பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

167


மருந்துகள் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு மருந்துகளும் அவர்தம் சொந்தப் பணத்தில் வாங்கியவைகளே. எனினும், எல்லா மருந்துகளையும் அவரே உட்கொள்ள முடியுமா? நோயுற்றவர்களுக்குத் தானே கொடுக்க வேண்டும்? மருத்துவரிடத்தில் ஏராளமான நல்ல மருந்துகள் இருப்பது போலச் சிலரிடத்தில் பெரும் பொருள் குவிந்து கிடக்கிறது. எதற்காக? இரப்பவர்கட்கு ஈவதற்காக! மருத்துவர்களிடமிருக்கும் மருந்து மற்றவர்களின் உடல் நோய் தீர்ப்பதற்காக!

ஆம்! கடவுள் அப்போதே அவனிடம் சொல்லித்தான் பணத்தைக் கொடுத்திருக்கிறார். “யாராவது வந்து கேட்டால் இல்லையென்று சொல்லாமல் இயன்றதைக் கொடு” என்று சொல்லியிருக்கிறார்... இரப்பவர்க்கு ஈவதற்காகப் பொருளை வைத்தார்; அப்படி இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் இயன்றதைக் கொடுப்பவர்களுக்கு அருளை வைத்தார். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லிப் பொருளைச் சேமித்து வைக்கின்ற வன்னெஞ்சுடைய வஞ்சகர்களுக்கு எல்லாம், கடவுள் ‘கடுநரகம்’ வைத்திருக்கிறார். இதனையே ‘கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்’ என்று அழுத்தமாக, தெளிவாகக் கூறுகிறார் நமது அப்பரடிகள்.

பொதுவாக, இடைக்காலத்திலே சமய உலகத்திற்கு வந்த ஆபத்துகூடச் செல்வர்களால்தான், வந்தது. இடைக் காலத்திலே, பரம தரித்திரர்களான ஏழை மக்களுக்கும் பரிந்து பேசுகிற கடமையைச் சமய உலகு மறந்துவிட்டது; அவ்வாறு பேசுவதனின்னும் விலகிவிட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நமது அப்பரடிகள், “உற்றார் இல்லார்க்கு உறுதுணையாவான்” என்று பேசினார். சமுதாயத்தில் யாரொருவர்க்கு உறவினர் இல்லையோ, யார் ஒருவர் தெருவில் அனாதையாக விடப்பட்டாரோ அவருக்கிறைவன் உற்ற துணை என்று பேசினார். ஒருவன் உற்றாரிலாதார்க்கு உறுதுணையாக நின்று உதவிபுரிய