பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெடுக்கும் வினை வழிப்பட்டு உழலும் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற வழி என்ன?

தொண்டராக வேண்டும். அதுவே, வினை நீக்கத்திற்குரிய வழி. தொண்டராதல் வினை நீக்கத்திற்குத் துணை செய்யுமா? அதுவே இன்றைக்கு ஒரு தொல்லையாக இருக்கிறதே! இல்லை, இல்லை. தொண்டிற்குத் தொல்லை உலகத்தில் இல்லை! இல்லையே! போட்டிச் சங்கங்கள் தோன்றுகின்றன. அரசியல் கட்சிப் போட்டா போட்டிகள் இருக்கின்றன. அருள்நெறி மன்றம் என்றால் தவநெறி மன்றம் தோன்றுகிறது. பேரவை என்றால் இந்துமன்றம் தோன்றுகின்றது. இவையெல்லாம் தொண்டு கருதித்தானே தொடங்கப் பெறுகின்றன! இல்லை! இல்லை! இவையெல்லாம் சில நலன்களை மையமாகக் கொண்ட அமைப்புக்கள்! தொண்டிற்கெனத் தொடங்கியவை யாகா.

தொண்டராதல், எளிதன்று. தொண்டராம் தன்மைக்குப் பழுத்த மனம் வேண்டும். விருப்பு, வெறுப்பு இவைகளின் நாமங்கூட அறியா நன்னெஞ்சு தேவை. பணி செய்தலன்றிப் பயன் பற்றிக் (தற்பயன்) கணக்கிடும் நோக்கம் கூடவே கூடாது. ஓயாது உழைத்திடும் உயரிய பண்பு தேவை. சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் செழுந்தவம் செய்யும் இயல்பு தேவை.

இத்தகைய உயரிய குணங்களோடு மாந்தர் உலகத்திற்குத் தாயெனவும், தாதியெனவும், அன்பில் தாழ்ந்து செய்யும் தொண்டே தொண்டு. இத்தகைய தொண்டு உயிரை உருகச் செய்யும். உணர்வைப் பழுக்கச் செய்யும். செயல் நிகழும். மனத்தில் காயமிருக்காது. தற்செருக்கு இருக்காது. புலி வேட்டையிலும் கொடுமையான புகழ் வேட்டைக்கு அங்கு இடமில்லை. அடக்கம் அங்கு ஆட்சி செய்யும். பணிவே பண்பாக விளங்கும். உதவி செய்வோர், உதவி பெறுவோர் என்ற வரையறையும் இல்லை. உண்மைத்