பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
எது திருத்தலம்?

திருத்தலம் - சிறந்த பெயர்! ஊர்களெல்லாம் திருத்தலங்கள் ஆகா. திருக்கோயில் இருக்கும் இடமெல்லாம் திருத்தலமாகி விடுவதில்லை. ஆம்! திருத்தலம் இயற்கையில் அமைவதன்று. திருவருள் துணையுடன் வளர்ந்த மனிதர்கள் படைப்பது திருத்தலம். ஆம்! மனிதன் ஊர்களையும் படைப்பான். சொர்க்கத்தையும் படைப்பான்; நகரத்தையும் படைப்பான்; திருத்தலங்களையும் படைப்பான். படைக்கும் மனிதனின் தரத்திற்கேற்ப ஊர் என்று பெயர் பெறுகிறது; திருத்தலம் என்று பெயர் பெறுகிறது. திருஞானசம்பந்தர் திருத்தலத்திற்கு இலக்கணம் காட்டுகிறார்.

பொய்ம்மை - புண்ணியத்திற்கு எதிரிடை பொய்ம்மை உயிரின் வளர்ச்சிக்கு ஊறு செய்யும். உள்ளீடற்ற பதரினும் கேடானது பொய்ம்மை சேர் வாழ்க்கை. பொய்ம்மை, உயிர்க்கு ஊதியம் சேர்ப்பதற்குத் தடை. உயிர், ஊதியமற்றுப் போனால் உள்ளீடற்றுப் போகும். உயிரின் உள்ளீடாகிய அன்புறுபத்தி முதலிய இனிய பண்புகளில்லாதார் பொய்ம்மையே பேசுவர்; பொய்ம்மையே செய்வர். பாலை வனத்தில் பசுஞ்சோலையைக் கண்டாலும் காணலாம்.