பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடைந்தும் அடையாமலும் அவலப்படும் வழி அவா என்ற பாசக்கயிறு தளர்ந்து அறுகிறது. ஊஞ்சற் கயிறு அறுந்தால் தரை தாங்குதல் போல, ஆன்மாவைப் பற்றி அலைக்கும் அவா பாசக் கயிறு அறுந்தால் ஆன்மாவைத் தாங்கும் தரை இறைவன் திருவடிகளேயாகும்.

ஊஞ்சல் தன்மை உடையதாக இருக்கும் நெஞ்சத்தை மாற்றி நிலைமாறச்செய்ய வேண்டுமென்றால் தாங்கித் திருவருள் சுரக்கும் திருவடிகளை நினைத்து வாழ்த்துதலே வழி; இதனையே ‘நிலைபெறுமா றெண்ணுதியேல்’ என்ற திருப்பாடலில், அடிகள் விளக்கி அருளுகிறார்.

5. முயல் விட்டுக் காக்கையின் போனவாறே!

அப்பரடிகள் இறைவன் கருணையை நினைந்து, நெஞ்சு நெகிழப் பாடுபவர். உயிர் அருவப்பொருள். அதற்கு ஓர் உருவத்தைத் தந்து உலகிடை அனுப்பித் துய்ப்பன துய்த்து, மகிழ்வன மகிழ்ந்து—குறை நீங்கி நிறைநலம் பெறச் செய்யும், அவன் கருணையே கருணை. இதனை,

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய் திட்டு
என்னையோ ருருவமாக்கி,

என்று பாடுகிறார். உருவமாக்கிய இந்தப் பணிக்கு ஈடாக எதனைக் கூறமுடியும்? இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான்; வரலாறு படைக்கிறான்; உலகில் வேறு எந்த அறிவியல் படைப்பையும் விட இந்த மானுட யாக்கையின் படைப்பு அதிநுட்பமானது. அறிவியல் தன்மையுடையது. இந்த உடல் உயிர்க்கூட்டின் பயன், உயிரை இன்புறுத்தலேயாம். இறைவன் திருவுள்ளம் இன்புறுத்தலேயாம். ஆயினும் உயிர் பெற்றுள்ள சிற்றறிவு அடங்கவா செய்கிறது? அது தன்னிச்சையிலேயே ஆட்டம்