பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முற்றிலும் பற்று விடுதற்குச் சாதகமாகும். தாமரையிலை, தண்ணிருக்குள்தான் கிடக்கிறது. ஆனால், தண்ணிர் அதில் ஒட்டாது. புளியம்பழம் ஓட்டுக்குள்ளிருந்தாலும் ஓட்டுக்கும் பழத்துக்கும் உறவு இருக்காது. அதுபோல் ஒன்றில் நின்று பற்றின்றி வாழ்தலே சிறப்பு. இதுவே, சிவநெறியின் இயல்பு. இங்ஙனம், வாழ்க்கையோடியைந்து வராத சமண சமயத்தில் நின்று அலைந்து திரிந்து எய்த்தலை அப்பரடிகள் இனிய உவமையால் விளக்குகின்றார்.

இருட்டறை! ஒளியில்லை! அந்த அறையில் ஒரு மலட்டுப் பசு! அதனைப் பால் கறந்து எய்த்த காட்சியை அப்பரடிகள் உவமையாக்குகின்றார். இருட்டறையில் பசு இருப்பதையே காண முடியாது. அதுபோல் உயிரின் தன்னறிவும், இறைவனின் பேரறிவும் இணைந்து செயற் பட்டாலன்றி ஞானத்தைக் காண முடியாது. பசுவோ மலட்டுப்பசு! அதாவது, அனுபவத்திற்கு வராத சமயம் என்பது கருத்து. கறந்து எய்த்தல்-சமண சமயத்தினின்று அலுத்ததை நினைவூட்டுகிறது; இங்ஙனம், கிடந்து எய்த்த அப்பரடிகளுக்கு இறைவன் உறுதி காட்டி உய்ய ஆட் கொண்டதை அப்பரடிகள் அழகு தமிழில் பாடுகின்றார்.

            பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
                    தலையோடே திரிதர் வேனை
            ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி
                   னுள்ளிருந்தங் குறுதி காட்டி
            அப்போதைக் கப்போது மடியவர்கட்
                  காரமுதா மாரு ராரை
            எப்போதும் நினையாதே யிருட்டறையின்
                  மலடுகறந் தெய்த்த வாறே

என்பது அப்பர் திருப்பாடல்.