பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

187


உயிரால் தனித்து, இறைவனுடன் ஒன்றித்து வாழ்பவர்கள். ஆயினும், சீலத்தின் சார்பால் கூடி வாழ்பவர்கள். அவர்களுடைய கூட்டத்தைப் ‘புனிதர் பேரவை’ என்று சேக்கிழார் பாராட்டுவார். தூய்மையில் தூய்மையே புனிதம். தூய்மையில் தூய்மையின்மை ஒரோவழி காணலாம். ஆனால், புனிதத்தில் தூய்மையின்மை ஊழி பெயரினும் காண முடியாது. “ஊழி பெயரினும் தாம் பெயரார்” என்பது வள்ளுவம். இத்தகு சிறந்த சிவனடியார் கூட்டத்திற்குள் தனக்கு இடம் கிடைக்குமோ? என்று அப்பரடிகள் ஐயப்படுகிறார்.

புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளனபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே

என்பது அப்பர் திருப்பாடல்.

சிவம், பண்பு, இனிமை இவற்றிற்கு முரண்பாடு தீமை. அதாவது பொல்லாங்கு - தீயன எண்ணுவோர், செய்வோர் சார்வோர், சிவநெறியைச் சார்ந்தவராகக் கருதப்படமாட்டார்கள். அவர்களுக்குச் சிவன் எம்பிரானிடத்தில் இடமில்லை. ஏன்? அவனுடைய அடியார்கள் கூட்டதிலுங்கூட இடம் கிடைக்காது. சிவநெறி நாளும் நன்மை பெருகு அருள்நெறி இயக்கமாகும். இஃது அப்பரடிகளின் ஆணை.

4. நெஞ்சமும் ஊசலும்

மனித வாழ்வின் மையம் நெஞ்சமேயாம். நெஞ்சத்தின் இயல்பே மனிதனின் வாழ்க்கைக்கு அடித்தளமாகிறது. நெஞ்சு நிலையான தன்மையுடையதன்று, அதற்கென்று தொழில் தன்மை உண்டே தவிர, குணத்தன்மை கிடையாது. நெஞ்சிற்குக் குணங்களாகிய சிறப்பை, மனிதன் தன்னுடைய அறிவறிந்த ஆள்வினையால் ஆக்கித்தரக் கடமைப்