பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

205


ருக்கச் சாதாரண மனிதர்கள் கடவுளைக் காண்பது எங்ஙனம்?

நமது உள்ளத்தின் இயல்பு, எதையாவது ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பது. உள்ளத்தின் இத்தொழிலை ‘உள்குதல்’ என்பர். உள்ளத்தால் உள்ளவாறு நினைப்பவர் உள்ளத்தின் உணர்வாக இறைவன் விளங்குவான். இதனை,

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்

என்றும்,

நினைக்கும் நெஞ்சின் உள்ளார்

என்றும்,

நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்தும் ஆனாய்

என்றும் அப்பரடிகள் பல இடங்களில் பாடுவது சிந்திக்கத் தக்கது. பல்லவப் பேரரசன் கட்டிய கற்கோயிலைவிட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயில் இறைவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இறைவன் பூசலார் நாயனாரின் மனக்கோயிலுக்குத்தான் முதலிடம் தந்து குடி புகுந்தான். உள்ளத்தின் தொழிற்பாட்டில் விளையும் பண்பே உணர்வு, உணர்வற்றவர்களுக்கு, உள்ளம் இல்லை என்பதே பொருள். அப்படியே இருந்தாலும் அது இயங்கவில்லை என்பது தெளிவு. பெருமைக்குள் எல்லாம் தலை சிறந்தது உணர்வே. உள்ளம், இறைவனை உள்கிட, அவனே அந்த உள்குதலின் விளைவாகிய உணர்வாக வடிவம் பெற்று எழுந்தருள்கின்றான். இதுவே இறைவனை உள்ளத்தில் காண்பதற்குரிய இனிய எளிய வழி. -

உள்ளத்திற்கு இயல்பிலேயே ஒன்றினை விட்டுப் பிறிதொன்றினைப் பற்றும் இயல்பு உண்டு. அந்த இயல்பை மடை மாற்றி, உலகுக்கு ஒருவனாய் நிற்கின்ற இறைவனையே உள்கச் செய்து இறைவனை உணர்வு வடிவமாக்கி அவனை நினைந்து நினைந்து, உருகி உருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து