பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

161


இன்னொன்றை ஊற்ற முடியாது. அதில் இருப்பதை அப்புறப்படுத்திவிட்டுத் தான் இன்னொன்றை ஊற்ற வேண்டும். வஞ்ச ஆறு, இயல்பிலேயே உள்ளத்தில் ஊற்றெடுக்கிறது. அதனைத் தூர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திவிட்டால் பக்தி ஆறு பெருக்கெடுக்கும். போட்டி, பொறாமை, சூது என்ற வஞ்ச ஆறு வற்றினால்தான் பக்தி ஆறு பெருக்கெடுக்கும். வஞ்ச ஆற்றை வற்றச் செய்வதற்கும் பல்வேறு சமுதாய உணர்வுகளையும் இன்று பலர் பேசுகிறார்கள்.

சாதிகளை ஒழித்துவிட வேண்டும் - குலச் சண்டைகளையும் கோத்திரச் சண்டைகளையும் போக்கிட வேண்டும் என்று பேசிகிறார்கள். இக்கருத்தை நமது அப்பரடிகள் ஏழாம் நூற்றாண்டிலேயே பேசினார்.

சாத்திரம் பல பேசும்
சழக்கர்காள்!
கோத்திர முங்குல
முங்கொண்டேன் செய்வீர்?

என்று கேட்டார். ஆனாலும் 7-ம் நூற்றாண்டிலிருந்து இந்த 20-ம் நூற்றாண்டு வரை, அண்ணல் காந்தியடிகள் வந்து சொல்லியும்கூட நம்மிலே தீண்டாமையை விட்டு விடத் தயாரானோர் எத்தனை பேர் 7-ம் நூற்றாண்டில் இந்தக் கருத்தைக் கூறிய அப்பரடிகளின் சிலையைக் கோயிலுக்குள்ளே வைத்திருப்பதைப் பார்க்கிறோம்; குருபூசை நடத்துவதைப் பார்க்கிறோம். ஆனால் இந்த நாட்டை விட்டுச் சாதி வேற்றுமையும், குல வேற்றுமையும், கோத்திர வேற்றுமையும் போகவில்லை. இன்றைக்கும் போனபாடில்லை. எங்கேயிருந்து தீண்டாமை போக வேண்டுமோ, யார் மூலம் தீண்டாமை போகவேண்டுமோ, அங்கிருந்து, அவர்கள் மூலமாகத் தீண்டாமை போகவில்லை. இன்று தீண்டாமை ஒழிப்பை அரசு தன் பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கு.இ.VII.11.