பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்; பின்னர் அவதிப்படுகிறார்கள்.

யாதனின் யாதனின் நீங்கியான்

எந்த ஒன்று, ஆசை என்ற பெயரால் நம்மை மயக்குகின்றதோ, ஆசையின் பேரால் எதற்காக அலமந்து திரிகிறோமோ, அதுவே நம்முடைய இறுதிக் காலத்தில் நமது உயிருக்கு உலை வைப்பதாக இருப்பதை நம் ஒவ்வொருவருடைய சொந்த வாழ்க்கையிலேயே நாம் காணமுடியும்.

பணமே, நமது ஆசைக்குரிய பொருளாக இருந்தால் அந்தப் பணம் திருட்டுப் போய்விட்டது என்ற செய்தியே நமது உயிர் குடிக்கும் கூற்றுவனாக மாறிவிடும். நாவின் சுவைக்கு அதிகமாக ஆட்பட்டு நிறைய உண்டுகொண்டே இருந்தால், கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்படும்போது, அந்த உணவினாலேயே உங்கட்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று மருத்துவர் கூறுகிற நிலையைப் பார்க்கிறோம். இப்படியாக நாம் ஆசைப்படுகின்ற ஒன்றே நமக்குப் பகையாக - கூற்றுவனாக அமைவதைப் பார்க்கிறோம். இதைத்தான் அப்பரடிகள் அழகாகக் கூறுகிறார். ‘எது நன்று, எது தீது’ என்பதைத் தோற்றத்தைக் கொண்டே முடிவு கட்டிவிடாதே! அதனுடைய உள்ளீட்டைப் பார்! அந்த உள்ளீடுதான் நமக்கு முக்கியமானது என்ற கருத்திலே பாடிய பாடலைப் பார்க்கிறோம்.

குறிக்கோள் இல்லாமல் வாழ்வா?

அடுத்து, ‘அறிவு வேண்டும், அறிவிலே தெளிவு வேண்டும். இந்தத் தெளிவுதான் பின்னர் சைவமாக வளர்கிறது’ என்ற கருத்தை நாம் அப்பரடிகளின் பாடல்களில் காணலாம். ஒருவனுக்கு அறிவிலே தெளிவு தோன்றி விட்டால் அவனுக்கென ஒரு குறிக்கோளும் தோன்றிவிடும். அறிவினால் தெளிந்த அவன் கொள்ளும்