பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மைத் தொண்டர்

75


தொண்டுப் பார்வையில் பெரியோரும் இல்லை; சிறியோரும் இல்லை. இத்தகைய பண்படுத்தப்பெற்ற பழுத்த மனம் கிடைத்த பிறகு செய்வதே தொண்டு. அஃதல்லாத பொழுது செய்வது தொண்டாகாது. அஃதொரு வகை வினையே. இந்த வினை தீமையையோ நன்மையையோ செய்யும். துன்பத்தையோ இன்பத்தையோ அல்லது இரண்டையுமோ தரும். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தரும். உலகத்தில் விளையாட ஓர் அனுமதிச் சீட்டாக இது பயன்படலாம். ஆனால், உய்திபெற வேண்டுமானால் தொண்டராதலே நன்று. தொண்டராகிச் செய்யும் தொண்டு - செயலே செய்தாலும் - பின் பிறப்பைத் தராது. வாய்விண்ட வித்தைப் போல வினை மாண்டு போகும். இன்ப அன்பு செழிக்கும். அன்னியூர் ஆண்டவனை இதயத்தில் எழுந்தருளச் செய்க! அடக்க நினைக்காதே, அடங்குக! பணி செய்க! கள்ளினும் காமத்தினும் கொடிய புகழினைக் காமுற்று அலையாதே! இகழ்ச்சி கண்டு ஏக்கமுறாதே! யாவர்க்கும் தாழாகப் பழகு! வினை விளைத்தற்குக் காரணமாகிய உடலை ஓயாது உழைப்பில் ஈடுபடுத்து. உலகு தழைக்க உழைத்திடு. மற்றவர் கண்ணுக்கு மறைவாக வாழ். ஒளிந்தல்ல, ஒழுக்கத்தின் பாற்பட்டு! தொண்டராவாய்!

குண்டர் தேரருக் கண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.

- திருஞானசம்பந்தர்