பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

109


மனத்தான் கண்டாய்” என்றருளியதாலும் “வாச மலரெலாம் ஆனாய் நீயே” என்றும் “பழத்திடைச் சுவையொப்பாய்” என்றும் அருளிச் செய்த பாங்கின் வழியும் உணரமுடிகிறது. ஏன்? ஓர் ஆன்மாவின் வாழ்வில் ஏற்படும் வளர்ச்சியை முறைப்படுத்திப் பாடும் ஒரு பாடலில், துய்ப்பைத் தொடர்வதே துறவு என்ற பொருள்பட ஓதுகின்றார்.

அப்பன் நீ அம்மை நீ ஐய னும் நீ
அன்புடைய மாமனும் மாமி யும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரு ரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய் நீ
துணையா யென் நெஞ்சந் துறப்பிப் பாய் நீ
இப் பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறார்ந்த செல்வன் நீயே, (6-95-1)

என்ற பாடலை ஓதி உணர்க.

ஓர் ஆன்மாவுக்கு உறவாய் வந்து உதவி செய்பவர்களை இப்பாடலில் தந்தை, தாய், தமையன், வாழ்க்கைத் துணை நலம் தந்துதவும் அன்புடைய மாமன் - மாமி, மனைவி, நுகர்பொருள்கள், குலம், சுற்றம், ஊர் என்று எல்லாம் முறைப்படுத்தி அருளிய நலத்தினை ஓர்க! உணர்க!

ஓர் உயிர் தந்தையின் விந்துவில் கருக்கொண்டு வளர்ந்த காலத்தை இயல்பாக நாம் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. எனவே பிறப்புக்கு முதல்நிலையில் தந்தையையும் அடுத்த ஈன்று புறந்தரும் தாயையும் குறித்தார். குழந்தைப் பருவத்தில் தோழமையாகப் பழகி வாழ்வளிப்பவளும் தாயே! ஓர் ஆன்மா பிறக்கும்பொழுதே அந்த ஆன்மாவோடு துணை சேர்க்க ஒரு பெண்ணையோ ஆணையோ ஈன்று வளர்த்து அன்புடன் மணமுடித்துக் கொடுப்பவர்கள் மாமனும், மாமியுமாவர்.