பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

107



இந்நிலையில் மேலும் ஒரு துன்பம் படர்ந்தது. அதாவது போருக்குச் சென்றிருந்த கலிப்பகையார் போரில் திறமையாகப் போரிட்டு உயிர் கொடுத்துப் புகழ் பெற்றார். இது திலகவதியார் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத இழப்பு! என்ன செய்வார்? திலகவதியாரும் இறக்கத் துணிகிறார்.

ஆனால், அருமைத் தம்பி மருணீக்கியார் நலங்கருதி உயிர் துறந்தாரில்லை. அதேபோழ்து - திருமணம் ஆகாத நிலையேயாயினும் பேசிமுடித்த நிலையே போதுமானது என்று கைம்மை நோன்பு மேற்கொண்டு தவம் செய்யத் தலைப்பட்டார்; அத்துடன் மருணீக்கியாரைப் பேணி வளர்க்கும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார். இதனை அப்பரடிகள்,

‘அம்மை யார் எனக்கு’ என்றென்று அரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார் ஆரூர் ஐயரே!

(5–7:6)

என்று பாடுவதால் அறியலாம்.

உரிய அம்மையை (அம்மாவை) இழந்தேன். ஆனால், இறைவன் அம்மையைப் போலவே என்னைக் காக்க தமக்கையைத் தந்தான் என்று விளக்கி யருள்கின்றார். உறவால் தமக்கையேயாயினும் பணிநிலையில் அம்மையாகவே திலகவதியார் விளங்கினார் என்பது உய்ந்துணரத் தக்கது.

இளமைக் காலப் பணிகள்

மருணீக்கியார் நாளும் வளர்ந்து வந்தார்; இளமைக் கோலம் பெற்று விளங்கினார்: அறிவு வளரப் பெற்று உலகியல் உணர்வையும் பெற்றார். தமது குடும்பத்தில் தொடர்ந்து வந்த துன்பத்தை மறக்கப் பல நல்லறங்களை மேற்கொள்கிறார். உணவு வழங்கும் ஆதுலர் சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தல், காடு வளர்த்தல், குளங்கள்