பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடு பெறும் வழி

95


விடுதலை பெற்று, இன்ப அன்பில் ஒன்றித் திளைத்தலே வீடு ஆகும்.

மனித வாழ்க்கையின் இலட்சியம் விடுதலையே - வீடு பெறுதலே. உலகியலில், குடியிருக்கும் வீடு இல்லாத வாழக்கை துன்பமானது. குடியிருக்கக் குடிசை இல்லாத அவல வாழ்க்கை இரங்கத்தக்கது.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பிடைத்
துச்சில் இருந்த உயிர்க்கு,

- என்பது குறள்.

இந்த உலகியலில் எப்படி வீடு அற்ற வாழ்க்கை துன்பமானதோ, அதைப் போலவே உயிர்க்கு மறுமையில் இறைவன் திருவடியாகிய - இன்ப அன்பாகிய வீடு கிடைக்காது போனாலும் அவலமேயாம். இந்த உயர்ந்த வீட்டை ஞானத்தினாலன்றி வேறு எந்த வகையாலும் பெற முடியாது. சிலர், கொடிய விரதங்களாலேயே ஞானத்தை - வீட்டை அடைய முடியும் என்று நம்புகிறார்கள் - முயல்கிறார்கள். புத்தர்கூடத் துன்பத்தை மாற்றவே, விரதங்களால் ஆகிய துன்பத்தை ஏற்றுக்கொண்டார். அவர், துன்பத்தை மாற்றுவதற்கு உடலை வருத்தக்கூடிய விரதமுறைகளை எடுத்துச் சொன்னாரே தவிர, ஞானத்தைக் காட்டினாரில்லை. உடல் வருத்தமுறுவதனாலேயே, உயிர் அறியாமை நீங்குமா? உடல் வருந்தியதுதான் பயன்; உயிர்க்கு யாதொரு பயனும் இல்லை. சமணர்களும் அடிப்படித்தான். ஏன்? நம்முடைய நாட்டில் வறட்சித் தன்மையுடையதாக நடமாடும் வைதீகமும் அத்தகையதுதான். உண்ணாமல் உடலை வருத்துவதால் ஞானம் வராது. அதனால் உண்ணா நோன்பு முதலிய தவவொழுக்கங்கள் வேண்டாம் என்பது பொருளா? இல்லை. உடலை வருத்தும் உண்ணா நோன்பு வேறு, உடலைப் பதப்படுத்தும் உண்ணா நோன்பு வேறு. ஊனைப்பெருக்க உண்ணுதல் தவறு; ஊனைப் பாதுகாக்க