பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றி

99



புராணங்களைப் படித்துணரும் கலை, ஒரு நுண்கலை. புராணங்களுக்கு வெறும் சொற்பொருள் காண்பது போதாது; கூடாது. உய்த்துணர்தலுக் குரியன ஏராளம் உண்டு. அரக்கர் அரனுக்குப் பகைவரில்லை! சூரபதுமன் முருகனுக்குப் பகைவனல்லன்! பின் - சூரபதுமனுக்குப் பகையாகிய ஆணவம், அறியாமை, துன்பம் ஆகியன முருகனுக்கும் பகையே. தனக்குப் பகையாக - உடன் பிறந்தே கொல்லும் பகையாக விளங்கும் அறியாமை மேலீட்டால் அரக்கர் மெய்ப்பொருள் அறிவதில்லை; தம் அறியாமையறிந்து விலக்குவதில்லை. அதுமட்டுமா? ஆணவச் சேர்க்கையால் அதிகாரச் செருக்கு தலைகாட்டுகிறது. போற்றி வணங்கிப் பாங்காக இருந்து பணி செய்ய வேண்டியவர்களைக்கூட ஏவல் கொள்ளத் தூண்டுகிறது. அது தாயிற் சிறந்த இறைவனை - ஆற்றலை வழங்கிய அண்ணலைக்கூட எதிர்க்க அரக்கரைத் தூண்டுகிறது; முரட்டுத்தனம் சேர்க்கிறது; மிகை செய்கிறது.

கயிலையைத் தூக்க முயல்கிறான் இராவணன். ஏன்? தன் வலிமையைக் காட்ட! இராவணன் வலிமையுடையவன் தான்! ஆனால் அவன் வலிமைக்கும் எல்லை உண்டல்லவா? வலிமையின் எல்லை கடந்து விளங்கும் வலிமையோடு இறைவனோடு மோதுகிறான். இராவணன் மோதவில்லை; அவனது தீயபண்புகள் மோதுகின்றன.

இராவணன் தவத்தில் சிறந்தவன்; நாடோறும் பூசனை செய்பவன். “இராவணன் மேலது நீறு” என்று பாராட்டப் பெற்றவன். ஆனால் பெறவேண்டியன பெற்றபிறகு “தருக்கு” வந்து விட்டது. இல்லாதபோது உள்ள எளிமை, எளிமையாகாது; அது ஏழ்மையே. பெற வேண்டியன எல்லாம் பெற்று விளங்கும் போது பெறும் எளிமையே எளிமைப் பண்பு. இராவணன், இயற்கையில் நல்லவன்; ஆனால் தருக்கு வந்து சேர்ந்து விட்டது. வந்தடைந்த தருக்கு இராவணனுக்கு நலம் தருவதற்கு வரவில்லை. மரத்தோடு ஒட்டி வளர்ந்து -