பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

197


அனுபவம் சிந்தையில் தோன்றித் தெளிவடைய வேண்டிய ஒன்று. அதற்குரிய வாய்ப்பைச் சமயவுலகம் வழங்க மறுத்தால், மனித உலகம் உணர்வும் அனுபவமுமற்ற ஒரு கண்மூடித்தனமான சமய பழக்கவழக்கங்களிலேயே நிற்கும். இதனால் சமய நெறிக்கும் சிறப்பில்லை; மனித உலகத்திற்கும் பயன் இல்லை.

அப்பரடிகள் சமண சமயத்தில் தொடக்க காலத்தில் நின்று ஒழுகியவர். அந்நெறி அவருடைய அறிவுப் பசிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவரது அனுபவ உணர்வுக்கும் அது களமாக அமையவில்லை. சமண சமயம் அறிவையும் அனுபவத்தையும் வளர்ப்பதற்குப்பதில் உலகியலை விரித்துப் பேசி ஒடுங்கச் சொல்லிற்று. ஒன்றை விரித்துப் பேசுதலே ஒடுங்குவதற்குத் துணை செய்யாது. அதோடு, ஒடுங்குதலால் உயிர் ஒருபொழுதும் உய்தி பெற முடியாது. மாறாக ஒழுகுதலால் உயிர் உய்தி பெற முடியும். ஒழுகுதல் புலன்களை நல்லன சுவைக்கப் பழக்கப்படுத்திப் பக்குவப்படுத்துதல். இதனைத் திருமூலர் 'மடைமாற்றுதல்’ என்பார். அதாவது வீணே போகும் தண்ணிரை மடை மாற்றிக் கழனியிற் பாய்ச்சுதலைப் போலத் தற்சார்பான ஆசைகளில் செல்லும் புலன் நுகர்வை இறையருளில் மடை மாற்றி ஈடுபடுத்துதல் ஆகும்.

ஓடுதலும் திரிதலும் சமணர் இயல்பு. அதாவது ஓரிடத்தில் இருந்தாலே பற்று வந்துவிடுமாம். அதனால் இடம் விட்டு இடம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். இங்ஙனம் ஒடுவதால் பற்று இல்லாமல் போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. பற்று, மற்றவர் காட்சிக்குப் புலனாகும் வண்ணம் வெளிப்படுதற்கு வேண்டுமானால் வாய்ப்பில்லை எனலாம். பற்று ஒட்டிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்திலிருந்தே பற்றின்றி இருப்பதுதான் உண்மையில்