதி) (அச்சில்)
4 ஐயை (முதல் பகுதி) 6.00
5 ஐயை (இரு பகுதி இணைந்தது) 11.00
6 கொய்யாக்களி (மறுபதிப்பு) 13.00
7 கற்பனை ஊற்றுக் கட்டுரைகள் 1, 2 (அச்சில்)
8 பள்ளிப் பறவைகள் (முதல் பகுதி) 6.30
9 பள்ளிப் பறவைகள் (2 ஆம் பகுதி) (அச்சில்)
10 மக புகுவஞ்சி (மறுபதிப்பு) (அச்சில்)
11 கனிச்சாறு (முதல் தொகுதி) 23.00
12 கனிச்சாறு (இரண்டாம் தொகுதி) 19.00
13 கனிச்சாறு (மூன்றாம் தொகுதி) 26.00
14 நூறாசிரியம் (முதல் பகுதி) 5.00
15 நூறாசிரியம் (இரண்டாம் பகுதி) 5.00
16 தன்னுணர்வு (மறுபதிப்பு) 2.00
17 இளமை உணர்வுகள் (அச்சில்)
18 பாவேந்தர் பாரதிதாசன் 16.00
19 இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள் 2.00
20 வாழ்வியல் முப்பது 2.00
21 ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் 3.00
22 உலகியல் நூறு 8.50
23 அறுபருவத் திருக்கூத்து (அச்சில்)
24 இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு? 1.00
25 சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்! 1.00
26 செயலும் செயல் திறனும் 35.00
27 தமிழீழம் 55.00
பிற வெளியீடுகள்
1 சிங்கள அமர்களம், அறிஞர் ப.அருளி 5.00
2 இவை தமிழல்ல 10.00
3 இந்திய அரசே இன்னுமா உறக்கம் 5.00
4 சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், அறிஞர் ப.அருளி (5-தொகுதிகள்) ) 100.00



தென்மொழி, சென்னை - 600 005.

தனித்தழிழ்த் தாளிகைகள் "தென்மொழி" தமிழ் நிலம் தமிழ்ச்சிட்டு படியுங்கள்.

நிறைமொழி அச்சகம், சென்னை - вооо15.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓ_ஓ_தமிழர்களே&oldid=1548158" இலிருந்து மீள்விக்கப்பட்டது