பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

183


உண்டு; “அருச்சனைகள்” உண்டு; அமுது படையல்கள் உண்டு; இன்னும் என்னென்னவோ உண்டு. இவ்வளவும் இருந்தும் நாம் ஏன் கடவுளைக் காணவில்லை? கடவுள் காண முடியாத பொருளா? கடவுள் என்ன கற்பனையா? அல்லது பொய்யா? புனைந்துரையா? கடவுள் நம்பிக்கை யில்லாதவர்கள், “கடவுள் இல்லை, அதனால் காண முடியாது” என்பர். கடவுள் உண்டா? இல்லையா? என்ற வழக்கை நடத்துவதற்கு இன்றைய தமிழர்கள் தகுதியுடையவர்களல்லர். அண்டங்களில் ஒன்றாகிய மதியினையே இப்பொழுதுதான் மாந்தன் பார்க்கத் தொடங்குகிறான்; அமெரிக்க மாந்தனும் உருசிய மாந்தனும் இதில் போட்டியிட்டுக் கொண்டு முயற்சி செய்கிறான்.

அண்டங்களில் ஒன்றாகிய மதியைக் கண்டுபிடிக்கவே இத்தனை நாளாயினவென்றால் “அப்பாலுக்கப்பாலாய்” என்று பாடப்பெற்ற பரம் பொருளை, உண்டா? இல்லையா? என்று ஆய்வதற்குரிய அறிவெல்லையை நாம் இன்னும் அணுகக்கூட இல்லை. ஆதலால், கடவுள் உண்டு என்று நம்புவதே இப்போதைக்கேற்ற அறம். ஆனால், ஏன் நம்மால், உள்ள கடவுளைக் காணமுடியவில்லை? கடவுள் ஏன் நம்மைக் கண்டு ஒளிந்து கொள்கிறார்.

நாம் கடவுளையும் ஏமாற்றுவதில் வல்லவர்கள். கடவுள் நம்மிடத்தில் எதை விரும்புகிறாரோ, நாம் அதைத் தருவதில்லை. கடவுள் நம்மிடத்தில் நம்முடைய நெஞ்சத்தில் ஓரிடம், ஒண்டுக் குடித்தனம் செய்ய விரும்புகிறார்; மாறாத அன்பை வேண்டுகிறார். நாமோ அவருக்கு இவற்றைக் கொடுக்க அணியமாய் இல்லை. அதற்கு மாறாகத் தேங்காய்களைக் கொடுக்கிறோம்; பழங்களைக் கொடுக்கிறோம். ஏன்? சிலர் முடியையே கொடுக்கிறார்கள். கடவுள் விருப்பத்தை வழங்காத வல்லாள கண்டர்கள் நாமே!