பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

153


என்கிறார். “மனிதப் பிறவியை மதித்துப் போற்று” என்று கூறும் பொழுதே அப்பரடிகள் “நாமார்க்கும் குடியல்வோம்; நமனையஞ்சோம்” என்று பாடுகிறார்.

ஒருவன் நலமாக வாழ்கிறான்; திட்டமிட்ட வாழ்க்கை நடத்துகிறான்; ஒழுக்கம் காத்து வாழ்கிறான். அகமும் புறமும் ஒத்து வாழ்கிறான். யாருக்கும் அகநலம் இல்லாமல் புறநலம் அமையாது. ஒருவன், நன்றாகக் குளித்து, உண்டு, உடுத்தி வாழ்வதால் மட்டும் நலம் வந்துவிடும் என்று கூறிவிட முடியாது. முறையாக வாழ்பவர்கள்கூட, வேளை தவறாமல் பல வகையான சுவையுணவுகள் உண்பவர்கள்கூட நோய் வாய்ப்படுகிறார்களே அதற்கு என்ன காரணம்? புறத்திலே அவர்களுக்கு எத்தகைய கேடுமில்லை! புறத்தில் எத்தகைய குறையும் வருவதில்லை. ஆனால் அவர்களுடைய எண்ணத்தின் ஊற்று, சிந்தனையின் ஊற்று காலப்போக்கிலே நச்சுத்தன்மையடைந்து புழுவுக்கில்லாப் பொல்லாங்காகி அவர்களுடைய செயல்களிலும் அத்தன்மை பரவிவிடுகிறது. எனவே அவர்களுக்குப் புறத்திலே நோய் கிடையாது. அகத்திலேதான் நோய்!

நடலையல்லோம்

‘நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்’ என்றார் அப்பரடிகள். நடலை என்பது நல்ல பொருள் பொதிந்த ஒரு சொல். நான் தெருவிலே சுற்றித் திரிகிற நடைப்பிணம் அல்ல; சீனப் பொம்மையல்ல, ஆண்மை செறிந்த ஒரு மனிதன் என்ற கருத்திலேதான் ‘நடலையல்லோம்’ என்றார். ‘ஏமாம்போம், பிணியறியோம், பணிவோமல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்று பேசினார். உழைத்துண்டல் ஒருவர்க்கின்பம். உழைக்காதுண்டல் துன்பம். இத்தகைய உயர்ந்த வீரம் செறிந்த பாடல்களை இந்த நாட்டில் இருக்கிற குழந்தைகள் படித்தால், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் படித்தால் எவ்வளவு சிறந்த அக ஒழுக்கமும் புற