பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

215


உலகத்து அழுக்கெல்லாம் பெற்று உடலால் தூய்மை காட்டுபவர்கள் இல்லையா? அன்றும் முத்தநாதன் இருந்தான். இன்றும் முத்தநாதன் இருக்கலாம் அல்லவா?

தனித்தனியே மனிதர்கள் வழிபாட்டிற்குரிய இடங்களைப் பெறுதல் அரிது என்பதனால்தான் நமது திருக்கோயிலில் பண்டு பலரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர் என்பது, வரலாற்று முறையிலும் மறுக்க முடியாத உண்மையாகும். வேத நெறி தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரும் திருத்தொண்டின் நெறி விளக்கத் தோன்றிய திருநாவுக்கரசரும் இந்த வழிபாட்டு முறையையே எடுத்துக்காட்டிப் பாடியுள்ளனர். திருக்கோயிலில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது வழிபாடு பெற அல்ல; உயிர்களுக்கு எளிமையான அருள் வழங்கவேயாம்.

அப்பரடிகள் திருவங்கமாலையில் மிகத் தெளிவாக நம்மை வழிபாடு செய்து கொள்ளும்படி ஆணையிடுகிறார். வழிபாட்டில் நாட்டமின்றித் திரிவோரைப் பார்த்து யாக்கையால் பயனென்? என்று வினவி, வழிபாட்டுணர்வில் ஆற்றுப்படுத்துகின்றார். அரன் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் வலம் வந்து வணங்கச் சொல்கிறார்; கைகளால் பூக்களை எடுத்துப் போடச் சொல்கிறார்; தாமே போடுதல் போன்ற பொருள்பட ’அட்டி’ என்று பாடுகின்றார்; இறைவனைப் போற்றி போற்றியென்றே தொழுது வணங்கித் தூமலர் தூவச் சொல்கிறார். இதுவே திருமுறை வழிபாட்டு நெறி; நமது ஆன்றோர்களில் திருக்கோயில் வழிபாட்டு ஒழுக்கம். அப்பரடிகள் அருளிய திருப்பாடலைச் சிந்தனை செய்யுங்கள். -

      ஆக்கையாற் பயனென்?—அரன்
      கோயில் வலம் வந்து
      பூக்கையா லட்டிப் போற்றி யென்னாதஇவ்
      ஆக்கையாற் பயனென்?